Wednesday, November 13, 2019

திருவாசகம் - வாரா வழி அருளி

திருவாசகம் - வாரா வழி அருளி 


வழி என்றால் எங்கோ போவதற்கோ அல்லது எங்கிருந்தோ வருவதற்கோதான் இருக்க வேண்டும் அல்லவா.

இறைவன் "வாரா வழி"யை அருளுவானாம்.

அது என்ன வாரா வழி?

இறந்து, பின் இங்கு திரும்பவும் வாரா வழி.

இறைவன் இருக்கிறானா? அவனை எப்படி அடைவது என்று ஆதி நாள் தொட்டு மனிதன் மண்டையை பிய்த்துக் கொண்டிருக்கிறான்.

மணிவாசகர் சொல்கிறார். "நீ போய் தேடினால் கிடைக்க மாட்டான். தேடுவதை முதலில் நிறுத்து" என்கிறார்.

எப்படித் தேடுவது? எதைத் தேடுகிறோம் என்று தெரிந்தால் அல்லவா அதைத் தேடி கண்டு பிடிக்க முடியும். இறைவன் எப்படி இருப்பான் என்று நமக்குத் தெரியாது. சினிமாவிலும், படத்திலும், சிலையிலும் இருப்பது போல இறைவன் இருப்பானா?

உலகத்தில் உள்ள எல்லோரும் தேடினார்கள். யாரும் அவனை காண முடியவில்லை.

ஆனால், "நமக்கு எளியன்" என்கிறார் மணிவாசகர். நமக்கு என்றால் அன்பர்களுக்கு.  அறிவு கொண்டு தேடாமல், அன்பு உள்ளம் கொண்டவர்களுக்கு  அவன் எளியன் என்கிறார்.

அவனே வந்து, என் உள்ளம் புகுந்து, வாரா வழி அருளி, என்னை பைத்தியமாகி, தீராத இன்பத்தைத் தந்தான் என்கிறார்.

அவர் அப்படி உருகி உருகி பாடிய பாடல், இதோ.

பாடல்


பாரார் விசும்புள்ளார் பாதாளத் தார்புறத்தார்
ஆராலுங் காண்டற் கரியான் எமக்கெளிய
பேராளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றி
வாரா வழியருளி வந்தென் உளம்புகுந்த
ஆரா அமுதாய் அலைகடல்வாய் மீன்விசிறும்
பேராசை வாரியனைப் பாடுதுங்காண் அம்மானாய்.

பொருள்

பாரார் = பாரில் உள்ளவர்கள்

விசும்புள்ளார் = வானத்தில் உள்ளவர்கள்

பாதாளத் தார் = பாதாள உலகில் உள்ளவர்கள்

புறத்தார் = இவை அன்றி மற்ற உலகில் உள்ளவர்கள்

ஆராலுங் = யாராலும்

காண்டற் கரியான்  = காண்பதற்கு அரியவன்

எமக்கெளிய பேராளன் = எமக்கு எளிய பேராளன்

தென்னன் = தென்னாடுடையவன்

பெருந்துறையான் = திருப்பெருந்துறை என்ற இடத்தில் உறைபவன்

பிச்சேற்றி = பித்து ஏற்றி

வாரா வழியருளி  = மீண்டும் வந்து பிறக்காத வழியை அருளி

வந்தென்  = வந்து என்

உளம்புகுந்த = உள்ளத்தில் புகுந்த

ஆரா அமுதாய் = தீராத அமுதமாய்

அலைகடல்வாய் மீன்விசிறும் = அலைக்கடலில் வலை வீசி மீன் பிடிக்கும்  (திருவிளையாடல்)

பேராசை  வாரியனைப் = பெரிய அன்பு கொண்டவனை

பாடுதுங்காண் அம்மானாய். = அம்மானை சொல்லி பாடுவோம்


இறைவனை வெளியே  காண முடியாது.

"ஆராலுங் காண்டற் கரியான்"

ஏன், காண முடியாது?

வெளியே இருந்தால் அல்லவா காண்பதற்கு ? அவன் உள்ளே இருக்கிறான். எல்லோரும் வெளியே தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.


"வந்தென் உளம்புகுந்த"

அவன் வந்து உள்ளத்தில் புகுந்து கொள்கிறான்.

விளக்கிருக்க தீ தேடுவதை விட்டு விடவேண்டும்.

தேடல் நின்றால், தேடியது கிடைக்கும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_13.html

2 comments:

  1. முதலில் படிக்கையில் முழுவதும் புரிவதில்லை.உங்கள் விளக்கத்தை வாசித்தபின் பாடலை திரும்ப திரும்ப படிக்க தூண்டுகிறது.அதன் அழகும் ஆழ்ந்து கிடக்கும் அர்த்தமும் புல்லரிக்க செய்கிறது.மிக்க நன்றி .

    ReplyDelete
  2. வாரா வழி, எமக்கு எளியன் , வேராசை வாரியான... என்னவோ மனதை நெகிழ வைக்கும் சொற்பதங்கள்!

    நன்றி.

    ReplyDelete