Sunday, September 12, 2021

திருக்குறள் - ஏழு பிறப்பும் தீயவை தீண்டாது

 திருக்குறள் - ஏழு பிறப்பும் தீயவை தீண்டாது 


சில சமயம் பெரிய துன்பம் வந்து விடும். நாம் யாருக்கும் ஒரு கெடுதலும் மனதால் கூட நினைத்து இருக்க மாட்டோம். இருந்தும், நமக்கு ஒரு பெரிய துன்பம் வந்து சேர்ந்து விடும். 


இதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? 


அறிவியல் பூர்வமாக சிந்தித்தால், "காரணம் எல்லாம் ஒன்றும் இல்லை. அது பாட்டுக்கு நிகழ்கிறது. ஒரு random event" என்று சொல்லி விடலாம். 


இலக்கியமும், சமயமும் அப்படிச் சொல்வதில்லை. உனக்கு ஒரு பெரிய துன்பம் வருகிறதா, அதற்குக் காரணம், நீ முன்பு செய்த தீ வினை காரணம் என்று சொல்கின்றன. 


சொல்வது மட்டும் அல்ல, அவற்றில் இருந்து எப்படி தப்புவது என்றும் சொல்கின்றன. 


இராமன் என்ன பாவம் செய்தான்? ஏன் கானகம் போய் படாத பாடு பட்டான்?


இராமனே சொல்கிறான் 


"நதியின் பிழை அன்று நறும் புனல் இன்மை, மைந்த, விதியின் பிழை" 


என்று. 


பட்டினத்தார் போன்ற பெரும் துறவியை திருட்டுப் பட்டம் கட்டி கழுவேற்று என்று தண்டனை கொடுத்து விட்டான் அரசன். 


அப்போது பாடுகிறார் 


"என்செய லாவதியாதொன்று மில்லை இனித்தெய்வமே

உன்செய லெயென்றுணரப் பெற்றேன் இந்தஊனெடுத்த

பின்செய்த தீவினையாதொன்று மில்லை பிறப்பதற்குமுன்செய்த 

தீவினையோலிங் ஙனேவந்து மூண்டதுவே"


பிறந்த பின் செய்த தீவினை என்று ஒன்றும் இல்லை. ஒரு வேளை பிறப்பதற்கு முன் செய்த தீவினை இங்கு வந்து மூண்டதுவோ 


என்கிறார். 


அப்படி ஒருவன் முன் செய்த தீவினைகள், நல்ல புதல்வர்களை பெறுவதன் மூலம் தீரும் என்கிறார் வள்ளுவர். 


பாடல் 


எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

பண்புடை மக்கட் பெறின்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_12.html


(Please click the above link to continue reading)



எழுபிறப்பும் = ஏழு பிறப்பும் 


தீயவை = தீயவை 


தீண்டா  = அணுகாது 


பழிபிறங்காப் = பழிக்கு ஆளாகாத


பண்புடை  = பண்புள்ள 


மக்கட் பெறின் = மக்களைப் பெற்றால் 


"எழு பிறப்பு" என்ற சொல்லுக்கு பல உரைகள் சொல்கிறார்கள். 


பொதுவாக உரை சொல்லும் போது, மூல நூல் ஆசிரியரின் மனக் கருத்தை அறிந்து அதன் போக்கில் சொல்ல வேண்டும். 


நம் கருத்தை நூலின் மேல் ஏற்றக் கூடாது. 


மறு பிறவிக் கொள்கையில் எனக்கு நம்பிக்கை இல்லை என்பதால் "எழு பிறப்பு" என்பதற்கு "எழுந்த பிறப்பு"  என்று உரை சொல்வது சரியா?


வள்ளுவருக்கு கடவுள் நம்பிக்கை, நல் வினை, தீ வினை, மறு பிறப்பு என்பதில் எல்லாம் நம்பிக்கை இருக்கிறது. எனவே, குறள் உரையை அந்தக் கண்ணோட்டத்தில் பார்ப்பது தான் சரியாக இருக்கும். 


ஏழு பிறவியிலும் துன்பம் தீண்டாது என்று எப்படிச் சொல்லலாம்?  


