Wednesday, June 9, 2021

திருக்குறள் - மனத்துக்கண் மாசிலன் ஆதல்

 திருக்குறள் - மனத்துக்கண் மாசிலன் ஆதல் 


இந்த அறம் அறம் என்று சொல்கிறார்களே அப்படி என்றால் என்ன?  அது எங்கே எழுதி இருக்கிறது? ஏதாவது புத்தகத்தில் இருக்கிறதா? யாராவது சொல்லி வைத்து இருக்கிறார்களா? அப்படியே சொன்னாலும், அது எல்லா காலத்துக்கும் பொருந்துமா?


இராமர் வழியில் நடப்பது என்பது நடக்கிற காரியமா? 


நிறைய அற நூல்கள் இருக்கின்றன. அவற்றை எல்லாம் படித்து முடிக்க பல ஆயுள் தேவைப்படும் போல் இருக்கிறதே. ஒரு திருக்குறள் படிக்கவே இத்தனை நாள் ஆகிறது. என்று மற்ற நூல்களையெல்லாம் படிப்பது?


சரி அப்படியே படித்தாலும், அவை ஒன்றுக்கு ஒன்று முரணாக இருக்கின்றன. ஒரு நூலுக்கு உள்ளேயே முரண்கள் இருப்பது மாதிரி தெரிகிறது. 


ஐயம் இட்டு உண் என்று முன்னால் சொல்லி விட்டு

ஏற்பது இகழ்ச்சி என்று பின்னால் சொல்கிறாள். 


என்னதான் செய்வது? அற வழிப்படி எப்படி வாழ்வது?


வள்ளுவரைப் போல ஒரு ஆசான் நமக்கு கிடைக்குமா? 


7 வார்த்தைகள் அல்ல, நாலே வார்த்தையில் அறம் என்றால் என்ன என்று சொல்லி விட்டுப் போய் விட்டார். 


எந்த காலத்துக்கும், எந்த நாட்டுக்கும், அது பொருந்தும். 


"மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்"


அவ்வளவு தான். மனதில் குற்றம் இல்லாமல் இருப்பதுதான் எல்லா அறமும். அதற்கு மேல் ஒரு அறம் இல்லை. 


பாடல் 


*மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்

ஆகுல நீர பிற*


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post_9.html


(Please click the above link to continue reading)

மனத்துக்கண் = மனதின் கண் 


மாசிலன் ஆதல் = குற்றம் இல்லாமல் இருப்பது 


அனைத்துஅறன் = எல்லா அறமும் அதுவே 


ஆகுல = ஆரவாரத்  


நீர = தன்மை உடையன


பிற = மற்றவை 


உலகில் உள்ள அத்தனை அயோக்கியத் தனங்களும் முதலில் மனதில் தோன்றுகின்றன. பின் அவை வாக்காக, செயலாக வடிவம் பெறுகின்றன. 


மனதில் குற்றம் இல்லை என்றால், அறம் அல்லாத செயல்ககள் நிகழவே நிகழாது. 


முந்தைய குறளில் அறம் செய்ய மூன்று வழிகள் சொன்னார் - மனம், வாக்கு, செயல் என்று. 


இங்கே, மனத்தின்கண் மாசிலன் ஆதல் என்று கூறி விட்டு, பின் சொல்கிறார் 

"ஆகுல நீர பிற" என்கிறார். 


அதாவது, வாக்காலும், செயலாலும் செய்யும் அறங்களில் ஆராவரதன்மை இருக்கும். கொஞ்சம் விளம்பரம், புகழ்ச்சி எல்லாம் இருக்கும். 


மனதில் தூய்மையாக இருந்துவிட்டால், ஒரு ஆராவாரமும் இல்லை, புகழ்ச்சி இல்லை, சத்தம் இல்லை. 


மனதில் தீய எண்ணங்களை வைத்துக் கொண்டு, வாக்கால், செயலால் அறம் செய்தாலும் சரி அல்ல என்கிறார். 


மனம் தூய்மையாக இருந்து விட்டால் போதும், மற்ற அறங்கள் எல்லாம் தானே வரும். 


இதை விட எளிமையாக, தெளிவாக யாரால் கூற முடியும்?


No comments:

Post a Comment