Showing posts with label வில்லி பாரதம். Show all posts
Showing posts with label வில்லி பாரதம். Show all posts

Sunday, October 20, 2019

வில்லி பாரதம் - எது நல்லது ?

வில்லி பாரதம்  -  எது நல்லது ?


எது நல்லது?

எது உடனடி சுகம் தருகிறதோ, அதுவே நல்லது என்று நாம் நினைத்துக் கொள்கிறோம்.

படிப்பதைவிட டிவி பார்ப்பது சுகமாக இருக்கிறது.

வேலை செய்வதை விட, படுத்து தூங்குவது நல்லா இருக்கிற மாதிரி தெரிகிறது.

நல்ல விஷயங்களை படிப்பதைவிட whatsapp ல் அரட்டை அடிப்பது நல்லா இருக்கிற மாதிரி தோன்றுகிறது.

கருத்து வேற்றுமை வந்தால், விட்டுக் கொடுத்து, அதனால் வரும் தோல்வியை விட, சண்டை போட்டு வெற்றி பெறுவது சுகமாக இருக்கிறது.

அது சரியா ?

பாண்டவர்களிடம் கண்ணன் கேட்கிறான், வனவாசம் முடிந்து விட்டது, அஞ்ஞாத வாசம் முடிந்து விட்டது. இப்போது என்ன செய்ய உத்தேசம் என்று.

அதற்கு தர்மன் சொல்கிறான் (முந்தைய பிளாகின் தொடர்ச்சியாக)

"குலத்தில் உதித்த பெரியவர்களையும், உறவினர்களையும், துணைவர்களையும், கொன்று, போரில் வென்று, இந்த உலகம் முழுவதையும் ஆழ்வதை விட, திருதராஷ்டிரன் சொன்ன மாதிரி, நாங்கள் காட்டில் காய் கனிகளை உண்டு வாழ்வது எவ்வளவோ சிறந்தது "

என்று.

பாடல்

'குரவரையும், கிளைஞரையும், குலத்து உரிய துணைவரையும்,
                  கொன்று, போர் வென்று,
அரவ நெடுங் கடல் ஆடை அவனி எலாம் தனி
                  ஆளும் அரசுதன்னில்,
கரவு உறையும் மனத் தாதை முனிக்கு உரைத்த
                  மொழிப்படியே, கானம்தோறும்,
இரவு பகல் பல மூல சாகம் நுகர்ந்து, உயிர் வாழ்தல்
                  இனிது, நன்றே!

பொருள்


'குரவரையும் = தலைவர்களையும், முதியவர்களையும்

கிளைஞரையும் = உறவினர்களையும்

குலத்து உரிய துணைவரையும் = குலத்தில் கூட உதித்த துணைவர்களையும்

கொன்று = கொன்று

போர் வென்று, = போர் வென்று

அரவ = ஆதி சேஷன் என்ற பாம்பின் தலையில் இருக்கும்

நெடுங் கடல் = பெரிய கடலை

ஆடை = ஆடையாக உடுத்திய இந்த

அவனி எலாம் = உலகம் எல்லாம்

தனி = தனி ஆளாக

ஆளும் அரசுதன்னில், = ஆளுகின்ற அரசை விட

கரவு உறையும் = வஞ்சம் நிலவும்

மனத்  = மனத்தைக் கொண்ட

தாதை  = தந்தை (திருதராஷ்டிரன்)

முனிக்கு = சஞ்சய முனிவனுக்கு

உரைத்த = கூறிய

மொழிப்படியே, = சொற்படி

கானம்தோறும் = காடுகள் எல்லாம் சென்று

இரவு பகல் = இரவு பகல் எல்லா நேரமும்

பல = பலவிதமான

மூல சாகம் = பழங்களையும், காய்களையும்

நுகர்ந்து = உண்டு

உயிர் வாழ்தல் = உயிர் வாழ்தல்

இனிது, நன்றே! = இனிமையானது, நன்மை பயப்பது


எல்லாவற்றிற்கும் ஒரு விலை உண்டு.

வெற்றி பெற வேண்டுமா, உலகை ஆள வேண்டுமா, அதற்கு ஒரு விலை உண்டு.

பெரும் செல்வம் சேர்க்க வேண்டுமா, அதற்கும் ஒரு விலை உண்டு.

அந்த விலை கொடுத்து அந்த செல்வத்தை பெறுவது நல்லதா என்று தீர்மானம் செய்து கொள்ள வேண்டியது நம் கடமை.

பணம் பணம் என்று சென்று, வாழ்கையை தொலைத்தவர்கள் பலர்.

மனைவி, மக்கள், அன்பு, பாசம், உறவு எல்லாம் விளையாகக் கொடுத்து பணம் சம்பாதிக்கிறார்கள்.

இங்கே தர்மன் சொல்கிறான்.

எல்லாரையும் பலி கொடுத்தால் பெரிய அரசு கிடைக்கும்.

அது தேவை இல்லை என்கிறான்.

தர்மன் செய்தது தவறா சரியா என்பது ஒரு புறம் இருக்கட்டும்.

நீங்கள் எதை அடைய எதை இழக்கிறீர்கள் என்பதை அறிந்து  கொள்ளுங்கள்.

கணவனை (மனைவியை) விட நான் பெரிய ஆள், புத்திசாலி என்று நிலை நிறுத்த விரும்புகிறீர்களா? செய்யுங்கள். அதன் விலை, அவர்களின் அன்பை, காதலை இழக்க  வேண்டி வரும். அவ்வளவுதான்.

வில்லி பாரதத்தில் இது போல எவ்வளவோ கருத்துகள் கொட்டிக் கிடக்கிறது.

அள்ளிக் கொள்ளுங்கள். அத்தனையும் இலவசம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_20.html

Saturday, October 19, 2019

வில்லி பாரதம் - இரு திறத்தேமும் சென்று மாள்வோம்

வில்லி பாரதம் -  இரு திறத்தேமும் சென்று மாள்வோம்


உறவுகளுக்குள் சண்டை வருவது இயல்பு. கணவன் மனைவி, மாமியார் மருமகள், அண்ணன் தம்பி, பங்காளிகள் என்று உறவில் விரிசல் வருவது இயற்கை.

சண்டை வந்தால் என்ன செய்ய வேண்டும் ?

நீயா நானா என்று ஒரு கை பார்த்து விட வேண்டும். யார் சரி என்று நிரூபித்தே ஆக வேண்டும். வெற்றி பெற்றே ஆக வேண்டும். அது எப்படி நான் தவறு என்று சொல்லலாம் என்று மூர்க்கமாக வாதிட வேண்டும். என்ன ஆனாலும் சரி, அடுத்தவர் தவறு என்று நிலை நிறுத்தாமல் விடுவது இல்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டு கோதாவில் இறங்க வேண்டும்....

என்று தான் பலரும் நினைக்கிறார்கள். செய்கிறார்கள்.

சூதில் பாண்டவர்கள் தோற்றார்கள். நாடு நகரம் எல்லாம் வைத்து இழந்தார்கள். இறுதியில் மனைவியையும் வைத்து இழந்தான் தர்மன். பாஞ்சாலி சபை நடுவில் நெருக்கடிக்கு உள்ளானாள் . கதை உங்களுக்குத் தெரியும்.

வனவாசம், அஞ்ஞாத வாசம் முடிந்து திரும்பி வந்து விட்டார்கள்.

இப்போது என்ன செய்ய வேண்டும்?

ஒரு புறம் அர்ஜுனன், வீமன் , பாஞ்சாலி சபதம் நிற்கிறது.

கண்ணன் கேட்கிறான். என்ன செய்ய வேண்டும் என்று.

தருமன் சொல்கிறான். தர்மன் வாயிலாக வில்லி புத்தூராழ்வார் சொல்கிறார்.

"காட்டிலே மூங்கில் மரங்கள் வளர்ந்து இருக்கும். ஒன்றோடு ஒன்று உரசினால் தீப்பற்றிக் கொள்ளும். அப்படி தீப்பற்றிக் கொண்டால், உரசிய  இரண்டு மூங்கில்கள் மட்டும் அல்ல , காடே எரிந்து சாம்பல் ஆகும்.  அது போல  உறவினர்கள் ஒருவரோடு ஒருவர் உரசிக் கொண்டால் அவர்கள் அழிவது மட்டும் அல்ல, அவர்களுடைய சுற்றம் எல்லாம் அழியும். எனவே, நாங்கள்  ஒன்றாக வாழ வழி சொல்வாய்"

என்று கேட்கிறான்.

எவ்வளவு பெரிய மனம். கோபம் வந்தாலும்,  மற்றவர்கள் நகைப்பார்களே என்ற எண்ணம் இருந்தாலும்,  எவ்வளவு தீர்க்கமாக சிந்தித்து பேசுகிறான் தர்மன்.

பாடல்

வயிரம் எனும் கடு நெருப்பை மிக மூட்டி வளர்க்கின்,
                  உயர் வரைக்காடு என்ன,
செயிர் அமரில் வெகுளி பொர, சேர இரு திறத்தேமும்
                  சென்று மாள்வோம்;
கயிரவமும் தாமரையும் கமழ்பழனக் குருநாட்டில்
                  கலந்து, வாழ,
உயிர் அனையாய்! சந்துபட உரைத்தருள்!' என்றான்,
                  அறத்தின் உருவம் போல்வான்.

பொருள்

வயிரம் எனும் = வயிரம் போன்ற உறுதியான

கடு நெருப்பை = கடுமையான கோபத்தை

மிக மூட்டி = அதிகமாக மூட்டி

வளர்க்கின் = வளர்த்து விட்டால்

உயர் வரைக் = உயர்ந்து வளரும் மூங்கில்

காடு என்ன = காடு போல

செயிர் அமரில் = கடுமையான போரில்

வெகுளி பொர = கோபம் தீர

சேர இரு திறத்தேமும் = இருபக்கமும் சேர்ந்து போராடினால்

சென்று மாள்வோம்; = சண்டையில் சென்று இறந்து போவோம்

கயிரவமும் = ஆம்பல் மலரும்

தாமரையும் = தாமரை மலரும்

கமழ் = மணம் வீசும்

பழனக் = பழமையான

குருநாட்டில் = குரு நாட்டில்

கலந்து, வாழ, = ஒருவரோடு ஒருவர் கலந்து வாழ

உயிர் அனையாய் = எங்கள் உயிர் போன்றவனே (கண்ணனே )

சந்துபட = சமாதானம் அடைய

உரைத்தருள்!'  என்றான், = உரைத்து அருள் செய்வாய் என்றான்

அறத்தின் உருவம் போல்வான். = அறத்தின் உருவம் போன்ற தர்மன்


கௌரவர்கள் , பாண்டவர்களுக்கு செய்ததை விடவா உங்கள் கணவனோ/மனைவியோ உங்களுக்கு துன்பம் செய்து விடப் போகிறார்கள்.

கௌரவர்களோடு கலந்து வாழ வழி சொல்வாய் என்று கேட்கிறான்.

மனைவியின் சேலையை பிடித்து இழுத்தவனுடன் கலந்து வாழ அருள் செய்வாய்  என்று கேட்கிறான்.

நம்மால் நினைத்துப் பார்க்க முடியுமா, அவ்வளவு பொறுமை.

சண்டை போட்டால் எவ்வளவு பேர் இறந்து போவார்கள் என்ற அளவற்ற அருள் உள்ளத்தில் தோன்றியதால் , அதை தவிர்க்க நினைக்கிறான் தர்மன்.

கோபத்தில் நிதானம் இழக்காமல், பேசுகிறான் தர்மன்.

நம்மால் அந்த அளவு கட்டாயம் செய்ய முடியாது.

பரவாயில்லை.

இப்படியும் இருக்க முடியும். இருந்திருக்கிறார்கள் என்று நினையுங்கள்.

அது உங்களை ஒரு படி மேலே உயர்த்தும்.

மாந்தர் தம் உள்ளத்து அனையது உயர்வு.


https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_19.html

Sunday, December 9, 2018

வில்லி பாரதம் - அவை அடக்கம்

வில்லி பாரதம் - அவை அடக்கம் 


பெரிய இலக்கியங்களை செய்தவர்கள், இறை வணக்கம் செய்த பின் அவை அடக்கம் சொல்வது வழக்கம்.

தன்னை மிகவும் தாழ்த்தி, தனக்கு எதுவும் தெரியாது, ஏதோ சொல்ல வந்திருக்கிறேன், தவறு இருந்தால் மன்னிக்கவும் என்பது போல இருக்கும்.

இதற்கு அவை அடக்கம் என்று பெயர்.

எதற்கு இந்த அவை அடக்கம்? வித்தை என்றால் ஒரு கர்வம் வேண்டாமா? ஒரு பெருமை வேண்டாமா? இது என்ன தாழ்வு மனப்பான்மை என்று கேட்கலாம். இப்படி சொல்லி சொல்லியே தமிழர்களுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை வந்து விட்டது என்று சொல்கிறார்கள். கம்பரும், வில்லி புத்தூர் ஆழ்வாரும் தங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்கிறார்கள் என்றால் நாம் எல்லாம் எம்மாத்திரம் என்று மற்ற தமிழர்ககள் அடங்கிப் போய் விடுகிறார்கள்.

இது தேவையா ? மற்ற மொழிகளில் இப்படி இருப்பதாகக் காணோம்.

அவை அடக்கத்துக்குக் காரணம் தாழ்வு மனப்பான்மை அல்ல. கல்வியின் ஆழ அகலம் தெரிந்ததால் வந்த பயம், வந்த பணிவு.

ஏதோ கொஞ்சம் தெரிந்து விட்டு, எல்லாம் தனக்குத் தெரியும் என்று மார் தட்டி அலைபவர்களைப் பார்க்கிறோம். அறிவின் ஆழம் தெரியாதவர்கள். அறிவின் ஆழம் தெரிந்தால் பேச்சு வருமா ?

அவை அடக்கம் சொல்பவர்கள் தங்கள் தாழ்வு மனப்பான்மையால் சொல்லவில்லை. கல்வியின், அறிவின் வீச்சு அறிந்ததால் அவர்களிடம் தானே வந்த பணிவு அது.

வில்லிப் புத்தூர் ஆழ்வார் அவை அடக்கம் பாடுகிறார்.

"வட மொழியில் வியாசர் பாடிய மகா பாரதத்தை நான் பாடுவது எப்படி இருக்கிறது தெரியுமா? சூரிய உதயத்தின் அழகை கண்ணில்லாதவனுக்கு ஒரு ஊமையன் சொல்லியது மாதிரி இருக்கிறது" என்கிறார்.

கண்ணில்லாதவனுக்கு எவ்வளவு சொன்னாலும் சூரிய ஒளியின் அழகு புரிபட போவதில்லை. அதுவும் சொல்லுவான் ஒரு ஊமையன் என்றால் எப்படி இருக்கும்.

மகா பாரதம் என்ற சூரிய ஒளி போன்ற பெரிய காவியத்தை ஊமையனான நான் கண்ணில்லாத உங்களுக்குச் சொல்கிறேன். விளங்கின மாதிரிதான் என்கிறார்.

பாடல்

மண்ணிலாரணநிகரெனவியாதனார்வகுத்த
எண்ணிலாநெடுங்காதையையானறிந்தியம்பல்
விண்ணிலாதவன்விளங்குநீடெல்லையையூமன்
கண்ணிலாதவன்கேட்டலுங்காண்டலுங்கடுக்கும்.

பொருள்


மண்ணில் = இந்த உலகில்

ஆரண = வேதத்துக்கு

நிகரென = ஒப்பான

வியாதனார் = வியாசர்

வகுத்த = அருளிய

எண்ணிலா = கணக்கில் அடங்காத

நெடுங்காதையை = பெரிய கதையை

யானறிந்தியம்பல் = யான் + அறிந்து + இயம்பல் = நான் அறிந்து சொல்லுவது

விண்ணில் = ஆகாயத்தில்

ஆதவன் = சூரியன்

விளங்கு = ஒளிவிட்டு விளங்குகின்றதை

நீடெல்லையை = அந்த பெரிய ஆகாயத்தை

யூமன் = ஊமை

கண்ணிலாதவன் = குருடன்

கேட்டலுங் = கேட்டததும்

காண்டலுங் = கண்டதும்

கடுக்கும். = ஆகும்

ஒளி வீசும் அந்த வானத்தின் அழகை , அந்த ஆகாயத்தைப் பற்றி ஊமையன் சொல்ல குருடன்  கேட்ட கதை மாதிரி என்கிறார்.

அவை அடக்கம் ஒரு புறம் இருக்கட்டும்.

பெரிய காவியங்களில், இலக்கிய படைப்புகளில் எவ்வளவோ அரிய பெரிய உண்மைகள் , தத்துவங்கள் கொட்டிக் கிடக்கும். ஆழ்ந்து, அறிய வேண்டும்.

மாறாக, நமது சிற்றறிவைக் கொண்டு அந்த இலக்கியங்களை உரசிப் பார்த்து , அது சரி இல்லை, இது சரி இல்லை என்று அவற்றை நம் தரத்துக்கு கீழே கொண்டு வரக் கூடாது. நாம் மேலே போக நினைக்க வேண்டுமே அல்லாமல், அவற்றை கீழே கொண்டு வரக் கூடாது.

மிகப் பெரிய உண்மைகளை கண்டு நம்மிடம் சொல்கிறார்கள். கண் இருந்தும்  குருடர்களாய், காதிருந்தும் செவிடர்களாய் இருந்து விடக் கூடாது.

புரியவில்லை என்றால் தெரிந்து கொள்ள முயல வேண்டும்.

தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

எவ்வளவோ பெரியவர்கள், எவ்வளவோ நல்லதை சொல்லி விட்டுப் போய் இருக்கிறார்கள். கேட்டுத்தான் பார்ப்போமே.

https://interestingtamilpoems.blogspot.com/2018/12/blog-post_9.html


Thursday, November 1, 2018

வில்லி பாரதம் - மும்மூர்த்திகள்

வில்லி பாரதம் - மும்மூர்த்திகள் 


படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று செயல்களை செய்வது மூன்று மூர்த்திகள் என்று நாம் அறிவோம். பிரமன்,  திருமால்,அரன் என்று சொல்ல கேட்டிருக்கிறோம்.

இந்த மூன்று பேருக்கும் மேலே ஒரு கடவுள் இருக்கிறான் என்று நம் இலக்கியங்கள் பேசுகின்றன.

யார் அது ?

திருப்பள்ளி எழுச்சியில் மணிவாசகர் சொல்வார் ,

"மூவரும் அறிகிலர் யாவர் மாற்று அறிவார்"

அந்த பரம்பொருளை அந்த மும்மூர்த்திகளும் அறிய மாட்டார்கள் என்றால் பின் வேறு யார் தான் அறிவார்கள் என்கிறார்.

மும்மூர்த்திகளுக்கும் எட்டாத ஒருவன் அவன்.

முந்திய முதல்நடு இறுதியு மானாய்
மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்
பந்தணை விரலியும் நீயும்நின் அடியார்
பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே
செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித்
திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி
அந்தண னாவதுங் காட்டிவந் தாண்டாய்
ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே.

வில்லி புத்தூர் ஆழ்வார் சொல்கிறார்


"பிரமன் படைக்கிறான், திருமால் காக்கிறான், அரன் அழிக்கிறான். அப்படி அழித்த பின், மீண்டும் அனைத்தையும் எவன் உண்டாக்குகிறானோ அவன் பொன்னடி போற்றி" என்கிறார்.

அதாவது, இந்த மூவர் அல்லாத இன்னொருவரும் இருக்கிறார் என்கிறார். அவன் தான் முதல்வன் என்கிறார்.

பாடல்


ஆக்கு மாறய னாமுத லாக்கிய வுலகம்
காக்கு மாறுசெங் கண்ணிறை கருணையங் கடலாம்
வீக்கு மாறர னாமவை வீந்தநாண் மீளப்
பூக்கு மாமுத லெவனவன் பொன்னடி போற்றி.

சீர் பிரித்த பின்

ஆக்குமாறு அயன் முதல் ஆக்கிய உலகம் 
காக்குமாறு செங் கண் நிறை கருணை அம் கடலாம் 
வீக்குமாறு அரன் அவை வீந்த நாள் மீளப் 
பூக்குமா(று ) முதல்வன் எவன் பொன்னடி போற்றி 



பொருள்


ஆக்குமாறு அயன் = படைத்தல் செய்பவன் பிரமன்

முதல் = முதலில்

ஆக்கிய உலகம்  = படைத்த உலகத்தை

காக்குமாறு = காக்கும் தொழிலை செய்பவன்

செங் கண் = சிவந்த கண்களை உடைய

நிறை கருணை = கருணை நிறைந்த

அம் கடலாம் = கடல் போன்ற  (கடல் போன்ற கருணை நிறைந்த)

வீக்குமாறு = வீழுமாறு

அரன் = அரன்

அவை வீந்த நாள் = அவை அவ்வாறு வீழ்ந்த இந்த

மீளப் = மீண்டும்

பூக்குமா(று ) = தோன்றும்படி

முதல்வன் = செய்யும் முதல்வன்

எவன் = யார் ?

பொன்னடி போற்றி  = அவன் பொன்னடி போற்றி

இவைகளை கடந்து செல்ல வேண்டும். உருவம், அந்த உருவங்கள் செய்யும் தொழில் , இதில் யார் பெரியவர் என்ற சண்டைகள் என்று இவற்றை எல்லாம் கடந்து செல்ல வேண்டும்.

சிந்திப்போம்.

https://interestingtamilpoems.blogspot.com/2018/11/blog-post.html

Thursday, August 30, 2018

வில்லி பாரதம் - பழி தீர் வென்றி

வில்லி பாரதம் - பழி தீர் வென்றி


எத்தனையோ பாவங்கள் இருக்கின்றன. ஆவின் முலை அறுத்தோர், குருவுக்கு துரோகம் செய்தோர், கற்புடைய பெண்களின் கற்பை சூறையாடியோர், அரசனுக்கும் நாட்டுக்கும் துரோகம் செய்தோர் என்று ஒரு பெரிய பட்டியல் இருக்கிறது. அதில் உள்ள எந்த பாவத்தை செய்தாலும் அதற்கு ஒரு வடிகால் உண்டு, பாவ மன்னிப்பு உண்டு. ஆனால், பாவ மன்னிப்பே இல்லாத ஒரு பாவம் உண்டு என்றால், அது செய் நன்றி கொன்ற பாவம் தான்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை 
செய் நன்றி கொன்ற மகற்கு 

என்பது வள்ளுவம்.

அவ்வளவு பெரிய பாவம் அது.

கௌரவர்களும் பாண்டவர்களும் யுத்தம் செய்ய தயாராகி விட்டார்கள். நாட்டை போர் மேகம் சூழ்ந்து கொண்டிருக்கும் நேரம். கர்ணனை பாண்டவர் பக்கம் சேரும்படி குந்தி வேண்டுகிறாள். தாய் என்று தெரிந்தும், கௌரவர்கள் செய்வது தவறு என்று தெரிந்தும், செய்நன்றி காட்ட கௌரவர்கள் பக்கம் நிற்பேன் என்கிறான் கர்ணன்.

