Monday, November 16, 2020

கம்ப இராமாயணம் - அமிழ்தால் செய்த நஞ்சு

 கம்ப இராமாயணம் - அமிழ்தால் செய்த நஞ்சு 


இராவணன் சீதையை கொண்டு வந்ததை கண்டித்து வீடணன் சொன்னான், கும்பகர்ணன் சொன்னான், இந்திரசித்து சொன்னான், மாரீசன் சொன்னான். 


ஆனால் மண்டோதரி ஒரு இடத்தில் கூட சொன்ன மாதிரி தெரியவில்லை. 

மண்டோதரி கண்டித்து இருக்க வேண்டாமா? ஒரு வேளை சம உரிமை இல்லாதோ காலமோ? வாழ்கை துணை நலம் என்கிறார்களே. கணவன் செய்வதெல்லாம் சரி என்று ஏற்றுக் கொள்வது சரிதானா? மண்டோதரியை கற்பில் சீதைக்கு இணையாக காட்டுவான் கம்பன். அனுமனே முதலில் மண்டோதரியைக் கண்டு சீதை என்று ஒரு கணம் மயங்கினான் என்று கம்பன் பதிவு செய்கிறான். 

கற்பின் எல்லைதான் என்ன? 


கணவன் இன்னொரு பெண்ணை பலவந்தமாக கொண்டு வந்தால், பார்த்துக் கொண்டு சும்மா இருப்பதா?


கணவன் தீயில் குதி என்றால் குதிப்பதா? 


சிந்திக்க வேண்டிய விஷயம். 


இந்திரசித்து இறந்து போகிறான். தலையில்லா அவன் உடலை இராவணன் சுமந்து வருகிறான். இறந்த தன் மகனைப் பார்த்து மண்டோதரி அழுகிறாள். அந்த ஒரு இடத்தில் சீதை பற்றி அவள் பேசுகிறாள். 


"அஞ்சினேன் அஞ்சினேன் அந்த சீதை என்ற அமிழ்தால் செய்த நஞ்சால் நாளை இலங்கை வேந்தனும் இப்படி தலை இல்லாமல் இறந்து கிடப்பானே என்று நினைத்து அஞ்சினேன் அஞ்சினேன் " என்றாள்.


பாடல் 


‘பஞ்சு எரி, உற்றது என்ன

    அரக்கர்தம் பரவை எல்லாம்

வெஞ்சின மனிதர் கொல்ல,

    விளிந்ததே மீண்டது இல்லை;

அஞ்சினேன் அஞ்சினேன்; அச்

    சீதை என்று அமிழ்தால் செய்த

நஞ்சினால் இலங்கை வேந்தன்

    நாளை இத்தகையன் அன்றோ? ‘


பொருள்

https://interestingtamilpoems.blogspot.com/2020/11/blog-post_16.html

click the above link to continue reading 

‘பஞ்சு எரி, உற்றது என்ன = பஞ்சில் தீ பற்றியது போல 

அரக்கர்தம் = அரக்கர்களின் 

பரவை எல்லாம் = படைகள் எல்லாம் 

வெஞ்சின மனிதர் கொல்ல = கொடிய சினம் கொண்ட மனிதர்கள் கொல்ல 

விளிந்ததே மீண்டது இல்லை; = இறந்தன, மீண்டும் வரவில்லை 

அஞ்சினேன் அஞ்சினேன்;  = அஞ்சினேன், அஞ்சினேன் 

அச் சீதை என்று = அந்த சீதை என்ற 

அமிழ்தால் செய்த = அமிழ்தால் செய்த 

நஞ்சினால்  = விஷத்தால் 

இலங்கை வேந்தன் = இராவணன் 

நாளை இத்தகையன் அன்றோ? ‘ = நாளை இந்த மாதிரி தலை துண்டிக்கப்பட்டு இறந்து கிடப்பானே என்று 


கணவன் செய்வது தவறு என்று தெரிகிறது. அதனால் அவன் அழிவான் என்று தெரிகிறது. இருந்தும் அவனோடு சண்டை போடவில்லை. 

மண்டோதரி நினைத்து இருக்கலாம்....


இராவணனுக்குத் தெரியாதா ? முக்கோடி வாழ்நாள், முயன்று உடைய பெரிய தவம், நாரதர் முனிவருக்கு ஏற்ப நயம்பட உரைத்த நாவு, கூற்றையும் ஆடல் கொண்ட வீரம், அட்ட திக்கு யானைகளோடு போரிட்ட தோள் வலி, அவனுக்குத் தெரியாததையா தான்  சொல்லி விடப் போகிறேன் என்று நினைத்து இருக்கலாம். 


சுக்ரீவனின் மனைவியை வாலி வைத்துக் கொண்டான். வாலியின் மனைவி தாரை அதை எதிர்த்து ஒன்றும் சொல்லவில்லை. 


வலிமையான ஆண்களின் பின்னால் இருக்கும் பெண்கள் ஒன்றும் சொல்லுவது இல்லையோ? 









2 comments:

  1. மணைவி சொன்னால் கேட்டாதான.

    ReplyDelete
  2. நல்ல கேள்விதான்.

    புவனாவின் பதிலும் சிரிக்க வைக்கிறது. அந்தக் காலத்துப் பெண்கள் அவ்வளவு பலம் அற்றவர்களா?

    ReplyDelete