Thursday, August 20, 2015

இராமாயணம் - பரதன் - எண் இல் கோடி இராமர்கள் உனக்கு இணையா?

இராமாயணம் - பரதன் - எண் இல் கோடி இராமர்கள் உனக்கு இணையா?


பதினான்கு ஆண்டுகள் கழித்து வருவேன் என்று சொல்லிச் சென்றான் இராமன்.

பதினான்கு ஆண்டுகள் முடியப் போகிறது. கடைசி நாள். இராமன் வந்தபாடில்லை.

இராமன் வராததால் பரதன் தீ வளர்த்து அதில் குதித்து உயிர் விடுவேன் என்று கூறி தீயில் விழத் துணிகிறான்.

கோசலை ஓடி வருகிறாள்.

"நின்னும் நல்லன் என்றே" என்று இராமனைப் பார்த்து கூறிய கோசலை என்று பரதனைப் பார்த்துக்

"எண்ணிக்கையில் அடங்க முடியாத கோடிக் கணக்கான இராமர்களை ஒன்று சேர்த்தாலும், அண்ணல், உன் அருளுக்கு அருகில் கூட வர முடியாது. புண்ணியமே வடிவான உன் உயிர் பிரிந்தால் இந்த உலகில் ஒரு உயிரும் வாழாது "

என்று கூறினாள்


பாடல்

‘எண் இல் கோடி இராமர்கள் என்னினும்
அண்ணல் நின் அருளுக்கு அருகு ஆவரோ?
புண்ணியம் எனும் நின் உயிர் போயினால்
மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ?


பொருள் 

‘எண் இல் = எண்ணிக்கை இல்லாத, எண்ணிக்கையில் அடங்காத

கோடி இராமர்கள் என்னினும் = கோடி இராமர்கள் சேர்ந்தால் கூட

அண்ணல் = அண்ணலே

நின் அருளுக்கு = உன்னுடைய அருளுக்கு

அருகு ஆவரோ? = அருகில் வர முடியுமா ?

புண்ணியம் எனும் = புண்ணியமே வடிவனான

நின் உயிர் போயினால் = உன் உயிர் போய் விட்டால்

மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ? = மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ

பரதனின் அருளை நோக்கின்னால் அது ஆயிரம் இராமர்களின் அருளை விட அதிகமாக  இருக்கும் என்று இராமனைப் பெற்ற கோசலை கூறுகிறாள்.

பரதனால் நாடிழந்த இராமனின் தாய் கோசலை கூறுகிறாள் என்றால் அவன் அருள் அவ்வளவு  இருந்திருக்க வேண்டும்.

முதலில் இராமனுக்கு இணையாக இருந்தவன், பின் இராமனை விட நல்லவனாக மாறினான்  ("நின்னினும் நல்லன் "), பின் இராமனை விட ஆயிரம் மடங்கு உயர்ந்தான் ("ஆயிரம் இராமர் நின் கேழ்வர் ஆவரோ") பின் கோடி இராமனை விட உயர்ந்தான் (எண்ணில் கோடி இராமர்).

அப்படி அவன் என்னதான் செய்து விட்டான் ?

அவன் மனத்தால் உயர்ந்தான்.

மனம் உயர் வாழ்வு உயரும். வெள்ளத்தனையது மலர் நீட்டம், மாந்தர் தம் உள்ளத்து அனையது  உயர்வு.

எப்படி பரதன் மனதால் உயர்ந்தான் என்று பார்ப்போம்.



Monday, August 17, 2015

திருவாசகம் - நீ செய்தது சரிதான்

திருவாசகம் - நீ செய்தது சரிதான் 


நமக்கு வாழ்க்கையில் எவ்வளவோ நல்லவை கிடைதிருகின்றன.

நல்ல நாடு - போர் இல்லாத நாடு, மக்களாட்சி உள்ள நாடு, அதிகம் இல்லாவிட்டாலும் போதுமான அடிப்படை வசதிகள் உள்ள நாடு...

நல்ல பெற்றோர், பிள்ளைகள், கணவன் அல்லது மனைவி, அருமையான பிள்ளைகள், சுகமான சூழ்நிலை, நல்ல படிப்பு, தகுதிக்கு தக்க வேலை என்று எவ்வளவோ நல்லது நமக்கு கிடைத்திருக்கிறது.

இவற்றை வைத்துக் கொண்டு என்ன செய்கிறோம் ? என்ன சாதித்து இருக்கிறோம்.

உண்பதும், உடுத்துவதும், சில பல இன்பங்களை தூய்பதுமாய் வாழ்நாள் கழிந்து கொண்டிருகிறது.

மாணிக்க வாசகர் உருகுகிறார்.....

எனக்கு என்னவெல்லாம் நடந்ததோ, அது எனக்கு வேண்டியதுதான். நான் மீண்டும் பிறந்தது, சரிதான்.  கிடைத்தற்கரிய இந்த பிறவி கிடைத்த பின்னும், என்ன செய்து கொண்டிருக்கிறேன் ? பெண்ணின் துடிக்கும் உதடுகளையும், அவளின் நெகிழ்ந்து விலகிக் கிடக்கும் உடைகளையும், அவள் முகத்தில் துளிர்க்கும் வியர்வைத் துளிகளையும் பார்த்து இரசித்துக் கொண்டு என் காலத்தை போக்கிக் கொண்டிருக்கிறேன்....எனக்கு நல்லது எங்கே நடக்கப் போகிறது.

என்னை விட்டுவிட்டு, உன் அடியார்களுக்கு நீ அருள் தந்தாய், அதுவும் சரிதான்.

 பாடல்

முடித்தவாறும் என்றனக்கே தக்கதே, முன் அடியாரைப்
பிடித்தவாறும் சோராமல் சோரனேன் இங்கு ஒருத்தி வாய்
துடித்தவாறும் துகில் இறையே சோர்ந்தவாறும் முகம் குறுவேர்
பொடித்தவாறும் இவை உணர்ந்து கேடு என்றனக்கே சூழ்ந்தேனே!

 பொருள்

தக்கதே என்ற சொல்லை

"முடித்தவாறும் என்றனக்கே"

"முன் அடியாரைப் பிடித்தவாறும்"

என்ற இரண்டு தொடர்களுக்கும் பின்னால் சேர்த்து

முடித்தவாறும் என்றனக்கே  தக்கதே என்றும்

முன் அடியாரைப் பிடித்தவாறும் தக்கதே என்றும் படிக்க வேண்டும்.

முடித்தவாறும் என்றனக்கே = எனக்கு என்னவெல்லாம் நடக்க வேண்டும் என்று நீ நினைத்து முடித்து வைத்தாயோ

தக்கதே = அது சரியானதுதான்

முன் அடியாரைப் = முன்னால் அடியவர்களை

பிடித்தவாறும் = நீ சென்று பிடித்தவாறும் (தக்கதே)

சோராமல் = சோர்வில்லாமல், விடாமல்

சோரனேன் = சோரம் போன நான், கெட்டவனான நான்

இங்கு = இங்கு

ஒருத்தி = ஒருத்தி

வாய் துடித்தவாறும் = உதடுகள் துடிப்பதையும்

துகில் = உடை

இறையே = இரைந்து கிடப்பதும் (சிதறி கிடப்பதும்)

சோர்ந்தவாறும் = நெகிழ்ந்து (சோர்ந்து) கிடப்பதையும்

முகம் = முகத்தில்

குறுவேர் = சின்ன சின்ன வேர்வை

பொடித்தவாறும் = பொடிப் பொடியாக துளிர்பதையும்

இவை உணர்ந்து = இவற்றை உணர்ந்து

கேடு என்றனக்கே சூழ்ந்தேனே! = எனக்கு கேடே சூழ்ந்தது

சிற்றின்பத்தை மணிவாசகர் சொன்ன மாதிரி யார் சொன்னார்கள் !




Saturday, August 15, 2015

இராமாயணம் - ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ ? - பரதன் 3

இராமாயணம் - ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ ? - பரதன் 3 


நின்னும் நல்லன் என்று கோசலை , இராமனிடம், பரதனைப் பற்றிச் சொன்னதை முந்தைய ப்ளாகில் பார்த்தோம்.

கோசலை பரதனின் பெரியம்மா. அவள் அப்படி பாராட்டியது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை நாம் நினைக்கலாம்.

பரதனை முன் பின் பார்த்திராத குகன் சொல்லுகிறான் "தாயின் வரத்தினால் தந்தை வழங்கிய உலகை "தீ வினை" என்று விலக்கி , நீ இங்கு வந்த தன்மை நோக்கினால், ஆயிரம் இராமர்களை சேர்த்தாலும் உன்னோடு ஒப்பிட முடியாது "

பாடல்

‘தாய் உரைகொண்டு தாதை உதவிய
     தரணிதன்னை,
‘‘தீவினை” என்ன நீத்து,
     சிந்தனை முகத்தில் தேக்கி,
போயினை என்றபோழ்து, புகழினோய்!
     தன்மை கண்டால்,
ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ,
     தெரியன் அம்மா!

பொருள்

‘தாய் உரைகொண்டு = தாயின் வரத்தினால்

தாதை உதவிய = தந்தை கொடுத்த

தரணி தன்னை,= இந்த உலகை

‘‘தீவினை” என்ன நீத்து = தீவினை என்று விலக்கி

சிந்தனை முகத்தில் தேக்கி = யோசனையை முகத்தில் தேக்கி

போயினை என்றபோழ்து, = சென்றாய் என்ற பொழுது

புகழினோய்! = புகழ் உடையவனே

தன்மை கண்டால், = உன் தன்மையைப் பார்த்தால்

ஆயிரம் இராமர்= ஆயிரம்  இராமர்கள்

நின் கேழ் ஆவரோ, = உனக்கு உவையாவரொ ?

 தெரியன் அம்மா! = எனக்குத் தெரியவில்லை

இதில் குகன் என்ன சிறப்பை கண்டு விட்டான் ? தனக்கு உரிமை இல்லாத ஒன்றை உரியவனிடம் ஒப்படைப்பது என்ன அவ்வளவு பெரிய நல்ல குணமா ?

அது பெரிய குணம், ஆயிரம் இராமர்கள் அந்த குணத்திற்கு ஈடாக மாட்டார்கள் என்று   சொன்னால், அது ஏதோ இராமனை குறைத்து மதிப்பீடு செய்வது போல உள்ளது அல்லவா ?

பரதனில் அப்படி என்ன சிறப்பு ?

பார்ப்போம்


Friday, August 14, 2015

இராமாயணம் - நின்னும் நல்லன் - பரதன் 2

இராமாயணம் - நின்னும் நல்லன் - பரதன் 2


கைகேயின் சூழ்ச்சியால், பரதனுக்கு பட்டம் என்றும் இராமனுக்கு கானகம் என்றும் தசரதன் வரம் தந்து விடுகிறான்.

இதை, தாய் கோசலையிடம் வந்து இராமன் சொல்கிறான்.

அதைக் கேட்ட கோசலை கூறுகிறாள்

"மூத்தவன் இருக்க இளையவனுக்கு முடி சூட்டுவது என்பது ஒரு சரியான முறை இல்லை. அதை விட்டு விட்டுப் பார்த்தால், பரதன்  நிறைந்த குண நலன்கள் உடையவன்.  இராமா, உன்னை விட நல்லவன் "


அப்படி கூறியவள் யார் ?

நான்கு பிள்ளைகளிடமும் குற்றம் இல்லாத அன்பை செலுத்தும் கோசலை.

அப்படி சொன்னதின் மூலம், அவர்களுக்குள் உள்ள வேற்றுமையை மாற்றினாள் என்கிறான் கம்பன்.

பாடல்

‘முறைமை அன்று என்பது ஒன்று
     உண்டு; மும்மையின்
நிறை குணத்தவன்;
     நின்னினும் நல்லனால்;
குறைவு இலன்’ எனக்
     கூறினள் - நால்வர்க்கும்
மறு இல் அன்பினில்,
     வேற்றுமை மாற்றினாள்.

பொருள்

‘முறைமை அன்று = சரியான அரச தர்மம் இல்லை

என்பது = என்ற

ஒன்று உண்டு = ஒரு சிக்கல் இருக்கிறது

மும்மையின் நிறை குணத்தவன் = மூன்று மடங்கு உயர்ந்த குணம் உள்ளவன்; அல்லது மூன்று பேரை விட உயர்ந்த குணம் உள்ளவன்

நின்னினும் நல்லனால் = உன்னை விட நல்லவன்

குறைவு இலன்’ = ஒரு குறையும் இல்லாதவன்

எனக்      கூறினள் = என்று கூறினாள்

நால்வர்க்கும் =நான்கு பிள்ளைகளிடமும்

மறு இல் அன்பினில்  = குற்றம் இல்லாத அன்பினால்

வேற்றுமை மாற்றினாள். = அவர்களுக்குள் இருந்த வேற்றுமையை மாற்றினாள்

இதில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றன.

நம் வீட்டில் சில சமயம், நம் பிள்ளைகள் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்று சோர்ந்து வரலாம், விளையாட்டில் அல்லது வேறு ஏதாவது போட்டியில் பங்கெடுத்து பரிசு எதுவும் பெறாமல் வரலாம், நமக்கு மிகுந்த எதிர்பார்ப்பு  இருந்திருக்கும். அவர்களும் ஆசையோடு இருந்திருப்பார்கள். ஆனால், நினைத்தது நடக்கவில்லை.

மதிப்பெண் cut off வை விட குறைவாக வந்திருக்கும்.

பொதுவாக என்ன நடக்கும் "நான் அப்பவே சொன்னேன், எங்க ஒழுங்கா படிக்கிற? எந்நேரமும் tv , இல்லேனா cell phone" என்று பிள்ளைகளை குறை கூறுவோம்.

"நீ ஒண்ணுக்கும் லாயக்கு இல்லை, மாடு மேய்க்கத் தான் லாயக்கு " என்று திட்டுவதும் சில வீடுகளில் நிகழ்வது உண்டு.

நினைத்தது நடக்காமல் பிள்ளை சோர்ந்து வரும்போது, ஒரு தாய் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கோசலை பாடம் நடத்துகிறாள் ....

இந்த பாடல் நிகழ்ந்த சூழ்நிலையை நினைத்துப் பாருங்கள்.

சகரவர்தியாக முடி சூட்டப் போனவன், அது இல்லை என்று வந்து நிற்கிறான். அது மட்டும் அல்ல, 14 ஆண்டுகள் கானகம் வேறு போக வேண்டும் என்று கட்டளை வேறு.

கோசலை என்ன சொல்லுகிறாள்...

"பரவாயில்லடா....அரச முறை என்று ஒன்று உள்ளது, அதைத் தவிர்த்துப் பார்த்தாள் பரதன் உன்னை விட நல்லவன் அரசை அவனுக்கே தரலாம் " என்று இராமனை தேறுதல் செய்கிறாள்.

பிள்ளைகள் தோல்வி அடைந்து வந்தால் திட்டாதீர்கள்.அவர்களுக்கு தேறுதல் சொல்லுங்கள். வாழ்கை மிக நீண்டது. ஒரு தோல்வி வாழ்வை தீர்மானித்து விடாது.

அடுத்தது,

பரதன் இதுவரை சாதித்தது என்ன  ? ஒன்றும் இல்லை.

இருந்தும் கோசலை சொல்கிறாள் "நின்னினும் நல்லன்" என்று. பரதன்  இராமனை விட   உயர்ந்து நிற்கிறான்.

எப்படி அவன் உயர்ந்தான் ?

பார்ப்போம்...



Wednesday, August 12, 2015

இராமாயணம் - பரதன் பிறந்த போது

இராமாயணம் - பரதன் பிறந்த போது 


இராமன், இலக்குவன் , பரதன் மற்றும் சத்ருகன் பிறந்த போது அவர்களுக்கு பெயர் வைத்தவன் வசிட்டன்.

மற்றவர்களுக்கு அவன் பெயர்  வைத்ததை விட்டு விடுவோம்.

பரதனுக்கு அவன் பெயர்  இட்டதை பாப்போம்.

பாடல்

கரதலம் உற்று ஒளிர் நெல்லி கடுப்ப
விரத மறைப் பொருள் மெய்ந்நெறி கண்ட
வரதன். உதித்திடு மற்றைய ஒளியை.
‘பரதன்’ எனப் பெயர் பன்னினன் அன்றே.

பொருள் 

கரதலம் உற்று = கரம் என்ற தலத்தில் (கையில்) உள்ள

ஒளிர் நெல்லி கடுப்ப = நெல்லிக் கனியைப் போல

விரத = விரதம் பூண்டு

மறைப் பொருள் = வேதங்களின் பொருள்

மெய்ந்நெறி = உண்மையான வழியை

கண்ட = கண்ட

வரதன் = வரதன் (வசிட்டன்)

உதித்திடு மற்றைய ஒளியை. = தோன்றிய இன்னொரு ஒளியை. முதல் ஒளி இராமன். இன்னொரு ஒளி பரதன்.