பாவம்

ஆரென்றறியத் தகாத என்னை அரசுமாக்கி முடிசூட்டி
பேரும் திருவும் தனது பெருஞ் செல்வம் யாவும் தெரிந்தளித்தான்
பாரின்றறிய நூற்றுவர்க்கும் பழி தீர் வென்றிப் பாண்டவர்க்கும்
போரென்றறிந்தும் செய்ந் நன்றி போற்றாதவரில் போவேனோ


பொருள்

ஆரென்றறியத் தகாத என்னை  = நான் யார் என்று அறிய முடியாத என்னை

அரசுமாக்கி = அரசனாக்கி

முடிசூட்டி = முடி சூட்டி

பேரும் = உயர்ந்த பேரும்

திருவும் = செல்வங்களும்

தனது பெருஞ் செல்வம் யாவும் = தனது பெரிய செல்வங்கள் யாவும்

தெரிந்தளித்தான் = பார்த்து பார்த்து தெரிந்து எடுத்து கொடுத்தான்

பாரின்றறிய = பார் இன்று அறிய

நூற்றுவர்க்கும் = நூறு பேரான கௌரவர்களுக்கும்

பழி தீர் வென்றிப் = பழி இல்லாத வெற்றி கொண்ட

பாண்டவர்க்கும் = பாண்டவர்களுக்கும்

போரென்றறிந்தும்  = போர் என்று அறிந்தவுடன்

செய்ந் நன்றி = செய் நன்றி

போற்றாதவரில் = போற்றாதாரில்  ?

 போவேனோ = போவேனா ? (போக மாட்டேன்)

துரியோதனன், கர்ணனுக்கு சும்மா அள்ளிக் கொடுத்து விடவில்லை. ஒவ்வொன்றையும் பார்த்து எடுத்து எது கரன்னனுக்கு தேவை என்று தெரிந்து எடுத்துக் கொண்டுத்தான்.

ஒன்றும் இல்லாதவனை அரசனாக்கி, பேரும் புகழும் தந்து அவனை எங்கோ கொண்டு போய் நிறுத்தினான்.


அந்த செய் நன்றி கடனுக்காக, கர்ணன் போராடி உயிர் விட்டான்.

அவன் நினைத்திருந்தால் பாண்டவர் பக்கம் போய் , அரசை ஆண்டிருக்கலாம்.

போகவில்லை. செய் நன்றிக்காக உயிரையும் கொடுத்தான்.




http://interestingtamilpoems.blogspot.com/2018/08/blog-post_30.html

Sunday, August 12, 2018

வில்லி பாரதம் - செகத்தார் சிரியாரோ ?

வில்லி பாரதம் - செகத்தார் சிரியாரோ ?


வில்லிப் புத்தூர் ஆழ்வாரின் இழையும் தமிழ்.

கர்ணனின் பிறப்பு இரகசியத்தை அவனிடம் கூறி, அவனை பாண்டவர் பக்கம் வரும்படி கண்ணன் கூறுகிறான். அதற்கு கர்ணன் கூறுவதாக வில்லியாரின் பாடல்கள் அத்தனையும் தேன்.

"கண்ணனா, அன்று கன்று வடிவில் வந்த ஒரு அரக்கனை, அந்த கன்றின் காலைப் பற்றி அருகில் உள்ள விளா மரத்தின் மேல் எரிந்து கொன்றாய். புல்லாங்குழல் ஊதி ஆவினங்களை அழைத்தாய். மலையை தூக்கிப் பிடித்து உன் ஆயர்பாடி மக்களை காத்தாய். உன்னால், இன்று என் பிறப்பின் இரகசியத்தை அறிந்தேன். ஆனால், இப்போது பாண்டவர் பக்கம் போனால், இந்த உலகம் என்னைப் பார்த்து சிரிக்காதா ?  என்கிறான்

பாடல்

கன்றால் விளவின் கனி உகுத்தும், கழையால் நிரையின் 
             கணம் அழைத்தும், 
குன்றால் மழையின் குலம் தடுத்தும், குலவும் 
             செல்வக் கோபாலா! 
'இன்றால், எனது பிறப்பு உணர்ந்தேன்' என்று அன்பு 
             உருகி, எம்பியர்பால் 
சென்றால், என்னை நீ அறியச் செகத்தார் 
             என்றும் சிரியாரோ?

பொருள்

கன்றால் = கன்றுக் குட்டியால்

விளவின் = விளா மரத்தின்

கனி = பழங்களை

உகுத்தும் = உதிர்ந்து விழும்படி செய்தும்

கழையால் = புல்லாங்குழலால்

நிரையின் = பசுக்களின்

கணம் = கூட்டத்தை

அழைத்தும் = அழைத்தும்

குன்றால் = மலைக் குன்றால்

மழையின் =மழையில் இருந்து

குலம் தடுத்தும் = யாதவர் குலத்தை தடுத்து காத்தும்

குலவும் = உலவும்

செல்வக் கோபாலா! = செல்வச் சிறப்புள்ள கோபாலா (கண்ணா)

'இன்றால்,  = இன்று

எனது பிறப்பு உணர்ந்தேன் = எனது பிறப்பின் இரகசியத்தை அறிந்து கொண்டேன்

என்று = என்று கூறினான்

அன்பு உருகி = அன்பினால் உருகி

எம்பியர்பால் = என் தம்பிமார்களிடம்

சென்றால் = சென்றால்

என்னை = என்னைப் பார்த்து

நீ அறியச் = நீ பார்க்கும்படி

செகத்தார் = இந்த உலகில் உள்ள மக்கள் எல்லோரும்

என்றும் சிரியாரோ? = இன்று மட்டும் அல்ல, என்றென்றும் சிரிக்க மாட்டார்களா ?

இது நேரடியான பொருள்.

வில்லியின் சொல்லுக்குள் இன்னொரு பொருளும் உண்டு.


கன்றால் விளவின் கனி உகுத்தும் = மாயக் கண்ணா, நீ கன்று குட்டியை எறிந்து விளா மரத்தின் கனியை உதிர்த்தாய். நான் கன்றுக் குட்டியும் இல்லை, துரியோதனன் விளா மரமும் இல்லை

கழையால் நிரையின்  கணம் அழைத்தும், = வேணு கோபாலா, உன் குழல் இசைக்கு பசுக் கூட்டம் வரலாம். நான் மயங்க மாட்டேன்.

குன்றால் மழையின் குலம் தடுத்தும் = நீ குன்றை உயர்த்தி சரம் சரமாய் பெய்யும் மழையில் இருந்து உன் யாதவ கூட்டத்தை காப்பாற்றினாய். ஆனால், என் வில்லில் இருந்து சரம் சரமாய் பாயும் அம்பு மழையில் இருந்து பாண்டவ கூட்டத்தை உன்னால் காக்க முடியாது



வில்லி புத்தூராரின் வார்த்தை ஜாலம்.

மீண்டும் ஒரு முறை பாடலைப் படித்துப் பாருங்கள்.

http://interestingtamilpoems.blogspot.com/2018/08/blog-post_12.html

Saturday, August 13, 2016

வில்லி பாரதம் - சாதி கடந்த இடம்

வில்லி பாரதம் - சாதி கடந்த இடம் 


நல்ல விஷயங்களை சொல்லவே அத்தனை இலக்கியங்களும் படைக்கப் பட்டன. நல்ல விஷயங்களை , நல்ல கதா பாத்திரங்கள் தான் சொல்ல வேண்டும் என்று இல்லை. எதிர் மறை குணம் கொண்ட பாத்திரங்கள் மூலமும் நல்லதை எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். 

கம்ப இராமாயணத்தில் கூனி அறம் சொல்லுவாள், கும்பகர்ணன் சொல்லுவான். 

பாரதத்தில் சில இடங்களில் துரியோயாதான் நல்ல விஷயங்களைப் பேசுவான். 

அர்ஜுனனோடு வில் வித்தைக்கு கர்ணன் களத்தில் இறங்குகிறான். 

இது அரசர்களுக்கு உண்டான போட்டி. நீ யார், உன் குலம் என்ன என்று அங்கிருந்த பெரியவர்கள் வினவுகிறார்கள். 

துரியோதனன் சொல்கிறான்...."கற்றவர்களுக்கு, அழகான பெண்களுக்கும், தானம் செய்பவர்களுக்கும், வீரர்களுக்கும், அரசர்களுக்கும், ஞானம் அடைந்து அதன் படி வாழ்பவர்களுக்கும் சாதி என்பது கிடையாது" என்று. 

பாடல் 

கற்றவர்க்குநலனிறைந்த கன்னியர்க்கும்வண்மைகை
உற்றவர்க்கும்வீரரென்றுயர்ந்தவர்க்கும்வாழ்வுடைக்
கொற்றவர்க்குமுண்மையான கோதின்ஞானசரிதராம்
நற்றவர்க்குமொன்றுசாதி நன்மைதீமையில்லையால்.


பொருள் 


கற்றவர்க்கு = கல்வி கற்றவர்களுக்கு 

நலனிறைந்த = நலம் நிறைந்த (அழகு, அறிவு, பண்பு) நிறைந்த 

கன்னியர்க்கும் = கன்னிப் பெண்களுக்கும் 

வண்மை கை உற்றவர்க்கும் = கொடை வழங்கும் கைகளை கொண்டவர்களுக்கும் 

வீரரென்றுயர்ந்தவர்க்கும் = வீரரென்று உயர்ந்தவர்க்கும் 

வாழ்வுடைக் கொற்றவர்க்கும் = உயர்ந்த வாழ்வை உடைய அரசர்களுக்கும் 


உ ண்மையான = உண்மையான 

கோதின்ஞானசரிதராம் = குற்றமற்ற ஞானம் அடைந்து அதன் படி வாழ்பவர்களுக்கும் 

நற்றவர்க்குமொன்று சாதி = நல்ல தவம் செய்தவர்களுக்கும் சாதி ஒன்று தான் 

நன்மைதீமையில்லையால் = அதில் உயர்வு தாழ்வு இல்லை 


வெள்ளத்தில் மாட்டிக் கொண்டால், வேறு ஜாதிக் கார இராணுவ வீரர் காப்பாற்றினால், மாட்டோம் என்போமா ?

பசியில், வறுமையில் தவிக்கும் ஒருவன், வேறு ஜாதிக் காரன் தரும் உதவியை வேண்டாம் என்பானா ?

மாற்று ஜாதிக் காரன் என்பதால், ஒரு அரசன் சொல்வதை கேட்காமல் இருக்க முடியுமா ?

அழகான பெண், மாற்று மதத்தவள் என்பதால் அவளின் அழகு குறைந்து விடுமா ?

உண்மையான துறவிகள் எந்த மதத்தில் இருந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மற்றவர்கள் வாயை அடைப்பதற்காக கூட அவன் சொல்லி இருக்கலாம். இருந்தாலும், அவன் மூலம் ஒரு உண்மையை எடுத்துச் சொல்கிறார் வில்லிபுத்தூரார். 

அறிவோம். 

சாதி போன்ற பிரிவுகளை கடந்து மேலே செல்வோம். 

அறிவோம். உயர்வோம். 

http://interestingtamilpoems.blogspot.in/2016/08/blog-post.html

Friday, June 12, 2015

வில்லி பாரதம் - இறைவனுக்குத்தான் வேறு வேலை என்ன இருக்கிறது ?

வில்லி பாரதம் - இறைவனுக்குத்தான் வேறு வேலை என்ன இருக்கிறது ?


நம்பிக்கை.

எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், எவ்வளவு படித்து இருந்தாலும், எவ்வளவு செல்வம், அதிகாரம், இருந்தாலும்...வாழ்வில் சில நேரம் வரும்...நம்பிக்கை தளரும் நேரம் வரும்....

அத்தனை செல்வமும், அதிகாரமும், உறவும், நட்பும் உதவாமல் போகும் காலம் வரும்.

நம் பலத்தால் ஒன்றும் செய்ய முடியாது என்று சில நேரம் வரும்.

