Wednesday, June 2, 2021

திருக்குறள் - மறை மொழி காட்டி விடும் (28)

திருக்குறள் - மறை மொழி காட்டி விடும் (28)


நீத்தார், அல்லது முற்றும் துறந்தவர் என்று சொல்கிறோமே, அவர்களின் பெருமை பற்றி கூறிக் கொண்டு இருக்கிறார் வள்ளுவர். அவர்களுடைய பெருமை என்ன என்றால், அவர்கள் சொல்லும் சொல்லின் பலன் தான் அவர்களின் பெருமை என்று. 


என்ன அது சொல், பலன், பெருமை?


நான் இலட்டு என்று சொன்னால் என்ன நிகழும்? நீங்கள் இலட்டை பற்றி நினைப்பீர்கள். திருப்பதி இலட்டு அல்லது வேறு ஏதாவது இடத்தில் உள்ள இலட்டு அல்லது மனைவியோ, அம்மாவோ செய்த இலட்டு ஞாபகம் வரலாம். அவ்வளவு தான் என் வார்த்தையின் வலு. 


மிஞ்சி மிஞ்சிப் போனால் சொன்ன சொல்லை ஞாபகக் படுத்தும். 


ஆனால், நீத்தார் சொன்னால், அந்த பொருளே வந்து விடும். இலட்டு என்று அவர்கள் சொன்னால், இலட்டு நேரில் வந்து விடும் என்கிறார் வள்ளுவர். 


பாடல் 


 நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும்


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2021/06/28.html


( Please click the above link to continue reading)



நிறைமொழி  = நிறைந்த மொழியினை உடைய 


மாந்தர் = மாந்தர் என்று இங்கு குறிப்பிடுவது துறந்தாரை 


பெருமை = அவர்களுடை பெருமை 


நிலத்து = இந்த உலகில் 


மறைமொழி = அவர்கள் சொல்லும் மந்திரச் சொல் 


காட்டி விடும் = எடுத்து உரைக்கும் 



இது ஏதோ கொஞ்சம் புரிந்தும் புரியாத மாதிரியும் இருக்கிறது. 


அதற்குதான் பரிமேலழகர் வேண்டும் என்பது.  அவர் இல்லாமல் குறள் புரிவது கடினம். 


நிறை  மொழி என்றால் என்ன என்று பரிமேலழகர் கூறுகிறார் 


" 'நிறைமொழி' என்பது, அருளிக் கூறினும், வெகுண்டு கூறினும், அவ்வப் பயன்களைப் பயந்தே விடும் மொழி" 


அருளிக் கூறினும் = அன்போடு கூறினும், 


வெகுண்டு கூறினும் = கோபம் கொண்டு கூறினாலும் 


அவ்வப் பயன்களைப் = அந்தந்த பயன்களை 


பயந்தே விடும் மொழி = கொடுத்தே விடும் மொழி 


அவர்கள் "நல்லா இரு" என்று ஆசீர்வாதம் செய்தாலும், "நாசமா போ" என்று சபித்தாலும் அப்படியே நடக்கும் என்கிறார். 



புராண கதைகளில் நாம் கேட்டு இருக்கிறோம். "நீ கல்லாகப் போ" என்று சபித்தால் அந்த சாபம் பெற்ற நபர் கல்லாகப் போய் விடுவார் என்று. 



அந்த நம்பிக்கையின் மிச்சம் தான் இன்றும் சாமியார்களை நோக்கி கூட்டம் ஓடுகிறது. எல்லா மதத்திலும் இந்த நம்பிக்கை இருக்கிறது.  குருமார்கள் ஆசீர்வாதம் செய்தால் நல்லது நடக்கும் என்று மக்கள் இன்றும் நம்புகிறார்கள். 


என்ன ஒரு சிக்கல் என்றால் என்றால், இன்றைய குருமார்கள், முற்றும் துறந்தவருக்கு நேர் எதிர் முனையில் இருக்கிறார்கள். எல்லாம் வைத்து இருக்கிறார்கள்.  பெரிய மடம், சொத்து, கணக்கு, ஆள், அம்பு, சேனை என்று துறவுக்கும் அவர்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லாமல் இருக்கிறார்கள். 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


முற்றும் துறந்தவர்கள் வாயில் இருந்து வரும் சொல் அப்படியே பலிக்கும் என்பது அவர்களின் சிறப்பு. 

No comments:

Post a Comment