Monday, November 2, 2020

திருக்குறள் - வான் சிறப்பு - எல்லாம் மழை - பாகம் 2

திருக்குறள் - வான் சிறப்பு - எல்லாம் மழை - பாகம் 2


பாகம் 1

(பாகம் 2 கீழே உள்ளது. முதல் பாகத்தைப் படித்து விட்டால், நேரே இரண்டாவது பாகத்துக்குப் போகலாம்)



மழையின் சிறப்பு பற்றி கூறிக் கொண்டு வருகிறார்  வள்ளுவர். அடுத்த குறளில் 


"கெடுப்பதுவும், அப்படி கெட்டவர்களை மழை பெய்து காப்பதுவும் எல்லாம் மழை " என்கிறார். 

அதாவது, நல்லதும் கெட்டதும் செய்வதும் மழை என்று கூறுகிறார். 


பாடல் 

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_28.html

click the above link to continue reading


கெடுப்பதூஉம்  = ஒருவரின் வாழ்வை கெடுப்பதும் 

கெட்டார்க்குச் = அப்படி வாழ்வு கெட்டவர்களுக்கு 

 சார்வாய் = உதவியாக 

மற்று ஆங்கே = அதே போல் 

எடுப்பதூஉம் = எடுத்து கொடுப்பதுவும் 

எல்லாம் மழை = எல்லாம் மழை 


இதை பார்க்க ஏதோ ஒரு சாதாரண குறள் போல் தெரிகிறது. குறளும் அதற்கு பரிமேல் அழகர் தரும் உரையும் பிரமிப்பு ஊட்டுபவை.


"கெடுப்பதூஉம் " - கெடுப்பதுவும் என்றால் என்ன? எப்படி கெடுப்பது? பெய்யாமல் கெடுப்பது என்கிறார் பரிமேல் அழகர். மழை பெய்யாவிட்டால் பயிர் பச்சை இருக்காது. உணவு உற்பத்தி இருக்காது. பசி பஞ்சம் என்று மக்கள் அவதிப் படுவார்கள். எனவே பெய்யாமல் கெடுப்பது என்று பொருள் சொல்கிறார். 

சரி, பெய்யாமல் கெடுக்கிறது. ஒத்துக் கொள்ளலாம். 

பெய்து கெடுப்பது இல்லையா? அளவுக்கு அதிகமாக பெய்து கார், பைக் எல்லாம் அடித்துக் கொண்டு போகிறது, வீடெல்லாம் சரிந்து விழுகிறது. அறுவடைக்கு வைத்த பயிர் எல்லாம்  அகாலத்தில் மழை பெய்தால் நாசமாகிப் போகாதா.  அது என்ன பெய்யாமல் கெடுப்பது? பெய்து கெடுப்பதை , வெள்ளப் பெருக்கால்  அழிவைத் தருவதை கெடுதல் என்று ஏன் சொல்லவில்லை?

மனித நாகரிகம் ஆற்றங்கரையில் தான் ஆரம்பிக்கிறது.  தண்ணீர் வேண்டும். குடிக்க, விவசாயம் செய்ய, குளிக்க, சுத்தம் செய்ய அனைத்துக்கும் நீர் வேண்டும்.  கரையை ஒட்டி உருவான நாகரீகங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் விரிந்து  செல்கின்றன. ஆற்றை விட்டு வெகு தூரம் வரை பரவி  விடுகிறது.மக்கள் தொகை  பெருக்கத்தால் எல்லோரும் ஆற்றங்கரையில் இருக்க முடியாது. மனிதர்கள் மட்டும் அல்ல, காடுகள், அதில் உள்ள விலங்குகள், மரம் , செடி கொடிகள் எல்லாவற்றிற்கும் நீர் வேண்டும். ஆற்றில் வெள்ளம் வந்தால் தான் , அது கரை தாண்டி ஓடினால் தான் எல்லா இடத்துக்கும்  நீர் போய்ச் சேரும். ஆற்றங்கரையில் இருப்பவர்கள் அந்த சில நாட்களுக்கு பாதுகாப்பான இடங்களுக்கு போய் விட வேண்டும். வெள்ளம் நமக்குக்குத்தான்.  ஆற்றை விட்டு மிகத் தொலைவில் இருப்பவர்களுக்கு அது வரம். 

பெய்யாமல் தான் கெடுக்கும். பெய்து  கெடுப்பதில்லை. 

கெடுப்பதுவும் அதே போல எடுப்பதுவும் என்கிறார். 


"மற்று ஆங்கே எடுப்பதுவும்" 


கெடுப்பது போலவே எப்படி உதவி செய்ய  முடியும்? 

ஒருவன் கொலை செய்வது போலவே உதவி  செய்தான் என்று எப்படிச் சொல்ல முடியும்? 


திட்டுவது போலவே வாழ்த்தினாள் என்பது சரியா? 

கெடுப்பது போலவே எடுப்பது என்றால் சரியான பிரயோகமா?


நாளை சந்திப்போமா?



பாகம் 2


சரி அல்லதான். ஆனால் சரி படுத்தப் முடியும். அதற்குத்தான் "மற்று ஆங்கு" 

என்ற சொல் பிரயோகம். 


"மற்று ஆங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை"


மற்று என்ற சொல் வந்தால், வினையை மாற்ற வேண்டும் என்று பொருள். 

எப்படி என்று பார்ப்போம். 


வீட்டில் உள்ள பையனை கூப்பிட்டு, "நீ நேரா போய், அத்தை வீட்டுல இந்த  செய்தியை சொல்லிட்டு  கத்தரிக்காய் வாங்கிட்டு வா" என்று சொன்னால் குழப்பமாக இருக்கும் அல்லவா?

அத்தை வீட்டில் செய்தி சொல்லலாம், அவர்கள் கத்தரிக்காய் விற்பார்களா?


அதே வாக்கியத்தை 


"நீ நேரா போய், அத்தை வீட்டுல இந்த  செய்தியை சொல்லிட்டு  அப்புறம்  கத்தரிக்காய் வாங்கிட்டு வா"

இங்கே அப்புறம் என்ற சொல் "செய்தி சொல்லும்" வினையை மாற்றி "கத்தரிக்காய்  வாங்கும்" வினைக்கு நம்மை எளிதாக கொண்டு செல்கிறது அல்லவா?

அது போல,  செய்யுளில் 'மற்று' என்பது முன் சொன்ன வினையை அப்படியே மாத்திச்  செய்யச் சொல்லுவது. 

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை


https://interestingtamilpoems.blogspot.com/2020/11/2.html


click the above link to continue reading 

'கெடுப்பது" என்ற வினையை அப்படியே தலை கீழாக மாற்றி "எடுப்பது" என்ற வினைக்கு பொறுத்தி விடும்.


நாம் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் பல வாக்கியங்களை பார்ப்போம். 


"நீ தான அந்த படத்தை கிழிச்ச, எப்படி கிழிச்சியோ அப்படியே ஒட்டு..."


"கீழ போட்டு உடைச்சியில...எப்படி உடைச்சியோ அப்படியே ஒட்ட வை"


உடைத்த மாதிரி எப்படி ஒட்ட வைக்க முடியும்? 

நாம் பயன்படுத்தும் வாக்கியங்கள் தான்.  இங்கே 'எப்படி' என்ற சொல் அந்த வினைகளை மாற்றுவதைப் போல, செய்யுளில் "மற்று " என்ற சொல் மாற்றுகிறது. 


சரி, "ஆங்கே " என்றால் என்ன அர்த்தம். 


இந்தியாவில் மழை பெய்யாமல் கெடுத்து விட்டு, ஆப்பிரிக்காவில் போய் மழை பொழிந்தால்  அது சரியாக ஆகுமா?


எங்கு பெய்யாமல் கெடுத்ததோ "அங்கேயே" பெய்து சரிப் படுத்த வேண்டும். 


யாரைக் கெடுத்ததோ, அவரை சரி செய்ய வேண்டும். 


கெடுப்பது போல எடுக்கும் என்கிறார் வள்ளுவர். 


அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். 


எவ்வளவு ஆழம். இலக்கணம். மொழிச் சுத்தம்.  ஒரு குறளில் அறிந்து கொள்ள எவ்வளவு இருக்கிறது. 

எல்லா குறளையும் படிக்க வேண்டாமா? 





2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. சுவாரசியமான குறிப்பு. நன்றி.

    ReplyDelete