Monday, April 11, 2022

திருக்குறள் - நடுவு நிலைமை - எண்ணமும் செயலும்

 திருக்குறள் - நடுவு நிலைமை - எண்ணமும் செயலும் 


எது முக்கியம்? எண்ணமா ? செயலா? 


முகமூடி அணிந்து கொண்டு ஒருவன் மற்றவனை கத்தியால் குத்தி கிழிக்கிறான்.  அது தவறா? சரியா?


முகமூடி அணிந்தவன் மருத்துவனாக இருந்தால் அது சரி. கொள்ளைக் காரனாக இருந்தால் தவறு. 


காரணம் என்ன?


செயல் ஒன்றுதான். எண்ணம் வேறு வேறு. மருத்துவர் உயிர் காக்க அந்தக் காரியத்தை செய்கிறார். கொள்ளைக் காரன் உயிரை எடுக்க அதைச் செய்கிறான். எண்ணம் வேறுபடுகிறது. 


சிலர் இருக்கிறார்கள். அவர்கள் சொல்லுவது நல்லது போல இருக்கும். நமக்கு நல்லது நினைத்துத் தான் சொல்கிறார்கள் என்று நினைப்போம். ஆனால் அவர்கள் மனதுக்குள் நாம் நாசமாகப் போக வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். 

"தொழில் தொடங்குகிரீர்களா? நல்லா செய்யுங்க சார். உங்க திறமைக்கு நல்லா வருவீங்க" என்று வாய் சொல்லும். உள்ளுக்குள் "இவன் எல்லாம் தொழில் தொடங்கி...விளங்குன மாதிரிதான்..இருக்கிற நாலு காசையும் தொலைக்கப் போகிறான் ...பேராசைப் பட்டால் அப்படித்தான்" என்று நினைப்பார்கள். 


நடுவு நிலையான சொல் இருந்தால் மட்டும் போதாது. நடுவு நிலைமையான உள்ளமும் வேண்டும் என்கிறார். 


பாடல் 


சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா

உட்கோட்டம் இன்மை பெறின்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_11.html



(Pl click the above link to continue reading)


சொற்கோட்டம் = சொல்லில் உள்ள குற்றம் 


இல்லது = இல்லாது போகும் 


செப்பம் = நடுவு நிலை 


ஒருதலையா = உறுதியாக 


உட்கோட்டம் = மனதுக்குள் குற்றம் 


இன்மை பெறின் = இல்லாமல் இருந்தால் 


கோட்டம் என்றால் வளைவு. நேராக இல்லாமல் இருப்பது. 


சொற்கோட்டம், உட்கோட்டம் என்று இரண்டு கோட்டம் பற்றிக் கூறுகிறார். 


சொல்லில் கோட்டம் இருக்காது எப்போது என்றால் மனதில் உறுதியாக கோட்டம் இல்லாத போது என்கிறார். 


மனதுக்குள் ஆயிரம் வஞ்சனையை வைத்துக் கொண்டு, வெளிய நல்லவன் மாதிரி பேசுபவர்கள் அந்தக் காலத்திலும் இருந்து இருக்கிறார்கள். 


"உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" என்பார் வள்ளல் பெருமான். 


‘தாய் உரைகொண்டு தாதை உதவிய

     தரணிதன்னை,

‘‘தீவினை” என்ன நீத்து,

     சிந்தனை முகத்தில் தேக்கி,

போயினை என்றபோழ்து, புகழினோய்!

     தன்மை கண்டால்,

ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ,

     தெரியன் அம்மா!



என்பான் கம்பன். 


இராமனுக்கு உரிய அரசை தான் கொள்வது "தீவினை" என்று நீத்து வந்தான். வந்தவன் ஏதோ பேருக்கு "அண்ணா நீ வந்து ஆட்சி செய்" என்று சொல்லவில்லை. அழுது கொண்டே வருகிறான். இராமன் இருக்கும் திசை நோக்கித் தொழுகிறான். அது தீவினை என்பது அவன் மனதுக்குள் இருக்கிறது. 


எனவே தான் கம்பன் "ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ" என்று பரதனைப் புகழ்கிறான். 


குறளுக்கு வருவோம். 


"உட்கோட்டம் இன்மை பெறின்"


மனதில் குற்றம் இல்லாமல் இருந்தால் என்று இழுக்கிறார். மனக் கோட்டம் என்பது இல்லாமல் இருக்காது. அது இருக்கத்தான் செய்யும். அது இல்லாவிட்டால் சொற் கோட்டம் இருக்காது என்கிறார். 


மனதை சுத்தப் படுத்த வேண்டும். 


சுத்தப் படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். 


போன வாரம் தானே குளித்தேன், வீடு பெருக்கினேன் என்று இருக்கக் கூடாது. தினம் தினம் குளிக்க வேண்டும். தினமும் வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். 


வீட்டுக்கே அப்படி என்றால் மனதில் எவ்வளவு குப்பைகள் வந்து விழும்?


தினம்தோறும் சுத்தம் செய்ய வேண்டும்.  இன்று என்ன குப்பை வந்து விழுந்தது என்று பார்க்க வேண்டும். 


அதற்குத் தான் தினமும் நல்ல புத்தகங்களைப் படிக்க வேண்டும், நல்லவர்களோடு உரையாட வேண்டும். அது சுத்தப் படுத்தும் முயற்சி. 


தீயவர்களை விட்டு விலகுவது, தீயவற்றை படிக்காமல் இருப்பது என்பது குப்பை விழாமல் பார்த்துக் கொள்வது. 


இரண்டும் செய்ய வேண்டும். 


குறளும் படிக்க வேண்டும். கண்ட whatsapp குப்பைகளைபடிக்காமலும் இருக்க வேண்டும். 


குப்பை விழுந்து கொண்டே இருக்கும் போது, வீட்டை பெருக்கிக் கொண்டே இருப்பேன் என்பது புத்திசாலித் தனமா? 


குப்பை வரும் ஜன்னலை, கதவை முதலில் சாத்த வேண்டும். அப்புறம் சுத்தம் செய்ய வேண்டும். 


முயன்று பாருங்கள். 


மனமும் சொல்லும் கோட்டம் இல்லாமல் நேராக இருக்கும். 




No comments:

Post a Comment