Monday, December 7, 2020

திருக்குறள் - துறவறம் நோக்கிய வாழ்க்கை

 திருக்குறள் - துறவறம் நோக்கிய வாழ்க்கை 


வாழ்க்கையின் ஒவ்வொரு படியும் துறவறம் நோக்கித்தான் அமைகிறது. 


துறவறம் என்றால் ஏதோ கடினமான ஒன்று என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். இல்லவே இல்லை. அது போல் சுகம் எதுவும் இல்லை. 


துறவறம் என்றால் என்ன? நமக்கு வேண்டியதை, விரும்பியதை மகிழ்ச்சியோடு விடுவது. சர்க்கரை நோய் வந்தவன் "நான் சர்க்கரையை துறந்து விட்டேன்" என்று சொல்லுவது பெரிய துறவறம் அல்ல. அதைத் துறக்காவிட்டால் உயிர் போய் விடும். 


பந்தயத்தில் கடைசியில் வந்தவன் "நான் தங்கப் பதக்கத்தை துறந்து விட்டேன் " என்று சொல்லுவது நகைப்பு இடமானது. 


ஆசைப் பட்டதை, விரும்பியதை, ஒரு நிர்பந்தமும் இல்லாமல், மகிழ்ச்சியோடு விட்டு விடுவது. 

நடக்கிற காரியமா?


நடக்கும். 


வாலிப வயதில், வெளியே போய் விட்டு வந்தவுடன், நேரே குளிர் சாதன பெட்டியை திறந்து அதில் என்ன இருக்கிறதோ அதை உண்பது வழக்கமாக இருக்கும். நல்ல பலகாரம் செய்தால் இன்னும் இரண்டு கொடு என்று இருப்பது எல்லாம் தனக்கு என்று உண்ணும் ஆர்வம் இருக்கும். 


அவனுக்கு திருமணம் ஆகி விடுகிறது. மனைவி வந்து விடுகிறாள். வீட்டுக்கு வருகிறான். பசி. குளிர் சாதன பெட்டியைத் திறக்கிறான். டப்பாவில் ஏதோ ஒரு இனிப்பு ஒரே ஒரு துண்டு இருக்கிறது. நாக்கில் எச்சில் ஊறுகிறது. சாப்பிடப் போனவன், ஒரு கணம் நினைப்பான். 'அட, அவளுக்கு இதை ஊட்டி விட்டால் எப்படி இருக்கும்" என்று. அவள் முகத்தில் தோன்றும் சந்தோஷத்தை பார்க்க எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைப்பான். சரி, இருக்கட்டும், அவளுக்கு என்று வைத்து விடுவான். 


அவளும் அப்படித்தான். "இது அவருக்கு ரொம்ப பிடிக்கும்" என்று அவனுக்கு என்று எடுத்து வைத்து விடுவாள். 

பிடித்த ஒன்றை, மகிழ்வோடு மற்றவர்க்கு என்று துறந்து விடுவது. 

'அதெல்லாம் ஒண்ணும் இல்லை...அவளுக்கு எதுக்கு...அவ நல்லா சாப்பிட்டு இருப்பாள்...' என்று நினைத்தால் கூட 


கொஞ்ச நாள் கழித்து,அவர்களுக்கு பிள்ளை பிறக்கிறது....


https://interestingtamilpoems.blogspot.com/2020/12/blog-post_7.html

click the above link to continue reading.


ஏதோ ஒரு நல்ல தின் பண்டம். "அடடா இதை பிள்ளைக்கு கொடுக்கலாமே" என்று இருவரும் நினைப்பார்களா மாட்டார்களா? 


கணவன் மனைவி இடையிலாவது ஏதோ ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அதனால் அவளுக்கு அல்லது அவனுக்கு கொடுத்தேன் என்று இருக்கலாம். 


சின்ன பிள்ளையிடம் என்ன எதிர்பார்ப்பு இருக்கும்? அது சந்தோஷப் படுவதை பார்ப்பது  ஒரு சந்தோஷம்.


தான் பசித்து இருந்தாலும்,பிள்ளைக்கு என்று எடுத்து வைப்பார்கள்தானே? அப்படி எடுத்து வைக்காத பெற்றோரை நாடு கடத்தினாலும் தகும். தனக்கு தனக்கு என்று பிள்ளைக்கு முன் உண்ணும் பெற்றோரை எதில் சேர்ப்பது? 


துறக்கிரோமா இல்லையா?  மனைவிக்காக, கணவனுக்காக, பிள்ளைக்காக துறக்கிரோமா இல்லையா?


எவ்வளவு நேரம், பணம், உடல் உழைப்பு, சந்தோஷம் என்று அனைத்தையும் துறக்கிரோமா இல்லையா? அதும் மகிழ்ச்சியோடு. சரி தானே. 


ஏன் அப்படி செய்கிறோம்? 


காரணம் அன்பு. 


யோசித்துப் பாருங்கள், இதுவரை எத்தனை துறந்து இருக்கிரீர்கள் என்று. 


கடினமாக உழைத்து, யாரி யாரிடமோ ஏச்சும் பேச்சும் வாங்கி, சம்பாதித்து மனைவிக்கு நகை, புடவை, பிள்ளைகளுக்கு உடை,  கல்வி, என்று எத்தனை வருடம் நமக்கு வேண்டியதை துறக்கிறோம், குடும்பத்துக்காக. 


எல்லாவற்றையும் விட பெரிய துறவறம், அழகை துறப்பது. கொஞ்சம் பணம் போனாலும் போகட்டும், நேரம் போனாலும் போகட்டும்....அழகு போனால் போகட்டும் என்று யாராவது சொல்வார்களா? 


பிள்ளை பெறும் போது பெண்கள் தங்கள் அழகை எவ்வளவு துறக்கிறார்கள். 


வயிறு பெருத்து, பெற்ற பின் வயிறு எல்லாம் சுருக்கம் விழுந்து, மார்பகங்கள் கட்டு தளர்ந்து...எவ்வளவு கஷ்டம். சட்டென்று பத்து பதினைந்து வயது கூடிய மாதிரி இருக்கும். 


எந்தப் பெண்ணாவது மாட்டேன் என்று சொல்கிறாளா? பிள்ளை பெறுவது பெரிய மகிழ்ச்சி தான். இளமை போனாலும் பரவாயில்லை என்று பெறுகிறார்களே? 


சாபத்தால் முதுமை அடைந்தான் யயாதி. முடியவில்லை. அவனால் அதை தாங்க முடியவில்லை. பிள்ளையிடம் இளமையை யாசகம் பெற்றான்.  அத்தனை தாய் மார்களும் இளமையை பணயம் வைத்துத்தான் பிள்ளை பெறுகிறார்கள். 


அதுவும் மகிழ்வுடன். 


காரணம் அன்பு. 


வாழ்கை என்ற ஜீவ நதி அன்பென்ற கடலை நோக்கி காலம் காலமாக ஓடிக் கொண்டே இருக்கிறது. 


அதன் போக்கில் எத்தனை இழப்புகள், துறப்புகள்..எல்லாம் மன நிறைவோடு, திருப்தியோடு நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. 


துறவு நோக்கித்தான் வாழ்கை நகர்கிறது. 


மேலும் சிந்திப்போம்.....




3 comments: