Sunday, June 27, 2021

திருக்குறள் - இல்லறம் - ஒரு பருந்துப் பார்வை - பாகம் 2

 

 திருக்குறள் - இல்லறம் - ஒரு பருந்துப் பார்வை  - பாகம் 2


( இதன்  முதல் பாகத்தை இங்கே காணலாம். 


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/1_25.html

)


பத்து அதிகாரங்களின் தலைப்புகளையும் அவற்றின் முறைமைகளையும் பார்த்தோம். 


இனி மேலே தொடர்வோம். 


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/2_27.html

(please click the above link to continue reading)


ஒழுக்கம் உடைமை வரை பார்த்தோம்.


11. பிறனில் விழையாமை - இன்பம்தானே வேண்டும், அது யாரிடம் இருந்து வந்தால் என்ன? தன் மனைவியாக இருந்தால் என்ன, மாற்றான் மனைவியாக இருந்தால் என்ன என்று ஒழுக்கம் தவறிச் செல்லாமல், ஒழுக்கம் உடையவர்கள் பால் தான் பிறன் மனைவியை நோக்காமல் இருக்கும் பாங்கு இருக்கும் என்பதால், ஒழுக்கம் உடைமைக்கு பின் இதைக் கூறினார். 



12. பொறையுடைமை - குடும்பம், சமுதாயம் என்று வந்து விட்டால் சில தவறுகள் நிகழ்வது இயற்கை. எல்லாவற்றிற்கும் சரிக்கு சரி சண்டை போட்டுக் கொண்டிருந்தால் குடும்பமும், நாடும் சீரழிந்து விடும். இல்லறத்துக்கு பொறுமை அவசியம். தெரிந்தோ, தெரியாமலோ பிறர் செய்த குற்றங்களை பொறுப்பது, பொறையுடைமை. 


13. அழுக்காறாமை - மற்றவர்கள் பெறுவதை கண்டு பொறாமைப் படுவது. குடும்பம், சமுதாயம் என்றால் ஏற்றத் தாழ்வுகள் கட்டாயம் இருக்கும். ஐயோ அவனுக்கு இவ்வளவு செல்வமா, புகழா , எனக்கு ஒன்றும் இல்லையே என்று மற்றவர்கள் ஆக்கம் கண்டு பொறாமை படாமல் இருத்தல் அழுக்காறாமை. 


14. வெஃகாமை : பிறர் பொருளை கவர நினைத்தல். பொறாமை வந்தால், தான் முன்னேறாவிட்டாலும், மற்றவனை முன்னேற விடக் கூடாது என்று அவன் பொருளை கவர நினைப்பது. எனவே, இது அழுக்காறாமை என்ற அதிகாரத்தின் பின் வைக்கப்பட்டது. 


15. புறங்கூறாமை - இது சொல்லினால் வரும் குற்றம். காணாததை கண்டது போல் கூறுவது. ஒருவர் இல்லாத போது அவரைப் பற்றி தவறாக இல்லாததையும் பொல்லாததையும் கூறுவது.  இது சொல் குற்றம். 


16. பயனில சொல்லாமை - இதும் ஒரு சொல் குற்றம். வெட்டிப் பேச்சு, யாருக்கும் ஒரு பலனும் தராத பேச்சு. இவை சொல்லில் நிகழும் குற்றங்கள். இவற்றை கடிய வேண்டும். 


17. தீவினையச்சம் - மனம், செயல், வாக்கு இவற்றால் நிகழும் அனைத்து குற்றங்களையும் கண்டு அச்சம் கொள்ளுதல். தவறு செய்ய அஞ்ச வேண்டும். என்னை யார் என்ன செய்துவிட முடியும் என்ற தைரியத்தில் தானே குற்றங்கள் நிகழ்கின்றன. எனவே, குற்றம் நிகழாமல் இருக்க அவற்றைப் பற்றி அச்சம் கொள்ள வேண்டும். 



18. ஒப்புரவு அறிதல் - உலகோடு ஒட்டி வாழ்தல். திருக்குறளில் இப்படி சொல்லி இருக்கிறது. எனவே நான் இப்படித்தான் வாழ்வேன் என்று உலகத்தோடு முரண் பட்டு வாழ்க் கூடாது. இங்கே உலகம் என்று கூறுவது, நல்லவர்களை, பெரியவர்களை. புத்தகங்கள் பல கூறும். உலகம் மாறிக் கொண்டே இருக்கும். உலகோடு ஒட்டி வாழ வேண்டும். 


19. ஈகை: வறியவர்களுக்கு, ஏழைகளுக்கு, துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்வது. 


20.புகழ்: இவை எல்லாம் செய்வதால் நிகழ்வது புகழ். 


இதோடு இல்லறம் பற்றிய அதிகாரங்கள் நிறைவு பெறுகின்றன. 


இருபது அதிகாரங்கள். இருநூறு குறள்கள். இல்லறத்தின் ஒவ்வொரு பகுதியையும் மிக மிக நுணுக்கமாக அலசி ஆராய்ந்து, தொகுத்து கூறியுள்ளார். 


இதற்கு மேல் இல்லறம் பற்றி சிந்திக்கக் கூட முடியாது. 


மற்ற எல்லா புத்தகங்களையும் மூட்டி கட்டி வைத்து விடலாம். இல்லற வாழ்க்கைக்கு இதற்கு மேல் சொல்ல ஏதும் இல்லை. இதை முழுமையாக புரிந்து கொண்டு, வாழ்வில் கடைப் பிடித்தாலே போதும். 


இனி ஒவ்வொரு அதிகாரமாக சிந்திப்போமா?




2 comments:

  1. அம்மம்மா ....வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் ....
    வணக்கம்....

    ReplyDelete
  2. பருந்துப் பார்வை என்று இதுவரை சிந்தித்துப் பார்த்தே இல்லை. அருமை. நன்றி.

    ReplyDelete