நம்பிக்கை தளரும். என்னால் முடியாது என்று மனமும் உடலும் சோர்ந்து போகும் நேரம் வரும்.

என்ன செய்வது ? யாரைக் கேட்பது, யார் உதவுவார்கள், எப்படி சமாளிப்பது என்று திகைக்கும் காலம் வரும்.

அந்த நேரத்தில் நம்பிக்கையை ஊட்ட நம் இலக்கியங்கள் உதவுகின்றன.

இறைவனை நம்பு. அவன் உனக்கு உதவே காத்து இருக்கிறான்...அவனுக்கு வேறு வேலை எதுவும் கிடையாது என்று படித்துப்  படித்து சொல்கின்றன.

அப்படி ஒரு நெருக்கடி பாண்டவர்களுக்கு வந்தது.....

பாண்டவர்கள் வன வாசம் செய்யும் காலம்.

அந்த நேரத்தில் துருவாசர் என்ற முனிவர் தன் சீடர்கள் புடை சூழ துரியோதனின் அரண்மனைக்கு வந்தார். துரியோதனனும் அவரை நன்றாக உபசரித்தான். அதில் மகிழ்ந்த அவர், "உனக்கு என்ன வேண்டும் " என்று கேட்டார்.

"முனிவரே, எப்படி இங்கு வந்து விருந்து உண்டு எங்களை மகிழ்வித்தீர்களோ, அதே போல் பாண்டவர்களையும் மகிழ்விக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டான்.

பாண்டவர்களோ வனத்தில் இருக்கிறார்கள். முனிவரின் கூட்டமோ பெரியது. எப்படியும் பாண்டவர்களால் முனிவரின் கூட்டத்திற்கு உணவளிக்க முடியாது. அதனால் சினம் கொண்டு முனிவர் அவர்களை   சபிப்பார்...பாண்டவர்கள் நல்லா கஷ்டப்பட்டும் என்ற நல்ல எண்ணத்தில் அப்படி கேட்டான் துரியோதனன்.

முனிவரும் தன் மாணவ குழாத்துடன் பாண்டவர்கள் இருக்கும் இடம் வந்தார்.

பாண்டவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

ஆளாளுக்கு ஒன்று சொன்னார்கள். பாண்டவர்களில் புத்திசாலி சகாதேவன்.

அவன் சொன்னான் "கண்ணனை அழைப்போம்...அவன்தான் நம்மை காக்க முடியும் " என்று.

கண்ணன் இருப்பது துவாரகையில். பாண்டவர்கள் இருப்பதோ கானகத்தில். முனிவர் குளிக்கப் போய் இருக்கிறார். அவர் குளித்து வருவதற்குள் கண்ணன் வந்து  இந்த பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும்.

முதலில் கண்ணனுக்கு எப்படி செய்தி அனுப்புவது ?

இறைவன் , தன்னை யார் எப்போது எங்கு அழைப்பார்கள் என்று காத்துக் கொண்டிருப்பானாம். கூப்பிட்ட உடனே ஓடி வந்து விடுவானாம்.

தருமன் , கண்ணனை நினைத்தவுடன் உடனே அவன் மனத்தில் வந்து நின்றானாம்.

பாடல்

தப்பு ஓதாமல், தம்பியர்க்கும் தருமக் கொடிக்கும் இதமாக, 
அப்போது உணரும்படி உணர்ந்தான், அசோதை மகனை 
                           அறத்தின் மகன்; 
'எப்போது, யாவர், எவ் இடத்தில், எம்மை நினைப்பார்' 
                           என நின்ற 
ஒப்பு ஓத அரியான், உதிட்டிரன்தன் உளப்போதிடை 
                           வந்து உதித்தானே.

பொருள்

தப்பு ஓதாமல் = தவறாக எதையும் பேசாத (தருமன்)

தம்பியர்க்கும் = தம்பிகளுக்கும்

தருமக் கொடிக்கும் = தர்மமே கொடியாக வந்தது போல் இருந்த பாஞ்சாலிக்கும்

இதமாக = இதமாக

அப்போது = அந்த நேரத்தில்

உணரும்படி = தன்னை உணரும்படி கண்ணனிடம் வேண்டினான்

உணர்ந்தான் =  அதை உணர்ந்தான். யார் ?

அசோதை மகனை = யசோதை மகன்

அறத்தின் மகன்= தர்மத்தின் மகன் (தர்ம புத்திரன்)

'எப்போது, யாவர், எவ் இடத்தில், எம்மை நினைப்பார்'
                           என நின்ற = எப்போது , யாவர், எவ்விடத்தில் என்னை நினைப்பார்கள்  என்று இருக்கும்

ஒப்பு ஓத அரியான் = தனக்கு ஒப்பு இல்லாத , வாசித்து அறியமுடியாத அவன்

உதிட்டிரன் தன் = தர்ம புத்திரனின்

உளப்போதிடை = உள்ளித்தில்

வந்து உதித்தானே = வந்து உதித்தான்


நம்புங்கள். அதுதான் வாழ்க்கை. 


Sunday, April 26, 2015

வில்லி பாரதம் - கோபமும் தவமே

வில்லி பாரதம் - கோபமும் தவமே 


தவம் என்பது தன்னை மறந்து ஒன்றில் ஒன்றுவது.

யோகம் என்பது இணைவது. சேர்ப்பது.

நாம் பிரிந்து , சிதைந்து கிடக்கிறோம்.

மனம் ஆயிரம் துண்டுகளாய் சிதறிக் கிடக்கிறது. அது வேண்டும், இது வேண்டும், அது சரியில்லை, இது முடியாது, அதை செய்யலாம் ஆனால் உலகம் ஒத்துக் கொள்ளுமா என்று மனம் ஆயிரம் துண்டுகளாய் இருக்கிறது.

மனமும் உடலும் பிரிந்து கிடக்கிறது.

மனதில் நினைப்பதை எல்லாம் சொல்ல முடிகிறதா ? செய்ய முடிகிறதா  ?

மனம் ஒரு புறம் இழுக்கிறது ...உடல் இன்னொரு புறம் இழுக்கிறது ...கிடந்து அலைகிறோம் .

ஒன்றாகச் சேர்ப்பது தவம், யோகம்.

கோபமும் ஒரு விதத்தில் தவம் தான்.

முழுமையாகச் செய்தால் எதுவும் தவம் தான்...

கோபம் உள்ளவன் தன்னை மறக்கிறான்...

கோபம் தணிந்த பின் "நானா அப்படிச் சொன்னேன் ? நானா அப்படி செய்தேன்  " என்று வியந்து கேட்கிறான். அவன் செய்யவில்லை என்றால் யார் செய்தது...

நான் இல்லாத இடம் அது.

கோபம் மட்டும்தான் இருக்கும். தன்னை மறந்த இடம்.

மகாவீரர் , கோபமும் ஒரு வித தியானம் என்று கூறுகிறார்.

கோபம் வரும் போது "இது சரி இல்லை, நான் கோபப் படக் கூடாது" என்று நீங்கள் இடையில் வராதீர்கள்.

கோபம் மட்டுமே  இருக்கட்டும்.

பாரத்தில் துருவாசர் என்று ஒரு முனிவர் இருந்தார். கோபத்திற்கு  .பெயர் போனவர்.

கோபம் வந்தால் உடனே சாபம் தான். அவர் கோபத்திற்கு எல்லோரும்  பயந்தார்கள்.

அவருக்கு கோபமே ஒரு தவம்.

 கோபத்திலும், சாபத்திலும் அவர் தவம்  வளரும்.

ஒரு நாள் அவரை துரியோதனன் சந்தித்து ,  உபசரித்தான். அப்போது அவர் "உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார் "

"எனக்கு என்ன வேண்டும்...நீங்கள் இங்கு வந்து என்னை மகிழ்வித்தது போல  பாண்டவர்களையும்  மகிழ்விக்க வேண்டும் " என்று கேட்டான்.

பாண்டவர்கள் துர்வாசரை உபசரிக்க முடியாமல் அவரின் கோபத்திற்கு ஆளானாவர்கள்...துர்வாசர் சபிப்பார் என்பது அவன் எண்ணம்.

துர்வாசர் பாண்டவர்கள் கானகத்தில் இருக்கும் இடத்திற்கு வருகிறார். ....

பாடல்    

சாபத்தாலும், சாபமொழிதன்னால் வளரும் தவத்தாலும், 
கோபத்தாலும், பேர் படைத்த கொடிய முனிவன் துருவாசன், 
தீபத்தால் மெய் வகுத்தனையான், திகழ் பல் முனிவர் புடை சூழ, 
ஆபத்தால் வந்து அடைந்தவர்போல், அடைந்தான், 
                           அந்த அடவியின்வாய்.


பொருள்

சாபத்தாலும் = சாபம் தருவதினாலும்

சாபமொழிதன்னால் வளரும் தவத்தாலும் = சாபம் தருவதினால் வரும் தவத்தாலும்


கோபத்தாலும் = கோபத்தாலும்

பேர் படைத்த = பெயர் பெற்ற

கொடிய முனிவன் துருவாசன் = முனிவனான துருவாசன்

தீபத்தால் மெய் வகுத்தனையான் =  தீபத்தால் செய்த உடல் போன்றவன். உடல் தீபம் போல ஜொலிக்கும். கோபம் என்ற தீயால் உடல் ஜொலிக்கும். கோபாக்கினி.

திகழ் = புகழ் பெற்ற

பல் முனிவர் புடை சூழ = பல முனிவர்கள் புடை சூழ

ஆபத்தால் வந்து அடைந்தவர்போல் = ஆபத்து வந்தது போல

அடைந்தான் = அடைந்தான்

அந்த அடவியின்வாய் = அந்த காட்டுக்கு (பாண்டவர்கள் இருக்கும் கானகத்திற்கு)

தன்னை மறக்கும் எதுவும் தவம்தான்....

பக்தியாக இருந்தாலும், காதலாக இருந்தாலும், கலவியாக இருந்தாலும்...கோபமாக  இருந்தாலும்.

பாரதத்தில் இப்படி ஆயிரம் இருக்கிறது....நேரமிருப்பின் படித்துப் பாருங்கள்.





Monday, April 20, 2015

வில்லி பாரதம் - பார்க்கும் பார்வையில் இருக்கிறது உலகம்

வில்லி பாரதம் -  பார்க்கும் பார்வையில் இருக்கிறது உலகம் 


நாத்திகம் இன்று நேற்று வந்தது அல்ல. மகாபாரத காலத்தில் இருந்தே இருக்கிறது.

அஸ்வமேத யாகம் முடிந்தபின் முதல் மரியாதை யாருக்கு என்ற கேள்வி எழுந்தது.

எல்லோரும் கண்ணனுக்கே என்று கூறினார்கள் - சிசுபாலனைத் தவிர.

சிசுபாலன் கண்ணனுக்கு முதல் மரியாதை தரக் கூடாது என்று கூறி வாதாடுகிறான்.

ஒரு தாய் போல முலைப் பால் தர வந்த பூதனை என்ற அரக்கியை இரக்கம் இல்லாமல் கொன்றவன் கண்ணன். பால், நெய், வெண்ணை முதலியவைகளை திருடித் தின்றவன் கண்ணன். அதற்காக உரலில் கட்டுண்டு அழுதவன் கண்ணன். அவனுக்கா முதல் மரியாதை என்று வெகுண்டு எழுகிறான்.

பாடல்

'ஈன்ற தாய் வடிவம் கொண்டு, உளம் உருகி, இணை முலைத்
                               தடத்து அணைத்து,அமுதம்
போன்ற பால் கொடுப்ப, பொழி முலைப் பாலோ, பூதனை
                                உயிர்கொலோ, நுகர்ந்தான்?
சான்ற பேர் உரலால் உறிதொறும் எட்டாத் தயிருடன் நறு
                                நெய் பால் அருந்தி,
ஆன்ற தாய் கண்டு வடத்தினின் பிணிப்ப, அணி உரலுடன்
                                இருந்து அழுதான்!


(http://interestingtamilpoems.blogspot.in/2015/04/blog-post_31.html)

பொருள்

'ஈன்ற = பெற்ற

தாய் = தாயின்

வடிவம் கொண்டு = வடிவம் கொண்டு

உளம் உருகி = உள்ளம் உருகி

இணை = இணையான

முலைத் தடத்து அணைத்து = மார்போடு அனைத்து

அமுதம் போன்ற பால் கொடுப்ப = அமுதம் போன்ற பால் கொடுக்க முனைந்த போது

பொழி முலைப் பாலோ = பொழிந்த முலைப் பாலோடு

பூதனை = பூதனை என்ற அரக்கியின்

உயிர்கொலோ, நுகர்ந்தான் = உயிரையும் சேர்த்து உறிஞ்சினான்

சான்ற பேர் உரலால் = பெரிய உரலால்

உறிதொறும் = உறிகள் தோறும்

எட்டாத் தயிருடன் = எட்டாத தயிருடன்

நறு நெய் = நல்ல நெய்

பால்  = பால்

அருந்தி = அருந்தி

ஆன்ற தாய் = சிறந்த தாயான யசோதை

கண்டு = கண்டு வருந்தி

வடத்தினின் பிணிப்ப = கயிறால் கட்ட

அணி உரலுடன் = உரலுடன்

இருந்து அழுதான்! = இருந்து அழுதான்


உலகளந்த பெருமாள் , சிசுபாலன் கண்ணுக்கு, திருடனாகத் தெரிந்தார்.

உலகம் அவரவர் பார்க்கும் பார்வையில் இருக்கிறது.

ஆணவம் தலைக்கு ஏறினால் அருகில் உள்ள ஆண்டவன் கூடத் தெரியாது.


Wednesday, April 15, 2015

வில்லி பாரதம் - அவனை யார் அறிவார் ?

வில்லி பாரதம் - அவனை யார் அறிவார் ?


இறைவன் யார் ? அவன் எப்படி இருப்பான் ? கருப்பா? சிவப்பா ? உயரமா ? குள்ளமா ? 

நமக்கு ஒன்றும் தெரியாது. சிலைகளும் படங்களும் யாரோ கற்பனையில் செய்தவை. நேரில் பார்த்து வந்து யாரும் அதைச் செய்யவில்லை. 

எனவே, இறைவன் நேரில் வந்தால் கூட நமக்கு அவன் இறைவன் என்று தெரியாது. 

நமக்குத் தெரியாது. தெரிந்தவர்கள் சொன்னாலாவது ஏற்றுக் கொள்வோமா என்றால் அதுவும் சந்தேகம்தான். 

உனக்கு  எப்படித் தெரியும் என்று அவர்களை மேல் கேள்வி கேட்போம்.

அப்படி ஒரு முறை நிகழ்ந்தது. 

இறைவன் நேரில் வந்தான். 

அங்கிருத்த பெரியோர்கள் எல்லாம் அவன் இறைவன் என்றே ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் அங்கிருந்த ஒரு சிலர் ஏற்றுக்  கொள்ளவில்லை. அவர்களில் ஒருவன் சிசுபாலன். 

வந்த இறை கண்ணன். 

ஏற்றுக் கொண்ட பெரியவர்கள் பீஷ்மர், துரோணர் போன்றோர்.

நடந்த இடம் தர்மனின் அசுவமேத யாகம் பூர்த்தி அடைந்த மண்டபத்தில், முதல் தாம்பூலம் யாருக்கு தருவது என்ற சிக்கல் எழுந்த போது .

 எல்லோரும் கண்ணனுக்கே முதல் தாம்பூலம் என்று ஏற்றுக் கொண்டார்கள். சிசு பாலனுக்கு பொறுக்கவில்லை. 

அரசர்கள் இருக்கும் அவையில் ஒரு இடையனுக்கு முதல் தாம்பூலமா என்று கொதித்து எழுந்தான். 

பாடல் 

பூபாலர் அவையத்து முற்பூசை பெறுவார், 
                                புறங்கானில் வாழ் 
கோபாலரோ'' என்று உருத்து, அங்கு அதிர்த்து, 
                                கொதித்து, ஓதினான்-
காபாலி முனியாத வெங் காமன் நிகரான கவின் 
                                எய்தி, ஏழ் 
தீ பால் அடங்காத புகழ் வீர கயம் அன்ன சிசுபாலனே.

பொருள் 

பூபாலர் அவையத்து = பூலோகத்தை காக்கும் அரசர்கள் இருக்கும் அவையில் 

முற்பூசை பெறுவார் = முதல் பூசை (தாம்பூலம்) பெறுவது 
 
புறங்கானில் = ஊருக்குப் புறத்தே காட்டில் 

வாழ் = வாழும் 
 
கோபாலரோ'' = மாடு மேய்பவனோ (கோ என்றால் பசு. பாலர் என்றால் காப்பவன்) 

என்று உருத்து = என்று கூறி 

அங்கு அதிர்த்து = அதிரச் சொல்லி 

கொதித்து = உள்ளம் கொதித்து 

ஓதினான் = கூறினான் 

காபாலி = சிவன் 

முனியாத = கோபம் கொள்ளாத 

வெங் காமன் = மன்மதன் 

நிகரான  = நிகரான , சமமான  

கவின் எய்தி =  அழகு கொண்ட  

ஏழ் தீ பால் = ஏழு தீவுகளிலும் 

அடங்காத புகழ் = அடங்காத புகழ் கொண்ட 

வீர = வீரனான 

கயம் அன்ன = யானையைப் போன்ற பலம் பொருந்திய 

சிசுபாலனே = சிசுபாலனே 


அது கதை. 

அழகு, வீரம், புகழ் இருக்கிறது. ஆணவம் தலைக்கு ஏறுகிறது. என்னை விட உயர்ந்தவன்  யார் என்ற எண்ணம் வருகிறது. 

இறைவனே வந்தால் கூட ஆணவம் கண்ணை மறைக்கிறது. 

திருமாலை இடையன்   என்று சொல்லி அழிந்தான் சிசுபாலன். 

திருமாலை மனிதன் என்று சொல்லி அழிந்தான் இராவணன்.

ஆணவம். 

ஆணவம் கண்ணை மறைக்கிறது. அறிவை மயக்குகிறது. அழிவைத் தருகிறது. 

தெளிந்த பார்வை வேண்டுமா ? எங்கேயாவது ஆணவம் இருக்கிறதா என்று பாருங்கள். ஆணவம் இருக்கும்வரை உண்மை தெரியாது. 

இறைவன் அருகில் இருந்தால் கூட உணர முடியாமல் போகும். 

யாருக்குத் தெரியும் ?  இறைவனுக்கு எவ்வளவு அருகில் நீங்கள் இருக்கிறீர்கள்  என்று ?


Tuesday, April 14, 2015

வில்லி பாரதம் - சரி தவறு அறியாத பொறாமை

வில்லி பாரதம் - சரி தவறு அறியாத பொறாமை 


கணவனுக்கு சர்க்கரை வியாதி. இனிப்புப் பண்டங்களை சுவைக்க முடியாது. அதற்காக மனைவியும் இனிப்பு சாபிடாமல் இருக்க முடியுமா ? அப்படியே இருந்தாலும் எத்தனை நாள் இருக்க முடியும் ?

வாழ் நாள் பூராவும் இருந்தாள் காந்தாரி.

கணவனுக்கு கண் தெரியாது என்று அறிந்ததும், தன் கண்களை கறுப்புத் துணியால் கட்டிக் கொண்டாள் . கணவனுக்கு கிடைக்காத காட்சி இன்பம் எனக்கும் வேண்டாம் என்று வாழ் நாள் பூராவும் கண்ணைக் கட்டிக் கொண்டு வாழ்ந்தாள் . கணவன் மேல் அவ்வளவு அன்பு.

காந்தாரிக்கும் திருதராஷ்டினருக்கும் 100 பிள்ளைகள் பிறந்தார்கள். எப்படி ? வருடத்திற்கு ஒன்று என்றாலும் நூறு வருடம் ஆக வேண்டுமே ?

காந்தாரியும், குந்தியும் ஒரே சமயத்தில் கருவுற்றார்கள். முதலில் குந்திக்கு பிள்ளை பிறந்தது.

இதை அறிந்த காந்தாரி , பொறாமையால், தன் வயிற்றில் கல்லால் இடித்துக் கொண்டாள் . அதனால் அவளின் கர்ப்பம் கலைந்தது. உதிரம் வெளிப்பட்டது. அந்த உதிரத்தை 100 கலன்களில்  சேமித்து வைத்தார்கள். அதனோடு கூட வெளிப்பட்ட திசுக்களையும் தனியாக சேர்த்து வைத்தார்கள். வியாதன் என்பவன்  கை படாமல் அவற்றை வளர்த்து 100 பிள்ளைகளாகச் செய்தான்.

இதைத்தான், பொறாமையில் காரியம் செய்தால் , "காந்தாரி இடித்துக் கொண்டு பிள்ளை பெற்றது போல " என்று சொல்லுவார்கள்.

பாடல்


அற்றனள் துயரம் எல்லாம்; அருந் தவப் பயனால், மைந்தற் 
பெற்றனள், குந்தி' என்னும் பேர் உரை கேட்ட அன்றே, 
உற்றனள் பொறாமை; கல்லால் உதரம் உள் குழம்புமாறு 
செற்றனள், தனது கேடும் ஆக்கமும் சிந்தியாதாள்.


பொருள்

அற்றனள் துயரம் எல்லாம் =துன்பம் எல்லாம் தொலைத்தாள்

அருந் தவப் பயனால் = தான் செய்த பெரிய தவத்தால்

மைந்தற் பெற்றனள், குந்தி' = மைந்தனைப் பெற்றனள் குந்தி

என்னும் பேர் உரை கேட்ட அன்றே = என்ற பெரிய செய்தியைக் கேட்ட உடனே

உற்றனள் பொறாமை = பொறாமை உற்றாள் (காந்தாரி)

கல்லால் = கல்லால்

உதரம் = வயறு

உள் குழம்புமாறு =உள்ளே குழம்புமாறு

செற்றனள் = இடித்துக் கொண்டாள்

 தனது கேடும் ஆக்கமும் சிந்தியாதாள் = தனக்கு நல்லது எது கெட்டது எது என்று சிந்திக்காமல்

.
இதில் உள்ள நுண்ணிய பொருளை சிந்திப்போம்:

பொறாமை - மற்றவர்கள் நன்மை அடைவதைக் கண்டு பொறுத்துக் கொள்ளாமை. 

பொறாமை கொண்டவன் தனக்குத் தானே தீமை தேடிக் கொள்வான். காந்தாரி  கல்லால் தன்  வயிற்றில் அடித்துக் கொண்டாள் குந்திக்கு என்ன தீங்கு வந்து விடும் ?  துன்பம் காந்தாரிக்குத் தான்.  பொறாமை  யாரிடம் இருக்கிறதோ அது அவர்களுக்குத்தான்  தீமை செய்யும். 

இரண்டாவது, பொறாமை கொண்டவர்கள் எது சரி எது தவறு என்று அறியமாட்டார்கள். "ஆக்கமும் கெடும் சிந்தியாதாள் " என்றார் வில்லிபுத்துராழ்வார்.  பொறாமை அறிவை மறைக்கும். 

மூன்றாவது, பொறாமை கொண்டவனுக்கு தீமை விளைவிக்கும். பொறாமையில்  இருந்து விளைவது ஊருக்குத் தீமை விளைவிக்கும். பொறாமையில் பிறந்தவர்கள் கௌரவர்கள். அவர்களால் அரச குலம் முற்றாக  அழிந்தது. 

