Friday, September 24, 2021

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கெடும் இடர்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கெடும் இடர் 


இறை உணர்வு என்பது ஒரு எளிமையான உணர்வு. அதை மிக மிக சிக்கலான ஒன்றாக ஆக்கிவிட்டோம். வேதம், புராணம், இதிகாசம், அவதாரம், உபநிடதம், சுருதி, ஸ்மிரிதி, பூஜை, ஆசாரம், நியமம், என்று பல விதங்களில் சிக்கலாக்கி விட்டோம். 



பத்தாக் குறைக்கு குழப்பும் தத்துவங்கள்...அத்வைதம், துவைதம், விசிட்டாத்வைதம், பரமாத்மா, ஜீவாத்மா, இரண்டுக்கும் உள்ள தொடர்பு என்று ஏகப்பட்ட சிக்கல்கள். 



இதை எல்லாம் படித்து, தெளிவதற்குள் நம் ஆயுள் முடிந்து விடும். ஒன்றைப் படித்தால் அதில் இருந்து ஆயிரம் சந்தேகம் வரும். என்று தெளிவு வர?



பக்தி செய்பவர்களுக்கு இந்தக் குழப்பம் எல்லாம் இல்லை. 



இறைவனை மிக மிக எளிதாக அவர்கள் நினைக்கிறார்கள். 


அவன் நின்றான், உட்கார்ந்தான், படுத்தான், நடந்தான் என்று சொன்னாலே நம் இடர், துன்பம் எல்லாம் போய் விடும் என்கிறார் பொய்கையாழ்வார். 



பாடல்  


வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும், அஃகாத


பூங்கிடங்கில் நீள்கோவல் பொன்னகரும், - நான்கிடத்தும்


நின்றா னிருந்தான் கிடந்தான் நடந்தானே,


என்றால் கெடுமாம் இடர்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_24.html


(Please click the above link to continue reading)



வேங்கடமும்  = திரு வேங்கடம் (திருப்பதி) 


விண்ணகரும் = விண்ணில் உள்ள நகர், வைகுண்டம் 


வெஃகாவும், = திரு வெஃகாவும்


 அஃகாத = மாறாத 


பூங்கிடங்கில் = பூக்கள் நிறைந்த 


நீள் கோவல் = உயர்ந்த திருக் கோவலூர் 


பொன்னகரும் = என்ற பொன் போன்ற நகரமும் 


நான்கிடத்தும் = நான்கு இடத்திலும் 


நின்றா னிருந்தான் = நின்றான், (உட்கார்ந்து)  இருந்தான் 


 கிடந்தான் = (படுத்து) கிடந்தான் 


நடந்தானே = நடந்தான் 

 

என்றால் கெடுமாம் இடர். = என்று சொன்னால் நம் துன்பங்கள் எல்லாம் போய் விடும் 


துன்பம் போக வேண்டும் என்று யார் தான் விரும்ப மாட்டார்கள்? 


அதற்கு என்ன செய்ய வேண்டும்?


பக்கம் பக்கமா பாராயணம் பண்ணி, ஒப்பிக்க வேண்டுமா? விரதம் இருக்க வேண்டுமா? ஆசாரம், அனுஷ்ட்டானம் எல்லாம் பண்ண வேண்டுமா?


ஒன்றும் வேண்டாம்...


நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் 


என்று சொன்னால் போதும். 


கடவுள் என்றால் ஏதோ சூப்பர் man மாதிரி ஏதாவது வித்தை காட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்று அல்ல. 


சும்மா நம்மை மாதிரி, நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் என்றாலும் அவன் கடவுள்தான். 


அவ்வளவு ஒரு எளிமை. 


மனதில் பக்தி வேண்டும். அன்பு வேண்டும். 


மற்றவை எல்லாம் ஆடம்பரம். 

2 comments:

  1. நம்மால் எளிதில் செய்யக்கூடிய ஒரே வழி அன்புடன் கூடிய பக்தி தான். நல்ல விளக்கம்.

    ReplyDelete
  2. மிக எளியமையான, இனிய பாடல். நன்றி.

    ReplyDelete