‘பரதன்’ எனப் பெயர் பன்னினன் அன்றே = பரதன் என்று பெயர் தந்தான்.

இது பரதன் பிறந்த போது உள்ள நிலை. எல்லா குழந்தைகளுக்கும் பெயர் தந்தாயிற்று.

இனி, பரதன் எப்படி உயர்கிறான் என்று பார்ப்போம்.


Monday, August 10, 2015

இராமாயணம் - வாழ்வில் முன்னேற

இராமாயணம் - வாழ்வில் முன்னேற 


வாழ்வில் முன்னேற வேண்டும் என்று விரும்பாதார் யார் ? எல்லோரும் முன்னேறுவதையே விரும்புவார்கள்.

ஆனால், எப்படி முன்னேறுவது ?

கடின உழைப்பு, இறைவன் அருள், ஆன்றோர் ஆசீர்வாதம், பெற்றவர் மற்றும் உற்றாரின் அரவணைப்பு, நண்பர்களின் அரவணைப்பு அப்புறம் கொஞ்சம் அதிர்ஷ்டம் அல்லது விதி  இதெல்லாம் வேண்டும் அல்லவா வாழ்வில் உயர ?

இல்லை. இது எதுவும் வேண்டாம் என்கிறார் வள்ளுவர்.

வாழ்வில் உயர இவை அல்ல வேண்டுவது.

என்னது ? உழைப்பும், நேர்மையும், கடவுள் கிருபையும், பெரியவர்களின் ஆசியும் இல்லாமல் வாழ்வில் முன்னேற முடியுமா ?

இதை எல்லாம் விட வேறு ஒன்று நாம் வாழ்வில் உயர வழி செய்யுமா ? அது என்ன ?

வெள்ளத்து அனையது மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு

என்கிறார் வள்ளுவர்.

நீர் நிலையின் மேல் தாமரை மிதக்கும். அந்த தாமரை மலரை கொஞ்சம் உயரச் செய்ய என்ன செய்ய வேண்டும் ?

கொஞ்சம் பிடித்து இழுக்கலாமா (உழைப்பு )
பூஜை செய்யலாமா (கடவுள் அருள் )

என்ன செய்தாலும் உயராது. அந்த நீர் நிலையில் உள்ள நீரின் மட்டம் உயர்ந்தால் தாமரை தானே உயரும்.

அது போல, நாம் வாழ்வில் உயர வேண்டும் என்றால், நம் மனம் உயர வேண்டும்.

மனம் உயராமல், வாழ்வில் உயரவே முடியாது. மனம் உயர்ந்தால் வாழ்வில் உயரலாம்.

அது எல்லாம் கேக்க நல்லா இருக்கு. அப்படி மனம் உயர்ந்ததால் வாழ்வில் உயர்ந்தவர்கள்  யாராவது இருக்கிறார்களா ? ஒரு உதாரணம் காட்ட முடியுமா ?

காட்ட முடியும்.

இராமாயணத்தில், இராமன் ரொம்ப கஷ்டப் பட்டான், சண்டை போட்டான், தந்தை பேச்சை கேட்டு நல்ல பிள்ளையாக கானகம் போனான், அரக்கர்களை அழித்தான்.

அவனுக்கு எப்போதும் துணையாக இருந்தான் இலக்குவன். இரவு பகல் பாராமல்   பணிவிடை செய்தான்.

அந்த இராமனை விட, அவ்வளவு தொண்டு செய்த இலக்குவனை விட ஒன்றுமே செய்யாத பரதன் உயர்ந்தான்.

எப்படி ?

பரதன் ஏதேனும் சண்டை போட்டானா ? இல்லை.

பெற்றோரை மதித்தானா ? இல்லை. பெற்ற தாயை பேய் என்று இகழ்ந்தான்.

இராமனுக்கு அல்லும் பகலும் பணிவிடை செய்தானா ? இல்லை.

பின் எப்படி அவன் உயர்ந்தான் ?

அவன் உயர்ந்தான் என்பதற்கு என்ன சான்று இருக்கிறது ?

பரதனைப் பற்றி நாம் விரிவாகப் பார்ப்போம்.

பரதன் பிறந்தவுடன் அவனுக்கு பெயர் இடுகிறார் வசிட்டர் ....



கரதலம் உற்று ஒளிர் நெல்லி கடுப்ப
விரத மறைப் பொருள் மெய்ந்நெறி கண்ட
வரதன். உதித்திடு மற்றைய ஒளியை.
‘பரதன்’ எனப் பெயர் பன்னினன் அன்றே.

பொருள் - அடுத்த ப்ளாகில்


இராமாயணம் - உன் பிள்ளைக்கு வரும் நல்லததைத் தடுக்காதே

இராமாயணம் - உன் பிள்ளைக்கு வரும் நல்லததைத் தடுக்காதே 


என் வேள்வியைக் காக்க உன் மகன் இராமனை எனக்கு துணையாக அனுப்பு என்று விசுவாமித்திரன் தசரதனிடம் கேட்டான்.

"அவன் சின்னப் பிள்ளை, போர் தந்திரங்கள் அறியாதவன், நானே வருகிறேன்" என்றான் தசரதன்.

நம் வாழ்விலும் இந்த மாதிரி சந்தர்பங்கள் வரும். பிள்ளையை வெளி நாடு அனுப்பி படிக்க வைக்க வேண்டும், பெண்ணை அயல் நாட்டில் கட்டிக் கொடுக்க வேண்டும் என்ற சிக்கல்கள் வரும் போது நாம் பயப்படுவோம். என்னத்துக்கு risk என்று உள்ளூரிலேயே ஒரு கல்லூரியிலேயோ, அல்லது ஒரு வரனையோ பார்த்து முடித்து விடுவோம்.

மற்றவர்களிடம் யோசனை கேட்கலாம். ஆளாளுக்கு ஒரு யோசனை சொல்வார்கள். அதில் எவன் நல்லவன், எவன் , நாம் சிக்கலில் மாட்டிக் கொண்டு தவிக்கட்டும் என்று நினைப்பவன் என்று தெரியாது.

எனவே தான்,  அந்தக் காலத்தில் மன்னர்கள் கற்ற துறவிகளை எப்போதும் அருகில் வைத்து இருந்தார்கள். மன்னர்கள் கேட்காத போதும் அவர்கள் நல்லதையே எடுத்துச் சொன்னார்கள்.

விச்வாமித்ரரை பார்த்து வசிட்டன் சொன்னான் "நீ இதை பொறுத்துக் கொள்" . தசரதன் பிள்ளைப் பாசத்தில் ஏதோ சொல்கிறான். நீ இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாதே. கொஞ்சம் பொறுமையாக இரு என்று சொல்லி விட்டு.

தசரதனைப் பார்த்து , "உன் மகனுக்கு அளவிட முடியாத நன்மைகள் வரப் போகிறது. அதை ஏன் நீ தடுக்கிறாய் " என்று கூறினான்.


பாடல்


கறுத்த மா முனி கருத்தை உன்னி ‘நீ
பொறுத்தி’ என்று அவன் புகன்று ‘நின் மகற்கு
உறுத்தல் ஆகலா உறுதி எய்தும் நாள்
மறுத்தியோ? ‘எனா வசிட்டன் கூறினான்.

பொருள்

கறுத்த மா முனி = கோபத்தால் முகம் கறுத்த விஸ்வாமித்திரனின்

கருத்தை உன்னி  = கருத்தை எண்ணி

‘நீ பொறுத்தி’ என்று அவன் புகன்று = நீ இதை பொறுத்துக் கொள்வாயாக என்று கூறி

‘நின் மகற்கு = உன் மகனுக்கு

உறுத்தல் ஆகலா = எல்லை அற்ற

உறுதி = நன்மைகள்

எய்தும் நாள் = அடையும் நாள்

மறுத்தியோ?  = மறுப்பாயா ?

‘எனா வசிட்டன் கூறினான். = என்று வசிட்டன் கூறினான்

வசிட்டன் போல படித்த, உங்கள் நலனில் அக்கறை உள்ள எத்தனை பேர் உங்களுக்கு  அறிவுரை சொல்லும் இடத்தில் இருக்கிறார்கள் ?

அப்படி நீங்கள் எத்தனை பேருக்கு இருக்கிறீர்கள் ?


படித்த நல்லவர்களை எப்போதும் உடன் வைத்து இருங்கள். அதற்கு இணையான செல்வம்  எதுவும் கிடையாது. 

பின்னாளில் , இராமன் முடி சூட்டும் நாள் குறித்த பின், வசிட்டன் சில புத்திமதிகளை  இராமனுக்குச் சொல்வான். அதில் முதல் அறிவுரை "படித்த நல்லவர்களை  உடன் வைத்துக் கொள்" என்பதுதான். 

இன்று வரை இல்லாவிட்டாலும், இனியேனும் கண்டு பிடியுங்கள்.

அப்படி ஒருவராக நீங்களும் இருக்க முயற்சி செய்யுங்கள். 


Tuesday, August 4, 2015

கம்ப இராமாயணம் - இடையூருக்கு இடையூறு

கம்ப இராமாயணம் - இடையூருக்கு இடையூறு

நான் செய்யும் வேள்வியைக் காக்க இராமனை துணைக்கு அனுப்பு என்று விஸ்வாமித்திரன் தசரதனிடம் கேட்கிறான்.

இராமனை விட்டு பிரிய மனம் இல்லாமல் தசரதன் மிகுந்த துன்பப்பட்டு சொல்கிறான்

"முனிவரே, இராமன் சின்னப் பிள்ளை. அவனுக்குப் போர் பயிற்சி எல்லாம் கிடையாது. உங்களுக்கு என்ன நல்ல துணை வேண்டும் அவ்வளவு தானே ? நான் வருகிறேன். புறப்படுங்கள். உங்கள் வேள்விக்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் யார் தடையாக வந்தாலும் நான் அவர்களுக்குத் தடையாக நின்று உங்கள் வேள்வியை காப்பேன் ...வாருங்கள் போவோம்"

பாடல்

தொடை ஊற்றில் தேன் துளிக்கும் நறும்
    தாரான் ஒரு வண்ணம் துயரம் நீங்கிப்
‘படையூற்றம் இலன்; சிறியன் இவன்; பெரியோய்!
    பணி இதுவேல், பனி நீர்க் கங்கை
புடை ஊற்றும் சடையானும் நான்முகனும்
    புரந்தரனும் புகுந்து செய்யும்
இடையூற்றுக்கு இடையூறு ஆ, யான் காப்பென்
    பெரு வேள்விக்கு எழுக ‘என்றான்.


பொருள் 

தொடை = தேன் அடை அல்லது தேன் கூடு

ஊற்றில் = ஊற்றுப் போல்

தேன் துளிக்கும் = தேன் சிதறும்

நறும் = நறுமணம் மிக்க

தாரான் = மாலை அணிந்தவன் (தார் என்றால் மாலை )

ஒரு வண்ணம் துயரம் நீங்கிப் = ஒரு வழியாக துயர் நீங்கி

‘படையூற்றம் இலன்;= படை நடத்தும் அனுபவம் இல்லாதவன்

சிறியன் இவன் = சின்னப் பையன்

 பெரியோய்! = பெரியவரே (விச்வாமித்ரரே)

பணி இதுவேல், = வேலை இதுதான் என்றால் (யாகத்தை காப்பது தான் பணி என்றால்)

பனி நீர்க் கங்கை = சில்லென்று நீரை கொண்ட கங்கை

புடை ஊற்றும் சடையானும்= நான்கு புறமும் தெறிக்கும் சடை கொண்ட சிவனும்

நான்முகனும் = பிரமாவும்

புரந்தரனும் = உலகைக் காக்கும் திருமாலும்

புகுந்து செய்யும் = இடையில் புகுந்து  செய்யும்

இடையூற்றுக்கு இடையூறு ஆ, = இடையூறுகளுக்கு இடையூறாக

யான் காப்பென் = நான் காவல் செய்வேன்

பெரு வேள்விக்கு எழுக ‘என்றான். = பெரிய வேள்வி செய்ய புறப்படுங்கள் என்றான்.

இது பாட்டும், அதன் அர்த்தமும்.

அதில் பொதிந்துள்ள செய்தி என்ன ?

நம் பிள்ளைகளுக்கு ஒரு நல்ல கல்லூரியில் இடம் கிடைத்து இருக்கும். ஆனால், அந்த கல்லூரி நாம் இருக்கும் இடத்தை விட்டு ரொம்ப தள்ளி இருக்கும் . ஏன், வெளி நாட்டிலே கூட இருக்கலாம்.

"இந்த சின்ன பிள்ளை அங்க போய் எப்படி சமாளிக்குமோ, பேசாம அக்கம் பக்கத்தில்  ஏதாவது நல்ல கல்லூரியில் சேர்ப்போம் " என்று நாம் நினைக்கலாம். அப்படி நினைத்து, பிள்ளைகளின் எதிர் காலத்தை நாம் பாழடித்து விடக் கூடாது.

அதே போல, பெண்ணுக்கு ஒரு நல்ல தரம் வந்திருக்கும். மாப்பிள்ளை அயல்நாட்டில் வேலை  பார்ப்பவராய் இருப்பார். எதுக்கு அவ்வளவு தூரத்தில் போய்  பெண்ணைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்து உள்ளூரில் ஏதோ ஒரு வேலையில் உள்ள பையனுக்கு கட்டி கொடுத்து அந்த பெண்ணின் வாழ்வின்  முன்னேற்றத்திற்கு நாமே தடைக் கல்லாக இருந்து விடக் கூடாது.

Hostel இல் போய் என் பெண்ணோ பிள்ளையோ எப்படி இருப்பார்கள் ? அவர்களுக்கு பழக்கமே இல்லையே என்று நாம் பாசத்தில் தவிப்போம். "அப்படி ஒண்ணும் என் பிள்ளை கஷ்டப் பட வேண்டாம், ...இதோ உள்ளூரிலேயே நல்ல  கல்லூரி இருக்கிறது " என்று ஏதோ ஒரு கல்லூரியில் சேர்த்து  விடும் பெற்றோர்கள் நிறைய பேர் உண்டு.


பாசம் கண்ணை மறைக்கக் கூடாது.

அப்பேற்பட்ட இராமனை பற்றி தசரதன் என்ன நினைக்கிறான் ?

சின்னப் பையன், படை நடத்தும் அனுபவம் இல்லாதவன்....அவனை அனுப்பக் கூடாது என்று நினைக்கிறான்.

அப்படி அவன் அனுப்பாமல் இருந்திருந்தால், என்ன ஆகி இருக்கும் ? யோசித்துப் பாருங்கள்.

நாம் நம் பிள்ளைகளை குறைவாக மதிப்பிடுகிறோம். அவர்களின் திறமை, சாமர்த்தியம்  எல்லாவற்றையும் குறைத்து மதிப்பிட்டு நாமே அவர்களின் வளர்ச்சிக்கு  தடையாக இருந்து விடுகிறோம்.

அப்படி இருக்கக் கூடாது என்று சொல்கிறது இந்தப் பாடல்.

பிள்ளைகளை வேலை செய்ய விட வேண்டும். பாவம், அவனுக்கு என்ன தெரியும், சின்ன பிள்ளை என்று பொத்தி பொத்தி வளர்க்கக் கூடாது. தசரதன் சொல்கிறான், "அவன் விட்டு விடுங்கள்...நான் வருகிறேன் " என்று.

நாம் செய்வது இல்லையா.

கொஞ்சம் எச்சரிக்கை உணர்வை தளர்த்தி, கொஞ்சம் பாசத்தை குறைத்து, குழந்தைகளை, சவால்களை எதிர் கொள்ள அனுப்புங்கள். நீங்கள் நினைப்பதை விட  உங்கள் குழந்தைகள் அதிகமாகவே செய்வார்கள்.

சரி, இப்படி ஒரு குழப்பம் வரும்போது என்ன செய்யவேண்டும்.

அயல் நாட்டுக்கு பெண்ணையோ பிள்ளையையோ அனுப்ப முடியாமல் தவிக்கும் போது என்ன செய்ய வேண்டும் ?


தசரதன் என்ன செய்தான் ? 

அதை அடுத்த ப்ளாகில் பார்ப்போம். 


Monday, August 3, 2015

கம்ப இராமாயணம் - மகனின் பிரிவு

கம்ப இராமாயணம் - மகனின் பிரிவு 


பிரிவு என்றுமே சோகத்தைத்தான் தருகிறது.

பிரிவு வரும் என்று தெரிந்தாலும், அது வரும்போது மனதை ஏனோ பிசையத்தான் செய்கிறது.

இராமனை தருவாய் என்று தசரதனிடம் கேட்கிறான் விஸ்வாமித்திரன்.

துடித்துப் போகிறான் தசரதன். அவன் வலியை கம்பன் பாட்டில் வடிக்கிறான்.

மார்பில் வேல் பாய்ந்து புண்ணாகி இருக்கிறது. அந்த புண்ணில் தீயை வைத்து சுட்டால் எப்படி இருக்குமோ அப்படி துன்பப் பட்டான் தசரதன்.

விச்வாமித்ரனின் அந்த சொல்லைக் கேட்டு தசரதனின் உயிர் அவன் உடலுக்கு உள்ளேயும் வெளியேயும் போவதும் வருவதுமாக இருக்கிறது. உயிர் ஊசலாடியது.

கண் இல்லாதவன் , கண்ணைப் பெற்று பின் அதை இழந்தால் எப்படி இருக்குமோ அது போல பிள்ளை இல்லாமல் பின் இராமனைப் பெற்று இப்போது அவனை இழப்பது அப்படி இருந்தது தசரதனுக்கு.


பாடல்

எண் இலா அருந் தவத்தோன் இயம்பிய சொல்
   மருமத்தின் எறி வேல் பாய்ந்த
புண்ணில் ஆம் பெரும் புழையில் கனல் நுழைந்தா
   லெனச் செவியில் புகுதலோடும்.
உள் நிலாவிய துயரம் பிடித்து உந்த.
   ஆர் உயிர் நின்று ஊசலாட.
‘கண் இலான் பெற்று இழந்தான்’ என உழந்தான்
   கடுந் துயரம் - கால வேலான்.


பொருள்

எண் இலா  = எண்ணிக்கை இல்லாத

அருந் தவத்தோன் = அரிய தவங்களைச் செய்த (விஸ்வாமித்திரன்)

இயம்பிய சொல் = "இராமனைத் தா"என்று சொல்லிய சொல்

மருமத்தின் = மார்பில்

எறி வேல் பாய்ந்த புண்ணில் ஆம் = எறிந்த வேல் பாய்ந்த புண்ணில்

பெரும் புழையில் = பெரிய துவாரத்தில்

கனல் நுழைந்தாலெனச் = தீயை வைத்து சுட்டதைப் போல


செவியில் புகுதலோடும். = காதில் நுழைந்தது. அது மட்டும் அல்ல

உள் நிலாவிய துயரம் = உள்ளத்தில் இருந்த துயரம்

பிடித்து உந்த.= பிடித்துத் தள்ள

ஆர் உயிர் நின்று ஊசலாட = அருமையான உயிர் நின்று ஊசலாட
.
‘கண் இலான் பெற்று இழந்தான்’ என உழந்தான் = கண் இல்லாதவன் , அதைப் பெற்று பின் இழந்தவனைப் போல துன்பப்பட்டான்

கடுந் துயரம் = கடுமையான துயரத்தில்

கால வேலான். = எதிரிகளுக்கு காலனைப் போல உள்ள அவன்.

மகனை , முனிவரோடு அனுப்ப இப்படி கிடந்து சங்கடப் படுகிறானே இவன் ஒரு  கோழையோ என்று தோன்றலாம். இல்லை, அவன் மிகப் பெரிய வீரன் என்று  கட்டுகிறான் கம்பன். எதிரிகளுக்கு காலனைப் போன்றவன் அவன்.

என்றோ ஒரு நாள் இராமன் தன்னை விட்டுப் போகப் போகிறான் என்று தசரந்தனுகுத் தெரியும் . சிரவணன் என்ற அந்தணச் சிறுவனை அறியாமல் கொன்று, அதன் மூலம் சிரவணனின் பெற்றோர் தசரதனுக்கு ஒரு சாபம் இட்டார்கள்   " நாங்கள் எப்படி புத்திர சோகத்தில் இறக்கிறோமோ , நீயும் அப்படியே இறப்பாய் " என்று சாபம் இட்டு விடுகிறார்கள்.

அந்த சோகம் தசரதனின் உள்ளத்தில் நின்று உலாவியது.



Thursday, July 23, 2015

அறநெறிச்சாரம் - அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்

அறநெறிச்சாரம் - அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் 


படிக்க வேண்டிய நல்ல விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன.

எங்க நேரம் இருக்கு ? காலைல எந்துரிச்சா இராத்திரி படுக்க போற வரை நேரம் சரியா இருக்கு. இதுல நல்ல நூல்களை எங்க படிக்க நேரம் இருக்கு. எல்லாம் retire ஆனப்புறம் பாத்துக்கலாம் என்று தள்ளிப் போடாதீர்கள்.

யாருக்குத் தெரியும், கூற்றுவன் எப்போது ஓலை கொண்டு வருவான் என்று.

இப்பவே ஆரம்பித்து விடுங்கள். ஏற்கனவே ரொம்ப லேட்டு. இன்னும் காலம் தாழ்த்தாமல் , இன்றே தொடங்கிவிடுங்கள்.

பாடல்

மின்னு மிளமை உளதாம் எனமகிழ்ந்து
பின்னை யறிவெனென்றல் பேதைமை-தன்னைத்
துணித்தானும் தூங்கா தறஞ்செய்க கூற்றம்
அணித்தாய் வருதலு முண்டு.

சீர் பிரித்த பின்

மின்னும் இளமை உளதாம் என மகிழ்ந்து 
பின்னை அறிவன் என்றால் பேதைமை - தன்னைத் 
துணித்தானும் தூங்காது அறம் செய்க கூற்றம் 
அணித்தாய் வருந்தலும் உண்டு 

பொருள்

மின்னும் = மின்னலைப் போன்ற

இளமை = இளமை

உளதாம் = எப்போதும் உள்ளது

என மகிழ்ந்து = என்று மகிழ்ந்து

பின்னை அறிவன் என்றால் = பின்னால் அறிந்து கொள்ளலாம் என்றால்

பேதைமை = அது முட்டாள்தனம்

தன்னைத் = தன்னையே

துணித்தானும் = வெட்டினாலும். இங்கே, வருத்தினாலும் என்று பொருள் கொள்வது சரியாக  இருக்கும்.

தூங்காது அறம் செய்க = காலம் தாழ்த்தாமல் அறம் என்பது என்ன என்று அறிந்து அதன் வழி நிற்க

கூற்றம் = எமன்

அணித்தாய் = இளமை பருவத்திலும்

 வருந்தலும் உண்டு  = வருவது உண்டு. வயதான பின் தான் மரணம் வர வேண்டும் என்று ஒரு சட்டமும் இல்லை.  எப்போது வேண்டுமானாலும் வரலாம்.


மின்னும் இளமை....மின்னல் மிகப் பிரகாசமாக இருக்கும். கண் கூசும். மிக பலம் வாய்ந்தது. இருந்தாலும், மிக சொற்ப நேரமே இருக்கும். இளமையும் அப்படித்தான். ஆரவாரமாய் இருக்கும். சட்டென்று முடிந்து விடும். 

கிளரொளி இளமை கெடுவதன் முன்னம் 
வளரொளி மாயோன் மருவிய கோயில் 
வளரிளம் பொழில்சூழ் மாலிருஞ்சோலை 
தளர்விளராகில் சார்வது சதிரே.  என்பார் நம்மாழ்வார். 

கிளர்ந்து எழும் இளமை. எதுனாலும் நான் செய்கிறேன் என்று முன்னால் வந்து நிற்கும் இளமை. அது முடிவதற்குள் , தளர்ந்து போவதன் முன்னம் திருமாலிருஞ்சோலைக்கு வாருங்கள் என்கிறார். இளமை போன பின், முட்டு வலிக்கும், முதுகு வலிக்கும், மலை ஏற முடியாது. உடம்பு நம் சொற்படி கேட்கும்போதே  திருத் தலங்களுக்கு சென்று வந்து விடுங்கள். அப்புறம் ஒரு வேளை முடியாமல்  போனாலும் போகலாம். 

இளமையிலேயே நல்லவற்றை செய்து விடுங்கள். 


திருவருட்பா - கருணைக் கடலே

திருவருட்பா - கருணைக் கடலே 


வள்ளலாரின் பாடல்கள் மிக மிக எளிமையானவை. ஒரு தரம் வாசித்தால் மனதில் ஒட்டிக் கொள்ளும்.

அப்படி ஒரு பாடல்

மண்ணினுள் மயங்கி வஞ்சக வினையால் 
          மனந்தளர்ந் தழுங்கிநாள் தோறும் 
     எண்ணினுள் அடங்காத் துயரொடும் புலையர் 
          இல்லிடை மல்லிடு கின்றேன் 
     விண்ணினுள் இலங்கும் சுடர்நிகர் உனது 
          மெல்அடிக் கடிமைசெய் வேனோ 
     கண்ணினுள் மணியே ஒற்றியங் கனியே 
          கடவுளே கருணையங் கடலே. 


பொருள்

மண்ணினுள் மயங்கி = இந்த மண்ணுலகில் மயங்கி

வஞ்சக வினையால் = என் வஞ்சக வினையால்

மனந்தளர்ந் தழுங்கி  = மனம் தளர்ந்து அழுங்கி

நாள் தோறும்  = தினமும்

எண்ணினுள் = எண்ணில்லாத

அடங்காத் துயரொடும் = அளவற்ற துயரத்தோடு

புலையர் = புலையர்

இல்லிடை மல்லிடு கின்றேன் = இல்லத்தின் இடையில் சண்டை பிடிக்கிறேன்.

விண்ணினுள் இலங்கும் சுடர் நிகர் =  வானில் உள்ள சுடர் போன்ற

உனது = உனது

மெல்அடிக் கடிமைசெய் வேனோ = மெல் அடிகளுக்கு அடிமை செய்வேனோ

கண்ணினுள் மணியே = கண்ணில் உள்ள மணி போன்றவனே

ஒற்றியங் கனியே = திருவொற்றியூரில் உள்ள கனி போன்றவனே

கடவுளே கருணையங் கடலே. = கடவுளே, கருணைக் கடலே

சில சமயம் எளிமையாக இருக்கிறதே என்று நாம் அதில் உள்ள ஆழத்தை அறியாமல்  இருந்து விடுவோம்.

இந்தப் பாடலை பற்றி சற்று ஆழ்ந்து சிந்திப்போம்.


மண்ணினுள் மயங்கி = இந்த மண்ணுலகில் மயங்கி 

அது என்ன மயக்கம் ?  

நாம் எதில் தான் மயங்கவில்லை எங்கே. இந்த உடல் நமது என்று நினைக்கிறோம். என்றும் இளமையாக இருப்போம் என்று நினைக்கிறோம். என்றும்  நிலைத்து இருப்போம் என்று நினைக்கிறோம். இந்த மனைவி, மக்கள் எல்லாம்  நம் மேல் எப்போதும் நம் மீது அன்புடன் இருப்பார்கள் என்று நினைத்து  மயங்குகிறோம். இந்த சொத்து எப்போதும் நம்மோடு இருக்கும் என்று  நினைக்கிறோம். பணம் நம்மை அனைத்து துன்பத்தில் இருந்தும் காப்பாற்றி  விடும் என்று நினைக்கிறோம். எத்தனை மயக்கம். 

எது உண்மை, எது பொய், எது நிரந்தரம், யார் நட்பு, யார் பகை, எது சரி , எது தவறு என்று தெரியாமல் தடுமாறுகிறோம். 

தெரிவது போல இருக்கிறது. ஆனால் முழுவதும் தெரியவில்லை. எனவே "மயக்கம்" என்றார். 

வஞ்சக வினையால் = என் வஞ்சக வினையால் 

ஒரு வினை செய்யும் போது அதன் விளைவு தெரியவில்லை. முதலில் நல்லா இருப்பது போல  இருக்கும். பின்னால் சிக்கலில் கொண்டு போய் விட்டு விடும். புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற வினைகள் மட்டும் அல்ல,  அளவற்று  உண்பது, சோம்பேறித்தனம் போன்ற தீயவை போல தெரியாத வினைகள் கூட  பின்னாளில் தீமையாக முடியும். எனவே வஞ்சக வினை என்றார்.  பின்னாளில் தீமை வரும் என்றால் அது முதலிலேயே கடினமாய் இருந்து விட்டால்  நாம் செய்ய மாட்டோம். முதலில் சுகமாக இருக்கும், பின்னாளில் சிக்கலில் கொண்டு  போய் மாட்டி விடும். 



பொல்லா வினை உடையேன் புகழுமாறு ஒன்றறியேன் என்பார் மணிவாசகர். பொல்லாத வினை. 




மனந்தளர்ந் தழுங்கி  = மனம் தளர்ந்து அழுங்கி 

மனம் ஏன் தளர வேண்டும் ? நல்லது என்று ஒன்றை செய்கிறோம், அது வேறு விதமாக போய் முடிகிறது. எளிதாக கிடைக்கும் என்று நினைத்தது கை விட்டு நழுவிப் போகும், நமக்கு கிடைக்கும் என்று நினைத்தது வேறு யாருக்கோ கிடைத்து விடிகிறது.  வயதாக வயதாக உடல் நிலை மோசமாகும். இவற்றை எல்லாம் பார்க்கும் போது மனம் தளரும். 

"சடையவனே தளர்ந்தேன் எம்பிரான் என்னை தாங்கிக் கொள்ளே" என்பார் மணிவாசகர். 

கடையவ னேனக் கருணையி னாற் கலந் தாண்டுகொண்ட 
விடையவ னேவிட் டிடுதிகண்டாய்விறல் வேங்கையின் தோல் 
உடையவ னே மன்னும் உத்தரகோசமங்கைக்கரசே 
சடையவ னேதளர்ந் தேன்எம் பிரான்என்னைத் தாங்கிக்கொள்ளே. 


மேலும் சிந்திப்போம்.


Saturday, July 18, 2015

பிரபந்தம் - நின்றதும், இருந்ததும், கிடந்ததும்

பிரபந்தம் - நின்றதும், இருந்ததும், கிடந்ததும் 


இறைவனை எங்கெல்லாமோ தேடி திரிகிறோம். அவன் இப்படி இருப்பானா, அப்படி இருப்பானா என்று படம் வரைந்து, சிலை வடித்து அழகு பார்க்கிறோம்.

நாம் இறைவனைப் பற்றி அறிந்தது எல்லாம் மற்றவர்கள் சொல்லக் கேட்டதுதான். சொல்ல, படிக்கக் கேட்டதுதான்.

எல்லாம் இரவல் ஞானம். நம் சொந்த அனுபவம் என்று ஒன்று இல்லை.

அவர் சொன்னார், இவர் சொன்னார், அதில் அப்படி சொல்லி இருக்கிறது, இதில் இப்படி சொல்லி இருக்கிறது என்று படித்ததை, கேட்டது கிளிப் பிள்ளை மாதிரி சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

நாம் பிறப்பதற்கு முன்னால் ஏதேதோ நடந்ததாகச் சொல்கிறார்கள். புராணங்கள், இதிகாசங்கள், எல்லாம் இறைவன் அதைச் செய்தான், இதைச் செய்தான் என்று சொல்கின்றன.

திருமழிசை ஆழ்வார் சொல்கிறார்.

"இறைவன் அங்கே நிற்கிறான், இங்கே இருக்கிறான், இங்கே கிடக்கிறான் என்றெல்லாம் சொல்கிறார்கள். அதெல்லாம் நடந்தது நான் பிறப்பதற்கு முன்னால் . நான் பிறந்தபின் , அதாவது என் அனுபவத்தில், நான் அறிந்தது என்னவென்றால்  இறைவன் இருப்பது என் மனத்துள்ளே என்பதைத்தான்"

பாடல்

நின்றதெந்தை யூரகத்தி ருந்ததெந்தை பாடகத்து
அன்றுவெஃக ணைக்கிடந்த தென்னிலாத முன்னெலாம்
அன்றுநான்பி றந்திலேன்பி றந்தபின்ம றந்திலேன்
நின்றதும் மிருந்ததும்கி டந்ததும்மென் நெஞ்சுளே.

சீர் பிரித்த பின்னே

நின்றது என் தந்தை ஊரகத்தில் இருந்தது என் தந்தை பாடகத்து
அன்று வெஃக அணை கிடந்தது எண்ணிலாத  முன்னெலாம்
அன்று நான் பிறந்திலேன் பிறந்தபின் மறந்திலேன்
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே 

பொருள்


நின்றது  = நின்ற திருக்கோலத்தில் சேவை சாதித்தது

என் தந்தை = என் தந்தை

ஊரகத்தில் = திருஊரகம் என்ற திருத் தலத்தில்

இருந்தது = அமர்ந்த கோலத்தில் சேவை சாதித்தது

என் தந்தை =என் தந்தை

பாடகத்து = பாடகம் என்ற திருத்தலத்தில்


அன்று = அன்று

வெஃக அணை கிடந்தது = திரு வெக்கா என்ற திருத்தலத்தில் சயன கோலத்தில் இருந்தது

எண்ணிலாத  முன்னெலாம் = எண்ணில் அடங்காத காலத்தின் முன்னம்

அன்று நான் பிறந்திலேன் = அன்று நான் பிறக்கவில்லை

பிறந்தபின் = பிறந்தபின்

மறந்திலேன் = மறந்து அறியேன்

நின்றதும் = நின்றதும்

இருந்ததும் = இருந்ததும்

கிடந்ததும் = கிடந்ததும்

என் நெஞ்சுளே = என் மனதிலே

மனதுக்குள் தேடுங்கள்.  அவன் அங்குதான் இருக்கிறான்.




Thursday, July 16, 2015

இராமாயணம் - இராமர் சரணாகதி - பாகம் 4 - முகம் வருடிய கதிரவன்

இராமாயணம் - இராமர் சரணாகதி - பாகம் 4 - முகம் வருடிய கதிரவன்


சீதையை சென்று அடைய வழி சொல்லுமாறு வருணனை வேண்டி இராமன் தவம் இருந்தான்.

இராமன் தர்ப்பைப் புல்லின் மேல் படுத்து வெயிலில் கிடக்கிறான். ஒரு நாள் அல்ல, இரண்டு நாள் அல்ல ஏழு நாட்கள்.

சூரியன் இராமனை சுட்டு எரிக்கிறான்.

சற்று நேரம் சிந்தித்துப் பார்ப்போம்.

சரவர்த்தி மகன். பஞ்சணையில் , மாளிகையில் படுத்து உறங்க வேண்டியவன் இப்போது காட்டில் தரையில், தர்பை புல்லின் மேல் வெயிலில் கிடக்கிறான். பெற்றவள் பார்த்தாள் சகிப்பாளா ?

கம்பனுக்குத் தாங்க முடியவில்லை.  தவிக்கிறான். ஒவ்வொரு நாளும் ஒரு ஊழிக் காலம் போல செல்கிறது.

எப்படி அந்த காட்சியை எழுதுவது ? இராமனை சூரியன் சுட்டான் சுட்டான் என்று சொல்லக் கூட அவனால முடியவில்லை.

சூரியன், தன் கிரணங்களால் இராமனின் கன்னத்தை வருடினானனாம்.

பாடல்

பூழி சென்று தன் திரு உருப்
    பொருந்தவும், புரைதீர்
வாழி வெங்கதிர் மணிமுகம்
    வருடவும், வளர்ந்தான்;
ஊழி சென்றன ஒப்பு என,
    ஒரு பகல்; அவை ஓர்
ஏழு சென்றன; வந்திலன்,
    எறி கடற்கு இறைவன்.

பொருள் 


பூழி சென்று = புழுதி உள்ள கடற்கரையில்

"ஆழிசூழ் உலகெலாம் பரதனேயாள நீ போய்த் 
தாழிரும் சடைகள் தாங்கிப் 
பூழி வெங்கானம் நண்ணிப் புண்ணியத் துறைகளாடி 
எழிரண்டாண்டின் வாவென்று இயம்பினன் அரசன் என்றான் '

என்றாள் கைகேயி.

அங்கே பூழி சூழ்ந்த காடு. இங்கே புழுதி சூழ்ந்த கடற்கரை.


தன் திரு உருப் = தன்னுடைய உருவம்

பொருந்தவும் = பொருந்தவும். புழுதி மேல் எல்லாம் படிந்து, புழுதியும் அவனும் ஒன்றாக இருந்தது. 


புரைதீர் = குற்றம் அற்ற

பொய்மையும் வாய்மை இடத்து புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின் என்பார். குற்றமற்ற நன்மை தரும் என்றால் பொய்யும் கூட உண்மை தான்.


வாழி வெங்கதிர்  =  வெம்மையான கதிர்

மணிமுகம் = மணி போல் ஒளி விடும் முகத்தை (இராமனின்)

வருடவும் = வருடிக் கொடுக்கவும்

வளர்ந்தான் = கிடந்தான்

ஊழி சென்றன ஒப்பு என = ஒரு ஊழிக் காலம் சென்றது போல சென்றன

ஒரு பகல் = ஒரு பகல்

அவை ஓர் = அப்படி ஒரு

ஏழு சென்றன = ஏழு பகல்கள் சென்றன

வந்திலன் = வரவில்லை

எறி கடற்கு இறைவன் = கடலின் தலைவனான வருணன்

மனைவியின் மேல் எவ்வளவு காதல் இருந்தால், இத்தனை துன்பத்தை அவன் ஏற்றிருப்பான் ?

கடல் மணல் எவ்வளவு சுடும். அதில், ஏழு நாள் தர்ப்பைப் புல்லின் மேல் கிடந்தான்.

மனைவிக்கு ஒரு சின்ன உதவி செய்ய, கொஞ்சம் விட்டுக் கொடுக்க, யோசிக்கும் கணவர்கள் யோசிக்க ஒரு பாடல்.

Monday, July 13, 2015

இராமாயணம் - இராமர் சரணாகதி - பாகம் 3 - கடல் நோக்கிய கடல்

இராமாயணம் - இராமர் சரணாகதி - பாகம் 3 - கடல் நோக்கிய கடல் 



சீதையை அடைய ஒரு வழி தருமாறு கடலை நோக்கி தவம் செய்கிறான் இராமன்.

"இளமையான பெண்ணான சீதையை மீட்க ஒரு வழி தருக என்று, வேத முறைப்படி அடுக்கிய தருப்பை புல்லின் மேல் கிடந்து விதிப் படி வருண மந்திரத்தை மனதில் எண்ணினான்" இராமன்.

பாடல்


'தருண மங்கையை மீட்பது ஓர் நெறி தருக !'
என்னும்

பொருள் நயந்து, நல் நூல் நெறி அடுக்கிய புல்லில்,
கருணைஅம் கடல் கிடந்தனன், கருங் கடல் நோக்கி;

வருண மந்திரம் எண்ணினன், விதி முறை வணங்கி.

பொருள்

'தருண மங்கையை = இளமையான பெண்ணை. தருணம் என்றால் நேரம். சரியான தருணத்தில் வந்தாய் என்று சொல்வதைப் போல. இந்த இடத்தில் காலம், இளமைக் காலம்.

மீட்பது = மீட்டுக் கொண்டு வர

ஓர் நெறி தருக ! = ஒரு வழி தருக

என்னும் = என்ற

பொருள் நயந்து, = பொருளை வேண்டி

நல் நூல்  நெறி = நல்ல நூல்களில் சொல்லப் பட்ட முறைப்படி

அடுக்கிய புல்லில் = அமைக்கப் பட்ட தருப்பை புல்லின் மேல்

கருணைஅம் கடல் கிடந்தனன் = கருணைக் கடலான இராமன் கிடந்தான்

கருங் கடல் நோக்கி = கருமையான கடலை நோக்கி. கருணைக் கடல் கருங் கடலை நோக்கி தவம் செய்தான்.


வருண மந்திரம் எண்ணினன் = வருண மந்திரத்தை மனதில் எண்ணினான்

விதி முறை வணங்கி = விதிப்படி வணங்கி


அது என்ன பொருள் நயந்து ? என்ன பொருளைக் கேட்டான் இராமன் ? "ஒரு வழி சொல்லு " என்று தானே கேட்டான். அது எப்படி பொருளாகும் ?

நமக்காக ஒருவர் தன்னுடைய நேரத்தை செலவழித்து நமக்கு உதவி செய்கிறார் என்றால்  அதுவும் ஒரு பொருள் போலத்தான்.  நமக்கு ஒரு சிக்கல். நண்பரிடம்  யோசனை கேட்கிறோம். அவரும், யோசித்து வழி சொல்கிறார். அவர் நமக்காக   யோசிக்க செலவழித்த நேரமும் அவருடைய பொருள் போலத்தான். நாம் அவருடைய பொருளை பெற்றுக் கொள்வது  போலத்தான்.

பிறருடைய பொருள் மேல் ஆசைக் கொள்ளக் கூடாது என்று நமக்குத் தெரியும். 

அவர்களுடைய நேரமும் அவர்களுடைய பொருள் போலத்தான். அதை கேட்பதும்  அவர்களிடம் பொருளை, பணத்தை கேட்பதும் ஒன்றுதான். 

நமக்காக ஒருவர் தன்னுடைய நேரத்தை செலவழிக்கிறார் என்றால் அவர் நமக்கு  பொருள் தருகிறார் என்று தான் அர்த்தம். 

என் வீட்டில் கல்யாணம் அதுக்கு வா, என் வீட்டில் க்ரஹப் பிரவேசம் அந்த விஷேத்துக்கு வா என்று நண்பரகளையும் உறவினர்களையும் அழைக்கிறோம். அவர்களும் இருக்கிற வேலையெல்லாம் விட்டு விட்டு நம் வீட்டு  விழாவுக்கு வருகிறார்கள். அதற்காக அவர்கள் செலவழித்த நேரம் அவர்கள் நமக்கு  தந்த பொருள் போல. 

பிறருடைய நேரத்தை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அவர்களின் பொருளை மதிப்பது போல. எப்படி மாற்றான் பொருளை விரும்ப மட்டாமோ அது போல மாற்றான் காலத்தையும் விரும்பக் கூடாது. 

அவர்களின் நேரத்தைக் கேட்பதற்கு அவர்களிடம் கை ஏந்தி பொருள் பெறுவது போல கூச வேண்டும். 

புரிகிறதா ? ஏன் வருணபடலம் என்று ஒன்றை கம்பர் வைத்தார் என்று ?






Sunday, July 12, 2015

இராமாயணம் - இராமர் சரணாகதி - பாகம் 2 - கரந்து நின்ற நின் தன்மை

இராமாயணம் - இராமர் சரணாகதி - பாகம் 2 - கரந்து நின்ற நின் தன்மை 



கடலைத் தாண்டி எப்படி இலங்கை செல்வது என்று கண்டுபிடி என்று இராமன் வீடணனிடம் கூறினான்.

அதற்கு வீடணனும்,

"மறைந்து நிற்கும் உன் தன்மையை அந்தக் கடல் அறியும். உன்னுடைய குல முதல்வர்களால் படைக்கப் பட்டது இந்தக் கடல். எனவே, தனித்து இருந்து, இந்தக்  கடலிடம் ,  அதைத் தாண்டி செல்லும் வழியை வேண்டி , யாசித்துப் பெறுவாயாக " என்றான்.

பாடல்

கரந்து நின்ற நின் தன்மையை, அது, செலக்
கருதும்;

பரந்தது, உன் திருக் குல முதல் தலைவரால்;
பரிவாய்

வரம் தரும், இந்த மாக் கடல்; படை செல, வழி

வேறு

இரந்து வேண்டுதி, எறி திரைப் பரவையை' என்றான்.

பொருள்

கரந்து நின்ற நின் தன்மையை = மறைந்து நின்ற உன் தன்மையை

அது = அந்தக் கடல்

செலக் கருதும் = முழுவதும் அறியும்

பரந்தது = விரிந்தது

உன் திருக் குல முதல் தலைவரால் = உன் உயர்ந்த குல முதல்வர்களால்

பரிவாய் = அன்புடன்

வரம் தரும் = வரம் தரும்

இந்த மாக் கடல் = இந்த பெரிய கடல்

படை செல = படைகள் செல்ல

வழி = வழி

வேறு = வேறு இடத்தில் இருந்து (தனிமையில் இருந்து )

இரந்து வேண்டுதி = யாசகம் கேட்டு வேண்டிக் கொள்வாயாக

எறி திரைப் பரவையை' = அலை அடிக்கும் இந்தக் கடலை

என்றான். = என்றான் வீடணன்

குரு குல முதல் தலைவர் சகரர்.

சகரர் தோண்டியது என்பதால் அது சாகரம் என்று பெயர் பெற்றது என்று ஒரு கதை உண்டு.

மறைந்து நின்ற நின் தன்மையை அந்தக் கடல் அறியும் என்கிறான் வீடணன். கடல் அறிந்ததோ  இல்லையோ, வீடணனுக்குத் தெரிந்து இருக்கிறது இராமன் என்பவன்  திருமாலின் அம்சம் என்று.   வீடணனுக்குத் தெரிந்தது இராவணனுக்குத் தெரியவில்லை.

ஏன் ?

வீடணன் கற்ற கல்வி அவனை இறைவனிடம் கொண்டு சேர்த்தது. இறைவனை கண்டு கொள்ள உதவியது.

இராவணன் கற்ற கல்வி பதவி, அதிகாரம், போகம், பேராசை என்று இட்டுச் சென்றது.

கல்வி என்ற நீர் பாய சரியான வாய்கால் செய்து வைக்க வேண்டும். இல்லை என்றால்  அது எங்கு பாயும் என்று தெரியாது.

கற்றதனால் ஆய பயன் என் கொல் வாலறிவன்
நற்றாள் தொழார் எனின்

என்று கேட்டார் வள்ளுவர் . கல்வியின் பயன் இறைவனை கண்டு அவனைத் தொழுவதுதான்  என்கிறார் வள்ளுவர்.

வீடணன் கண்டு கொண்டான். சரணடைந்தான்.

மேலும்,

இராமன், திருமாலின் அம்சம் என்று வீடனணுக்குத் தெரியும். இருந்தும், "நீ இந்தக்  கடலை இரந்து வேண்டுதி " என்றான்.

மனிதனாக அவதாரம் எடுத்து விட்டால் மனிதனைப் போல நடந்து வழி காட்ட வேண்டும்.  மகா பாரதத்தில் கண்ணன் போர் நடக்கும் போது தினமும் குதிரைகளுக்குத் கொள்ளும் நீரும் தருவானாம்.

தேரோட்டி என்றால் அதற்குரிய கடமைகளைச் செய்ய வேண்டும்.

மேலும்,

வேறு இடத்தில் சென்று பிரார்த்தனை செய் என்றான். வேறு இடம் என்றால் தனித்த இடம்.

வழிபாடு என்பது தனிமையில் நடக்க வேண்டிய ஒன்று. எல்லோரும் அறிய , பட்டைக் கட்டிக் கொண்டு, நகைகளை அள்ளிப் போட்டுக் கொண்டு, கோவிலுக்குப் போய்  கும்பிடுவது அல்ல பக்தி. பக்தி என்பது தனி மனித அனுபவம்.



மேலும் சிந்திப்போம். 

Saturday, July 11, 2015

இராமாயணம் - இராமன் சரணாகதி - பாகம் 1

இராமாயணம் - இராமன் சரணாகதி - பாகம் 1 


இறைவனிடம் பக்தர்கள் சரணாகதி அடைவது பற்றி நிறைய படித்து இருக்கிறோம்.  இறைவனே சரணாகதி செய்து கேட்டு இருக்கிறோமா ? அப்படி செய்தால் என்ன ஆகும் ?

இராமாயணத்தில் வரும் வரும் ஒரு சுவையான இடம்.

வானர சேனையோடு கடற்கரைக்கு வந்துவிட்டான் இராமன்.

கடலை கடக்க வேண்டும். எப்படி கடப்பது ?

யோசனை கேட்கிறான் - யாரிடம் ? வீடணனிடம்.

நேற்று வந்து சேர்ந்தவன் வீடணன். எதிரியின் தம்பி. அறிவில், ஆற்றலில் சிறந்த அனுமன் இருக்கிறான், அனுபவம் நிறைந்த ஜாம்பாவன் இருக்கிறான்.அவர்களை எல்லாம் விட்டு விட்டு வீடனணிடம் ஆலோசனை கேட்கிறான் இராமன்.

அபயம் என்று வந்தவனை ஏற்றுக் கொண்டபின் அவனை ஒரு துளியும் சந்தேகிக்கவில்லை இராமன்.


இந்தக்  கடல் நமக்கு கட்டுப்படுமானால் இந்த மூன்று உலகையும் அடக்கவும், அழிக்கவும் நம்மால் முடியும். எண்ணற்ற நூல்களை கற்ற வீடணனே ,இந்த கடலை கடக்கும் வழியை சிந்திப்பாய்  என்றான் இராமன்.

பாடல்

'தொடக்கும் என்னில் இவ் உலகு ஒரு மூன்றையும்
தோளால்

அடக்கும் வண்ணமும், அழித்தலும், ஒரு பொருள்  
அன்றால்;

கிடக்கும் வண்ண வெங் கடலினைக் கிளர் 
பெருஞ் சேனை

கடக்கும் வண்ணமும் எண்ணுதி-எண்ணு நூல்
கற்றாய்!'

பொருள்

'தொடக்கும் என்னில் = கட்டுப்படும் என்றால் (இந்த கடல்)

இவ் உலகு ஒரு மூன்றையும் = மூன்று உலகங்களையும்

தோளால் = என் தோள் வலிமையால்

அடக்கும் வண்ணமும் = அடக்கும் வழியும்

அழித்தலும் = அழிக்கும் வழியும்

ஒரு பொருள் அன்றால் = ஒரு பெரிய விஷயமே அல்ல

கிடக்கும் = பரந்து விரிந்து கிடக்கும்

வண்ண வெங் கடலினைக் = வண்ணமயமான வெம்மையான கடலினை

கிளர் பெருஞ் சேனை = ஆராவாரிக்கும் பெரிய சேனை

கடக்கும் வண்ணமும் எண்ணுதி = கடக்கும் வழியை சிந்திப்பாய்

எண்ணு நூல் கற்றாய்! = எண்ணற்ற நூல்களை கற்றவனே

இராமாயணத்தில் சில பகுதிகள் இல்லாவிட்டாலும் கதையின் போக்கு ஒன்றும் மாறி விடாது. இருந்தும், ஏன் அந்த பகுதிகளை வைத்து இருக்கிறார்கள் என்றால்  அதில் ஏதோ ஒரு செய்தி இருக்கிறது.

உதாரணமாக, குகப் படலம் இல்லை என்றால் இராமாயணம் என்ற காப்பியத்திற்கு என்ன  குறை வந்து விடும் ? ஒன்றும் இல்லை. இருந்தும் குகன் என்ற  பாத்திரத்தின் மூலம்  ஏதோ ஒரு செய்தி நமக்கு சொல்கிறார்கள்  வால்மீகியும், கம்பனும்.

அதே போல சபரி. 

அப்படி வந்த இன்னொரு பகுதி தான் இந்த கடல் காண் படலம். 

இந்த பகுதி இல்லாவிட்டாலும் இராமாயணம் என்ற காப்பியத்தின் சுவை குன்றி இருக்காது. 

இன்னும் சொல்லப் போனால், இது போன்ற பகுதிகள் கதையின் விறு விறுப்பை  கொஞ்சம்  தடை செய்கின்றன. 

இருந்தும், வேலை மெனக்கெட்டு சொல்கிறார்கள் என்றால் அதில் ஏதோ இருக்க வேண்டும். 

என்னதான் அப்படி இருக்கிறது என்று பார்ப்போம். 

இந்தப் பாடலில்,

- அபயம் என்று வந்தவனை ஏற்றுக் கொண்டபின் இராமன் அவனை சந்தேகிக்க வில்லை. சந்தேகம் இருந்தால் ஏற்றுக் கொள்ளக் கூடாது. ஏற்றுக் கொண்டபின்  சந்தேகப் படக் கூடாது. 

எண்ணித் துணிக கருமம், துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு என்பார் வள்ளுவர். 

- இரண்டாவது, எண்ணு நூல் கற்றாய் என்று வீடணனை குறிப்பிடுகிறான் இராமன்.   

இராவணனும் நிரம்பக் கற்றவன் தான்.  தவம், வீரம், கல்வி, செல்வம்  என்று அனைத்தும் அவனிடம் இருந்தது.  பின் ஏன் வீழ்ந்தான்? அவன் கற்ற கல்வி அவனுக்கு அறத்தை சொல்லித் தரவில்லை. அறம் இல்லாத கல்வி அழிவைத்தரும். இராவணனுக்கு தந்தது. 

- மூன்றாவது, மூன்று உலகையும் அழிக்கும் ஆற்றல் உள்ள அரசன் என்றாலும் மந்திரியின் சொல் கேட்டு நடக்க வேண்டும். 

இப்படி ஒவ்வொரு பாடலிலும் பலப் பல உண்மைகளை தருகிறார் கம்பர். 

மேலும் சிந்திப்போம்....






Wednesday, July 8, 2015

அறநெறிச்சாரம் - துறந்து எய்தும் இன்பம்

அறநெறிச்சாரம் - துறந்து எய்தும் இன்பம் 


வாழ் நாள் எல்லாம் எதையாவது சேர்த்துக் கொண்டே இருக்கிறோம்.

செல்வம், உறவு, அனுபவம் என்று எதையாவது சேகரித்துக் கொண்டே இருக்கிறோம்.

ஒரு வீடு இருந்தால் இன்னொன்று. கொஞ்சம் பணம் இருந்தால் இன்னும் கொஞ்சம். இன்னும் கொஞ்சம் அனுபவம்...

மேலும் மேலும் சேர்ப்பது இன்பமா ?

 சரி,இன்பமாகவே  இருந்து விட்டுப் போகட்டும்.

இன்னொரு விதமான இன்பம் இருக்கிறது தெரியுமா ? அது இருப்பதை குறைப்பது. இது வேண்டாம், அது வேண்டாம் என்று இருப்பதை துறப்பதும் ஒரு இன்பம் என்கிறது அறநெறிச்சாரம்.

நமக்குத் தெரியாது அந்த இன்பம் எப்படி இருக்கும் என்று. முயன்று பார்க்கலாம்.

முதலில் நமக்கு தீமை தருபவைகளை .துறக்கலாம்...புகை பிடித்தல், மது, இனிப்பு, எண்ணெய் பலகாரங்கள் என்று துறக்கலாம். இவற்றை கொள்வது சுகம்தான்  என்றாலும் துறத்தல் அதைவிட இன்பம்  பயக்கும்.

பாடல்

நீக்கருநோய் மூப்புத் தலைப்பிரிவு நல்குரவு
சாக்காடென் றைந்து களிறுழக்கப்--போக்கரிய
துன்பத்துள் துன்பம் உழப்பர் துறந்தெய்தும் 
இன்பத் தியல்பறி யாதார்.

சீர்  பிரித்த பின்

நீக்க அருநோய், மூப்பு, தலைப்பிரிவு, நல்குரவு,
சாக்காடு என்று ஐந்து  களிறு உழக்கப்--போக்க அரிய
துன்பத்துள் துன்பம் உழப்பர்  துறந்து எய்தும்  
இன்பத்து இயல்பு அறியாதவர்.


பொருள் 

நீக்க அருநோய் = நீக்க முடியாத கடுமையான நோய்

மூப்பு = மூப்பு

தலைப்பிரிவு = நெருங்கிய உறவின் பிரிவு (மனைவி, கணவன், பிள்ளைகள்)

நல்குரவு = வறுமை

சாக்காடு = இறப்பு

என்று ஐந்து = என்ற ஐந்து

களிறு உழக்கப் = யானைகள் மிதித்து நசுக்க 

போக்க அரிய = வெளியேற முடியாத

துன்பத்துள் துன்பம் உழப்பர் = துன்பத்தில் கிடந்து வருந்துவர்

துறந்து எய்தும் = துறவினால் அடையும்
 
இன்பத்து இயல்பு அறியாதவர் =இன்பத்தின் இயல்பை அறியாதவர்கள்.

எதை எதை விட்டு நீங்கி இருக்கிறோமோ, அவற்றினால் நமக்கு துன்பம் இல்லை. 

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் 
அதனின் அதனின் இலன்.

என்பார் வள்ளுவர். (இந்தக் குறளில் இன்னொரு சிறப்பு அம்சம் என்ன என்றால், இந்தக் குறளை படிக்கும் போது உதடு ஒட்டாது. நீங்குதல் என்று வந்தபின் உதடு மட்டும் ஒட்டுவானேன் என்று வள்ளுவர் அப்படி ஒரு குறளை எழுதி இருக்கிறார் )

எல்லாவற்றையும் விட்டு நீங்கி விட்டால், எந்தத் துன்பமும் இல்லை. 

எல்லாவற்றையும் விட முடியுமா என்று தெரியவில்லை. முடிந்த வரை முயற்சிப்போம். எவ்வளவு விடுகிறோமோ அவ்வளவு சுகம். 


Tuesday, July 7, 2015

திருக்குறள் - தீயவையும் நிழலும்

திருக்குறள் - தீயவையும் நிழலும் 


கெடுதல் செய்பவன், அயோக்கியத்தனம் செய்வபன், பொய், புரட்டு, பித்தலாட்டம் செய்பவன் எல்லாம் நல்லா இருக்கான்.

நீதிக்கும், நேர்மைக்கும் பயந்து ஒழுக்கமாக வாழ்பவன் துன்பப்படுகிறான். அவனுக்குத்தான் ஆயிரம் சோதனைகள் வருகின்றன.

பேசாமல், நாமும் கெட்ட வழியில் போகலாமா என்று நல்லவனும் சிந்திக்கத் தலைப் படுகிறான்.

இந்த சிக்கல், இன்று நேற்று அல்ல, வள்ளுவர் காலம் தொட்டே இருந்திருக்கிறது.

வள்ளுவர் சொல்கிறார், தீமை செய்பவன் கெட்டுப் போவான் என்பது எவ்வளவு உறுதியானது என்றால் எப்படி நிழல் ஒருவனை விட்டு விலகாதோ அது போல உறுதியானது.

பாடல்

தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை
வீயாது அடி உறைந்து அற்று

பொருள் 

தீயவை = தீமையானவைகளை

செய்தார் = செய்தவர்கள்

கெடுதல் = அழிதல்

நிழல் தன்னை = நிழலானது

வீயாது = விடாமல் , அழியாமல்

அடி உறைந்து அற்று = காலைப் பற்றிக் கொண்டு வருவது போன்றது

சரி, அது என்ன நிழல் உவமை ?

நிழலை நாம் உருவாக்குவது இல்லை. அதுவே உண்டாகிறது.

தீயவை செய்தவனின் அழிவு தானே வரும். யாரும் ஒன்றும் செய்ய வேண்டாம்.

இராவணனை அழிக்கவா இராமன் கானகம் போனான் ? தன் மகனுக்கு முடி சூட்ட வேண்டும் என்று சின்னம்மா நினைத்து செய்த சதி, அவன் கானகம் போனான். எங்கேயோ இருந்த இராவணன், சீதையை தூக்கிக் கொண்டு போக, இராமன்  கையால் அழிந்தான்.  இராவணனை அழித்தது எது ? அவன் செய்த  தீவினை.

தீங்கு இழை இராவணன்
     செய்த தீமைதான்
ஆங்கு ஒரு நரையது
     ஆய் அணுகிற்றாம் என,
பாங்கில் வந்திடு நரை
     படிமக் கண்ணடி
ஆங்கு அதில் கண்டனன் -

     அவனி காவலன்.

தசரதனுக்கு, கன்ன ஓரத்தில் ஒரு நரை முடி வந்தது. அதன் காரணம், இராவணன் செய்த தீவினை என்கிறார் கம்பர்.  அவன் செய்த தீவினை, தசரதனுக்கு  ஒரு நரைமுடியாக வந்தது.

இரணியனைக் கொல்ல நரசிம்மம் தூணுக்குள் ஒளிந்து இருக்கவில்லை. இங்கே இருக்கிறதா, இங்கே இருக்கிறதா என்று தேடித்  தேடி போய் , தூணை பிளந்து அழிவைக் தேடிக் கொண்டான் இரணியன்.

அது மட்டுமல்ல, 

இரவில் நிழல் இருக்காது. தவறு செய்யும் போது, பாவத்தின் வீரியம் தெரியாது. 

விடியும் போது நிழலின் நீளம்  தெரியும். 

முதலில் மிக நீளமாக இருக்கும். சூரியன் மேலே ஏற ஏற, நிழலின் நீளம் குறையும்.  தீமை செய்பவன் நினைப்பான், இத்தனை செய்தோம், யாரும் கண்டு பிடிக்கவில்லை,  இனிமேலா கண்டு பிடிக்கப் போகிறார்கள் என்று.  மாலை வரும்போது  நிழல் நீளும். பாவத்தின் வீரியம் கூடும். 

அது மட்டும் அல்ல, 

நிழல் நம்மை விட்டு ஒரு வினாடி கூட பிரிந்து இருக்காது. எப்போதும் நம்மை தொட்டுக் கொண்டே  தொடரும். எங்கு போனாலும் விடாது. காவி உடுத்து துறவறம் செல்லலாம், நாடு நாடு விட்டு நாடு போகலாம், நம் நிழல் நம்மை விடாது. 


சிந்தித்துப் பார்ப்போம்.



Sunday, July 5, 2015

இராமானுசர் நூற்றந்தாதி - இனி மற்றொன்று காட்டி மயக்கிடலே

இராமானுசர் நூற்றந்தாதி - இனி மற்றொன்று காட்டி மயக்கிடலே



திருவரங்கத்து அமுதனார் அருளிச் செய்தது இராமனுசர் நூற்றந்தாதி.

குருவின், ஆசாரியன் மூலமாகத்தான் இறைவனை அடைய முடியும் என்பது நம் முன்னவர்களின் முடிந்த முடிபு.

இறைவனைப் பற்றி நமக்குத் தெரியாது. தெரிந்தவர்கள் யாராவது சொன்னால்தானே புரியும்.

தந்தையையே தாய் சொல்லித்தானே தெரிந்து கொள்கிறோம்.

இறைவனை குரு தான் அடையாளம் காட்ட வேண்டும்.

"குருவாய் வருவாய் அருள்வாய் குகனே" என்றார் அருணகிரிநாதர்.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.



அந்தணன் ஆவதும் காட்டி வந்து ஆண்டாய் என்பார் மணிவாசகர். மணிவாசகருக்கு இறைவனே குரு வடிவாக வந்து உபதேசம் செய்தான். 

முந்திய முதல், நடு, இறுதியும், ஆனாய்; மூவரும் அறிகிலர்; யாவர் மற்றுஅறிவார்?
பந்து அணை விரலியும், நீயும், நின் அடியார் பழம் குடில்தொறும் எழுந்தருளியபரனே!
செம் தழல் புரை திருமேனியும் காட்டி, திருப்பெருந்துறை உறை கோயிலும் காட்டி,
அந்தணன் ஆவதும் காட்டி, வந்து ஆண்டாய்! ஆர் அமுதே! பள்ளி எழுந்தருளாயே!

திருவரங்கத்து அமுதனார், இராமானுசரை குருவாகக் கொண்டு, விண்ணப்பம் செய்கிறார்.....

"என் மனம் என்ற வண்டு உன் திருவடித் தாமரைகளை அடைந்தது, தேன் உண்ணும் பொருட்டு. அந்தத் தேனை நீ அந்த வண்டுக்கு அருளிட வேண்டும். அது அல்லாமல் வேறு எதையாவது தந்து என் மனதை மயக்கிடாதே "

என்று  வேண்டுகிறார்.

பாடல்

போந்ததென் னெஞ்சென்னும் பொன்வண்டு உனதடிப் போதில் ஒண்சீர்
ஆம்தெளி தேனுண் டமர்ந்திட வேண்டி,நின் பாலதுவே
ஈந்திட வேண்டும் இராமா னுச! இது அன்றி யொன்றும்
மாந்தகில் லாது, இனி மற்றொன்று காட்டி மயக்கிடலே.

சீர் பிரித்த பின்

போந்தது என் நெஞ்சு என்னும்  பொன் வண்டு உனது அடிப் போதில் ஒண் சீர்
ஆம் தெளி தேன் உண்டு அமர்ந்திட வேண்டி, நின் பால் அதுவே 
ஈந்திட வேண்டும் இராமானுச! இது அன்றி ஒன்றும் 
மாந்த இல்லாது , இனி மற்றொன்று காட்டி மயக்கிடலே.


பொருள் 

போந்தது = சென்று அடைந்தது

என் நெஞ்சு = என் மனம்

என்னும் = என்ற

பொன் வண்டு = பொன் வண்டு

 உனது அடிப் = உனது திருவடி என்ற

போதில் = மலரில். போது என்றால் மலர். போதொடு நீர் சுமந்து போவார் என்பார் திருநாவுக்கரசர்

மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடி,
போதொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்,
யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது,
காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்.
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்.


ஒண் சீர் = சிறந்த

ஆம் தெளி தேன் உண்டு = தெளிந்த தேனை உண்டு

அமர்ந்திட வேண்டி = அமர்ந்திட வேண்டி

நின் பால் அதுவே = உன்னிடம் அதுவே

ஈந்திட வேண்டும் = அளித்திட வேண்டும்.  உயர்ந்தவர்கள் , தாழ்ந்தவர்களுக்குத் தருவதற்கு ஈதல் என்று பெயர்.

இராமனுக்கு பெயர் சூட்டும் போது, "இராமன் என்ற பெயர் ஈந்தான்" என்பார் கம்பர்.  அது எப்படி,  வசிட்டர் இராமனை விட உயர்ந்தவர் ? (இது பற்றி பின்னொரு நாளில் சிந்திப்போம் )

இராமானுச!  = இராமானுச

இது அன்றி ஒன்றும் =  இதைத் தவிர வேறு ஒன்றும்

மாந்த இல்லாது  = அருந்த  முடியாது

இனி மற்றொன்று காட்டி மயக்கிடலே = இனி வேறொன்றைக் காட்டி என்னை மயக்கி விடாதே.


இராமானுசா ! உன் திருவடி மட்டுமே வேண்டும். வேறு எதுவும் வேண்டாம் என்று  உருகுகிறார். 


திருக்குறள் - புணர்ந்து ஊடி நிற்போம் எனல்

திருக்குறள் - புணர்ந்து ஊடி நிற்போம் எனல் 


காதலனை பிரிந்து இருக்கும் போது, அவன் வந்தவுடன் என்ன பேசணும், எப்படி பேசணும், எப்படி ஊடுவது , எப்படி கூடுவது என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருப்பாள்.

ஆனால், அவன் வந்தவுடன் பேசும் வராது, நினைத்தது எல்லாம் மறந்து போகும்.

அந்த காதலும், காமமும் அப்படியே அவளை ஆக்ரமித்துக் கொள்கிறது.

என்ன செய்கிறோம் என்று அவளுக்குத் தெரியவில்லை. அவள், தன் வசம் தான் இல்லை.

அப்படி காதலில், காமத்தில் கரையும் காதலிக்கு ஒரு உதாரணம் சொல்கிறார் வள்ளுவர்.

யாரும் எதிர்பார்க்க முடியாத உதாரணம்.

ஒரு முறை வள்ளுவர் சுடுகாட்டின் வழியே சென்றார். அங்கே ஒரு பிணம் எரிந்து கொண்டிருந்தது. தீ அந்த பிணத்தை எரிக்கிறது. பிணத்தின் சதையெல்லாம் தீயில்  எரிகிறது. பிணமோ அது பற்றி ஒரு  கவலையும் இல்லாமல்  இருக்கிறது. ஒரு சிந்தனையும் இல்லை.

அது  போல,காமம் என்ற தீ பிடித்து சதையை உருக்கும் போது , புணர்வதும், ஊடுவதும் , பின் நிற்பதும் ஒன்றும் அவளுக்குத் தெரியவில்லை. அந்த உணர்ச்சியில் அவள் எரிகிறாள்.

பாடல்

நிணந்தீயி லிட்டன்ன நெஞ்சினார்க் குண்டோ 

புணர்ந்தூடி நிற்போ மெனல்.


சீர் பிரித்த பின்

நிணம் தீயில் இட்டதன்ன நெஞ்சினார்க்கு உண்டோ 
புணர்ந்து ஊடி நிற்போம் எனல் ?


பொருள்

நிணம் = சதை

தீயில் = தீயில்

இட்டதன்ன = போட்டது போல (பிணம் எரிவது போல )

நெஞ்சினார்க்கு உண்டோ  = ,காதல்  காம வயபட்ட்வர்களுக்கு உண்டோ

புணர்ந்து = கூடி

ஊடி = ஊடி

நிற்போம் எனல் ? = பின்  அமைதி பெற்று நிற்போம் என்று நினைக்கும் நினைவு

முதலில் கூடல்
பின் ஊடல்
பின் ஒன்றும் அறியாமல் நிற்கும் , தன்னை மறந்து நிற்கும் நிலை

காமத்தை, காதலை இதை விட சிறப்பாகச் சொல்ல முடியுமா என்ன ?






Saturday, July 4, 2015

திருக்கடை காப்பு - தோடுடைய செவியன்

திருக்கடை காப்பு - தோடுடைய செவியன்


 சில பாடல்கள் எத்தனை முறை படித்தாலும், ஒவ்வொரு முறையும்   புதுப் புது அர்த்தங்களை தந்து கொண்டே இருக்கும்.

அப்படிப்பட்ட  ஒரு பாடல் தான் தோடுடைய செவியன் என்ற இந்தப் பாடல்.

பாடல் என்னமோ மிக எளிமையான ஒன்றுதான்

பாடியவர் திருஞான சம்பந்தர்.

சம்பந்தர் சிறு குழந்தையாக இருந்தபோது ஒரு நாள் அவருடைய தந்தையார் சம்பந்தரை கோவிலுக்கு அழைத்துச் சென்றார். கோவிலுக்குள் நுழையும்முன் அங்குள்ள திருக்குளத்தில் நீராடிச்  செல்லலாம்  என்று குளத்திற்கு சென்றார். சம்பந்தரை குளக்கரையில் அமர்த்தி விட்டு  நீராடச்  சென்றார்.

அவர்   குளத்தில் மூழ்கியவுடன், தந்தையைக் காணோமே என்று குழந்தை அழுதது. குழந்தையின் அழுகை கேட்டு சிவனும் பார்வதியும் அங்கே  வந்தார்கள்.பார்வதி குழந்தைக்கு  பால் கொடுத்தாள். பின் அவர்கள் மறைந்து விட்டனர்.

நீராடி வந்த சம்பந்தரின் தந்தை , குழந்தையின் வாயில் பால் ஒழுகுவதைக் கண்டு, யார் பால் தந்தது என்று கேட்டார்.

குழந்தை பாடியது....



பாடல்

தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

 பிரித்த பின்

தோடு உடைய செவியன் விடை ஏறி ஓர் தூ வெண் மதி சூடி
காடு உடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடு உடைய மலரான் முன்னை நாள் பணிந்து ஏத்த அருள் செய்த
பீடு உடைய பிரமா புரம் மேவிய  பெம்மான் இவன் அன்றே


பொருள்

தோடு உடைய செவியன் = காதில் தோட்டினை அணிந்தவன்

விடை ஏறி = எருதின் மேல் ஏறி

ஓர் = ஒரு

தூ = தூய

வெண் = வெண்மையான

மதி = நிலவை

சூடி = தலையில் சூடி

காடு உடைய = சுடுகாட்டில் உள்ள

சுடலைப் பொடி = சாம்பலை

பூசி = உடலெங்கும் பூசி

என் உள்ளம் கவர் கள்வன் = என் உள்ளத்தை கவர்ந்த கள்வன்

ஏடு உடைய மலரான் = ஏடுகளைக் கொண்ட தாமரை மலரில் இருக்கும் பிரமன்

முன்னை நாள்  = முன்பு ஒரு நாள்

பணிந்து =  பணிந்து

ஏத்த = போற்ற

அருள் செய்த = அவனுக்கு அருள் செய்த

பீடு உடைய = பெருமை உடைய

பிரமா புரம் = பிரமாபுரம் (பிரமன் வழி பட்ட இடம் )

மேவிய = சென்று இருந்த

பெம்மான் = பெருமான்

இவன் அன்றே = இவன் அல்லவா

சரி, இந்த பாடலில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது ?

ஒவ்வொன்றாகப் பார்ப்போம்:

1. ஏன் தோடுடைய செவியன் என்று சொல்ல வேண்டும் ? கழல் அணிந்த அடியன் என்ற, நிலவு சூடிய தலையன் என்று சொல்லி இருக்கலாம் தானே ? குழந்தை அழுத போது , அந்த அழு குரலை கேட்டுத்தானே இறைவனும் இறைவியும்  வந்தார்கள். எனவே, காதை சிறப்பித்து "தோடுடைய செவியன்" என்று  ஆரம்பித்தார்.

2. ஏன் தோடுடைய செவியன் என்று சொல்ல வேண்டும் ? தோடு என்பது பெண்கள் அணியும் அணிகலன். தோடுடைய செவியள் என்று இருந்திருக்க வேண்டும். அப்படிச் சொல்லி  இருந்தால் , அவள் யார் என்ற கேள்வி எழும்.  தோடுடைய  செவியன் என்றால் உலகிலேயே ஒருவன் தான் உண்டு....   அது மாதொரு பாகனான சிவனையே  குறிக்கும். எனவே, தோடுடைய செவியன் என்று கூறினார்.

3. விடை ஏறி ஓர் - விடை என்றால் எருது. எருதின் மேல் ஏறி என்பது ஒரு பொருள். தோன்றிய பொருள் எல்லாம் அழியும். உயிர்கள், பொருள்கள் எல்லாம் அழியும் ஒரு நாள்.  இந்த பூமி, சூரியன், நிலவு, கோள்கள், இந்த அண்டம் அனைத்தும் ஒரு நாள் அழியும். அதற்கு மகா மகா சங்காரம் என்று  பெயர்.அந்த, ஊழிக் காலத்தில், எல்லாம் அழிந்த பின்னும் , அழியாத ஒன்று இருக்கும். அது தான் அறம் . நீதி. உண்மை.  அந்த உண்மை ஒரு எருதின் வடிவம் கொண்டு வந்தது. அதன் மேல் ஏறினான் சிவன் என்கிறது சைவ சித்தாந்தம். விடை என்பதற்கு answer  என்றும் ஒரு பொருள் உண்டு. அனைத்து கேள்விகளுக்கும்  விடையாய் இருப்பவன் அவன் என்ற பொருள் பட, விடை ஏறி   என்றார்.

4. தூ வெண் மதி சூடி = தூய்மை அகத்தை குறிப்பது. வெண்மை புறத்தை குறிப்பது. வெண்மை கண்ணுக்குத் தெரியும். தூய்மை கண்ணுக்குத்  தெரியாது.உள்ளும் புறமும் தூய்மையாக இருக்க வேண்டும், கறை இன்றி இருப்பவர்களை தன்னோடு சேர்த்துக் கொள்வான் என்ற பொருள பட - தூ வெண் மதி சூடி என்றார்.

5. காடுடைய சுடலை பொடி பூசி =   நாம் யாரையாவது பார்த்து அவர்களுக்கு நம் மேல் ஒரு நல்ல அபிப்ராயம் வர வேண்டும் என்றால், தலை  சீவி, பவுடர் எல்லாம் போட்டுக் கொண்டு போவோம் அல்லவா. இறைவனும், காட்டில் உள்ள சாம்பலை பூசிக் கொண்டு வருகிறான். எதற்கு எதற்கு ?

6. என் உள்ளம் கவர் கள்வன் = ஞான சம்பந்தரின் உள்ளத்தை கவர. கள்வன் என்றார் ஏன் என்றால், நம் அனுமதி இல்லாமலே நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்வான்.

இராமாயணத்தில், சீதை சொல்வாள், என்னையும் என் நாணத்தையும் கொண்டு செல்ல என் அனுமதி இல்லாமல் என் கண் வழி நுழைந்த கள்வன் அவன் என்று ராமனைப் பற்றி செல்லமாக கோபிக்கிறாள்.


பெண்வழி நலனொடும்,
    பிறந்த நாணொடும்,
எண் வழி உணர்வும் நான்
    எங்கும் காண்கிலேன்,
மண் வழி நடந்து, அடி
    வருந்தப் போனவன்,
கண் வழி நுழையும் ஓர்
    கள்வனே கொல் ஆம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பார் மணிவாசகர். அவனே அருள் செய்தால் தான் உண்டு.

படிக்கப் படிக்க புது புது அர்த்தங்கள் ஊறும் பாடல்.



 








Thursday, July 2, 2015

சீவக சிந்தாமணி - கனை கடல் செல்வன்

சீவக சிந்தாமணி - கனை கடல் செல்வன் 


சிந்தாமணி என்பது ஒரு உயரிய மணி வகையைச் சார்ந்தது. காமதேனு, கற்பக விருட்சம், என்பதனோடு சேர்த்து கொள்ளத் தக்கது இது. சீவகன் இந்த காப்பியத்தின் பாட்டுடைத் தலைவன். அவன் பெயரையும் சேர்த்து சீவக சிந்தாமணி என்று குறிப்பிடப்படுகிறது.

எழுதியவர் திருத்தக்க தேவர். மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை கொண்டது.

இன்பச்சுவை (காமச் சுவை) சற்று அதிகமாக உள்ள காப்பியம். பின்னாளில், அநபாய சோழன் இதைப் படித்து, அந்த நூலின் சிற்றின்பத்தில் மூழ்கிக் கிடந்த போது அவனை மாற்ற தெய்வப் புலவர் சேக்கிழார் பெரிய புராணம் பாடியதாக வரலாறு.

அதில் இருந்து சில சுவையான பாடல்கள்....

கடல் பார்த்திருப்போம்.

நீண்ட கடற்கரை. அங்கங்கே சிறு சிறு மணல் குன்றுகள். அலை அடிக்கும் கரை. இவ்வளவுதானே ?

திருத்தக்க தேவருக்கு வேறு என்னவெல்லாமோ தோன்றுகிறது.

கடல் ஒரு காதலன் போலத் தெரிகிறது.

நுரை கொண்ட அலைகள் அவன் கழுத்தில் உள்ள மாலை போலத் தெரிகிறது.

அந்த மாலையை யார் போட்டது ?

கரை என்ற மங்கை. அங்கங்கே காணும் சிறு சிறு மணற்குன்றுகள் அவள் உடலில் உள்ள மேடு பள்ளங்கள் போலத் தெரிகிறது அவருக்கு.

பாடல்

திரைபொரு கனைகடற் செல்வன் சென்னிமே
னுரையெனு மாலையை நுகரச் சூட்டுவான்
சரை1 யெனும் பெயருடைத் தடங்கொள் வெம்முலைக்
குரைபுனற் கன்னிகொண் டிழிந்த தென்பவே.

பொருள்

திரை பொரு = அலை பொருந்தும்

கனை கடற் = ஆராவாரம் மிக்க கடல்

செல்வன்  = என்னும் செல்வன்

சென்னிமேல் = தலையின் மேல்

நுரையெனு மாலையை = நுரை என்ற மாலையை

நுகரச் சூட்டுவான் = அவன் அனுபவிக்கும் படி சூட்டுவாள்

சரை1 யெனும் பெயருடைத் = சரை என்ற பெயருடைய

தடங்கொள் = மணல் மேடாகிய

வெம்முலைக் = அழகான மார்பு

குரை புனற் = ஒலிக்கும் நீராகிய

கன்னி = கன்னிப் பெண்

கொண் டிழிந்த தென்பவே. = கொண்டு வந்து சூட்டினாள்

என்ன ஒரு கற்பனை.

அடுத்த முறை கடற்கரையில் நிற்கும் போது , சீவக சிந்தாமணியை நினைக்க வேண்டும் !


அறநெறிச்சாரம் - யார் உறவினர் ?

அறநெறிச்சாரம் - யார் உறவினர் ?


யார் உறவினர் ?

பெற்றோர், பிள்ளைகள், கணவன், மனைவி, உடன்பிறப்புகள் எல்லாம் உறவுகள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

நமக்கு உண்மையான உறவு யார் தெரியுமா ?

நல்ல அறம் - தந்தை
நிறைந்த அறிவு - தாய்
நன்கு உணரும் கல்வி = தோழன்
துணிவு - தம்பி

இவை இல்லாத மற்றைய உறவுகள் பொய் உறவுகளே என்கிறது அறநெறிச்சாரம்.

பாடல்

நல்லறம் எந்தை நிறையெம்மை நன்குணரும்
கல்வியென் தோழன் துணிவெம்பி-அல்லாத
பொய்ச்சுற்றத் தாரும் பொருளோ பொருளாய
இச்சுற்றத் தாரில் எனக்கு.

சீர் பிரித்த பின்

நல்ல அறம் என் தந்தை நிறை என் அம்மை நன்கு உணரும்  
கல்வி என் தோழன் துணிவு என் தம்பி -அல்லாத
பொய்ச் சுற்றத்தாரும் பொருளோ?  பொருளாய
இச்சுற்றத் தாரில் எனக்கு.

பொருள்

நல்ல அறம் என் தந்தை = நல்ல அறம் எனக்குத் தந்தை

நிறை என் அம்மை = நிறைவு, திருப்தி, அமைதி - என் தாய் 

நன்கு உணரும்  கல்வி என் தோழன் = கல்வியே எனக்குத் தோழன்

துணிவு என் தம்பி = என்னுடைய துணிவே எனக்குத் தம்பி

 அல்லாத = இவை அல்லாத

பொய்ச் சுற்றத்தாரும் பொருளோ?  = பொய்யான சுற்றத்தாரும் ஒரு பொருளா ? (இல்லை).

பொருளாய இச்சுற்றத் தாரில் எனக்கு = உண்மையான பொருளான இந்தத் சுற்றத்தாரில் எனக்கு
.

நமக்கு உறவு நாம் தான். அறம்தான் நம்மை வழி நடத்தும் தந்தை. நிறைவான , அமைதியான, திருப்தியான மனமே நமக்குத் தாய். நம் கல்வியே நமக்குத் தோழன். நம் துணிவே நமக்குத் தம்பி (உடன் பிறப்பு)

இதை விட்டு வெளியே சொந்தங்களைத் தேடுவது துன்பத்தைத் தான் தரும்.

நமக்கு நாமே உறவு.







Wednesday, July 1, 2015

பிரபந்தம் - பற்று அற்றவர்கள் பற்றுபவன்

பிரபந்தம் - பற்று அற்றவர்கள் பற்றுபவன் 


இறைவன் நாமத்தை ஒரு நாளைக்கு எத்தனை முறை சொல்ல வேண்டும் ? காலையில் கொஞ்ச  நேரம், மாலையில் கொஞ்ச நேரம் சொல்லலாம்.  நாள்  கிழமை என்றால் இன்னும் கொஞ்சம் அதிக நேரம் சொல்லலாம்.

அவ்வளவுதானே ?

குலசேகர ஆழ்வார் சொல்கிறார் -  கோவிந்தா கோவிந்தா என்று சொல்லி நாக்கே தடித்துப் போக வேண்டுமாம். அத்தனை முறை சொல்ல வேண்டுமாம்.