நான்காவது, பொறாமை கஞ்சத் தனத்தை  தரும்.யாரும் நன்மை அடைந்து விடக் கூடாது  என்று நினைக்கும். எல்லாம் தனக்கே என்று நினைக்கும். 

பாண்டவர்கள் ஐந்து வீடுதான் கேட்டார்கள்.  ஐந்து வீடு கொடுத்து இருந்தால் சண்டையே இல்லை.  ஊசி முனை நிலம் கூட தர மாட்டேன் என்று கூறினான் துரியோதனன். 35,00,000 பேர் மாண்டு போனார்கள்....ஐந்து வீட்டுக்காக. 

பொறாமை தந்த கஞ்சத்தனம். 

எது வந்தாலும் வரலாம், பொறாமை வரவே கூடாது. 

அழுக்காறு என ஒரு பாவி திருச் செற்று,
தீயுழி உய்த்துவிடும்.

அழுக்காறு என்றால் பொறாமை. பொறாமை என்ற ஒரு பாவி நம் செல்வத்தை  அழித்து, தீராத துன்பத்தில் நம்மை தள்ளி விடும் என்கிறார்  வள்ளுவர்.

குந்தியின் பெருமை கண்டு பொறாமை கொண்ட காந்தாரியின் செயல் அவளின்  பிள்ளைகளை  கொன்று,அரசை இழந்து, தீராத பழியையும் தேடித் தந்தது. 

ஒரு பாட்டில் இவ்வளவு அர்த்தம் - என் சிற்றறிவுக்கு எட்டிய வரை. இன்னும் எவ்வளவு  அர்த்தங்களோ. இப்படி எத்தனையோ பாடல்களைக் கொண்டது வில்லிப்புத்துராழ்வார் அருளிச் செய்த மகா பாரதத்தில். 

நேரம் இருப்பின்,  மூல நூலை படித்துப் பாருங்கள். 

பருக பருக திகட்டாத தேன்.  


Friday, October 10, 2014

வில்லி பாரதம் - அற்றைக்கும் என் மானம் ஆர் வேறு காத்தாரே?

வில்லி பாரதம் - அற்றைக்கும் என் மானம் ஆர் வேறு காத்தாரே?



துரியோதனன் மற்றும் துச்சாதனன் என்ற இருவரையும் போரில் வென்று, அவர்களின் குருதி வழிய , வெற்றி முரசு கொட்டும் நாளில் தான் என் விரித்த குழலை முடிவேன் என்று சபதம் செய்து விட்டால் பாஞ்சாலி


அரசவையில் எனை ஏற்றி, அஞ்சாமல் துகில் தீண்டி, 
                 அளகம் தீண்டி, 
விரை செய் அளி இனம் படி தார் வேந்தர் எதிர், 
                 தகாதனவே விளம்புவோரை, 
பொரு சமரில் முடி துணித்து, புலால் நாறு வெங் 
                 குருதி பொழிய, 
வெற்றி முரசு அறையும் பொழுதல்லால், விரித்த குழல் இனி 
                 எடுத்து முடியேன்!' என்றாள்.

ஆண்டு பதிமூன்று ஆகி விட்டது. தர்மன் சமாதன தூது விடுகிறான் துரியோதனனிடம்.

பாஞ்சாலி தவிக்கிறாள்.

விரித்த தன் கூந்தலை என்று  முடிவது,தான் ஏற்ற சபதம் என்ன ஆகுமோ என்று தவிக்கிறாள்.

கண்ணன் எல்லோரிடமும் அவர்கள் எண்ணத்தை கேட்டு அறிந்த பின், கடைசியில்  திரௌபதியிடம் , அவளின் எண்ணத்தையும் கேட்க்கிறான்.

"என் குழலைப் பிடித்து , அந்த கண் இல்லாதவன் பெற்ற மகன் துச்சாதனன், என் உடையை களைய நின்ற போது , பஞ்ச பாண்டவர்களும் பார்த்து இருந்தார்கள், வெற்றி கொள்ளும் சக்கரத்தை கொண்ட கோவிந்தா , அன்றும் என் மானத்தை வேறு யார் காத்தார்கள்  (உனையன்றி ) "

பாடல்

கற்றைக் குழல் பிடித்து, கண் இலான் பெற்று எடுத்தோன் 
பற்றித் துகில் உரிய, பாண்டவரும் பார்த்திருந்தார்; 
கொற்றத் தனித் திகிரிக் கோவிந்தா! நீ அன்றி, 
அற்றைக்கும் என் மானம் ஆர் வேறு காத்தாரே?

பாடல்

கற்றைக் = அடர்ந்த

குழல் = முடியையைப்

பிடித்து = பிடித்து

கண் இலான் = திருதராஷ்டிரன்

பெற்று எடுத்தோன் = பெற்ற பிள்ளை (துச்சாதனன்)

பற்றித் துகில் உரிய = என் சேலையை பற்றி இழுக்க

பாண்டவரும் பார்த்திருந்தார் = பாண்டவர்களும் பார்த்து இருந்தார்கள்

கொற்றத் = வெற்றியடையும்

தனித் = தனித்துவமான

திகிரிக் = சக்ராயுதம்

கோவிந்தா! = கோவிந்தா

 நீ அன்றி,= நீ அன்றி
 
அற்றைக்கும் = அன்றும் ("ம்" )

என் மானம் ஆர் வேறு காத்தாரே? = என் மானத்தை யார் காத்தார்கள் ?

இன்றும் என் மானம் நீ காக்க வேண்டும் என்று வேண்டுகிறாள்.




Thursday, October 9, 2014

வில்லி பாரதம் - மகா பாரத யுத்தம், யார் காரணம்

வில்லி பாரதம் - மகா பாரத யுத்தம், யார் காரணம் 


மகா பாரத யுத்தம் நடந்தது. பல்லாயிரக்கானவர்கள் மாண்டார்கள்.

இந்த உயிர் இழப்புக்கு யார் காரணம் ?

பொறாமை குணம் கொண்ட துரியோதனனா ?

அவனைக் கண்டு எள்ளி நகையாடிய பாஞ்சாலியா ?

கோப குணம் கொண்ட அர்ஜுனன் மற்றும் பீமனா ?

சூதாடிய தர்மனா ?

வஞ்சனை செய்த சகுனியா ?

வாய் மூடி நின்ற பீஷ்மனா ? துரோணனா ?

வஞ்சத்தை வஞ்சத்தால் முறியடித்த கண்ணனா ?

எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் காரணம் என்றாலும்...இவை அனைத்திற்கும் பின் நின்றது அறம். அறம் தப்பியவர்களை அறம் தண்டித்தது.

அதை அறம் என்று சொல்லுங்கள், இறை என்று சொல்லுங்கள், இயற்கை என்று சொல்லுங்கள்.

அந்த அறம் நின்று கொன்றது.

போருக்கு முன் கண்ணன் தூது போக நிற்கிறான்.

பாண்டவர்களிடம் அவர்கள் எண்ணத்தை கேட்கிறான்.

தர்மன் சமாதனம் வேண்டும் என்கிறான்.

அர்ஜுனனும், பீமனும், நகுலனும் சண்டை வேண்டும் என்கிறார்கள்.

சகாதேவன், "கண்ணா என்னிடம் என்ன கேட்கிறாய். நீ நினைத்தை செய்" என்கிறான்.

கடைசியில் பாஞ்சாலியிடம்வருகிறான் கண்ணன்.

பாஞ்சாலி கதறுகிறாள்....

"இரணியன் கோபம் கொண்டு தூணைப் பிளந்த போது அதில் இருந்து வந்து பிரகலாதனை காத்தாய். ஆதி மூலமே என்று அழைத்த ஒரு யானைக்குக் கூட அருள் புரிந்தாய் கண்ணா " எனக்கு அருள் புரிய மாட்டாயா என்று கதறுகிறாள்.

பாடல்

'சாலக் கனகன் தனி மைந்தனை முனிந்த
காலத்து, அவன் அறைந்த கல்-தூணிடை வந்தாய்!
மூலப் பேர் இட்டு அழைத்த மும் மத மால் யானைக்கு
நீலக் கிரிபோல் முன் நின்ற நெடுமாலே!

பொருள்

'சாலக் = அதிகமாக

கனகன் = பொன் நிறம் கொண்ட (கனகம் = பொன்) இரணியன்.

தனி மைந்தனை = சிறந்த மைந்தனை (பிரகலாதனை)

முனிந்த காலத்து = கோபித்த காலத்து

அவன் அறைந்த = அவன் பிளந்த

 கல்-தூணிடை வந்தாய்! = கல் தூணில் இருந்து வந்தாய் (வந்து அவனுக்கு அருள் புரிந்தாய் )


மூலப் பேர் = ஆதி மூலமே என்ற பெயரைக்  

இட்டு = கொண்டு

அழைத்த = கூப்பிட்ட

மும் மத மால் யானைக்கு = யானைக்கு

நீலக் = நீல நிறக்

கிரிபோல் = மலை போல்

முன் நின்ற நெடுமாலே! = முன்னால் வந்து நின்ற நெடிய திருமாலே

என்று ஆரம்பிக்கிறாள்...

அவள் என்ன கூறினாள் என்று மேலும் பார்ப்போம்.



Tuesday, September 30, 2014

வில்லி பாரதம் - தித்திக்கும் பக்தி

வில்லி பாரதம் - தித்திக்கும் பக்தி 


கௌரவர்கள் சபையில் பாஞ்சாலி நிற்கிறாள். துச்சாதனன் அவளின் துகிலைப் பற்றி இழுக்கிறான். பஞ்ச பாண்டவர்களும் ஒன்றும் செய்ய முடியாமல் நிற்கிறார்கள்.

அவளின் மன நிலை எப்படி இருக்கும் ?

பயம்.  அவமானம். படபடப்பு. கோபம். சுய பச்சாதாபம் என்று எல்லாம் இருக்கும் அல்லவா ?

அவள் கடைசியில் வேறு ஒன்றும் கூறாமல் "கோவிந்தா கோவிந்தா" என்று அழைத்தாள் .

இது வரை நமக்குத்  தெரியும்.

நமக்குத் தெரியாத ஒன்றை வில்லிபுத்துரார்  சொல்லுகிறார்.


அவள் அப்படி கூறியவுடன், அவள் உடல் குளிர்ந்ததாம். நாவில் இதுவரை ஊறாத அமிழ்து ஊறியதாம். உடல் புளங்காகிதம் அடைந்து, உள்ளம் உருகினாளாம்.

இருக்கும் இடமோ கௌரவர் சபை. அவளின் சேலையின் ஒரு முனை துச்சாதனன் கையில்.

அவள் உடலோ குளிர்ந்தது, நாவில் அமுதம் ஊறியது, உள்ளம்  உருகியது என்கிறார்   வில்லியார்.

பாடல்

ஆறாகி யிருதடங்க ணஞ்சனவெம்புனல்சோர வளகஞ் சோர 
வேறான துகிறகைந்த கைசோரமெய்சோர வேறோர் சொல்லுங் 
கூறாமற் கோவிந்தா கோவிந்தாவென்றரற்றிக் குளிர்ந்து நாவில் 
ஊறாத வமிழ்தூற வுடல்புளகித்துள்ளமெலா முருகி னாளே.

சீர் பிரித்தபின்

ஆறாகி இரு தடங் கண் அஞ்சன வெம்புனல் சோர அளகம் சோர 
வேறான துகில் தகிந்த  கை சோர மெய் சோர வேறு ஒரு சொல்லும்  
கூறாமல்  கோவிந்தா கோவிந்தா என்று அரற்றி குளிர்ந்து நாவில் 
ஊறாத  அமிழ்து  ஊற உடல் புளகித்து உள்ளம் எல்லாம் உருகினாளே 


பொருள்

ஆறாகி = ஆறு போல ஓடி

இரு = இரண்டு

தடங் கண் = பெரிய கண்கள்

அஞ்சன = மை

வெம்புனல் = கொதிக்கின்ற நீர் (கண்ணீர்)

சோர = வழிய

அளகம் = தலை முடி

சோர = அவிழ்ந்து விழ

வேறான = உடலில் இருந்து வேறு பட்ட

துகில் = சேலை

தகிந்த = காப்பாற்ற முயன்ற

கை சோர = கை தளர்ந்து போக

மெய் சோர = உடல் சோர்ந்து போக

வேறு ஒரு சொல்லும் = வேறு ஒரு சொல்லையும்

கூறாமல் = சொல்லாமல்

கோவிந்தா கோவிந்தா என்று = கோவிந்தா கோவிந்தா என்று

அரற்றி = கூறி

குளிர்ந்து = உடல் குளிர்ந்து

நாவில் = நாவில்

ஊறாத  அமிழ்து  ஊற = இது வரை ஊறாத அமிழ்து ஊற

உடல் புளகித்து = உடல் புளகித்து

உள்ளம் எல்லாம் உருகினாளே = உள்ளம் எல்லாம் உருகினாளே

இறைவன் பேரைச் சொன்னால் தித்திக்குமா ?


முருகன் பெயரை நினைத்தாலே கரும்பும் புளித்து  செந்தேனும் கசந்தது என்பார் அருணகிரி நாதர்

பெரும்பைம் புனத்தினுட் சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை
விரும்பும் குமரனை மெய்யன்பி னான்மெல்ல மெல்லவுள்ள
அரும்புந் தனிப்பர மானந்தத் தித்தித் தறிந்தவன்றே
கரும்புந் துவர்த்துச் செந்தேனும் புளித்தறக் கைத்ததுவே.

தித்தித்து அறிந்த அன்றே கரும்பும் புளித்து செந்தேனும் அரக்கைத்ததுவே என்கிறார்.

திருவெம்பாவையில் மாணிக்க வாசகர் , "அத்தன், ஆனந்தன், அமுதன் என்று அள்ளூறி" அள்ளூறி என்றால் வாயில் அமுது ஊறி.

முத்தன்ன வெண்நகையாய் முன்வந் தெதிரெழுந்தென் 
 அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித் 
 தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய் 
 பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர் 
 புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ 
 எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ 
 சித்தம் அழகியார் பாடாரோ நஞ்சிவனை 
 இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்.

என்று கூறுவார்.  

இராமா உன் நாமம் என்ன ருசியாக இருக்கிறது என்கிறார் தியாகப் பிரம்மம்.


ஓ இராமா நீ நாம ஏமி ருசிரா ? எந்த ருசிரா என்று இராம நாமத்தை ருசிக்கிறார் தியாகராஜா ஸ்வாமிகள்.

 ஓ ராம நீநாம ஏமி ருசிரா
ஸ்ரீராம நீநாம எந்த ருசிரா || 
மதரஸமுலகண்டே ததிக்ருதமுலகண்டே
அதிரஸமகு நாமமேமி ருசிரா || 
நவரஸ பரமான்ன நவனீதமுலகண்டே
நதிகமௌனிநாம மேமி ருசிரா || 
த்ராக்ஷஃபலமுகன்ன இக்ஷுரஸமுகன்ன
பக்ஷிவாஹன நாமமேமி ருசிரா || 
அஞ்ஜநாதனய ஹ்ருத்கஞ்ஜதலமுனந்து
ரஞ்ஜில்லு நீநாமமேமி ருசிரா || 
ஸதாஷிவுடு மதி ஸதா பஜிஞ்சேதி
ஸதானந்தமகு நாமமேமி ருசிரா || 
ஸாரமுலேனி ஸம்ஸாரமுனகு ஸம்
தாரகமகு நாமமேமி ருசிரா || 
ஷரணன்ன ஜனமுல ஸரகுன ரக்ஷிஞ்சு
பிருது கல்கின நாமமேமி ருசிரா || 
கரிராஜ ப்ரஹல்லாத தரணீஜ விபீஷணுல
காசின நீநாமமேமி ருசிரா || 
கதலீ கர்ஜூர ஃபலரஸமுலகதிகமு
பதித பாவன நீ நாமமேமி ருசிரா || 
தும்புரு நாரதுலு டம்பு மீரக கா
நம்பு ஜேஸேதி நாமமேமி ருசிரா || 
ராம பத்ராசல தாம ராம தாஸுனி
ப்ரேமனொலின நாமமேமவி ருசிரா

 பக்தி இருந்தால் இறைவன் நாமத்தைச் சொல்லும் போது  இனிக்கும்.






Thursday, September 11, 2014

வில்லி பாரதம் - பாரதம் பாடிய காரணம்

வில்லி பாரதம் - பாரதம் பாடிய காரணம் 


பாரதம் ஏன் பாடினேன் என்பதற்கு காரணம் கூறுகிறார் வில்லி புத்துராழ்வார்.

பாரதம் மறை ஓதும் தேவர்களும், முனிவர்களும் , மற்றவர்களும் கூறும் அரிய  பெரிய கருத்துகளை கொண்டது என்பதினால் அல்ல, அதில் இடை இடையே மாதவனான கண்ணனின் சரித்திரம் இடையிடையே வரும் என்ற ஆசையால் இந்த பாரதத்தை நான் எழுதுகிறேன்  என்கிறார்.


பாடல்

முன்னு மாமறை முனிவருந் தேவரும் பிறரும்
பன்னு மாமொழிப் பாரதப் பெருமையும் பாரேன்
மன்னு மாதவன் சரிதமு மிடையிடை வழங்கும்
என்னு மாசையால் யானுமீ தியம்புதற் கிசைந்தேன்.

பொருள்

முன்னு = அனைத்திற்கும் முன்னால்  இருக்கும்

மாமறை = பெரிய வேதங்களை (கூறும்)

முனிவருந் = முனிவர்களும்

தேவரும் = தேவர்களும்

பிறரும் = மற்றவர்களும்

பன்னு = சொல்லும்

மாமொழிப் = பெரிய கருத்துகள் உள்ளதும்

பாரதப் பெருமையும் பாரேன் = பாரத கதையில் உள்ள பெருமைக்காக இல்லை

மன்னு= என்றும் நிலைத்து நிற்கும்

மாதவன் = கண்ணன்

சரிதமு மிடையிடை வழங்கும் = சரித்திரம் இடை இடையே வரும்

என்னு மாசையால்  = என்ற ஆசையால்

யானும் = நானும்

ஈது = இதை

இயம்புதற் கிசைந்தேன் = சொல்லுவதற்கு ஒத்துக் கொண்டேன்



Saturday, December 14, 2013

வில்லி பாரதம் - விஸ்வரூபம்

வில்லி பாரதம் - விஸ்வரூபம் 


கர்ணன் தன்னுடைய எல்லா புண்ணியங்களையும் தாரை வார்த்து கொடுத்த பின், கர்ணனுக்கு கண்ணன் விஸ்வ ரூப தரிசனம் தருகிறான்.

அந்த இடத்தில் சில அற்புதமான பாடல்கள்.

கர்ணன் வணங்கியவுடன் அவன் கண்கள் களிக்கும்படி, நீர் கொண்ட கரிய மேகம் வெட்கிப் போகும்படி கரிய நிறம் கொண்ட அவன் ஐந்து ஆயுதங்களை கைகளில் ஏந்தி, அன்று முதலை வாய் பட்ட கஜேந்திரன் என்ற யானைக்கு எப்படி காட்சி கொடுத்தானோ, அப்படியே தொண்டிர்நான் தோற்றமும் முடிவும் இல்லாத அவன்

பாடல்

போற்றியகன்னன்கண்டுகண்களிப்பப்புணரிமொண்டெழுந்தகார்
                                         முகிலை,
மாற்றியவடிவும்பஞ்சவாயுதமும் வயங்குகைத்தலங்களுமாகிக்
கூற்றுறழ்கராவின்வாயினின்றழைத்த குஞ்சரராசன்முனன்று,
தோற்றியபடியேதோற்றினான்முடிவுந்தோற்றமுமிலாத
                                   பைந்துளவோன்.

பொருள்

போற்றிய = வணங்கிய

கன்னன் = கர்ணன். இரண்டு சுளி ன் போட்டால் அது கர்ணனைக்  குறிக்கும்.மூன்று சுளி ண் என்றால் அது கிருஷ்ணனை குறிக்கும்

கண்டு = கண்டு

கண் களிப்பப் = கண்கள் மகிழும் படி

புணரி = கடலில்

மொண்டெழுந்த = மொண்டு எழுந்த = முகர்ந்து எழுந்த

 கார்  முகிலை = கரிய மேகத்தை

மாற்றிய = விஞ்சிய

வடிவும் = அழகும்

பஞ்சவாயுதமும் = பஞ்ச + ஆயுதமும்

வயங்கு கைத் தலங்களுமாகிக் = விளங்குகின்ற கைத் தளங்களும் ஆகி

கூற்றுறழ்கராவின் = கூற்று + உழல் + கராவின் = கூற்றுவனை போல வந்த முதலையின்

வாயினின்றழைத்த = வாயினால் அழைத்த

 குஞ்சரராசன் = யானைகளின் அரசன் (கஜேந்திரன் )

முனன்று = முன் அன்று

தோற்றிய படியே தோற்றினான் = அன்று தோன்றியபடியே தோன்றினான்

முடிவுந் தோற்றமு மிலாத = முடிவும் தோற்றமும் இல்லாத

பைந்துளவோன் = துளசி மாலையை அணிந்தவன்

யானை அழைத்த போது வந்தவன் என்றால் என்ன அர்த்தம் ? அதில் என்ன சிறப்பு ?

இறைவன் என்பவனே மனிதர்களின் கற்பனையில் தோன்றிய ஒன்று என்று சொல்பவர்கள் உண்டு.

மனிதர்கள் இந்த மண்ணில் தோன்றும் முன், மனித மொழிகள் தோன்றும் முன், விலங்குகள் மட்டுமே இந்த பூமியில் அலைந்து கொண்டிருந்தன.

அப்போது ஒரு யானை துன்பத்தில் அலறியபோது அதை காத்தவன் என்றால் இறைவன் மனித கற்பனையில் உதித்தவன் அல்ல என்பது கருத்து.

மனிதர்கள் தோன்றும் முன்பே இறைவன் இருந்தான், அவன் உயிர்களின் துயர் துடைத்தான் என்பது கதையின் பொருள்.



Monday, December 9, 2013

வில்லி பாரதம் - கர்ணன் கேட்ட வரம்

வில்லி பாரதம் - கர்ணன் கேட்ட வரம் 


போர்க்களத்தில், அர்ஜுனனின் அம்பு பட்டு, இரத்தம் பெருக்கெடுக்க, தளர்ந்து கீழே விழுந்து விடுகிறான் கர்ணன்.

அப்போது, அங்கே வேதியர் வடிவில் வந்த கண்ணன் எனக்கு நீ  ஏதாவது தர்மம் தரவேண்டும் என்று கேட்கிறான்.

அப்போது, கர்ணன் அந்த வேதியரிடம் ஒரு வரம் கேட்கிறான்.

"நான் இதுவரை என்னிடம் வேண்டும் என்று கேட்டு வந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லமால் வழங்கி இருக்கிறேன். இன்று, இந்த யுத்த களத்தில், நீங்கள் ஏதாவது கேட்டு நான் தர முடியாத நிலையை உண்டாக்கி விடாதீர்கள்...என்னால் என்ன தரமுடியுமோ அதையே தயவு செய்து கேளுங்கள் " என்று தன்னிடம் தானம் வேண்டி வந்த வேதியரிடம் கர்ணன்  வேண்டினான்.

