Thursday, November 12, 2020

வில்லி பாரதம் - தரு வரம் எனக்கும் இரண்டு உள

 வில்லி பாரதம் - தரு வரம் எனக்கும் இரண்டு உள 


காப்பியங்களில் எவ்வளவோ அவலச் சுவையை நாம் பார்த்து இருக்கிறோம்.  கதா நாயகனும், கதா நாயகியும் படாத பாடு படுவார்கள்.  கடைசியில் வெற்றி பெறுவார்கள். 

நான் படித்த வரை, மிகவும் வருந்துதற்கு உரிய அவலமான நிலை கர்ணனின் நிலை. 


தன் தாயிடம் ஒரு பிள்ளை கேட்கும் வரம்...


"நான் இறந்த பிறகு எனக்கு நீ பாலூட்ட வேண்டும்" என்று ஒரு பிள்ளை தாயிடம் கேட்கும் அவலம், அவலத்தின் உச்சம். 


செத்த பிறகாவது தாயன்பு கிடைக்காதா என்று ஏங்கும் அவன் அன்பின் தாகம் எவ்வளவு இருக்க வேண்டும்?  

சிலருக்கு அப்படி ஒரு அவலம் நிகழ்து விடுகிறது. விதி. 


பாடல் 


பெரு வரம் இரண்டும் பெற்றபின், தன்னைப் பெற்ற

                தாயினைக் கரம் குவித்து,

'தரு வரம் எனக்கும் இரண்டு உள: உலகில் சராசரங்களுக்கு

                எலாம் தாயீர்!

வெருவரும் அமரில் பார்த்தனால் அடியேன் வீழ்ந்தபோது,

                அவனிபர் அறிய,

மரு வரும் முலைப்பால் எனக்கு அளித்து, உம்தம் மகன்

                எனும் வாய்மையும் உரைப்பீர்.


பொருள் 


பெரு வரம் = பெரிய வரம் 

இரண்டும் பெற்றபின் = (குந்தி) இரண்டையும் பெற்ற பின் 

தன்னைப் பெற்ற = தன்னைப் பெற்ற 

தாயினைக் = தாயிடம் 

கரம் குவித்து, = கை கூப்பி 

'தரு வரம் = தரக்கூடிய வரம் 

எனக்கும் இரண்டு உள = எனக்கும் இரண்டு உள்ளது 

உலகில் சராசரங்களுக்கு = இந்த உலகுக்கு

எலாம் தாயீர்! = எல்லாம் தாய் போன்றவளே 

வெருவரும் அமரில்  =  அஞ்சத்தக்க போரில் 

பார்த்தனால் = அர்ஜுனனால் 

அடியேன் வீழ்ந்தபோது, = நான் வீழ்ந்த பின் 


அவனிபர் அறிய, = உலகில் உள்ள அனைவரும் அறிய 

மரு வரும் = மனம் மகிழ்ந்து 

முலைப்பால்  = உன் தாய் பாலை 

எனக்கு அளித்து = எனக்கு அளித்து 

உம்தம் மகன் = நான் உன் மகன் 

எனும்  = என்ற 

வாய்மையும் உரைப்பீர். = உண்மையை உரைப்பீர் 


குழந்தை பசித்து தாய் பாலுக்கு அழலாம். 


ஒரு வளர்ந்த பிள்ளை, தான் இறந்த பின், எனக்கு தாய் பால் தா என்று ஏங்கும் ஏக்கம் இருக்கிறதே ....




1 comment:

  1. கண்ணில் நீர் வரவழைக்கும் காட்சி

    ReplyDelete