Friday, April 1, 2022

திருக்குறள் - நடுவு நிலைமை - சிதைவின்றி

 திருக்குறள் - நடுவு நிலைமை - சிதைவின்றி 


ஒருவன் நடு நிலை தவறி ஏன் தவறு செய்கிறான்?


ஏதோ நாலு காசு பார்க்கலாம் என்று நினைபதால் தானே? 


சரி, நாலு காசு பார்த்தாச்சு, அதற்குப் பிறகாவது நிறுத்த வேண்டியது தானே? இன்னும் கொஞ்சம் சேர்த்து வைத்தால் நம் பிள்ளைகளுக்கு உதவுமே, பேரப் பிள்ளைகளுக்கு உதவுமே என்று நினைக்கிறான். 


இலஞ்சம் வாங்கி, பொய் சொல்லி, அறத்தில் இருந்து வழுவி இந்தக் காரியம் எல்லாம் எதற்கு செய்கிறான் என்றால் தானும் தன் சந்ததியும் நன்றாக வாழ வேண்டும் என்று எண்ணித்தானே செய்கிறான்?


அப்படி வரும் செல்வம் நிற்காது என்கிறார் வள்ளுவர்.  


நடுவு நிலை தவறி சேர்க்கும் செல்வம் அவனுக்கு மட்டும் அல்ல, அவன் சந்ததிக்கும் பயன் தராது என்கிறார். 


அப்படி என்றால் எதற்கு இவ்வளவு பாடு பட்டு சேர்க்க வேண்டும் ?


பாடல் 


செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி

எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post.html


(Pl click the above link to continue reading)


செப்பம் உடையவன் ஆக்கம் = நடுவு நிலை தவறாமல் இருந்து சேர்பவனது செல்வம் 


 சிதைவின்றி = ஒரு குறையுமின்றி, அழிவு இன்றி 


எச்சத்திற்கு = அவன் சந்ததிக்கும் 


ஏமாப்பு உடைத்து = வலி உடையது ஆகும் 


ஆக்கம் என்றால் ஆக்கியது. உண்டாக்கிய செல்வம். 


இந்தக் குறளில் ஒரு எழுத்தில் பரிமேலழகர் செய்யும் நுட்பம் வியக்கத் தக்கது. 


அது என்ன ஒரு எழுத்து?


தவறு செய்யாமல் சேர்த்த செல்வம்,ஒரு குறைவும் இல்லாமல் சந்ததிக்கு போய்ச் சேரும் என்பது குறள். 


அப்படி என்றால் தவறு செய்து சேர்த்த பணம் குறையோடு போய் சேரும் என்ற பொருள் வரும். அது மட்டும் அல்ல, சந்ததிக்குதத் தானே குறையோடு போய்ச் சேரும், எனக்கு ஒன்றும் இல்லையே. நான் நன்றாக அனுபவித்திட்டுப் போகிறேன். கொஞ்சம் குறையோடு பிள்ளைகளுக்கு போய் சேரட்டும் என்று ஒருவன் நினைக்க இடம் தருகிறது அல்லவா இந்தக் குறள்.


பரிமேலழகர் அப்படி அல்ல என்கிறார். 


"எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து" என்ற அடியில்,  எச்சதிற்கு'ம் ' என்று ஒரு 'ம்' சேர்கிறார். 


அதனால் பொருள் எப்படி மாறுகிறது என்று பாருங்கள். 


முதலாவது, எச்சத்திற்கும் என்றதால் தனக்கும் என்பது புரியும். நடுவு நிலையோடு இருந்து சேர்த்த செல்வம் சந்ததிகளுக்கும் பயன் தரும் என்றால் அது உனக்கும் பயன் தரும் என்றுதானே அர்த்தம்.  


இரண்டாவது, அறவழியில் சேர்த்த பொருள் உனக்கும், உன் சந்ததிக்கும் வலிமை சேர்க்கும் என்றதனால், அறம் பிறழ்ந்து சேர்க்கும் பணம் என்ன ஆகும்? உனக்கும், உன் சந்ததிக்கும் வலிமை சேர்க்காது என்று புரிகிறது அல்லவா? எனக்கும் பயன் இல்லை, என் பிள்ளைகளுக்கும் பயன் இல்லாத ஒன்றை செய்வானேன்?


மூன்றாவது, ஏமாப்பு உடைத்து என்றால் வலிமை சேர்க்கும். நேரான வழியில் செல்வம் சேர்த்தால் வலிமை சேர்க்கும். இல்லை என்றால் ? வலிமையை குறைக்கும். ஒருவன் களவாடி, பொய் சொல்லி, இலஞ்சம் பெற்று பொருள் சேர்க்கிறான் என்று வைத்துக் கொள்வோம். எப்படியோ மாட்டிக் கொள்கிறான். 


ஒரு வேளை அவன் சேர்த்து வைத்த செல்வம் தப்பித்து விடலாம். 


அவன் பிள்ளைகளை ஊர் என்ன சொல்லும் ? "...இதோ போகிறானே இவன், இவனுடைய அப்பா அந்தக் காலத்தில் செய்யாத அட்டூழியம் எல்லாம் செஞ்சு சிறைக்கு போனவன். இவன் ஏதோ பெரிய மனிதன் போல நடக்கிறான்" என்று முகத்துக்கு நேரே சொல்லாவிட்டாலும் மனதுக்குள் நினைப்பார்கள் அல்லவா? நல்லவர்கள் அவனோடு ஒன்றாக இருப்பார்களா? 


அதெல்லாம் ஒன்றும் இல்லை. பணம் இருந்தால் போதும். உலகம் தானே மதிக்கும். எவ்வளவோ மோசமான அரசியல் வாதிகளைப் பார்க்கிறோம். எவ்வளவு அயோக்கியத்தனம் செய்கிறார்கள். அவர்களுக்கு எவ்வளவு மரியாதை கிடைக்கிறது. எங்கே குறை பட்டு நிற்கிறார்கள்? என்று நமக்குள் ஒரு சந்தேகம் எழலாம். 


உலகம் மதிக்கிறது என்றால் யார் அந்த உலகம்? உலகம் என்பது நல்லோர் மாட்டு என்பது இல்லக்கணம். 


ஒரு அயோக்கியனை இன்னொரு அயோக்கியன் மதிப்பான். நல்லவன் மதிப்பானா?


ஒரு தவறானவனை நாம் மதிக்கிறோம் என்றால் நாம் தவறானவர்கள் என்று அர்த்தம். 


படித்தவன், ஒழுக்கம் நிறைந்தவன் ஒரு அயோக்கியனிடம் கை கட்டி சேவகம் செய்கிறான் என்றால் அது யார் தவறு? 


நாம் நல்லவர்களாக இருப்போம். கெட்டவர்களை மதிக்கக் கூடாது. அவர்களுக்கு ஓட்டுப் போடக் கூடாது. அவர்கள் பேசுவதை கேட்கக் கூடாது. "நீ என்ன சொல்வது" என்று புறக்கணிக்க வேண்டும். நல்லவர்கள் மதிக்கவில்லை என்றால் அவன் வருந்துவான். திருந்துவான். 


நல்லவர்கள், நல்லவர்களாக இல்லாமல் இருப்பதால் தான் கெட்டவர்கள் , கெட்டவர்களாக இருக்கிறார்கள். 


அது ஒரு புறம் இருக்கட்டும். 

எச்சதிற்கும் என்று குறளில்  இல்லை. எச்சத்திற்கு என்று தான் இருக்கிறது. 


பரிமேலழகர் சொல்கிறார் "மகர மெய் தொக்கி நிற்கிறது" என்று. அந்த 'ம்' மறைந்து நிற்கிறது என்கிறார். .


"விகாரத்தால் தொக்க எச்ச உம்மையான்"


அந்த உம்மை விகாரத்தால் தொக்கி நிற்கிறது என்ன்கிறார். 


அது மட்டும் அல்ல. 


ஒருவன் நேரான வழியில் பொருள் சேர்த்தால் அது அவனுக்கு எவ்வளவு காலம் வரை பலன் தரும்என்றால் அவன் சாகும் வரை அது அவனுக்கு துணை நிற்கும் என்கிறார். 


அபப்டி எங்கே குறளில் போட்டிருக்கிறது என்றால், நேரடியாகப் போடவில்லை. 


"எச்சதிற்கும்" என்று சொன்னதால், அவன் உயிரோடு இருக்கும் வரை அந்த செல்வம் அவனிடம் இருந்தால் தானே அவன் பிள்ளைகளுக்கு அது போய் சேரும். அவன் இருக்கும் போதே அந்த செல்வம் அவன் கைவிட்டுப் போய் விட்டால் பின் எப்படி அது அவன் சந்ததிகளுக்குப் போய் சேரும்? 


எனவே, அவனின் கடைசி காலம் வரை அவன் சேர்த்த செல்வம் அவனுக்கு துணை நிற்கும் என்று புரிந்து கொள் என்கிறார். .


அதெல்லாம் சரிங்க, பிள்ளைகள், வாரிசு, சந்ததி என்றெல்லாம் குறளில் இல்லையே என்றால் "எச்சம்" என்பதின் பொருள் 


"இறந்தவழி எஞ்சி நிற்பதாகலின் 'எச்சம்' என்றார்"


ஒருவன் இறந்த பின் எஞ்சி நிற்பது எச்சம் என்று வள்ளுவர் குறித்தார் என்று பரிமேலழகர் கூறுகிறார். 


நேரான வழியில் பொருள் சேர்.


அது உனக்கும் உன் சந்ததிக்கும் வலு சேர்க்கும். 


தவறான வழியில் பொருள் சேர்

அது உன்னையும், உன் சந்ததியையும் அழிக்கும். 


எவ்வளவு ஆழமான, நுண்ணிய பொருள். எவ்வளவு சுருக்கமாகச் சொல்லி இருக்கிறார். 







No comments:

Post a Comment