Monday, November 9, 2020

திருக்குறள் - சிறப்பும் பூசனையும்

திருக்குறள் - சிறப்பும் பூசனையும் 

தேவர்கள், கடவுளர்கள் நமக்கு எல்லாம் தருகிறார்கள் என்று நாம் நம்புகிறோம். அப்படி இருந்தும், நாம் ஏன் கடவுளுக்கு படைக்கிறோம் ? 


கொழுக்கட்டை, பொங்கல், சுண்டல், வடை மாலை, என்று ஏன் கடவுளர்களுக்கு படைக்கிறோம்? நமக்கு இவ்வளவு தருபவர்களுக்கு இந்த சுண்டலும் பொங்கலும் தனக்குத் தானே செய்து கொள்ளத் தெரியாதா?

அது மட்டும் அல்ல, யாகம், ஹோமம் எல்லாம் செய்கிறோம். எதுக்கு? 

கடவுளர்கள், தேவர்கள் நமக்கு எல்லாம் தந்தாலும்,  அவர்களுக்கு வேண்டியதை நாம் தான் தர வேண்டும் என்று ஒரு விதி இருக்கிறது. 


அது எப்படி என்றால், ஒரு நாட்டின் பிரதம மந்திரி, முதல் மந்திரி, ஜனாதிபதி போன்றவர்கள் பெரிய அதிகாரம் படைத்தவர்கள். அவர்கள் நினைத்தால் பெரிய பெரிய விஷயங்கள் செய்ய முடியும். இருந்தும், அவர்களுக்கு உரிய சம்பளப் பணம், நாம் தரும் வரியில் இருந்து தான் போக வேண்டும். 

நாட்டின் தலைவர் தானே என்று அவரே கொஞ்சம் பணத்தை அச்சடித்துக் கொள்ள முடியாது. 

அது போல, அக்னி, வருணன், வாயு போன்ற தேவுக்களுக்கு நாம் தான்  பூஜை செய்து  யாகம் போன்றவற்றில் அவிர் பாகம் தர வேண்டும். 


இது உண்மையா, நாம் கொடுப்பது அவர்களுக்குப் போகிறதா, அதற்கு என்ன சாட்சி இருக்கிறது என்று கேட்டால், ஒன்றும் இல்லை. 


அப்படி நடப்பதாக ஒரு நம்பிக்கை. நாம் அவர்களை சார்ந்து இருக்கிறோம். அவர்கள் நம்மைச் சார்ந்து இருக்கிறார்கள் என்பது ஒரு நம்பிக்கை. 


அப்படி நாம் செய்யும் பூஜைகள் இரண்டு வகைப்படும். 


ஒன்று நாள்தோறும் செய்யும் பூஜை. மற்றது ஆண்டுக்கு ஒரு முறை செய்யும் பூஜைகள். 


தினப் பூஜைக்கு நித்திய பூஜை என்று, ஆண்டுக்கு ஒரு முறை செய்யும் பூஜைக்கு நைமித்தியம் என்றும் பெயர். 

இதைத் தமிழில் பூசனை, சிறப்பு என்று சொல்லுவார்கள். 


ஆண்டுக்கு ஒரு முறை வெகு விமரிசையாக செய்வது, கொண்டாடுவது சிறப்பு என்று வழங்கப்படும். அன்றாடம் செய்யும் பூஜைக்கு பூசனை என்று பெயர். 


இப்போது குறளை பார்ப்போம். 


பாடல் 


 சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2020/11/blog-post_9.html

(pl click the above link to continue reading)


சிறப்பொடு = திருவிழா, பொங்கல், தீபாவளி போன்ற ஆண்டுக்கு ஒரு முறை வரும் வழிபாடுகளும் 

பூசனை = அன்றாடம் செய்யும் வழி பாடுகளும் 

செல்லாது = நடக்காது 

வானம் = வானம், மேகம் 

வறக்குமேல் = வறண்டு போகுமானால் 

வானோர்க்கும் = வானில் உள்ளை தேவர்களுக்கும் 

ஈண்டு = இன்று 


இதில் இன்னொரு குறிப்பு என்ன என்றால், அன்றாட வழிபாட்டில் சில குறைகள் நிகழ்ந்து விடலாம்.  அவற்றை எல்லாம் நிவர்த்தி செய்யும் பொருட்டு, ஆண்டுக்கு ஒரு முறை, சிறப்பாக செய்வது என்பதை வழக்கமாக கொண்டு இருந்தார்கள். 


தினம் தாம் சாமி கும்பிடுகிறோமே, பின் எதற்கு ஆண்டு பூஜை, திருவிழா, தேரோட்டம் என்றால் நாள் பூஜையில் நிகழ்ந்த குறைகளை சரி செய்ய. 


மழை பெய்யாவிட்டால், மனிதர்களுக்கு மட்டும் அல்ல, தேவர்கள் பாடும் திண்டாட்டம் தான். 



1 comment:

  1. நித்திய பூஜையும் சிறப்பு பூஜையும் செய்யாவிட்டால் வானமும் மேகமும் நாளாவட்டத்தில் வறண்டு விடும் என கொள்ளலாமா? பூஜையின் அவசியத்தை எடுத்து கூறுகிறதோ இந்த குறள்?

    ReplyDelete