நாக்கில் தழும்பு ஏற வேண்டுமாம்.


குதிரை வடிவில் வந்த கேசிகன் என்ற அரக்கனின் வாயை பிளந்து மகிழ்ந்தவனை, கடல் போல நிறம் கொண்டவனை, என் கண்ணனை, மலையைக் குடையாகப் பிடித்து அன்று பசுக்களை காத்த இடையர் தலைவனை, தேவர்களின் தலைவனை, தமிழ் மற்றும் வட மொழியின் இனிய பாசுரங்கள் போன்றவனை, பற்று அற்றவர்கள் பயிலும் , திருவரங்கத்தில் பள்ளி கொள்ளும் கோவிந்தனை நாக்கு தடிப்பு ஏறும்வரை சொல்லி, கைகளால் மலர் தூவி சேவிக்கும் நாள் என்றோ

பாடல்

மாவினைவாய் பிளந்துகந்த மாலை வேலை வண்ணணைஎன் கண்ணணைவன் குன்ற மேந்தி
ஆவினையன் றுயக்கொண்ட ஆய ரேற்றை அமரர்கள்தந் தலைவனைஅந் தமிழி னின்பப்
பாவினைஅவ் வடமொழியைப் பற்றற் றார்கள் பயிலரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்
கோவினைநா வுறவழுத்தி என்றன் கைகள் கொய்ம்மலர்தூய் என்றுகொலோ கூப்பும் நாளே

சீர் பிரித்த பின்


மாவினை வாய் பிளந்து உகந்த மாலை 
வேலை வண்ணணை 
என் கண்ணணை 
அவன் குன்ற மேந்தி ஆவினை அன்று உயக் கொண்ட ஆயர் ஏற்றை  
அமரர்கள் தம்  தலைவனை 
அந்த தமிழ் இன்பப் பாவினை 
அவ் வடமொழியைப் 
பற்று அற்றார்கள் பயில் அரங்கத்து அரவணையில்  பள்ளி கொள்ளும்
கோவினை
நாவுற அழுந்தி என்றன் கைகள் கொய் மலர் தூய் என்று கொலோ கூப்பும் நாளே

பொருள் 

மாவினை = குதிரையினை

வாய் பிளந்து = வாயைப் பிளந்து

உகந்த = மகிழ்ந்த

மாலை = திருமாலை

வேலை = கடல் போன்ற

வண்ணணை  = வண்ணம் கொண்டவனை

என் கண்ணணை = என் கண்ணனை

அவன் = அவன்

குன்ற மேந்தி = மலையை தூக்கி

ஆவினை = பசுக் கூட்டங்களை

அன்று = அன்றொரு நாள்

 உயக் கொண்ட = காப்பாற்றிய

ஆயர் ஏற்றை = இடையர்களின் தலைவனை
 
அமரர்கள் தம்  தலைவனை = தேவர்களின் தலைவனை

அந்த தமிழ் இன்பப் பாவினை = தமிழின் இனிமையான பாடல்கள் போன்றவனை

அவ் வடமொழியைப் = வடமொழி போன்றவனை

பற்று அற்றார்கள்  = பற்று இல்லாதாவர்கள்

பயில் = நாளும் அறிந்து கொள்ளும்

அரங்கத்து = திருவரங்கத்து

அரவணையில் = பாம்பு படுக்கையில்

பள்ளி கொள்ளும் = கண் வளரும்

கோவினை = தலைவனை

நாவுற அழுந்தி = நாக்கு தழும்பு ஏறும்படி அழுந்தி

என்றன் கைகள் = என்னுடைய கைகள்

கொய் மலர் = மலர்களை கொய்து

 தூய் = தூவுவது

என்று கொலோ கூப்பும் நாளே = என்று நான் வணங்குவேனோ ?

திருப்பி திருப்பி சொல்லி நாக்கில் தழும்பு ஏற வேண்டும்.

தேவை இல்லாதவைகளை நாளும் எவ்வளவு பேசுகிறோம்.

நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறி என்பார் மாணிக்க வாசகர். கடவுள் இல்லை என்று சொல்லி சொல்லி  நாக்கில் தழும்பு ஏறிப் போய் இருக்குமாம்.

திரும்பச் திரும்பச் சொல்லுவதன் மூலம், நம்மை அறியாமலேயே நம் நாக்கு இறைவன் நாமத்தை  தானே சொல்லத் தொடங்கி விடும்  என்கிறார் சுந்தரர்.

நற்றவா உன்னை நான் மறக்கினும் என் நாக்கு மறக்காது, அது நமச்சிவாய என்றே சொல்லிக் கொண்டிருக்கும் என்கிறார். 

மற்றுப் பற்று எனக்கு இன்றி நின் திரு பாதமே மனம் பாவித்தேன்
பெற்றலும் பிறந்தேன் இனிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன் 
கற்றவர் தொழுது ஏத்தும் சீர்க் கறையூரிற் பாண்டிக் கொடுமுடி
நற்றவா உன்னை  நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.


இறைவன் நாமத்தை சொல்லச் சொல்ல நமது வாய் அழகு அடையும் என்கிறார்  திருநாவுக்கரசு ஸ்வாமிகள்...

திருவாய் பொலியச்  சிவாயநம என்று நீறணிந்தேன் என்பார் ....

கருவாய்க் கிடந்துன் கழலே நினையுங் கருத்துடையேன்
உருவாய்த் தெரிந்துன்ற னாமம் பயின்றே னுனதருளால்
திருவாய்ப் பொலியச் சிவாய நமவென்று நீறணிந்தேன்
தருவாய் சிவகதி நீபா திரிப்புலி யூரரனே.

இந்த பாடல் பாசுரம் பற்றி மேலும் சிந்திப்போம்....



 

Tuesday, June 30, 2015

அறநெறிச்சாரம் - யார் நண்பன் ?

அறநெறிச்சாரம் - யார் நண்பன் ?


உங்களின் நல்ல நண்பர்கள் யார் யார் என்று கேட்டால் ஒரு பட்டியல் தருவீர்கள்.

நல்ல நண்பன் என்றால் யார் ?

ஆபத்துக்கு உதவுபவன், நம்ம வீட்டில் ஒரு நல்லது கெட்டது என்றால் கூட இருந்து உதவி செய்பவன், நம் அந்தரங்கங்கள் தெரிந்தவன், நமக்கு சமயத்தில் புத்தி சொல்லுபவன் என்று ஒரு கணக்கு வைத்திருப்போம்.

இதுதான் சரியான கணக்கா ?

நல்ல நண்பன் என்றால் யார் என்று அறநெறிச்சாரம் சொல்கிறது....

"இந்தப் பிறவியில் நம் புலன் அடக்கத்திற்கு உதவி செய்து, நாம் புகழ் அடைய துணை செய்து, மறுமையில் உயர்த கதிக்கு உயர்த்த பாடு படும் நல்ல குணம் உள்ளவரே நண்பர் என்று சொல்லப் படுவார்கள் "

பாடல்

இம்மை அடக்கத்தைச் செய்து புகழாக்கி
உம்மை உயர்கதிக் குய்த்தலால்-மெய்ம்மையே
பட்டாங் கறமுரைக்கும் பண்புடை யாளரே
நாட்டா ரெனப்படு வார்.

சீர் பிரித்த பின்

இம்மை அடக்கத்தைச் செய்து  புகழ் ஆக்கி 
உம்மை உயர் கதிக்கு உய்தலால் -மெய்ம்மையே
பட்டாங்கு அறம் உரைக்கும்  பண்புடையாளரே
நாட்டார் எனப் படுவார்.

பொருள்

இம்மை  - இந்தப் பிறவியில்

அடக்கத்தைச் செய்து = புலன் அடக்கத்திற்கு வழி செய்து

புகழ் ஆக்கி = நமக்கு புகழ் உண்டாகும் படி செய்து

உம்மை = மறு பிறப்பில்

உயர் கதிக்கு  = வீடு பேற்றை அடைய

உய்தலால் = வழி செய்து

மெய்ம்மையே = உண்மையிலேயே

பட்டாங்கு = உலகில்

அறம் உரைக்கும் = அறத்தை கூறும்

பண்புடையாளரே = நல்ல பண்பு உள்ளவர்களே

நாட்டார் எனப் படுவார் = நண்பர்கள் என்று கூறப் படுவார்கள்.

எனவே நண்பன் என்று சொல்லுவதற்கு என்னென்ன குணம் வேண்டும் ?

- புலன் அடக்கத்திற்கு வழி செய்ய வேண்டும்.  "வாடா , தண்ணி அடிக்கப் போகலாம், தம் அடிக்கப் போகலாம்" என்று கூட்டிக் கொண்டு போகக் கூடாது.

- புகழ் அடைய வழி செய்ய வேண்டும் - புகழ் எப்படி வரும் ? கடின உழைப்பு, புத்திசாலித் தனம் போன்றவை இருந்தால் புகழ் வரும். தவறு செய்யாமல் இருந்தால் புகழ் வரும்.  வாய்மையை கடை பிடித்தால் புகழ் வரும். நல்ல ஒழுக்கம் இருந்தால் புகழ் வரும்.



- மறு பிறப்பில் உயர் கதி அடைய வழி காட்ட வேண்டும்

- நல்ல அறங்களை எடுத்துச் சொல்ல வேண்டும்

- நல்ல பண்பு உள்ளவனாக இருக்க வேண்டும்.

உங்கள் நண்பர்களை விடுங்கள்.

நீங்கள் எத்தனை பேருக்கு இப்படிப் பட்ட நல்ல நண்பனாக , நண்பியாக இருக்கிறீர்கள் என்று யோசித்துப் பாருங்கள்.

இன்று வரை இல்லாவிட்டால் என்ன, நாளை முதல் இப்படி இருக்கப் பாருங்கள்....




நளவெண்பா - மாறியவை

நளவெண்பா - மாறியவை 


நிடத நாட்டில் இது சிறப்பாக இருக்கிறது, அது சிறப்பாக இருக்கிறது என்று சொல்லிக் கொண்டே போனால் அந்த பட்டியல் எப்போது முடியும். எல்லாம் சிறப்பாக இருக்கிறது என்று சொல்ல வேண்டும், பட்டியலும் நீளமாக போகக் கூடாது...எப்படி சொல்லுவது...?

புகழேந்தி சொல்கிறார்....

அந்த நாட்டில் வளைந்து இருப்பது வில் மட்டும்தான்...தளர்ந்து இருப்பது பெண்களின் கூந்தல் மட்டுமே...வாய் விட்டு அரற்றுவன பெண்களின் சிலம்பில் உள்ள மணிகள் மட்டும் தான், கலங்குவது நீர் மட்டும்தான், நல்ல நெறியை விட்டு விலகுவன பெண்களின் கண்கள் மட்டுமே...

பாடல்

வெஞ்சிலையே கோடுவன மென்குழலே சோருவன
அஞ்சிலம்பே வாய்விட் டரற்றுவன - கஞ்கம்
கலங்குவன மாளிகைமேல் காரிகையார் கண்ணே
விலங்குவன மெய்ந்நெறியை விட்டு.

பொருள்

வெஞ்சிலையே = கொடிய வில் மட்டும்

கோடுவன = வளைந்து இருப்பன. அப்படி என்றால் அரசனின் செங்கோலும், நீதி தேவதையின் துலாக் கோலும் வளையாமல் நிமிர்ந்து நின்றன.

மென்குழலே  = மென்மையான (பெண்களின் )  தலை முடியே

சோருவன = தளர்ந்து இருப்பன . மக்களிடம் சோர்வு இல்லை. அலை அலையாக பறக்கும் பெண்களின் கூந்தல் மட்டும் தான் தளர்ந்து இருக்கும்.

அஞ்சிலம்பே = கொலுசுகள் மட்டும் தான்

வாய்விட் டரற்றுவன = சத்தம் போட்டு அரற்றுவன. சிலம்பு ஏன் வாய் விட்டு அரற்றும் என்பதை உங்கள் கற்பனைக்கு விட்டு விடுகிறேன். வாய் விட்டு புலம்புபவர்கள் யாரும் இல்லை அந்த ஊரில் இல்லை. எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்கள்.

கஞ்கம் கலங்குவன = கலங்குவது நீர் மட்டும் தான்

மாளிகைமேல்  = மாளிகையின் மேல்

காரிகையார் = பெண்களின்

கண்ணே = கண்கள் மட்டும்தான்

விலங்குவன = விலகிச் செல்வன

மெய்ந் நெறியை விட்டு = உண்மையான நெறியை விட்டு

மெய் நெறி என்பது வீடு பேறு அடையும் வழி. பெண்களின் கண்கள் இந்த உலக இன்பங்களை  அனுபவிக்க நம்மை இழுக்கும். அந்தக் கண்கள், பற்றற்ற துறவற நிலைக்கு  நம்மை அழைத்துச் செல்லாது என்று சொல்ல வருகிறார்.

எதிர் மறையிலும் ஒரு சுவை இருக்கத்தான் செய்கிறது.



Monday, June 29, 2015

பிரபந்தம் - மணத்தூணே பற்றி

பிரபந்தம் - மணத்தூணே பற்றி 


ஓடுகின்ற தண்ணீரில் நின்று இருக்கிறீர்களா ? பெரிய அலை அடைக்கும் போது கடற்கரையில் கால் நனைத்து இருக்கிறீர்களா ?

தண்ணி அப்படியே இழுத்துக் கொண்டு போவது போல, தள்ளிக் கொண்டு போவது போல இருக்கும் அல்லவா ?

நிற்கவும் முடியாது, அதே சமயத்தில் விழுந்தும் விடுவது இல்லை...இரண்டுக்கும் நடுவில் கிடந்து தத்தளிப்போம். எதையாவது அல்லது யாரையாவது பிடித்துக் கொள்ளலாம் போல இருக்கும் அல்லவா ?

அந்த அனுபவம் ஒரு புறம் இருக்கட்டும்.....

வாழ்வில் உங்களுக்கு கிடைத்த வரங்களை, இன்பங்களை எண்ணிப் பாருங்கள்...

முதலில் ஆரோக்கியமாக பிறந்து இருக்கிறீர்கள்...நொண்டி, முடம், குருடு இல்லாமால்,

நல்ல படிப்பு, நல்ல குடும்பம், நல்ல ஊரில் பிறந்து வளர்ந்து இருக்கிறீர்கள், நல்ல நண்பர்கள், நல்ல உறவு, இனிமையான கணவன் மனைவி, பிள்ளைகள், கொஞ்சம் சொத்து...இப்படி எத்தனையோ நல்லவை உங்களுக்கு வாய்த்திருக்கிறது . எல்லோருக்கும் எல்லாமும் இருக்கும் என்று சொல்லவில்லை...பொதுவாகவே நமக்கு எல்லாம் கிடைத்து இருக்கிறது....

எத்தனை சந்தோஷம்....எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று கூறுவது போல....

இதை எண்ணிப் பார்க்கிறார் குலசேகர ஆழ்வார்...

அவன் அன்பை, அருளை எண்ணி எண்ணி உருகுகிறார்...ஏதோ அவனிடம் இருந்து அருள் , அன்பு வெள்ளம் பொங்கி வருவது போல இருக்கிறது...அந்த வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போகாமல் கோவில் மண்டபத்தில் உள்ள தூணை பற்றிக் கொள்கிறார்...

அப்படி ஒரு அருள் வெள்ளம்....

பாடல்

வாயோரீ ரைஞ்ஞூறு துதங்க ளார்ந்த வளையுடம்பி னழல்நாகம் உமிழ்ந்த செந்தீ

வீயாத மலர்ச்சென்னி விதான மேபோல் மேன்மேலும் மிகவெங்கும் பரந்த தன்கீழ்

காயாம்பூ மலர்ப்பிறங்க லன்ன மாலைக் கடியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்

மாயோனை மணத்தூணே பற்றி நின்றென் வாயார என்றுகொலோ வாழ்த்தும் நாளே!

சீர் பிரித்த பின்

வாய் ஓர் ஈர் ஐநூறு  துதங்கள் ஆர்த்த  வளை உடம்பின் அழல் நாகம் உமிழ்ந்த செந் தீ

வீயாத மலர்ச் சென்னி விதானமே போல் மேன் மேலும் மிக எங்கும்  பரந்த தன் கீழ்

காயாம்பூ மலர்ப் பிறங்கல் அன்ன  மாலைக் கடி அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்

மாயோனை மணத் தூணே பற்றி நின்று ஏன்  வாயார என்று கொலோ வாழ்த்தும் நாளே!


பொருள் 

வாய் = வாய்

ஓர் ஈர் ஐநூறு = இரண்டு ஐநூறு அதாவது ஆயிரம்

துதங்கள் = துதம் என்றால் தோத்திரம். துதித்தல் என்பது  அதிலிருந்து வந்தது. துதங்கள் , அதன் பன்மை. பலப் பல தோத்திரங்கள்.  

