Sunday, April 10, 2022

திருக்குறள் - சான்றோருக்கு அணி

 திருக்குறள் - சான்றோருக்கு அணி 


நடுவு நிலைமை, நடுவு நிலைமை என்று சொன்னால் அது என்ன? எப்படி நடுவு நிலையாக இருப்பது என்ற கேள்வி வரும். அதற்கு ஏதாவது வழி காட்டுதல் இருக்கிறதா? 


இவ்வளவு சொன்ன வள்ளுவர் அதைச் சொல்லாமல் விடுவாரா. வள்ளுவர் சொல்லியது ஒரு புறம் என்றால் அதற்கு பரிமேலழகர் அதற்கு செய்யும் விளக்க உரை அதற்கும் மேல்.


"சமமாக இருந்து பொருள்களை அளவிடும் தராசுக் கோல் போல் அமைந்து ஒரு பக்கமும் சாயாமல் இருப்பது சான்றோர்க்கு அழகு"


பாடல் 


சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்

கோடாமை சான்றோர்க் கணி


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_10.html


(pl click the above link to continue reading)


சமன்செய்து = சமமாக செய்து கொண்டு 


சீர்தூக்கும் = அளவிடும் 


கோல்போல்  = தராசுக் கோல் போல் 


அமைந்தொருபால் = பொருந்தி ஒருபுறமும் 


கோடாமை = சாயாமல், தாழாமல், 


சான்றோர்க் கணி = சான்றோருக்கு அழகு 


இது என்ன பெரிய விஷயமா? தராசுக் கோல் போல் நேர்மையாக இருக்க வேண்டும் என்று சொல்லுவது ஒண்ணும் பெரிதாகத் தெரியவில்லை?


நாம் மேலோட்டமாக பல உயர்ந்த புத்தகங்களை வாசித்து விட்டு, ஹா..இது எனக்குத் தெரியாதா என்று மேலே போய் விடுகிறோம். 


திருக்குறள் போன்ற நூல்களை வாசிக்கும் போது நாம் எதையும் சாதரணாமாக தள்ளி விடக் கூடாது. 


ஏன் என்று பார்ப்போம்.


முதலாவது, எடை போடும் துலாக் கோல் முதலில் நேராக இருக்கும். தராசு கோணலாக இருந்தால் அது எப்படி சரியாக எடை போடும்? எனவே, நடுவு நிலையில் நிற்க வேண்டும் என்றால் முதலில் நாம் நேர்மையாக இருக்க வேண்டும். நான் எல்லா அயோக்கியத்தனமும் செய்வேன், ஆனால் மற்றவர்கள் விடயத்தில் நடுவு நிலையில் இருப்பேன் என்றால் அது முடியாது. முதலில் நாம் நேராக இருக்க வேண்டும். 


இரண்டாவது, தராசு யாருக்காக நாம் எடை போடுகிறோம், எதை எடை போடுகிறோம் என்றெல்லாம் தெரியாது. இரண்டு பக்கமும் சரியாக இருக்கிறதா என்பது தான் அதன் நோக்கம். அது தங்கமாக இருந்தாலும் சரி, கத்திரிக்காயாக இருந்தாலும் சரி. அது போல நாமும் யாருக்காக நாம் செய்கிறோம், எதைச் செய்கிறோம் என்பதெல்லாம் அல்ல கேள்வி. நேர்மையாக இருக்க வேண்டும். அவ்வளவுதான். 


சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்

கோடாமை சான்றோர்க் கணி



மூன்றாவது, "சீர் தூக்கி " என்றால் என்ன?  


பரிமேலழகர் கூறுகிறார் 

"சீர்தூக்கலாவது தொடை விடைகளால் கேட்டவற்றை ஊழான் உள்ளவாறு உணர்தலாகவும்"


தொடை விடைகள் என்பது கேள்விகள் கேட்டு அதன் மூலம் அறிவது. பிரச்னை என்று வந்து விட்டால் இரண்டு பக்கமும் கேட்க வேண்டும், அவர்கள் சொல்பவை சரியா என்று குறுக்கு கேள்விகள் கேட்டு சரி பார்க்க வேண்டும். இன்றைய பாணியில் சொல்வது என்றால் "cross examination" 


ஊழான் உள்ளவாறு உரைத்தால், தன்னுடைய முற் பிறவியில் பெற்ற அறிவினால் உணர்ந்து எது சரி எது தவறு என்று அறிந்து உறைதல். 



சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்

கோடாமை சான்றோர்க் கணி


இதில் சீர்தூக்கி என்றால் என்ன என்று பார்த்தோம். 


நான்காவது, அது என்ன ஒருபால் கோடா மை ?


"ஒருபால் கோடாமையாவது அவ்வுள்ளவாற்றை மறையாது பகை, நொதுமல், நட்பு என்னும் மூன்று திறத்தார்க்கும் ஒப்பக் கூறுதலாகவும் உரைக்க"


என்று உரை செய்கிறார் பரிமேலழகர். 


அதாவது, கேள்விகள், குறுக்கு விசாரணை செய்து, தான் பெற்ற அறிவால் உண்மையை உணர்ந்து பகை, நட்பு, நொதுமல் என்ற மூன்று பகுதியினற்கும் பாகுபாடு இல்லாமல் சரியானதைக் கூறுவது. .


ஐந்தாவது, இவை எல்லாவற்றிற்கும் மேலாக அவர் செய்யும் உரை 




ஒரு பக்கம் துலாக் கோல், மறு புறம் சான்றோர். 


சமன் செய்வதும், சீர் தூக்குவதும் துலாக் கோலின் இலக்கணம். 

அமைதலும், ஒரு பால் கோடாமையும் சான்றோருக்கு இலக்கணம். 


இதை இரண்டையும் எப்படி இணைப்பது. ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாமல் இருக்கிறதே?


"உவமையடை ஆகிய சமன்செய்தலும் சீர் தூக்கலும் பொருட்கண்ணும், பொருளடை ஆகிய அமைதலும் ஒருபால் கோடாமையும் உவமைக்கண்ணும் கூட்டி,"



கொஞ்சம் அடர்த்தியான தமிழ். நாம் நெகிழ்துவோம். 


இங்கே துலாக் கோல் உவமை.  சான்றோர் பொருள். 


பரிமேலழகர் சொல்கிறார் உவமைக்குச் சொன்ன சமன் செய்தலும், சீர் தூக்கலும் என்ற குணங்களை அப்படியே தூக்கி சான்றோரில் பொருத்து. 


என்ன ஆகும், சான்றோருக்கு நான்கு குணங்கள் வேண்டும் என்று ஆகி விடும். 


சமன் செய்ய வேண்டும், சீர் தூக்க வேண்டும், அமைய வேண்டும், ஒரு பால் கோடாமை வேண்டும். 


அதே போல் அமைதலும், சீர் தூக்குதலும் என்ற சான்றோரின் குணங்களை தூக்கி அப்படியே துலா கோலுக்கு பொருத்து. என்ன ஆகும் ? துலா கோலுக்கு நான்கு குணங்கள் வந்து விடும். 


எவ்வளவு ஆழமாக, நுணுக்கமாக எழுதி இருக்கிறார்கள் என்று. 


குறளில் எதையும் சாதரணமாக, இது தான் எனக்குத் தெரியுமே என்று எண்ணி எளிதில் மேலே சென்று விடக் கூடாது. 


பல உரைகளை படித்துத் தெளிய வேண்டும். 


அத்தனையும் பொக்கிஷம். 



No comments:

Post a Comment