Thursday, April 14, 2022

திருக்குறள் - நடுவு நிலை - வாணிகம்

 திருக்குறள் - நடுவு நிலை - வாணிகம் 


நடுவு நிலைமை என்பது எங்கே நம்மை அதிகம் பாதிக்கும்? ஒரு சராசரி மனிதனை நடுவு நிலை எங்கு அதிகம் பாதிக்கும் என்று வள்ளுவர் யோசிக்கிறார். 


அரசன், மந்திரிகள், முதல் மந்திரி, காவல் துறை, நீதித் துறை, வேலை செய்யும் இடம், அண்டை அயல் என்று எவ்வளவோ இடங்கள் இருக்கின்றன. இருந்தாலும், எந்த ஒரு சாரார் நடு நிலை தவறினால் அது மிகவும் பாதிக்கும் ?


வள்ளுவர் சொல்கிறார் "வியாபாரிகள் நடுவு நிலைத் தவறக் கூடாது" என்று. 


ஏன்?


நம் உழைப்பு அனைத்தும் ஏதோ ஒரு விதத்தில் வியாபரிகளிடம்தான் போகிறது. 


பலசரக்கு, பால், தயிர், பழம், காய் கறி, வீடு, நிலம், நகை, கார், துணி, மருந்து, தொலைபேசி சேவை, போக்கு வரத்து, அழகு சாதனப் பொருள்கள், என்று நம் செல்வம் அனைத்தும் ஏதோ ஒரு விதத்தில் வியாபாரிகளிடம் போய் சேருகிறது. 


அது ஒரு பக்கம். 


இன்னொரு பக்கம், நாமும் ஒரு வியாபாரிதானே. நாம் வேலைக்குப் போனாலும், நம் அறிவை, திறமையை, உழைப்பை விற்று பொருள் ஈட்டுகிறோம். 


அப்படிப் பார்த்தால் உலகில் நடக்கும் அதனையும் ஒரு கொடுக்கல் வாங்கல் தான். என்ன கொடுக்கிறோம், என்ன வாங்குகிறோம் என்பதில் அடங்கி இருக்கிறது வாழ்க்கை முழுவது. 


கொள்வதை விட அதிகம் கொடுத்தால், நட்டப் படுவோம். 


கொடுப்பதை விட அதிகம் பெற்றால், இலாபம் அடைவோம். 


எல்லாம் ஒரு இலாப நட்டக் கணக்குத் தான். 


எனவே, "வாணிகம் செய்பவர்கள் பிறர் பொருளையும் தன் பொருள் போல் நினைத்து செய்தால் அவர்களுடைய வாணிகம் சிறக்கும்"


பாடல் 


வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்

பிறவும் தமபோல் செயின்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_14.html


(pl click the above link to continue reading)


வாணிகம் செய்வார்க்கு  = வியாபாரம் செய்பவர்களுக்கு 


வாணிகம் பேணிப் = வாணிகத்தை போற்றி 


பிறவும் = மற்றவர்கள் உடையதையும் 


தமபோல்  - தன்னுடையது போல 


செயின் = செய்தால் 


பிறவும், தமபோல் என்று தான் குறளில் இருக்கிறது. 


பரிமேலழகர் உரையில், "பிறர் பொருளையும் தன் பொருள் போல எண்ணி" என்று உரை செய்கிறார். 


அதாவது, ஏமாற்றாமால், நேர்மையாக வாணிகம் செய்தால், அவர்களது வாணிகம் சிறக்கும் என்கிறார். 


யோசித்துப் பார்ப்போம். இது என்ன ஒரு சரியான குறள் போலத் தெரியவில்லையே. எதையெதையோ சொல்லிக் கொண்டு வந்த வள்ளுவர் திடீரென்று விற்பது, வாங்குவது, இலாபம், நட்டம் என்று சொல்ல ஆரம்பித்து விட்டாரே என்று தோன்றும். 


அப்படிச் சொல்ல வேண்டும் என்றால் அதைக் கொண்டு போய் பொருள் பாலில் வைத்து இருக்கலாம் தானே? அறத்துப் பாலில் ஏன் சொல்ல வேண்டும்?


காரணம் இருக்கிறது. 


நம்மை ஒருவன் ஏமாற்றி விட்டான் என்றால் நமக்கு என்ன தோன்றும். 


முதலில் கோபம் வரும். ஏமாற்றப் பட்டு விட்டோமே என்று நம் மேலேயே நமக்கு வெறுப்பு வரும். 


சரி, இது ஒருதரம் நடந்தால் அதோடு விட்டு விடலாம். அடிக்கடி நடந்தால் என்ன ஆகும்?


எல்லோரும் இப்படித்தான் நடக்கிறார்கள். அப்படி நடக்கிறவர்களுக்குதான் காலம் போல இருக்கிறது. நாமும் அப்படி நடந்தால் என்ன என்று நாமும் நடு நிலை தவறி நடக்கத் தலைப்படுவோம். 


நாம் இப்படிச் செய்கிறோம் என்று இன்னொருவன் செய்வான். 


இது ஒரு தொடர் சங்கிலி போல ஒரு சமுதாயமே சீரழிந்து விடும். 


ஒரு ஆட்டோ ஓட்டுனர் மீட்டருக்கு மேலே கேட்கிறார். காரணம் என்ன? காவல் துறைக்கு மாமூல் கட்ட வேண்டும். நேர்மையாக கட்டணம் வசூலித்தால் அது முடியாது. காவல் துறை ஏன் பணம் கேட்கிறது? அரசியல்வாதிகள், அதிகாரத்தில் உள்ளவர்கள் பணம் கேட்கிறார்கள். அவர்கள் ஏன் பணம் கேட்கிறார்கள், ஓட்டு வாங்க வேண்டும் என்றால் பணம் கொடுக்க வேண்டும். ஓட்டு போடுபவன் ஏன் பணம் கேட்கிறான், ஆட்டோகாரர் மீட்டருக்கு மேலே கேட்கிறார். 


ஒரு உதாரணத்துக்கு கூறினேன்.


எங்கோ ஒருவர் நடு நிலை தவறினால் அது ஒட்டு மொத்த சமுதாயத்தையே புற்று நோய் போல் அரித்து விடும். 


செய்கிற வேலைக்கு மேல் கூலி எதிர் பார்த்தால், அதுவும் ஒரு விதத்தில் இலஞ்சம் தான். .சரியான வியாபாரம் அல்ல அது. 


ஒவ்வொருவரும் நடு நிலையில், நேர்மையாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார். 


பத்து குறள்களும் முடிந்து விட்டது. இந்த அதிகாரம் முடிந்து விட்டது. 


அடுத்த அதிகாரத்துக்குள் போவோமா அல்லது ஒரு தொகுப்புரை செய்து விட்டு பின் அடுத்த அதிக்கரதுக்கு செல்வோமா?




No comments:

Post a Comment