Sunday, June 6, 2021

நாலாயிர திவ்ய பிரபந்தம் - மறப்பனோ இனி யான்?

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - மறப்பனோ இனி யான்?


ஞானம் எப்படி வரும் ? 


நாம் நிறைய தெரிந்து வைத்து இருக்கிறோம். 


யாரிடம் இருந்து? 


தெரியாதவர்களிடம் இருந்து நாம் தெரிந்து வைத்து இருக்கிறோம். 


நாம் சிறு பிள்ளையாக இருக்கும் போது நம்மைச் சுற்றி இருக்கும் வயதானவர்கள் சொல்வதை எல்லாம் உண்மை என்று கேட்டு, அப்படியே நம்பி நம் தலையில் ஏற்றிக் கொண்டு இருக்கிறோம். அந்தச் சின்ன வயதில் பெரியவர்கள் பொய் சொல்வார்கள் என்று நமக்குத் தோன்ற வாய்ப்பில்லை. அவர்களும் பொய் சொல்ல வேண்டும் என்று சொல்லவில்லை. அவர்களுக்குத் தெரிந்ததை, அவர்கள் நம்பியதை நமக்கு உண்மை என்று சொல்லி தந்தார்கள். நாமும் அவற்றை உண்மை என்றே ஏற்றுக் கொண்டு விட்டோம். 



பின்னாளில், புது புது ஞானங்கள் வரும். ஆனால், நாம் நம்பியதை நம்மால் விட முடியாது. இத்தனை நாள் இது உண்மை என்று என்னவெல்லாமோ செய்து விட்டோம். இப்போது அது உண்மை இல்லை என்றால் கொஞ்சம் கோமாளி மாதிரி இருக்கும். எனவே, அதை விடாமல் பற்றிக் கொண்டு இருக்கிறோம். 



புது ஞானங்கள் வர விடுவதே இல்லை. ஐந்து வயதில் கற்றதுதான் ஞானம். அதற்குப் பிறகு எது புதிதாக வந்தாலும், அவற்றை தவறு என்று ஒதுக்கி விட்டு, நாம் ஐந்து வயதில் கற்றதை மட்டும் உண்மையான ஞானம் என்று பிடித்துக் கொள்கிறோம். 



பழசை மறந்தால் அல்லவா, புதிய சிந்தனைகள், ஞானங்கள் உள்ளே வரும்?



சொல்வது நம்மாழ்வார். 



"எனக்கு மறதியும் இல்லை. ஞானமும் இல்லை. ஒரு வேளை நான் மறந்து போவேனோ என்று அஞ்சி அந்த செந்தாமரைக் கண்ணன் எனக்குள்ளேயே வந்து இருந்து கொண்டான். இனிமேல் அவனை நான் ஒரு போதும் மறக்க மாட்டேன்" என்கிறார். 


பாடல் 


மறப்பும் ஞானமும் நானொன்றும் உணர்ந்திலன்,

மறக்குமென்று செந்தாமரைக் கண்ணொடு,

மறப்பற என்னுள்ளே மன்னினான் தன்னை,

மறப்பனோ இனி யான் என் மணியையே?


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post_6.html


(please click the above link to continue reading)



மறப்பும் = மறப்பதையும் 


ஞானமும்  = ஞானத்தையும் 


நானொன்றும் உணர்ந்திலன், = நான் ஒன்றும் உணர மாட்டேன் 


மறக்குமென்று = நான் மறந்து விடுவேன் என்று 


செந்தாமரைக் கண்ணொடு, = செந்தாமரைக் கண்ணன் 


மறப்பற = மறக்காமல் 


என்னுள்ளே = எனக்குள்ளே 


மன்னினான் = நிரந்தரமாக குடியேறி விட்டான் 


தன்னை = அப்படிப்பட்ட அவனை 


மறப்பனோ இனி யான் = இனி நான் மறப்பேனா? மாட்டேன் 


என் மணியையே? = என் கண் மணியை 



இங்கே மறப்பும், ஞானமும் என்று ஒன்றுக்கு ஒன்று எதிர் போல குறிப்பிடுகிறார். 


எனக்கு மறதி இல்லை. அதனால் ஞானம் இல்லை. மறப்பு உணர்ந்திலன் எனவஞானமும் உணர்ந்திலன். 


நமக்கு ஒவ்வொரு நாளும் எவ்வளவோ வேலை. சம்பாதிக்க வேண்டும், சாப்பிட வேண்டும், பொழுது போக்கு அம்சங்கள், அரட்டை, டிவி என்று ஆயிரம் வேலை இருக்கிறது. இதில் இறைவனை நாம் மறந்து போய் விடுகிறோம். 



நமக்குத் தான் ஒரு வேலை செய்தால் மற்றது எல்லாம் மறந்து போகும். இறைவனுக்கு அப்படியா?  



இவனை இப்படியே விட்டால் நம்மை மறந்து விடுவான் என்று, அவனே வந்து நம் மனதுக்குள் நம்மை கேட்காமலேயே குடி புகுந்து விடுகிறான். 



"இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க" 



என்பார் மணிவாசகர். 



அவர் நினைக்கவில்லை. இறைவனே வந்து அவர் மனதில் நீங்காமல் வந்து இருந்து கொண்டான். 



அவர் நினைப்பதாக இருந்தால் என்ன சொல்லி இருப்பார் ?



"இமைப் பொழுதும் என் நெஞ்சில் நான் மறவாதான் தாள் வாழ்க'



என்றல்லவா சொல்லி இருப்பார்.  அவர் நினைக்கவில்லை. அவன் வந்து இருந்து கொண்டு ஒரு இமைப் பொழுதும் வெளியே போக மாட்டேன் என்கிறார். 



நம் உள்ளத்தை, நம்மை கேட்காமலேயே அவன் எடுத்துக் கொள்கிறான். 



"என் உள்ளம் கவர் கள்வன்". 


திருட்டுப் பயல், களவாணிப் பயல் என்கிறார் திருஞான சம்பந்தர். 


கேட்டால் நாம் கொடுப்போமா? ஐயோ, டிவி பாக்கணும், whatsapp பாக்கணும், அதுக்கே நேரம் இல்லை. இருக்கிற ஒரு மனதை உன்னிடம் கொடுத்துவிட்டு நான் என்ன செய்வது என்று தரமாட்டோம். அதனால், அவனே நம் அனுமதி இல்லாமல் திருடிக் கொள்கிறான். 


பக்தி உலகம் ஒரு தனி உலகம். 


அதை அறிந்து கொள்ள, புரிந்து கொள்ள தனி மன நிலை வேண்டும். 


பெற்றவர்கள் பாக்கியசாலிகள். 



1 comment: