Sunday, November 24, 2019

திருப்புகழ் - ஏது புத்தி

திருப்புகழ் - ஏது புத்தி 


கொஞ்சம் பெரிய பாடல் தான். படிக்கவும் சற்று கடினமான பாடல் தான். பொறுமையாகப் படித்தால் அவ்வளவு சுவை நிரம்பிய பாடல். சீர் பிரித்து பொருள் அறியலாம்.

அருணகிரிநாதர் சொல்கிறார்.

விளையாடிக் கொண்டிருந்த பிள்ளை, திடீரென்று அருகில் அப்பா அம்மா யாரும் இல்லாததை கண்டு திகைக்கிறது. எங்கு போய் தேடுவது என்று தெரியாமல் குழம்புகிறது. பின், அதுவே நினைக்கிறது. எனக்கு என்ன புத்தியா இருக்கு அப்பா அம்மாவை தேடி கண்டுபிடிக்க என்று நினைத்து ஓ வென்று அழ ஆரம்பிக்கிறது. பிள்ளை அழுதால் அப்பா அல்லது அம்மா யாராவது ஓடி வருவார்கள் தானே. நாம் எதுக்கு போய் தேடணும். அழுதா போதுமே, அவங்களே வந்து தூக்கிக் கொள்வார்கள் அல்லவா என்ற அந்த பிள்ளையின் அறிவு கூட எனக்கு இல்லையே.

இத்தனை காலம் இந்த உலகில் விளையாட்டுப் பிள்ளையாக இருந்து விட்டேன். திடிரென்று உன் ஞாபகம் வந்தது முருகா. உன்னை எங்கே போய் தேடுவேன். எனவே, அழுகிறேன். அழுதால் உன் பிள்ளையான என்னை நீ வந்து தூக்கிக் கொள்வாய் அல்லவா ? எனக்கு வேறு யாரைத் தெரியும்?

நீ வருவாய் என்று எனக்குத் தெரியும். பிள்ளை அழும் போது அதை கவனிக்காவிட்டால் ஊரில் அதன் அப்பா அம்மாவைப் பற்றி என்ன சொல்லுவார்கள். பிள்ளையை கவனிக்காம அப்படி என்ன வேலையோ என்று பெற்றோரைத் தானே திட்டுவார்கள்.

முருகா, நீ என்னை கவனிக்காவிட்டால் ஊரில் உன்னைத் தான் எல்லோரும் திட்டுவார்கள். பரிகாசம் பண்ணுவார்கள். பெரிய கடவுளாம், பக்தன் அழும் போது வந்து  கவனிக்கக் கூட தெரியவில்லை என்று.  இது தேவையா உனக்கு?

என்று சொல்லிவிட்டு, முருகனை துதிக்கிறார்.

அற்புதமான பாடல். சந்தம் கருதி கொஞ்சம் வார்த்தைகளை அங்கே இங்கே பிரித்துப் போட்டு இருக்கிறார். நாம் அதை கொஞ்சம் சீர் பிரித்து வாசித்தால் அதன் அழகு தெரியும்.

பாடல்



ஏது புத்திஐ யாஎ னக்கினி
     யாரை நத்திடு வேன வத்தினி
          லேயி றத்தல்கொ லோஎ னக்குனி ...... தந்தைதாயென்

றேயி ருக்கவு நானு மிப்படி
     யேத வித்திட வோச கத்தவ
          ரேச லிற்பட வோந கைத்தவர் ...... கண்கள்காணப்

பாதம் வைத்திடை யாதே ரித்தெனை
     தாளில் வைக்கநி யேம றுத்திடில்
          பார்ந கைக்குமை யாத கப்பன்முன் ...... மைந்தனோடிப்

பால்மொ ழிக்குர லோல மிட்டிடில்
     யாரெ டுப்பதெ னாவெ றுத்தழ
          பார்வி டுப்பர்க ளோஎ னக்கிது ...... சிந்தியாதோ

ஓத முற்றெழு பால்கொ தித்தது
     போல எட்டிகை நீசமுட்டரை
          யோட வெட்டிய பாநு சத்திகை ...... யெங்கள்கோவே

ஓத மொய்ச்சடை யாட வுற்றமர்
     மான்ம ழுக்கர மாட பொற்கழ
          லோசை பெற்றிட வேந டித்தவர் ...... தந்தவாழ்வே

மாதி னைப்புன மீதி ருக்குமை
     வாள்வி ழிக்குற மாதி னைத்திரு
          மார்ப ணைத்தம யூர அற்புத ...... கந்தவேளே

மாரன் வெற்றிகொள் பூமு டிக்குழ
     லார்வி யப்புற நீடு மெய்த்தவர்
          வாழ்தி ருத்தணி மாம லைப்பதி ...... தம்பிரானே.



