Friday, June 4, 2021

திருக்குறள் - அந்தணர் என்போர்

 திருக்குறள் - அந்தணர் என்போர்


தமிழில் சொற்களை இரண்டு பெரும் பிரிவுகளாக பிரிக்கிறார்கள்


பெயர்ச் சொல்

வினைச் சொல் 


இந்த பெயர்ச் சொல்லை மேலும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கிறார்கள். 

இடுகுறிப் பெயர் 

காரணப் பெயர் என்று 


காரணப் பெயர் என்றால் ஏதோ ஒரு காரணம் பற்றி வந்த பெயர். 


நாற்காலி என்பது காரணப் பெயர். நான்கு கால்கள் இருப்பதால் அது காரணப் பெயர். 


கிளி என்பது இடுகுறிப் பெயர். கிளிக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது? தெரியாது.  ஏதோ ஒரு பேர் வேண்டும். கிளி என்று வைத்து இருக்கிறார்கள். 


உழவன் என்பது காரணப் பெயர் - உழவு வேலை செய்வதால். 


கணக்கப் பிள்ளை என்பது காரணப் பெயர் - கணக்கு வழக்கு வேலை செய்வதால்?


அந்தணர் என்பது என்ன பெயர்? இடுகுறிப் பெயரா? காரணப் பெயாரா? 


பாடல் 


அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொழுக லான் (3௦)


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post_4.html


(Please click the above link to continue reading)


அந்தணர் என்போர்  = அந்தணர் என்று அழைக்கப் படுவோர் 

அறவோர் = அற வழியில் நிற்பவர்கள் 

மற் றெவ்வுயிர்க்கும் = வேறு எந்த உயிர்க்கும் 


செந்தண்மை =  தண்மை என்றால் குளிர்ச்சி, இதம். செந்தண்மை என்றால் சிறப்பான குளிர்ச்சி, இதம், தண்ணளி 

பூண்டொழுக லான் =  பூண்டு ஒழுகலான் = மேற்கொண்டு அதன் படி வாழ்வதால் 


உரை எழுதிய பரிமேலழகர் கூறுகிறார் அந்தணர் என்பது ஏதுப் பெயர் என்று. 


ஏதுப் பெயர் என்றால் காரணப் பெயர். 


யாரெல்லாம் அறவழியில் நின்று, மற்ற உயிர்களுக்கு இதம் செய்கிறார்களோ அவர்கள் எல்லாம் அந்தணர். 


அப்படிச் செய்யாதவர் ?


"அஃது அவ்வருளுடையார் மேலன்றிச் செல்லாது என்பது கருத்து"


என்கிறார் பரிமேலழகர். 


அருள் இல்லாதவர்களை அந்தணர் என்று கூற முடியாது என்கிறார். 


"பூண்டு ஒழுகலான்" 


மேற்கொண்டு ஒழுகலான். மேற்கொண்டால் மட்டும் போதாது, அதன் படி எப்போதும், இடை விடாமல் வாழ வேண்டும். 


ஞாயிற்றுக் கிழமை மட்டும் மாமிசம் சாப்பிடுவேன். மத்த நாள் எல்லாம் சைவம் என்பது மாதிரி அல்ல. 


உயிர்கள் மேல் எப்போதும் அருளுடன் இருப்பவர் அந்தணர். இல்லாதவர் , அந்தணர் அல்ல. 


அந்தணர் என்போர் அந்தணருக்கு பிறந்தவர் என்று கூறவில்லை. 


இந்தக் குறளோடு இரண்டாவது அதிகாரம் முடிகிறது. 


ஆயாசமாக இருக்கிறதோ? ரொம்ப நீண்டு கொண்டே போகிறதோ? 


3 comments:

  1. அப்படி நீள்வதாக தோன்றுமா என்ன ?

    படிக்க வந்தோம் .பாடம் கேட்க ஆர்வம் அதிகமாகத்தான் ஆகிறது ...

    ஆயாசம் இல்லை
    பாயாசம் தான் ...அண்ணா

    ReplyDelete
  2. பரிமேல் அழகரின் உரையை விளக்க படுத்தி தெளிவு படுத்த நீங்கள் இருக்க, எங்களுக்கு ஏது ஆயாசம்? ஆனந்தம் பரமானந்தம்! மிக்க ந‌ன்றி!

    ReplyDelete
  3. நல்ல குறள் . "பிறருக்குத் தண்மையைத் தருவது" என்பதையோ பூண்டு ஒழுகுவதால், அறவோர்கள் அந்தணர் என்று அழைக்கப்படுவர் என்பது நல்ல கருத்து. நன்றி.

    ReplyDelete