Thursday, April 21, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - அம்மானை ஏத்தாது

நாலாயிர திவ்ய பிரபந்தம் - அம்மானை ஏத்தாது 


கீழே உள்ள பாசுரத்தின் முதல் பாகத்தை நேற்று சிந்தித்தோம். அதன் link இந்த ப்ளாகின் இறுதியில் உள்ளது. ஒருவேளை படிக்க விருப்பம் இருந்தால் அதையும் படிக்கலாம். 


நம்மாழ்வார் சொல்கிறார், "எது சரி தவறு என்று தெரிந்து கொள்ளும் பக்குவம் இல்லாததால் பொன் மான் பின் போன அம்மானைத் தொழாமல் இதுவரை என் வாழ்நாளை எல்லாம் வீணே கழித்து விட்டேன் என்று வருந்துகிறார். 




 பாடல் 


தெரிந்துணர்வு ஒன்று இன்மையால் தீவினையேன் வாளா

இருந்தொழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் கரந்துருவின்

அம் மானை அந்நான்று பின் தொடர்ந்த ஆழி அங்கை

அம்மானை ஏத்தாது அயர்த்து    (2665)



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_21.html



(Please click the above link to continue reading)



தெரிந்துணர்வு  = தெரிந்து + உணர்வு = எது நல்லது, எது கெட்டது என்று அறியும் உணர்வு 



ஒன்று இன்மையால் = அந்த உணர்வு இல்லாததால் 



தீவினையேன் = தீய வினைகள் பல செய்த நான் 




வாளா இருந்தொழிந்தேன் = ஒன்றும் செய்யாமல் வெறுமனே காலத்தை கழித்து விட்டேன் 



 கீழ் நாள்கள் எல்லாம்  = இது வரை இருந்த நாட்கள் எல்லாம் 



கரந்துருவின் = உருவத்தை மறைத்து 



அம் மானை =அந்த பொன் மானை 



அந்நான்று = அந்த நாளில் 



 பின் தொடர்ந்த = பின் தொடர்ந்து சென்ற 



 ஆழி அங்கை = மோதிரம் அணிந்த கைகளை உடைய 



அம்மானை = அம்மானை 



ஏத்தாது = போற்றாது 



அயர்த்து = சோம்பிக் கிடந்து    (2665)




இதற்கு வைணவ உரை ஆசிரியர்கள் எழுதி இருக்கும் உரை அற்புதமானது. 



"ஆழி அங்கை" - மோதிரம் உள்ள கை. ஆழி என்பது சக்கரம். ஆனால் இதுவோ இராமாவதாரம் பற்றியது. அடுத்த வரியில் பொன் மான் பின் போன அம்மான் என்கிறார். இங்கே எங்கே சக்ராயுதம் வந்தது? எனவே அது மோதிரத்தைத் தான் குறிக்கும் என்று வியாக்கியானம் செய்கிறார்கள். 


சரி, பொன் மான் பின் போவது என்றால் அது இராமன் காட்டுக்குப் போன பின் நிகழ்ந்த ஒன்று. அவன் தான் எல்லாவற்றையும் விட்டுவிட்டுத் தானே மர உரி உடுத்து கானகம் வந்தான். மோதிரம் எங்கிருந்து வந்தது ? திருமணம் ஆன புதிது. ஒரு மகிழ்ச்சி. இராமன் கொஞ்சம் எடை கூடி இருப்பான். அதனால் அவன் கையில் உள்ள மோதிரத்தை கழட்ட முடியாமல் போய் இருக்கும். எனவே, மோதிரத்தோடு கானகம் வந்திருப்பான் என்று உரை செய்கிறார்கள். 


எவ்வளவு ஆழமாக அனுபவித்து இருக்கிறார்கள். 


பின்னாளில் அனுமனிடம் மோதிரத்தை கொடுத்து அனுப்புகிறான். அப்ப மட்டும் எப்படி மோதிரம் கழட்ட முடிந்தது என்றால், காட்டில் சரியான உணவு இல்லை. அது மட்டுமல்லாமல் சீதையை பிரிந்த துயரம் வேறு. இராமன் இளைத்துப் போனான். எனவே மோதிரம் எளிதாக கழன்று வந்தது என்கிறார்கள். 


ஒரு சொல்லுக்குப் பின்னால் இவ்வளவு கதை. 



அடுத்து, 



"கரந்துருவின் அம் மானை". கரந்து என்றால் மறைந்து. தன் உண்மையான உருவத்தை மறைத்துக் கொண்டு பொன் மான் வடிவில் வந்த மாரீசன் பின் போன என்று அர்த்தம். 



இராமனுக்குத் தெரியாதா அது பொய் மான் என்று. பின் ஏன் போனான்?  



கணவன் மனைவி உறவின் அழகை, இரகசியத்தை இங்கே சொல்கிறார்கள். 



சீதை கேட்கிறாள். "இல்லை அது பொய் மான். பொன் மான் எங்காவது உண்டா...பேசாமல் இரு" என்று சொல்லி இருக்கலாம். சொன்னால் அவள் முகம் வாடிவிடும். மனைவியின் முகம் வாடக் கூடாது என்று இராமன் பொன்மான் பின் போனானாம். என்னை நம்பி, இந்தக் காட்டுக்குள் வந்து இருக்கிறாள். அவளுக்காக, தவறாகவே இருந்தாலும், அதை செய்து அவளை சந்தோஷப் படுத்த வேண்டும் என்று இராமன் நினைத்தானாம். 




