Sunday, August 12, 2012

புற நானூறு - நாளாயினும் மாறாத விருந்தோம்பல்


புற நானூறு - நாளாயினும் மாறாத விருந்தோம்பல்


நாம் ஒரு வீட்டிற்கு விருந்தினராய் சென்றால், அவர்கள் உபசரிப்பு முதல் நாள் மாதிரி பின் வரும் நாட்களில் இருக்காது. 

நாள் ஆக ஆக உபசரிப்பின் அளவு குறைந்து கொண்டே வருவது இயற்கை.

அதுவும் நம்மோடு கூட நம் குடும்பத்தையும் அழைத்துக் கொண்டு சென்று விட்டால் கேட்கவே வேண்டாம்.

ஆனால், அதியமான் அரண்மனையில் முதல் நாள் உபசரிப்பு எப்படி இருந்ததோ அப்படியே எல்லா நாளும் இருக்குமாம்.

நாள் ஆக ஆக, பரிசு வாங்க சென்ற புலவர்களுக்கோ கொஞ்சம் பயம்.

எங்கே உபசரிப்போடு அனுப்பிவிடுவானோ ? பரிசு ஒண்ணும் கிடைக்காதோ என்ற சந்தேகம் வருகிறது. 

ஔவையார் சொல்கிறார், "ஒண்ணும் பயப்படாதீங்க...யானை தன் தும்பிக்கையில் எடுத்த உணவு அதன் வாய்க்கு போவது எவ்வளவு உறுதியோ, அவ்வளவு உறுதி நீங்கள் அதியமானிடம் பரிசு பெறுவது..."



ஒரு நாட் செல்லலம் இரு நாட்செல்லலம்
பலநாள் பயின்று பலரொடு செல்லினும்
தலை நாட்போன்ற விருப்பினன் மாதோ
அணி பூண் அணிந்த யானை இயல்தேர்
அதியமான் பரிசில் பெறூஉங் காலம்
நீட்டினும் நீட்டாதாயினும் யானை தன்
கோட்டிடை வைத்த கவளம் போலக்
கையகத்ததுவே பொய்யாகாதே
அருந்த ஏமாந்த நெஞ்சம்
வருந்த வேண்டா வாழ்க அவன் தாளே’’


ஒரு நாட் செல்லலம் = ஒரு நாள் போகலாம்

இரு நாட்செல்லலம் = இரண்டு நாள் போகலாம்

பலநாள் பயின்று = ரொம்ப நாள் போனால்
பலரொடு செல்லினும் = அதுவும், பலபேரோடு ஒரு வீட்டுக்கு விருந்துக்குப் போனால்

தலை நாட்போன்ற = முதல் நாளை போன்றே

விருப்பினன் மாதோ = மற்றைய நாளும் இருக்காது. ஆனால், அதியமானிடம் அப்படி அல்ல. மற்ற நாட்களும் முதல் நாள் போலவே இருக்கும்.

அணி பூண் அணிந்த = பூண் போன்ற அணிகலன்களை அணிந்த

யானை  = யானையை 

இயல்தேர் = தேரில் பூட்டிய

அதியமான் = அதியமானிடம்

பரிசில் பெறூஉங் காலம் = பரிசு பெறுங்காலம்

நீட்டினும்  = கொஞ்சம் நீண்டாலும்

நீட்டாதாயினும் = நீளாவிட்டாலும்

யானை தன் = யானையின்

கோட்டிடை = தந்தங்களுக்கு இடையே

வைத்த கவளம் போலக் = வைத்த உணவுக் கவளம் போல்

கையகத்ததுவே = கையின் + அகத்து + அதுவே. கட்டாயம் கையில் கிடைக்கும்

பொய்யாகாதே = கிடைக்காமல் போகாது

அருந்த = அனுபவிக்க

ஏமாந்த நெஞ்சம் = ஏமாந்த நெஞ்சம் (பரிசு வாங்க நாள் ஆனதால்)

வருந்த வேண்டா = வருந்த வேண்டாம், பயப்படாதீங்க

வாழ்க அவன் தாளே = அவன் தாளை வாழ்த்துங்கள் 

1 comment:

  1. இந்த மாதிரி எழுதி அவ்வையாரே பரிசு வாங்கி விட்டார்!

    ReplyDelete