Thursday, September 9, 2021

நாலாயிர திவ்ய பிரபந்தம் - பெருமாள் திருமொழி 2 - அடியார் கூட்டு

நாலாயிர திவ்ய பிரபந்தம் - பெருமாள் திருமொழி 2 - அடியார் கூட்டு 


நம்மை அறியாமலேயே நாம் நமக்கு செய்து கொள்ளும் நன்மையும் தீமையும் நம்மை சுற்றி உள்ளவர்களை  தேர்ந்து எடுப்பதுதான். 


நம்மை அறியாமலேயே நம்மை சுற்றி உள்ளவர்களின் குணம், அறிவு, பழக்க வழக்கங்கள் நம்மை பிடித்துக் கொள்ளும்.. 


படிக்கிற கூட்டத்தோடு இருந்தால், என்ன படிக்கலாம், அதில் என்ன சொல்லி இருக்கிறது, இதில் எப்படி சொல்லி இருக்கிறது என்றே எண்ணம் போகும்.


இசை அறிந்தவர்கள் கூட்டத்தில் இருந்தால் பாடல்களின் நயம், இசையின் நுணுக்கம் எல்லாம் தெரிய வரும்.


பக்தி வர வேண்டும் என்றால்?


எந்தக் கூட்டத்தோடு சேர வேண்டும்?  அடியவர்கள் கூட்டத்தில் சேர்ந்தால் பக்தி, இறை உணர்வு, ஆன்ம முன்னேற்றம் எல்லாம் வரும். 


குலசேகராழ்வார் சொல்கிறார் 


"பண்புகளில் சிறந்த திருமாலை, நான்முகன் தன்னுடைய நான்கு நாவினாலும், நான்கு முகத்தில் உள்ள எட்டு கண்களோடும் தொழுது, போற்றி நிற்கின்றான். திருமாலின் நாபிக் கமலம் தோன்ற, திருவரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள பெருமாளை, மலர்கள் இட்டு பக்தி செய்யும் அடிவர்களோடு என்று சேர்ந்து இருப்பேன்"


என்று. 


பாடல் 


எம்மாண்பின் அயன்நான்கு நாவி னாலும் எடுத்தேத்தி ஈரிரண்டு முகமுங் கொண்டு


எம்மாடு மெழிற்கண்க ளெட்டி னோடும் தொழுதேத்தி யினிதிறைஞ்ச நின்ற செம்பொன்


அம்மான்றன் மலர்க்கமலக் கொப்பூழ் தோன்ற அணியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்


அம்மான்ற னடியிணைக்கீ ழலர்க ளிட்டங் கடியவரோ டென்றுகொலோ அணுகும் நாளே


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/2.html


(Please click the above link to continue reading)


எம்மாண்பின் அயன் = மாண்புமிகு பிரமன் 


நான்கு நாவி னாலும் = நான்கு நாவினாலும் 


எடுத்தேத்தி = போற்றிப் பாடி 


ஈரிரண்டு  = இரண்டு இரண்டு , நான்கு 


முகமுங் கொண்டு = முகத்தில் 


எம்மாடு மெழிற்  = அனைத்துப் பக்கங்களிலும் 


கண்க ளெட்டி னோடும் = க் கண்கள் எட்டினோடும் 


தொழுதேத்தி = தொழுது போற்றி 


யினிதிறைஞ்ச = இனிமையாக வேண்ட 


நின்ற = நின்ற 


செம்பொன் = சிவந்த பொன்னைப் போன்ற 


அம்மான்றன் = அம்மான் தன் 


மலர்க்கமலக் = தாமரை மலர் போன்ற 


கொப்பூழ் தோன்ற = நாபிக் கமலம் தோன்ற 


அணியரங்கத் தரவணையில் = பாம்பை (ஆதி சேஷன் ) படுக்கையாகக் கொண்டு 


பள்ளி கொள்ளும் = பள்ளி கொண்டுள்ள 


அம்மான்றன் =அம்மான் தன்


அடியிணைக்கீழ் = திருவடிகழுக்கு கீழே 


அலர்கள்  = மலர்கள் 


இட்டு = தூவி 


அங்கு = அங்கே 


அடியவரோ டென்று = அடியவரோடு என்று 


கொலோ = அசை நிலை 


அணுகும் நாளே = சேரும் நாளே 


நம்ம whatsapp contact லிஸ்டில் பார்த்தால் தெரியும் எத்தனை பேர் உண்மையான ஆன்மீக தாகம் கொண்டவர்கள் என்று. 


நாம் எத்தனை whatsapp குழுவில் உறுப்பினராக இருக்கிறோம் என்று பார்த்தால் தெரியும், நாம் யாருடைய தொடர்பில் இருக்கிறோம் என்று. 


யாருடன் பழகுகிறோமோ, அவர்கள் குணம் தானே நமக்கும் வரும். 


தெரிந்தெடுத்து பழகுங்கள். நல்லதே நடக்கட்டும். 


1 comment:

  1. நல்லவரோடு சேர்வது நல்லதுதான், ஆனால் பக்தி உடையவர் மட்டுமே நல்லவர் என்பது சரியல்ல.

    ReplyDelete