Tuesday, April 19, 2022

திருக்குறள் - அடக்கமுடைமை - முன்னுரை

திருக்குறள் - அடக்கமுடைமை - முன்னுரை 


நடுவு நிலைமை பற்றி இது வரை சிந்தித்தோம். 


மற்றவர்கள் விடயத்தில் நாம் நடுவு நிலையாக இருந்து விடலாம். இருக்கிறோம். 



ஒரு நாடு இன்னொரு நாட்டின் மேல் படை எடுத்தால், யார் செய்தது சரி, யார் தவறு என்று நடு நிலையாக நின்று நம்மால் சொல்ல முடியும். 



ஒரு அரசியல் கட்சி ஒன்றைச் செய்கிறது என்றால், அது சரியா, ஏன் செய்கிறது என்றெல்லாம் நடுநிலையாக நின்று நம்மால் ஆராய்ந்து சொல்ல முடியும். 


ஒரு மாநிலம் இன்னொரு மாநிலத்துக்கு நீர் தரவில்லை என்றால் எது சரி எது தவறு என்று நம்மால் சிந்திக்க முடியும். 



நாம் செய்யும் தவறுகளை நம்மால் நடு நிலையாக நின்று  ஆராய முடியுமா? 



எப்போதும் நாம் செய்வது சரி என்றுதானே நினைக்கிறோம். அது தவறு என்று பட்டால் கூட, அது ஏன் சரி என்று வாதாடுகிறோம். 


நமக்கு நாம் என்றேனும் நீதிபதியாக இருந்து இருக்கிறோமா? நம்மை குற்றவாளிக் கூண்டில் ஏத்தி நாம் நீதி சொல்லி இருக்கிறோமா?


நாம் தவறு செய்தால், நமக்கு நாம் தண்டனை கொடுத்து இருக்கிறோமா? நாம் செய்த தவறை இன்னொருவர் செய்தால் நாம் என்ன செய்வோமோ அதை நமக்குச் செய்து கொள்வோமா? 





(pl click the above link to continue reading)


மாட்டவே மாட்டோம். 


நான் பெரிய ஆள். எவ்வளவு படித்து இருக்கிறேன். எவ்வளவு சாதித்து இருக்கிறேன். எத்தனை பிரச்சனைகளை சரி செய்து இருக்கிறேன். நான் தவறு செய்வதா? என்று நம் வீர பிரதாபங்கள் முன் வந்து நிற்குமே அன்றி நானும் தவறு செய்தேன், நான் சொல்லியது தவறு,நான் செய்தது தவறு என்று ஒரு போதும் நமக்குத் தோன்றாது. தோன்றினாலும் வெளியே சொல்ல மாட்டோம். .


எனவே, அடுத்த அதிகாரம் "அடக்கமுடைமை" என்று வைத்தார். 


நல்லது கெட்டது எல்லோரிடமும் இருக்கும். நான் தவறே செய்ய மாட்டேன் என்று இறுமாப்பு கொள்ளாதே. அடங்கி இரு, என்று சொல்லும் அதிகாரம். 


யோசித்துப் பாருங்கள்,  எல்லோரும் தத்தம் குற்றங்களை ஒப்புக் கொண்டு, மன்னிப்பு கேட்டு, தண்டனை விதித்துக் கொண்டால், அல்லது தண்டனையை ஏற்றுக் கொண்டால், நாடு எப்படி இருக்கும் என்று. 


நான் செய்யும் தவறை நான் பொது வெளியில் ஒப்புக் கொள்வேன் என்று ஒருவன் நினைத்தாலே தவறு செய்வானா?  மறைத்து விடலாம் என்றுதானே தவறு செய்பவர்கள் நினைக்கிறார்கள். ஊரிடம் மறைக்கலாம். தன் நெஞ்சு அறியுமே. 


எனவே, அடக்கமுடைமை இல்லறத்தின் அடுத்த அறமாக சொல்லப் பட்டது. 


அதிகாரத்துக்குள் போவதற்கு முன், ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். எவ்வளவு தவறு செய்து இருக்கிறோம், எவ்வளவை மறைத்து இருக்கிறோம். எல்லாம் வெளியில் வந்து, நாம் ஒப்புக் கொள்ள வேண்டி இருந்ந்தால் எப்படி இருக்கும் என்று. 




அதிகாரத்துக்குள் நுழைவோம். 














































No comments:

Post a Comment