சில சமயம் பெண்கள் இப்படித்தான் காரண காரியம் இல்லாமல் எதையாவது கேட்பார்கள். அவர்களோடு வாதம் பண்ணி புண்ணியம் இல்லை. கேட்டது கிடைக்கவில்லை என்றால் பெரிய துக்கம் அவர்களுக்கு. கேட்டது கிடைக்கவில்லையே என்ற துக்கம் இல்லை.   நான் கேட்டு வாங்கித் தரவில்லையே, எனக்கு அவ்வளவுதானா மரியாதை, என் மேல் அவ்வளவுதானா அன்பு, என்ற தன்னிரக்கம், சுய பச்சாதாபம். 


தான் கேட்டு கணவன் வாங்கிக் கொடுத்து விட்டால் பெரிய சந்தோஷம். கேட்டது கிடைத்ததே என்று அல்ல. என் கணவன் எனக்காக, நான் கேட்டதை வாங்கித் தந்தான் என்ற அன்பின் அனுபவம், பெருமிதம், மனதுக்குள் ஒரு சந்தோஷம். 



அது பெண்மை. 



இராமனுக்கு அது தெரிந்து இருக்கிறது.  மனைவி கேட்கிறாள்.  அந்த மானை பிடித்துத் தந்துவிட வேண்டியதுதான் என்று கிளம்பி விட்டான். பின்னாளில் சீதை அதை நினைத்து வருந்தினாள். அது வேறு விடயம். 




அது மட்டும் அல்ல, இதில் இன்னொரு விஷயத்தையும் சொல்கிறார்கள். 



இறைவன் நாம் என்ன கேட்டாலும் ஓடிப் போய் நமக்காக அவற்றை கொண்டு வந்து தருவானாம். பக்தர்கள் முகம் வாடுவதைக் காண சகிக்க மாட்டானாம். நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். என்ன கேட்பது என்று. சீதை மாதிரி பொன் மான் கேட்டால் பின் வருந்த வேண்டி வரும். 




நாமும் கேட்கிறோமே....பணம், வீடு, வாசல், பதவி, வேலை, வரன், பரிட்சையில் தேர்வு அடைய வேண்டும், என்று என்னவெல்லாமோ கேட்கிறோம். 



அவனுக்குத் தெரியாதா, நமக்கு என்ன வேண்டும் என்று?



மணிவாசகர் சொல்லுவார், 



"வேண்டத் தக்கது அறிவோய் நீ"



எது நான் கேட்கத் தகுந்ததோ அது உனக்குத் தெரியும். .



"வேண்ட முழுதும் தருவோய் நீ"



எது கேட்டாலும் முழுசா அப்படியே தருவ. 




"வேண்டும் பரிசு என்று ஒன்று உண்டெங்கில் அதுவும் உந்தன் விருப்பன்றே"



எனக்கு ஏதாவது தரவேண்டும் என்று நினைத்தால், உனக்கு எது விருப்பமோ, அதைக் கொடு.  எனக்கு என்ன தெரியும் எனக்கு எது நல்லது, கெட்டது என்று. நீ பார்த்து செய் என்கிறார்.




நாம் பேருந்துக்காக காத்து இருக்கிறோம். ஒரு பிச்சைக் காரன் நம்மிடம் வந்து, "ஐயா, ஒரு அஞ்சு பைசா பத்து பைசா தர்மம் பண்ணுங்க" என்கிறான். நாமும் அவன் கேட்டதுக்கு மேலேயே போட்டு ஒரு ரூபாய் கொடுக்கிறோம்.




மாறாக, "ஐயா ரொம்ப பசிக்குது, சாப்பிட்டு ரெண்டு நாளாச்சு" என்று சொன்னால்,, நாம் ஒரு பத்து ரூபாயோ அல்லது அதற்கு மேலேயோ கொடுத்து இருப்போம். 




நம்ம நிலைக்கு நாம் பத்து ரூபாய் கொடுக்கலாம். அல்லது ஐம்பது ரூபாய் கொடுக்கலாம். 




இறைவனிடம் எவ்வளவு இருக்கிறது. அவன் கொடுப்பதாய் இருந்தால் எவ்வளவு கொடுப்பான்?



ஔவையார் அதியமானிடம் சென்று மருந்து குழைத்து சாப்பிட பால் வேண்டும். ஒரு ஆடு இருந்தால் நல்லா இருக்கும் என்று அவனிடம் ஆடு கேட்டாளாம். ஔவையாருக்கு அவ்வளவுதான் கேட்கத் தோன்றியது. அவன் அரசன். ஒரு ஆட்டை கொடுத்தால் அவன் பெருமை என்ன ஆவது? எனவே, பொன்னால் செய்த ஆடு ஒன்றைக் கொடுத்தானாம். அவன் பெருமைக்கு அப்படித்தான் கொடுக்க முடியும். 




இறைவன் கொடுப்பதாய் இருந்தால் எவ்வளவு கொடுப்பான். அவனிடம் கேட்காமல் இருப்பதுதான் புத்திசாலித்தனம். 




ஒரு வரியை வைத்துக் கொண்டு எவ்வளவு தூரம் உள்ளே போகிறார்கள் என்று. 





அப்படி அனுபவித்து படிக்க வேண்டும். 




























-------------------------------------    பாகம் 1  ---------------------------------------------------------



இதன் முதல் பகுதியை கீழே உள்ள இணைய தளத்தில் காணலாம் 




https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_20.html


No comments:

Post a Comment