நல்ல பிள்ளைகள், தங்கள் பெற்றோரை நினைத்து பல நல்ல காரியங்களை செய்வார்கள். அவர்கள் பெயரில் தானம் தர்மம் செய்வார்கள். அறக் கட்டளைகள் நிறுவுவார்கள். நாலு ஏழை பிள்ளைகளுக்கு உதவி செய்வார்கள். இப்படி, அந்தப் பிள்ளைகள் தங்கள் பெற்றோரை நினைந்து செய்யும் நல்ல காரியங்கள், அந்தப் பெற்றோர் இப்போது எங்கு எப்படி பிறந்து இருந்தாலும் அங்கு போய் நன்மை செய்யும் அல்லது தீமையில் இருந்து காக்கும். 


எப்போதாவது, மயிரிழையில் தப்பித்தேன், அந்த விபத்துக்குள்ளான வண்டியில் நான் போயிருக்க வேண்டியது, என்று சில சமயம் அது எப்படி நிகழ்ந்தது என்று வியப்போம் அல்லவா? அப்படி நம்மை தீயவற்றில் இருந்து காப்பது, நம் முற்பிறவி பிள்ளைகள் நம்மை நினைத்து செய்யும் நல்ல காரியத்தின் பலன் என்கிறது வள்ளுவம்.



அப்படி எங்கே குறளில் இருக்கிறது? 


"பண்புடை மக்கட் பெறின்"


இங்கே பண்பு என்பது அவர்கள் தங்கள் பெற்றோரை நினைந்து செய்யும் நல்ல காரியகளை குறிக்கும் என்கிறார் பரிமேலழகர். பண்பு என்பது அந்த செயலினால் வரும் நன்மையை குறிக்கும். 


"பண்பு என்ற காரணப் பெயர் காரியத்தின்மேல் நின்றது"


பண்பு என்பது காரணம். அந்தப் பண்பினால் விளையும் காரியம் நன்மை. இங்கே காரணத்தை , காரியத்தின் மேல் ஏற்றிக் கூறினார் என்கிறார். 


வாழ்வில் முன்னேற வேண்டுமா, நல்லா படி 


என்று கூறினால்,  படித்தால் எப்படி முன்னேற முடியும்?


படித்தால் நல்ல மதிப்பெண் வரும், நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கும், நல்ல வேலை கிடைக்கும், நிறைய பொருள் சம்பாதிக்கலாம், வீடு வாசல் என்று வாங்கலாம், படிப்படியாக முன்னேற்றம் வருகிறது அல்லவா? 


படித்தல் காரணம். 


முன்னேற்றம் காரியம் 


சரி, இந்த பிள்ளைகள் எப்படி "பழி பிறங்கா நன் மக்களாக" இருப்பார்கள்?


அது ரொம்பக் கடினம் என்பதால் "பெறின்" என்று கூறினார். 


அப்படி அமைந்தால், உனக்கு ஏழு பிறவியிலும் துன்பம் தீண்டாது.


கடின முயற்சி செய்தால், இமய மலை மேல் ஏறி விடலாம் என்று கூறினால், அவ்வளவு முயற்சி செய்வது கடினம் என்று புரிகிறது அல்லவா?  


பிள்ளைகள் அப்படி இருக்கும் படி பெற்றோர் வளர்க்க வேண்டும். 


எப்படி, பெற்றோர், அவர்களது முன்னோர்களை நினைந்து நல்ல காரியம் செய்தால், பிள்ளைகளும் அதை கடைப் பிடிப்பார்கள். 


உங்களுக்கு, பின் வரும் பிறவியில் தீயவை அண்டாமல் இருக்க வேண்டும் என்றால், பிள்ளைகளை நல்ல விதமாக வளருங்கள் என்கிறார் வள்ளுவர். 


நீங்கள் மறு பிறவியை நம்புகிறீர்களோ இல்லையோ, பாவ புண்ணியத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, 


உங்கள் பெற்றோரை, முன்னோரை நினைத்து நாலு நல்ல காரியம் செய்வது அவர்களுக்கு நீங்கள் செய்யும் நன்றிக் கடன் என்று நினைத்துக் கூட செய்யலாமே. 


என்ன குறைந்து விடப் போகிறது ?



1 comment:

  1. ennoda solnilaiku thaguntahar pola ungal pathivu irupathum athai nan padithu nalamadaivathum iravan seyal endre ninaaikiren.

    ReplyDelete