பொருள்



ஏது புத்தி = ஏது புத்தி

ஐயா = ஐயா

எ னக்கு = எனக்கு

இனி = இனிமேல்

யாரை = யாரை

நத்திடுவேன் = நாடுவேன்

அவத்தினிலே = வீணாக

இறத்தல்கொ லோ = இறப்பதுதான்

எனக்கு = எனக்கு

நீ = நீ

தந்தைதாயென்று = தந்தை தாய் என்று


இருக்கவும் = இருக்கவும்

நானு மிப்படியே  = நானும் இப்படியே

தவித்திடவோ = தவித்திடவோ

சகத்தவர் = உலகில் உள்ளவர்கள்

ஏசலிற் படவோ = திட்டும் படியாக

நகைத்தவர் = என்னைப் பார்த்து சிரிப்பவர்கள்

கண்கள்காணப் = அவர்கள் கண்கள் என்னை காணும் படி

பாதம் வைத்திடை யா = உன் பாதங்களை வைத்திடு ஐயா

ஆதரித்து எனை = ஆதரித்து எனை

தாளில் வைக்க = உன் திருவடிகள் என் தலைமேல் வைக்க

நி யேம றுத்திடில் = நீயே மறுத்தால்

பார் நகைக்குமை யா  = பார் நகைக்கும் ஐயா

தகப்பன்முன் = தகப்பன் முன்

மைந்தனோடிப் = பிள்ளை ஓடி

பால்மொழி = குழந்தையின் பால் போன்ற மொழியில்

குர லோல மிட்டிடில் = குரல் ஓலம் இட்டிடில்

 யாரெடுப்பதென = யார் எடுப்பது என

நா வெறுத்தழ =நாக்கு வெறுத்து அழ

பார்வி டுப்பர்க ளோ = பாரில் (உலகில்) விட்டு விடுவார்களா

எனக்கிது = என்று இதை

சிந்தியாதோ =  சிந்திக்க மாட்டார்களா?


ஓத முற்றெழு = வெள்ளம் முழுவதுமாக எழுவது போல

பால்கொ தித்தது =பால் கொதித்தது

போல = போல

எட்டிகை = எட்டு திசையில் உள்ள

நீசமுட்டரை = நீசம்முற்ற அசுரர்களை

யோட வெட்டிய = ஓட வெட்டிய

பாநு  = சூரியனை போல் ஒளிவிடும்

சத்திகை = சக்தியான வேலைக் கொண்ட

யெங்கள்கோவே = எங்கள் அரசனே


ஓத மொய் = வெள்ளம் பெருகும்

சடை யாடவும்  = சடை ஆடவும்

உற்ற மான் மழு கரம் ஆட = மானும் மழுவும் கையில் ஆட

பொற்கழ லோசை  = பொன்னால் அணிந்த கழல் ஓசை

பெற்றிடவே நடித்தவர் = தோன்றும்படி நடனமாடியவர்

தந்தவாழ்வே = தந்த எங்கள் வாழ்வான முருகனே


மாதி னை = மாதினை

புன மீதி ருக்கு = புனை மீது இருக்கும்

மை = மை பூசிய

வாள்விழிக் = வாள் போன்ற விழிகளைக் கொண்ட

குற மாதினைத் = குற மாதினை

திருமார்ப ணைத்த = மார்போடு அனைத்துக் கொண்ட

மயூர = மயில் மேல் ஏறும்

அற்புத = அற்புதமான

 கந்தவேளே = கந்தக் கடவுளே

மாரன் வெற்றிகொள் = மன்மதனை வெற்றி கொள்ளும்

பூமு டிக்குழலார்  = பூக்கள் முடிந்த குழலை உடைய பெண்கள்

வியப்புற = வியக்கும்படி

நீடு மெய்த்தவர் = நீண்ட மெய் தவம் செய்பவர்

வாழ் = வாழும்

திருத்தணி  = திருத்தணியில்

மாமலைப் = பெரிய மலை

பதி  தம்பிரானே.= அதிபதியான தம்பிரானே

கொஞ்சம் பொறுமையாக பாடலை வாசித்துப் பாருங்கள். சந்தம் துள்ளும்.

அர்த்தம் தோய்ந்த இனிய பாடல்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_24.html

1 comment:

  1. வாஸ்தவம். .எப்படி எல்லாம் ஈசனை தன்பால் ஈர்க்க முடியுமோ அதை கையாளுகிறார்..நிந்தா ஸ்துதி என்பார்களே அது போல.

    ReplyDelete