ஆர்த்த  = பொங்கி வரும். அல்லது தொடர்ந்து வரும்.

ஆர்த்த பிறவித் துயர் கெட என்பார் மணிவாசகர்

ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடுந்
தீர்த்தன்நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடுங்
கூத்தன்இவ் வானுங் குவலயமும் எல்லோமுங்
காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோர் எம்பாவாய்.

வளை உடம்பின்  = வளைந்த உடம்பின்

அழல் = தீயின் நாக்கு

நாகம் உமிழ்ந்த  = நாகம் (ஆதி சேஷன் ) உமிழ்ந்த

செந் தீ = சிவந்த தீ

வீயாத = கீழே விழாத

மலர்ச் = மலர்களால் ஆன

சென்னி = தலைக்கு மேல் உள்ள

விதானமே போல் = பந்தல் போல

மேன் மேலும் = மேலும் மேலும்

மிக எங்கும் = எங்கும்

பரந்த = பரந்து விரிந்து

தன் கீழ் = தனக்கு கீழே

காயாம்பூ  = காயாம்பூ

மலர்ப் = மலர்

பிறங்கல் அன்ன  மாலைக் = ஒளி பொருந்திய மாலை

கடி அரங்கத்து = சிறந்த திருவரங்கத்தில்

அரவணையில் = அரவு + அணையில் = பாம்பணையில்

பள்ளி கொள்ளும் = பள்ளி கொள்ளும்

மாயோனை = மாயோனை

மணத் தூணே பற்றி = மணத்  தூணைப் பற்றிக் கொண்டு

நின்று = நின்று

என்  வாயார = என் வாயார

என்று கொலோ வாழ்த்தும் நாளே! = என்று வாழ்த்துவேனோ

நாம் எல்லாம் கோவிலுக்குப் போனால் இறைவனிடம் அது வேண்டும், இது வேண்டும்  என்று கேட்போம். ஒரு படி மேலே போனால், கொடுத்ததற்கு நன்றி சொல்லப்  போவோம்.

ஆழ்வார் ஒரு படி இன்னும் மேலே போகிறார்.

"நீ நல்லா இருக்கணும் " என்று இறைவனை இவர் வாழ்த்துகிறார். "பாவம் , நீ தான் எவ்வளவு கஷ்டப் படுகிறாய்...நீ நல்லா இருக்கணும்" என்று இறைவனை வாழ்த்துகிறார்.

இரண்டாவது,  மணத் தூணே பற்றி நின்று. வைணவக் கோவில்களில் சந்நிதியில் இரண்டு தூண்கள் இருக்கும். அவற்றிக்கு "திருமணத்தூண்கள் " என்று பெயர்.

பக்தி பெருகும்போது, ஆனந்த வெள்ளம் கரை புரண்டு வரும்போது, பற்றிக் கொள்ள உதவும்  தூண்கள் அவை.

இப்படி கரை புரண்டு வெள்ளத்தை , குலசேகர ஆழ்வார் மட்டும் தான் உணர்ந்தாரா ?

இல்லை . அபிராமி பட்டர் கூறுவார்

வெளிநின்ற நின் திருமேனியைப் பார்த்து விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைகண்டதில்லை கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ?
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே

கரை காணாத வெள்ளம் என்கிறார்.


இதையே அருணகிரிநாதரும் 

பத்தித் திருமுக மாறுடன் பன்னிரு தோள்களுமாய்த்
தித்தித் திருக்கு மமுதுகண் டேன்செயன் மாண்டடங்கப்
புத்திக் கமலத் துருகிப் பெருகிப் புவனமெற்றித்
தத்திக் கரைபுர ளும்பர மாநந்த சாகரத்தே

தத்திக் கரை புரளும் பரமானந்த சாகரத்தே என்று கூறுவார்.

ஆனந்தமான கடல்.

ஒன்றும் இல்லாமலா எல்லோரும் சொல்லி இருப்பார்கள் ?

 


Friday, June 26, 2015

தாயுமானவர் பாடல் - எது ?

தாயுமானவர் பாடல் - எது ?


தாயுமானவர், வேதாரண்யத்தில் பிறந்து, திருச்சியில் வேலை பார்த்து, பின் இராமநாதபுரத்தில் சமாதி அடைந்தவர். 1700 களில் வாழ்ந்தவர்.

தமிழ், சமஸ்கிரதம் இரண்டிலும் புலமை பெற்றவர்.

கிட்டத்தட்ட 1700 பாடல்கள் பாடியுள்ளார்.  மிக மிக எளிமையான பாடல்கள்.

இராமலிங்க அடிகளும், பாரதியாரும் எளிமையான பாடல்கள் பாட இவர் ஒரு உதாரணம் என்று சொல்லுபவர்களும் உண்டு.

இவரை சித்தர் என்று சொல்பவர்களும் உண்டு.

எளிமையான பாடல்கள்தான் என்றாலும் ஆழ்ந்த பொருள் செறிந்த பாடல்கள்.

எல்லோரும் பாடத் தொடங்கும்போது பிள்ளையார் மேல் பாடல் பாடுவார்கள், அல்லது தங்கள் இஷ்ட தெய்வத்தைப் பாடி நூல் தொடங்குவார்கள்.

தாயுமானவர், கேள்வியோடு பாடலை ஆரம்பிக்கிறார்.

எங்கும் நிறைந்தது எது ? ஆனதமானது எது ? அருள் நிறைந்தது எது ? என்று கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். அந்தக் கேள்விகளுக்கு விடையான அதை வணங்குவோம் என்று முடிக்கிறார்.

பாடல்

அங்கிங் கெனாதபடி  எங்கும் ப்ரகாசமாய்
      ஆனந்த பூர்த்தியாகி
  அருளடு  நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளே
      அகிலாண்ட கோடியெல்லாந்
தங்கும் படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த்
       தழைத்ததெது மனவாக்கினில்
  தட்டாமல் நின்றதெது சமயகோ டிகளெலாந்
       தந்தெய்வம் எந்தெய்வமென்
றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவும் நின்றதெது
       எங்கணும் பெருவழக்காய்
  யாதினும் வல்லவொரு சித்தாகி இன்பமாய்
       என்றைக்கு முள்ள தெதுஅது
கங்குல்பக லறநின்ற எல்லையுள தெதுஅது
       கருத்திற் கிசைந்ததுவே
  கண்டன வெலாமோன வுருவெளிய தாகவுங்
       கருதிஅஞ் சலிசெய்குவாம்.   


கொஞ்சம்  .சீர் பிரிப்போம்


அங்கு இங்கு எனாத படி எங்கும் ப்ரகாசமாய்
      ஆனந்த பூர்த்தியாகி அருளடு  நிறைந்தது எது ?

தன்னருள் வெளிக்குளே அகிலாண்ட கோடி எல்லாம் 
தங்கும் படிக்கு இச்சை வைத்து உயிர்க்கு உயிராய் 
தழைத்தது எது ?

மன வாக்கினில் தட்டாமல் நின்றது எது ?

சமய கோடிகள் எல்லாம் தன் தெய்வம் என் தெய்வம் 
என்று எங்கும் தொடர்ந்து எதிர் வழக்கிடவும் நின்றது எது ?

எங்கணும் பெரு வழக்காய் யாதினும் வல்ல ஒரு சித்தாகி இன்பமாய்
என்றைக்கும் உள்ளது எது அது ? 

கங்குல் பகல் அற நின்ற எல்லையுள்ளது எது அது  ? 

கருத்திற்கு இசைந்ததுவே 
கண்டன எல்லாம் மோன  உரு வெளியதாவும் 
கருதி அஞ்சலி செய்குவாம்.   

கடின பதம் எதுவம் இல்லை. 

பொருள் வேண்டுமா என்ன ?


Wednesday, June 24, 2015

நள வெண்பா - மனம் விரியட்டும்

 நள வெண்பா - மனம் விரியட்டும் 


இலக்கியங்கள் நம் மனதை விரிவடையச் செய்கின்றன.

மனம் ஏன் விரிய வேண்டும் ? மனம் பரந்து விரிவதால் என்ன பயன் ?

இரண்டு பயன்கள்

முதலாவது, துன்பங்கள் குறையும். பொதுவாகவே துன்பங்கள் நான், எனது, என் வீடு, என் கணவன், என் மனைவி, என் மக்கள் என்ற குறுகிய கண்ணோட்டத்தினால் வருகிறது.

தரையிலே செல்பவனுக்கு மேடு பள்ளம் தெரியும். ஆகாய விமானத்தில் செல்பவனுக்கு மேடு பள்ளம் தெரியாது. மனம் உயர உயர, விரிய விரிய மேடு பள்ளம் மறைந்து சம நோக்கு வரும்.

இரண்டாவது, இறை அனுபவம் பெறலாம். நாம் தெரிந்ததில் இருந்து தெரியாததை அறிந்து கொள்கிறோம். புலி எப்படி இருக்கும் என்றால் பூனை போல இருக்கும், ஆனால் கொஞ்சம் பெரிதாக இருக்கும் இன்று பிள்ளைகளுக்கு சொல்லித்தருவோம். இப்படி தெரிந்த பூனையில் இருந்து தெரியாத புலியை நம்மால் யூகம் பண்ண முடியும்.

எதைச் சொல்லி இறைவனை யூகம் பண்ண முடியும் ? இறைவன் யாரைப் போல இருப்பான் ? எதைப் போல இருப்பான் ? தெரியாது.  மனம் விரிந்து கொண்டே போனால் , எல்லாவற்றிலும் பெரியவன், உயர்ந்தவன், சிறந்தவன் என்று சொல்லப்படும்   இறைவனை அறிய முடியும்.

அதீத கற்பனைகளினால், இலக்கியங்கள் நம் மனதை பெரிதும் விரிவடையச் செய்கின்றன.

நிடத நாடு.

அங்குள்ள மாளிகைகள் எல்லாம் உயரமாக இருக்கின்றன. எவ்வளவு உயரம் என்று கேட்டால், அந்த மேகம் வரை உயரமாக இருக்கின்றன. அந்த மாளிகைகளில் மேகம் முன் வாசல் வழி வந்து பின் வாசல் வழி போகும். அவ்வளவு உயரம்.

அந்த மாளிகைகளில், பெண்கள் குளித்து முடித்து தங்கள் கூந்தலில் உள்ள ஈரம் போக  அகில், சாம்பிரானி புகை காட்டுகிறார்கள். அந்த புகை , அங்கு வரும் மேகங்களோடு  கலந்து விடுகிறது.  பின், அந்த மேகங்கள் மழை பொழிகிற பொழுது, இந்த நறுமண வாசனைகளும் கலந்து பொழிகின்றன. அதனால்  அந்த ஊரில் பெய்யும் மழை எல்லாம் பன்னீர் தெளிப்பது போல வாசமாக இருக்கிறது.

பாடல்

நின்றுபுயல் வானம் பொழிந்த நெடுந்தாரை
என்றும் அகில்கமழும் என்பரால் - தென்றல்
அலர்த்தும் கொடிமாடத் தாயிழையார் ஐம்பால்
புலர்த்தும் புகைவான் புகுந்து.

பொருள்

நின்று = (வானில்)  நின்று

புயல் = மேகம்

வானம் = வானம்

பொழிந்த நெடுந்தாரை = பொழிந்த நீண்ட மழை

என்றும் = எப்போதும்

அகில் கமழும் என்பரால் = அகில் (சந்தனம் போல ஒரு நறுமண மரம்) வாசம் வீசும் என்று கூறுவார்கள்

தென்றல் = தென்றல் மெல்ல வந்து

அலர்த்தும் = வருடிப் போகும்

கொடிமாடத் = கொடிகள் உள்ள மாடத்தில்

தாயிழையார் = ஆயிழையார் = ஆராய்ந்து எடுக்கப் பட்ட அணிகலன்களை அணிந்த பெண்கள்

ஐம்பால் = ஐந்து பிரிவு எடுத்து பின்னப்பட்ட கூந்தல். இப்போதெல்லாம் மூன்று பிரிவு எடுத்து பின்னுகிறார்கள். அந்தக் காலத்தில் அவ்வளவு அடர்த்தியான முடி. ஐந்து பிரிவாக கூந்தலைப் பிரித்து பின்னுவார்களாம். எனவே பெண்களுக்கு ஐம்பால் என்று ஒரு அடை மொழியும் உண்டு.

புலர்த்தும் = புகை போடும்

புகை = புகை

வான் புகுந்து = வானில் உள்ள மேகங்களின் ஊடே புகுந்து

சிந்தித்துப் பாருங்கள். உங்கள் கற்பனை விரியும். காணாத  ஒன்றை உங்கள் கற்பனையில் காண முடியும். 

இப்படியே பழகுங்கள்...ஒரு நாள், காணாத ஒன்றை, கடவுளைக் கூட காண இது உதவலாம்.

Tuesday, June 23, 2015

கந்தர் அலங்காரம் - எப்போது படிக்க வேண்டும்

கந்தர் அலங்காரம் - எப்போது படிக்க வேண்டும் 


எதைப்  படிக்க வேண்டும் என்பது ஒரு பிரச்னை.

எப்போது படிக்க வேண்டும் என்பது அதை விட பெரிய சிக்கல்.

எப்படி படிக்க வேண்டும் என்பது அதனினும் பெரிய சிக்கல்.

கற்க கசடு அற , கற்பவை , கற்றபின், நிற்க, அதற்குத், தக என்று சொன்ன வள்ளுவர் கூட எப்போது கற்க வேண்டும் என்று சொல்ல வில்லை.

எப்போது படிக்க வேண்டும், எதை படிக்க வேண்டும், எப்படி படிக்க வேண்டும் என்று அருணகிரியார் சொல்கிறார்....

இந்தப் பிறவியை அழித்து, பின் பிறக்க விடாமல் செய்யும் முருகனின் கவியை அன்போடு , பிழை இல்லாமல் படிக்க மாட்டீர்கள். தீ பிடித்தது போல கண்களில் புகை எழ, கோபத்தோடு எமன் வந்து பாசக் கயிற்றை உங்கள் கழுத்தில் போட்டு இழுக்கும் போதா கற்பீர்கள் ?


பாடல்

அழித்துப் பிறக் கவொட்டாவயில் வேலன் கவியையன்பால்
எழுத்துப் பிழையறக் கற்கின்றிலீ  ரெரி மூண்டதென்ன
விழித்துப் புகையெழப் பொங்குவெங் கூற்றன் விடுங்கயிற்றாற்
கழுத்திற் சுருக்கிட் டிழுக்குமன் றோகவி கற்கின்றதே.

அருணகிரியாரின் பாடல்களை சீர் பிரிக்காமல் படிப்பது சற்று கடினம்.

சீர் பிரித்தபின்

அழித்துப் பிறக்க ஒட்டா அயில் வேலன் கவியை அன்பால் 
எழுத்துப் பிழை அற கற்கின்றிலீர்  எரி மூண்டதென்ன
விழித்துப் புகை எழ  பொங்கு வெங் கூற்றன் விடும் கையிற்றால் 
கழுத்தில்  சுருக்கிட்டிழுக்கும் அன்றோ கவி கற்கின்றதே.

அடடா ! புரிகிற மாதிரி இருக்கே !!

அழித்துப்  = இந்த பிறவி என்ற தொடரை அழித்து

பிறக்க ஒட்டா = மீண்டும் பிறக்க விடாமல் செய்யும்

அயில் = கூர்மையான

வேலன் = வேலை உடையவன்

கவியை = கவிதையை

அன்பால் = அன்போடு

எழுத்துப் பிழை அற  = எழுத்துப் பிழை இல்லாமல்

கற்கின்றிலீர் = கற்க மாட்டீர்கள்

எரி மூண்டதென்ன = தீ பிடித்தாற்போல்

விழித்துப் = விழித்துக் கொண்டு

புகை எழ  = எங்கும் புகை எழ

பொங்கு = கோபத்தோடு வரும்

வெங் கூற்றன் = வெம்மையான கூற்றன்

விடும் கையிற்றால் = விடும் பாசக் கயிற்றால்

கழுத்தில் = கழுத்தில்

சுருக்கிட்டிழுக்கும் = சுருக்குப் போட்டு இழுக்கும்

அன்றோ  = அன்றைய தினமா

கவி கற்கின்றதே = கவி கற்பது ?

பின்னாளில் படித்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே போகாதீர்கள்.

காலன் எப்போது நம் கழுத்தில் கயிற்றை மாட்டுவான் என்று தெரியாது.

நல்லவற்றை முடிந்தவரை சீக்கிரம் படித்து விடுங்கள்.

நமக்கு கிடைத்தது போல் பெரியவர்கள், குருமார்கள் யாருக்குக் கிடைத்தார்கள் ?

நீங்கள் புண்ணியம் செய்தவர்கள். உங்கள் முன்னவர்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

காசு போட்டால் கிடைக்குமா கந்தரலங்காரம் ?