Sunday, April 3, 2022

பக்தி இலக்கியம் - ஒரு மீள் பார்வை

 பக்தி இலக்கியம் - ஒரு மீள் பார்வை 


கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் இந்த ப்ளாகை எழுதி வருகிறேன். பெரும்பாலான தமிழ் இலக்கிய பாடல்கள் பக்தி இலக்கியத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. தேவாரம், திருவாசகம், பிரபந்தம், கந்தர் அலங்காரம், போன்ற நூல்களில் இருந்து நான் இரசித்த பாடல்களை பதிவு இட்டுருக்கிறேன். 


பொதுவாக பக்தி இலக்கியங்கள் என்ன சொல்கின்றன?



https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_3.html


(click the above link to continue reading)


இறைவன் பற்றிய வர்ணனை - நீ இப்படி இருப்பாய், உன் கையில் இது இருக்கும், நீ இந்த ஆயுதம் வைத்து இருப்பாய், இப்படி உடை உடுத்து இருப்பாய், உன் கண் இப்படி இருக்கும், சடை முடி இப்படி இருக்கும் என்று வர்ணனணைகள். 


இந்த வர்ணனைகளால் நமக்கு என்ன பலன்? அவர் எந்த உடை உடுத்தால் நமக்கு என்ன? அவர் சௌகரியத்துக்கு அவர் உடுக்கிறார். மேலும், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஒரே மாதிரியா உடை உடுத்துக் கொண்டு இருப்பார்? சரி, ஒரு பாடல், இரண்டு பாடல் என்றால் பரவாயில்லை. பெரும்பாலான பாடல்கள் அவ்வாறே இருக்கின்றன. 


அடுத்தது, இறைவன் செய்த வீர தீர சாகசங்கள். நீ அவனை இப்படி அழித்தாய், இவனை அப்படி அழித்தாய், இப்படி உதவி செய்தாய், அப்படி உதவி செய்தாய் என்று இறைவனின் பெருமைகளை கூறுகின்றன.  


உலகம் தொடங்கி பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் ஆகி விட்டன. இறைவன் அதற்கும் முன்னால் இருந்து இருக்க வேண்டும். மனிதர்கள் வந்தது நேற்று. அதிலும் மொழி வந்தது இன்று காலை. ஒரு இருநூறு ஆண்டுகள் பக்தி இலக்கியம் இருந்து இருக்கலாம். அதற்குப் பின் இறைவன் என்ன செய்தான், என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று தெரியவில்லை. யாரும் அது பற்றி எழுதுவது இல்லை. 


சரி, அவற்றை தெரிந்து நமக்கு என்ன ஆகப் போகிறது? என்றோ ஒரு நாள், இறைவன் யாரோ ஒரு அரக்கனை ஏதோ ஒரு விதத்தில் அழித்தான். பெரிய விடயம் தான். அதனால் என்ன இப்போது? அதைத் தெரிந்து என்ன்ன செய்ய? இன்று உள்ள அரக்கர்களை அழிக்க வேறு விதமான ஆயுதங்கள் வேண்டும். 


மேலும், அரக்கர்களுக்கு வரத்தைக் கொடுத்து விட்டு, தேவர்களை இன்னலுக்கு ஆளாக்கி விட்டு பின் அந்த அரக்கர்களை அழிப்பது என்ன ஒரு புத்திசாலித்தனம்? புரியவில்லை.


மூன்றாவது, உன்னை பாராட்டினால், புகழ்ந்தால், உன்னைப் பிடித்துக் கொண்டால் எனக்கு வீடு பேறு தருவாய். நீ எவ்வளவு பெரிய ஆள். எனக்கு உதவி செய்ய மாட்டாயா , இந்த உலகம் பிடிக்கவில்லை , அங்கே வந்து விடுகிறேன் என்று பல பாடல்கள்.


சரி, பாடிய அந்த பக்தருக்கு உலகம் பிடிக்கவில்லை, அவர் இறைவனை புகழ்ந்து தள்ளுகிறார். சரியோ தவறோ, அது அவருக்கும் இறைவனுக்கும் இடையே உள்ள ஒரு புரிதல். அதனால் நமக்கு என்ன? 


நான் என் மேல் அதிகாரியை புகழ்ந்தால் எனக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். அதைத் தெரிந்து உங்களுக்கு ஆவது என்ன? 


நான்காவது, மற்ற சமயங்களை, இந்து சமயத்தின் மற்ற உட் பிரிவுகளை, அதில் உள்ள கடவுள்களை இழிவு படுத்திப் பாடுவது. நீ எவ்வளவு பெரிய ஆள். மற்ற கடவுள்கள் எல்லாம் உன் முன் தூசு. அவர்கள் உன் முன் கை கட்டி நிற்பார்கள். நீ தான் உயர்ந்தவன். உன்னை விட்டால் யார் இருக்கா என்று சமய, ஜாதி பேதங்கள், பகை வளர்க்கும் பாடல்கள் பல உண்டு. 


இவற்றை எல்லாம் கழித்து விட்டுப் பார்த்தால் என்ன மிஞ்சும்?


வாழ்க்கைக்கு துணை செய்யும் பாடல்கள் எத்தனை? நம்மை உயர்த்தும் பாடல்கள் எத்தனை? மிக மிக குறைவு. 


உங்கள் கணிப்பு என்ன?



2 comments:

  1. உங்கள் எண்ணமே சரியாகத் தான் உள்ளது அண்ணா

    ReplyDelete
  2. Agree 100%. However, God has not asked man to write about God. I have often wondered, if someone sat next to us and kept praising us non stop, how irritating it would be, God must feel the same. He would rather, we got on with living our lives with dharma.I think God sets the dharma clock on and forgets about the world. Every action will face its reaction, or so we hope. End of the day, who knows? We have to live with Dharma because that is the only way to have peace within ourselves and our conscience.To have no regrets or guilt. God or no God! Thank you for your remarkable and admirable work.

    ReplyDelete