அதை கேட்ட அந்த வேதியனும், "நீ சேர்த்து வைத்திருந்த புண்ணியம் அத்தனையும் தருக " என்று கேட்டான்.

பாடல்

என்று கொண்டு, அந்த அந்தணன் உரைப்ப, இரு செவிக்கு அமுது 
                                எனக் கேட்டு, 
வென்றி கொள் விசயன் விசய வெங் கணையால் மெய் தளர்ந்து 
                                இரதமேல் விழுவோன், 
'நன்று!' என நகைத்து, 'தரத் தகு பொருள் நீ நவில்க!' என, 
                                நான் மறையவனும், 
'ஒன்றியபடி நின் புண்ணியம் அனைத்தும் உதவுக!' என்றலும், 
                                உளம் மகிழ்ந்தான்.

பொருள்


என்று கொண்டு = என்று கொண்டு

அந்த அந்தணன் உரைப்ப = அந்த வேதியன் சொன்னதும்

இரு செவிக்கு அமுது எனக் கேட்டு = இரண்டு காதிலும் அமுதம் பாய்ந்தது போல உணர்ந்து

வென்றி கொள் = வெற்றி பெறும் 

 விசயன் = அர்ஜுனனின்

விசய வெங் கணையால் = பலமான அம்புகளால்

மெய் தளர்ந்து = உடல் தளர்ந்து

இரதமேல் விழுவோன் = இரதத்தின் மேல் விழுகின்ற கர்ணன்
,
'நன்று!' என நகைத்து = நன்று என மகிழ்ந்து

 'தரத் தகு பொருள் நீ நவில்க!' என = என்னால் தரக் கூடிய பொருளை நீ கேள் என்றான்

நான் மறையவனும் = அந்த வேதியனும்

'ஒன்றியபடி நின் புண்ணியம் அனைத்தும் உதவுக!' என்றலும் = நீ சேர்த்து வைத்த புண்ணியம் அத்தனையும் தருக என்ற கேட்டான் ; அதைக் கேட்டதும்

உளம் மகிழ்ந்தான்.= கர்ணன் உள்ளம் மகிழ்ந்தான்

வாழ் நாள் எல்லாம் சேர்த்து வைத்த புண்ணியம் அத்தனையும் போய் விடும். இனி புண்ணியம்  செய்யவும் வழி இல்லை. இருந்த போதும், அவன் மனம் மகிழ்ந்தது.

என்ன ஒரு மனம் அவனுக்கு...



Saturday, November 30, 2013

வில்லிபாரதம் - எடுக்கவோ கோக்கவோ ?

வில்லிபாரதம் - எடுக்கவோ கோக்கவோ ?


குந்தி போருக்கு முன் கர்ணனை சந்திக்கிறாள். கர்ணனின் தாய் தான் தான் என்று சொல்கிறாள். கர்ணனை பாண்டவர்களோடு சேரும்படி சொல்கிறாள். கர்ணன் மறுக்கிறான். அவன் ஏன் பாண்டவர்களோடு சேர மாட்டேன்  என்பதற்கு பல காரணங்கள் சொல்கிறான். அதில் ஒன்று

" அம்மா,ஒரு முறை நானும் துரியோதனன் மனைவி பானுமதியும் சொக்கட்டான் ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தோம். அப்போது எனக்கு பின் துரியோதனன் வந்தான். எனக்கு பின்னால் வந்ததால் நான் அவனை கவனிக்க வில்லை. ஆனால், வாயிலை பார்த்து அமர்ந்து இருந்த பானுமதி தன் கணவன் வருவதை கண்டு எழுந்தாள் . அவள் ஆட்டத்தில் தோற்பதை தவிர்க்கத் தான் எழுந்திருக்கிறாள் என்று எண்ணி அவளை பிடித்து உட்கார வைக்க முனைந்தேன். அப்போது அவள் இடுப்பில் அணிந்திருந்த மேகலை என்ற ஆபரணம் அறுந்து அதில் உள்ள மணிகள் சிதறி ஓடின. அங்கு வந்த துரியோதனன் அந்த முத்துக்களை எடுக்கவோ கோர்க்கவோ என்று  கேட்டான்.அப்படி என் மேல் அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்த துரியோதனனுக்காக போர் செய்வது என் செஞ்சோற்று கடன், தர்மம் , புகழ் தரும் செயல் "  என்றான்.

பாடல்

மடந்தை பொன்-திரு மேகலை மணி உகவே மாசு
அறத் திகழும் ஏகாந்த
இடம்தனில் புரிந்தே நான் அயர்ந்து இருப்ப, "எடுக்கவோ?
கோக்கவே?'" என்றான்;
திடம் படுத்திடு வேல் இராசராசனுக்குச் செருமுனைச்
சென்று, செஞ்சோற்றுக்
கடன் கழிப்பதுவே, எனக்கு இனிப் புகழும், கருமமும்,

தருமமும்!'


பொருள்

மடந்தை = துரியோதனின் மனைவி பானுமதி

பொன்-திரு மேகலை மணி = இடையில் கட்டியிருந்த மேகலை என்ற பொன் ஆபரணத்தில் உள்ள மணிகள்

உகவே = உதிர்ந்து விழ

மாசு அறத் திகழும் ஏகாந்த இடம்தனில் = மிகமிக அற்புதமான வரி. அவர்கள் (கர்ணனும், பானு மதியும் ) தனியாக  இருந்தார்கள். ஆனால் அந்த இடம் குற்றமோ தவறோ நிகழாத தனிமையான இடம். மாசு என்றால் குற்றம். குற்றம் அற்ற தனிமியான இடம்.


புரிந்தே நான் அயர்ந்து இருப்ப = நான் விளையாட்டு மும்முரத்தில் அயர்ந்து இருக்க

 "எடுக்கவோ? கோக்கவே?'" என்றான் = அப்படி உதிர்ந்த முத்துகளை எடுக்கவோ கோர்கவோ என்றான்

திடம் படுத்திடு வேல் இராசராசனுக்குச் = உறுதியான வேலை கொண்ட இராசராசனான துரியோதனுக்கு

 செருமுனைச் சென்று = போர்க்களம் சென்று

செஞ்சோற்றுக் கடன் கழிப்பதுவே = உண்ட சோற்றுக்கு கடன் கழிப்பதுவே

எனக்கு இனிப் = எனக்கு

புகழும், கருமமும், தருமமும்!'= புகழும் கருமமும் தருமமும் ஆகும்.

எடுப்பது சரி. எதற்கு கோர்க்க வேண்டும் ?

முத்தில் நூலை கோர்ப்பது என்றால் கை நடுங்காமல் இருக்க வேண்டும்.

கை எப்போது நடுங்கும் ? பயத்தில் உதறும். கோபத்தில், ஆத்திரத்தில் நடுங்கும்.

துரியோதனுக்கு பயமும் இல்லை, கோபமோ ஆத்திரமோ இல்லை. நிதானமாக இருக்கிறான் என்று காட்டவே "கோர்க்கவோ" என்றான்.

மேலும்,

கர்ணனுக்கோ பானுமதிக்கோ கொஞ்சம் பதற்றம் இருக்கலாம்....துரியோதனன் தங்களை தவறாக நினைத்து விடுவானோ என்று. அவர்களால் கோர்க்க முடியாது என்பது மறைமுக கருத்து.

நீங்கள் விளையாடுங்கள், நான் கோர்த்து தருகிறேன் என்ற இடத்தில் துரியோதனன் தன் மனைவி மேல் வைத்த நம்பிக்கையும், தன் நண்பன் மேல் வைத்த  நம்பிக்கையும் ஒளிர் விடுகிறது.

ஒரே ஒரு வாக்கியம். எவ்வளவு அர்த்தம்.

அப்படி பேசப் படிக்க வேண்டும்.

இப்படி சிறந்த பல பாடல்களை கொண்டது வில்லி பாரதம்.


நேரம் இருப்பின் மூல நூலை படித்துப்  பாருங்கள்.

Thursday, November 28, 2013

வில்லிபாரதம் - வேண்டிய தருதி நீ

வில்லிபாரதம் - வேண்டிய தருதி நீ 


பாரதப் போரில் கர்ணன் அடி பட்டு தளர்ந்து தேரில் இருந்து விழுந்து கிடக்கிறான். அர்ஜுனன் அவன் மேல் அம்பை விட நினைக்கும் வேளையில் கண்ணன் அவனைத் தடுத்து நிறுத்தி விட்டு, தேரை விட்டு  இறங்கி, ஒரு வேதியர் வடிவில் கர்ணனை அடைகிறான்

கர்ணன்: (ஐயா தாங்கள் யார் ?)

வேதியன்: நான் மேரு மலையில் தவம் புரிபவன்

கர்ணன்: (நல்லது, இந்த போர் களத்தில் என்ன செய்கிறீர்கள்)

வேதியன்: என்னை வறுமை வாட்டுகிறது

கர்ணன்: அதற்காக இந்த யுத்த களத்தில் என்ன செய்கிறீர்கள்

வேதியன்: கர்ணா , நீ வறுமையில் வாடுபவர்களுக்கு வேண்டியதைத் தருவாய் என்று கேள்வி பட்டேன். எனவே உன்னை காண வந்தேன்.

பாடல்

தாண்டியதரங்கக்கருங்கடலுடுத்த தரணியிற்றளர்ந்தவர்தமக்கு,
வேண்டியதருதிநீயெனக்கேட்டேன்மேருவினிடைத்தவம்பூண்டேன்,
ஈண்டியவறுமைப்பெருந்துயருழந்தேனியைந்ததொன்றிக்கணத்
                                        தளிப்பாய்,
தூண்டியகவனத்துரகதத்தடந்தேர்ச்சுடர்தரத்தோன்றியதோன்றால்,

சீர் பிரித்த பின்

தாண்டிய தரங்கக் கருங் கடல் உடுத்த தரணியில் தளர்ந்தவர் தமக்கு 
வேண்டிய தருதி நீ எனக் கேட்டேன் மேருவில் இடை தவம் பூண்டேன் 
ஈண்டிய வறுமை பெரும் துயர் உழந்தேன் இயைந்த ஒன்றை கணத்தில் அளிப்பாய் 
தூண்டிய கவனத் துரக தடம் தேர் சுடர் தரத் தோன்றிய தோன்றால் 

பொருள்

தாண்டிய = தாண்டி தாண்டி வந்து கரையில் மோதுகின்ற

தரங்கக் = அலை பாயும்

கருங் கடல் = கரிய கடலை

உடுத்த = உடையாக உடுத்திய

தரணியில் = இந்த உலகில்

தளர்ந்தவர் தமக்கு = தளர்ந்தவர்களுக்கு

வேண்டிய = வேண்டியதை

தருதி நீ = நீ தருவாய்

எனக் கேட்டேன் = என கேள்வி பட்டேன்

மேருவில் = இமய மலையில்

இடை தவம் பூண்டேன் = தவம்  கொண்டிருக்கிறேன்

ஈண்டிய = வந்து தங்கிய

வறுமை = வறுமை

பெரும் துயர் உழந்தேன் = பெரிய துன்பத்தில் கிடந்து உழல்கிறேன்

இயைந்த ஒன்றை = எனக்கு ஏற்ற ஒன்றை

கணத்தில் அளிப்பாய்  = இப்போதே தருவாய்

தூண்டிய = தூண்டப் பட்ட

கவனத் துரக = கதியில் செல்லும் குதிரைகளை கொண்ட

தடம் தேர் = பெரிய தேர்

சுடர் தரத் = சூரிய ஒளியில்

தோன்றிய தோன்றால் = தோன்றிய தோன்றலால்

அப்படி தனக்கு பொருள் வேண்டும் என்று கேட்ட வேதியனிடம் கர்ணன் ஒன்று  கேட்டான்.

அது என்ன என்று அடுத்த ப்ளாகில் பார்ப்போம்.