Thursday, September 2, 2021

கம்ப இராமாயணம் - நாண் இன்றி உழல்வீர்

 கம்ப இராமாயணம் - நாண் இன்றி உழல்வீர் 


சீதை அசோகவனத்தில் சிறை இருக்கிறாள். 


தனக்குத் தானே பேசிக் கொண்டு இருக்கிறாள். 


"நான் போற்றும் என் உணர்சிகளே, என் உயிரே. உங்களுக்கு வெட்கம் என்பதே இல்லையா. நான் தான் என் இராமனை பிரிந்தும் உயிர் விடாமல் பழியோடு நிற்கிறேன். உங்களுக்குமா வெட்கம் இல்லை. அவன் வரும் வரை நீங்களும் என்னோடு இருக்கப் போகிறீர்களா ?" 


என்று தன் உயிரிடம், உணர்விடம் கேட்கிறாள். 


இராமனைப் பிரிந்த பின் தன் உயிர் போகவில்லையே என்று நாணுகிறாள். தன் உயிரைப் பார்த்து கேட்கிறாள், "உனக்கு வெட்கமாக இல்லையா...என்ன விட்டு போயேன்" என்று சொல்கிறாள். 


பாடல் 


'பேணும் உணர்வே ! உயிரே ! பெரு நாள்

நாண் இன்றுஉழல்வீர்;தனி நாயகனைக்

காணும் துணையும்கழிவீர்அலிர்; நான்

பூணும் பழியோடுபொருந்துவதோ ?


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_2.html


(Please click the above link to continue reading)



'பேணும் உணர்வே !  = நான் போற்றும் என் உணர்வுகளே 


உயிரே ! = என் உயிரே  


பெரு நாள் = நீண்ட நாள் 


நாண் இன்று = நாணம் இல்லாமல், வெட்கம் இல்லாமல் 


உழல்வீர்; = வருந்தித் திரிவீர் 


தனி நாயகனைக் = ஒப்பற்ற தலைவனை (இராமனை) 


காணும் துணையும் = பார்க்கும் வரை 


கழிவீர்அலிர்; = என்னை விட்டு போக மாட்டீர்களா ?


நான் = நான் (சீதை) 


பூணும் பழியோடு =கொண்ட பழியோடு 


பொருந்துவதோ ? = நீங்களும் அந்தப் பழியை ஏற்றுக் கொள்கிறீர்களா? 


மேலே சொன்னது நேரடியான அர்த்தம்.


மறைந்து கிடக்கும் இன்னொரு அர்த்தம், இராமனை பார்க்கும் ஆசை சீதைக்கு இருக்கிறது. அதை வெளியே சொல்லவும் நாணம். உயிரை விட்டு விடலாம். ஆனால், அப்படி உயிரை விட்டு விட்டால், பின் இராமனை பார்க்க முடியாதே. எனவே உயிரை விடாமல் இருக்கிறாள். 


என்னைப் போலவே நீங்களும், இராமனை காண்பதற்காக என்னோடு ஒட்டிக் கொண்டு இருகிறீர்களா என்று கேட்கும் தொனியும் பாடலில் இருக்கிறது. 


உலக நாயகன் மனைவியாக இருந்தால் என்ன...பெண், பெண்தான். 


அந்த வெகுளித்தனம், அந்த அன்பு, கணவனை காண வேண்டும் என்ற ஆவல், அதை வெளியே சொல்ல முடியாத நாணம், பிரிவுத் துயர் எல்லாம் இந்தப் பாடலில் பின்னி பிணைந்து கிடக்கிறது. 


எவ்வளவு இனிமையான அழகான பாடல்!


No comments:

Post a Comment