Friday, April 8, 2022

திருக்குறள் - நடுவு நிலைமை - கெடுவாக வையாது

திருக்குறள் - நடுவு நிலைமை - கெடுவாக வையாது 


நாம் ஏன் தவறு செய்கிறோம்?


செல்வம் இல்லை என்றா? வருமானம் இல்லை என்றா? 


நமக்கு வருமானம் குறைவாக இருந்தால் பிரச்னை இல்லை. நமக்கு சொத்து குறைவாக இருந்தால் பிரச்னை இல்லை. பிரச்னை எங்கு என்றால், மற்றவனை விட நமக்கு வருமானம், சொத்து குறைவாக இருப்பதுதான். 


நாலு பேருக்கு முன்னால் நாம் தலை நிமிர்ந்து வாழ வேண்டாமா?


அவனைப் பார், எவ்வளவு விலை மதிப்பு மிக்க காரில் போகிறான். நானும் தான் இருக்கிறேனே. அவன் வீட்டைப் பார், அவள் நகையைப் பார் என்று மற்றவர்கள் கண்ணில் நாம் தாழ்ந்து போய் விடக் கூடாது என்று நினைக்கிறோம். 


நாம் இப்படி இருந்தால் மற்றவர்கள் நம்மை என்ன நினைப்பார்கள்? திறமை இல்லாதவன், அறிவு இல்லாதவன், சாமர்த்தியம் இல்லாதவன் என்று நினைப்பார்களே என்று நாம் கவலைப் பட்டு அல்லாத வழிகளில் பணம் சேர்க்க முற்படுகிறோம். 


அவமானங்களை சகிக்கிறோம். நடுவு நிலை பிறண்டு எப்படியாவது நாலு காசு சேர்த்து இந்த உலகத்தின் முன்னால் நாமும் ஒரு பெரிய ஆள் என்று காண்பிக்க நினக்கிறோம். 


அது சரியா ?


"அற வழியில் நின்றதால் நீ வறுமையில் இருக்கிறாயா? கவலைப் படாதே, அது ஒரு குறை என்று சான்றோர் நினைக்க மாட்டார்கள்"


என்கிறார் வள்ளுவர். .


பாடல் 


கெடுவாக வையாது உலகம் நடுவாக

நன்றிக்கண் தங்கியான் தாழ்வு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_8.html


(Pl click the above link to continue reading)


கெடுவாக வையாது = கெடுதலாக வைத்து எண்ணாது 


உலகம் = உலகம் 


 நடுவாக = நடு நிலைமையோடு 


நன்றிக்கண் = அறவழியில் 


தங்கியான் தாழ்வு = செல்பவனது தாழ்ந்த வாழ்வை 


இங்கே உலகம் என்பது நல்லோர், ஆன்றோர், சான்றோர் என்று பொருள். உலகம் என்றாலே அது நல்லவர்களைத் தான் குறிக்கும். அயோக்கியர்களிடம் நல்ல பேர் வாங்க வேண்டுமா?  


கெடு என்பது கெடுதல் என்ற பொருளில் வந்தது. அதாவது செல்வம் இல்லாமல் வாடுதலைக் குறித்து நின்றது. 


இதில் முக்கியமாக நாம் பார்க்க வேண்டிய சில விடயங்கள் இருக்கின்றன. 


முதலாவது, நாம் யாருடைய சொல்லுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பது.  நம் வறுமையை பார்த்து ஏளனம் செய்பவர்களின் எண்ணத்துக்குநாம் மதிப்பு அளிக்கவே கூடாது. 


இரண்டாவது, நாம் ஒருவன் ஏழ்மையில் இருக்கிறான், வசதி குறைவாக இருக்கிறான் என்றால் அவனை குறைத்து நினைக்கக் கூடாது. அவன் நேர் வழியில் செல்கிறானா? நியாயமாக நடக்கிறானா? அதை பாராட்ட வேண்டும். அப்படி செய்தால் நேர்மையாக இருப்பவனுக்கு ஒரு உத்வேகம் பிறக்கும். நாம் செய்வது சரிதான் அன்று உறுதி பிறக்கும். மேலும் பலர் அந்தப் பாதையில் செல்லத் தலைப் படுவார்கள். தவாறன வழியில் செல்பவன் கூட, "என்ன பணம் சேர்த்து என்ன பயன், ஒரு பயல் சீண்ட மாட்டேன் என்கிறான் " என்று அலுத்து நல்ல வழியில் செல்ல நினைப்பான். 


ஆனால், இங்கே என்ன நடக்கிறது? நேர்வழியில் சென்று வறுமை உற்றவனை உலகம் கேலி பேசுகிறது. பாவம், ஒண்ணும் தெரியாதவன், பிழைக்கத் தெரியாதவன் என்று அவனை உதாசீனப் படுத்துகிறது. நல்ல வழியில் செல்பவன் கூட, இது சரிப்படாது, நாமும் களத்தில் இறங்கிற வேண்டியது தான் என்று தவறான வழியில் செல்ல முயல்வான்.


காரணம் யார்? நாம் தான். பின் அவன் இலஞ்சம் வாங்குகிறான் என்று குறை சொல்லி என்ன பயன்? 


நாம் முதலில் நல்லவர்களாக இருப்போம். 


மூன்றாவது, கெட்டவர்கள் எப்போதும் அப்படித்தான் இருப்பார்கள். அவர்களை திருத்துவது நம் வேலை இல்லை. நாம் அவர்கள் சகவாசத்தை விட்டு விட வேண்டும். அவன் ஏதாவது சொல்லிக் கொண்டே தான் இருப்பான். "வம்பு செய் தீங்கினர் தம் கண்ணில் படாத தூரத்து நீங்குவதே நல்ல நெறி". நல்லவர்களோடு இருந்தால், "கவலைப் படாதே. நீ நல்லவன். சரியான பாதையில் போகிறாய். இப்படியே போ" என்று நம்மை உற்சாகப் படுத்துவார்கள். நம்மை நேர் வழியில் செல்ல ஊக்குவிப்பார்கள். 



நான்காவது, வறுமை, வசதிக் குறைவுக்கு பயப்படக் கூடாது. அதுக்கு பயந்தால், ,பின் நெறி அல்லா நெறியில் போக வேண்டி வரும். உள்ளதும் போய், மிகப் பெரிய வறுமை வந்து விடும். நேரான வழியில் செல்வதை நினைத்து பெருமை பட வேண்டும்.  வறுமை குறை அல்ல. அறம் பிறழ்ந்து வாழ்வது பிழை. 


முடிவாக, நேர்மையாக நடந்து, வாழ்வில் மற்றவர்களை விட செல்வதில், வருமானத்தில் தாழுந்து இருந்தாலும், அது ஒரு தாழ்வே இல்லை.


மற்றவர்களின் (கெட்டவர்களின்) மதிப்பைப் பெற தீய வழியில் செல்ல வேண்டுமா?


பூஜை அறையில் வள்ளுவர் படத்தை வைக்க வேண்டும். அந்தப் படத்தை பார்க்கும் போதெல்லாம் நல்ல விடயங்கள் ஞாபகம் வந்து கொண்டே இருக்க வேண்டும்.




No comments:

Post a Comment