Showing posts with label கம்ப இராமாயணம். Show all posts
Showing posts with label கம்ப இராமாயணம். Show all posts

Friday, June 3, 2022

கம்ப இராமாயணம் - அருள் தூதன் - பாகம் 6

    

கம்ப இராமாயணம் - அருள் தூதன் - பாகம் 6 


(இதன் முந்தைய பதிவுகளை கீழ் காணும் இணைய தளத்தில் காணலாம் . 


பாகம் 1 : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/1.html


பாகம் 2 : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/2.html


பாகம் 3 : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/3_27.html


பாகம்  4:  https://interestingtamilpoems.blogspot.com/2022/05/4.html


பாகம்  5: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/5.html



)


அசோகவனத்தில் சீதையை சந்தித்து தன்னை அறிமுகப் படுத்திக் கொள்கிறான் அனுமன். அவன் பேசிய பேச்சைக் கேட்டு அவன் நல்லவன் என்று முடிவு செய்கிறாள் சீதை. 


முதன் முதலாக சீதை அனுமனிடம் பேசப் போகிறாள். 


எவ்வளவு பேசி இருப்பாள்? என்னென்ன கேட்டு இருப்பாள்?  கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். சீதை என்ன பேசினாள் என்பதை காண இருக்கிறோம்.  


அதற்கு முன் ....


பேச்சு என்பது வெறும் சொல் அல்ல. அது தரும் ஒலி அல்ல அந்த சொல்லின் பொருள் மட்டும் அல்ல. அனைத்துக்கும் மேலே, பேச்சோடு கூடிய உணர்சிகள். உணர்ச்சிகள்தான் நாம் பேசும் பேச்சுக்கு வலிமை சேர்கிறது. 


உணர்வு கலவாத சொற்கள் வெற்றுச் சொற்கள். 


நமக்கு கோபம் வந்தால் அந்த உணர்ச்சி சொல்லில் தெறிக்கும். வெறுப்பு, எரிச்சல், வருத்தம் கூட சொல்லில் வெளிப்படும். அன்பு வெளிப்படுமா? 


கடைசியாக யாரிடம் அன்பு கலந்து பேசினீர்கள்?  பேச்சு வெறும் இயந்திரத்தனமாக போய் கொண்டு இருக்கிறது. 


கணவனிடம, மனைவியிடம், குழந்தைகளிடம் அன்போடு, காதலோடு பேசி இருக்கிறோமா? 


சீதை நினைக்கிறாள் 


"இவன் பேசுவதைக் கேட்டு என் உள்ளம் உருகுகிறது. இவனைப் பார்த்தால் கள்ள உள்ளம் கொண்ட வஞ்சகர் மாதிரி தெரியவில்லை. மனதில் பதியும்படி நினைத்து பேசுகிறான். கண்ணில் நீர் வழிந்து தரையில் விழுகிறது. இவனிடம் கேட்கலாம் " என்று எண்ணி "வீரனே, நீ யார்" என்று கேட்டாள்.





பாடல் 


என நினைத்து எய்த நோக்கி,

    ‘இரங்கும் என் உள்ளம் : கள்ளம்

மனன் அகத்து உடையர் ஆய

    வஞ்சகர் மாற்றம் அல்லன் :

நினைவு உடைச் சொற்கள் கண்ணீர்

    நிலம்புகப் புலம்பா நின்றான் :

வினவுதற்கு உரியன் என்னா,

    ‘வீர! நீ யாவன்? என்றாள்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/6.html


(pl click the above link to continue reading) 



என நினைத்து = என்று நினைத்து 


எய்த நோக்கி, = அவனை பார்த்து 


இரங்கும் என் உள்ளம் = என்ன உள்ளம் உருகுகிறது 


கள்ளம் மனன் = கள்ள மனத்தை 


அகத்து உடையர் ஆய = உள்ளே உள்ளவர்களான 


வஞ்சகர் மாற்றம் அல்லன் = வஞ்சகர் போன்றோர் அல்லன் இவன் 


நினைவு உடைச் சொற்கள் = சொற்களை நினைத்து பேசுகிறான் 


கண்ணீர்  நிலம்புகப் = கண்ணீர் நிலத்தில் விழுகிறது 


புலம்பா நின்றான்  = புலம்பியபடி நிற்கிறான் 


வினவுதற்கு உரியன் என்னா, = இவனிடம் விசாரிக்கலாம் என்று எண்ணி 


‘வீர! நீ யாவன்? என்றாள். = வீரனே, நீ யார் என்று கேட்டாள் 


நமக்கு ஒரு எண்ணம் உண்டு. ஆண்கள் அழக் கூடாது. அழுவது என்பது பலவீனம். என்ன நடந்தாலும் கல்லு போல நிற்பவன் தான் ஆண் மகன் என்று நமக்கு நாமே ஒரு கோட்பாட்டை வைத்துக் கொண்டு இருக்கிறோம். 


சிறு வயதில், ஆண் பிள்ளைகள் அழுதால் " பொம்பள பிள்ளை மாதிரி என்னடா அழுதுகிட்டு" என்று அவனை ஏளனம் செய்வோம். ஆண் அழுவது தவறு என்று சிறுவயது முதலே மூளைச் சலவை செய்யப்பட்டு வளர்க்கப் படுகிறோம். 


அது தவறு. 


இராமாயணத்தில் ஆண்கள் அழுகை என்று புத்தகமே எழுதலாம். 


தயரதன் அழுதான், இராமன் பல இடங்களில் அழுது இருக்கிறான், இலக்குவன் அழுதிருக்கிறான், இராவணன் அழுதிருக்கிறான். 


உள்ளே அடக்கி வைத்து, அடக்கி வைத்து புரையோடிப் போய் விடுகிறது. 


"அழுதால் உன்னைப் பெறலாமே" என்பார் மணிவாசகர். 


"காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி" என்பார் திருஞானசம்பந்தர். 


இங்கே அனுமன் சீதையின் நிலையைப் பார்த்து கண்ணீர் வடிக்கிறான். இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தாவி வந்தவன், இலங்கினியை ஒரே குத்தில் நிலை குலைய வைத்தவன், சஞ்சீவி மலையை ஒரு கையால் தூக்கியவன், கண்ணீர் சிந்துகிறான். அதில் தவறு இல்லை. அந்த உணர்ச்சி கலப்பு அவனை உயர்த்துகிறது. அவன் சொல்லுக்கு வலிமை சேர்கிறது. அந்த உணர்வு வெளிப்பாடைக் கொண்டு சீதை "இவன் நல்லவன்" என்று முடிவு செய்கிறாள். 


உணர்வுகளை உள்ளே வைத்துக் கொண்டு, வெறும் சொல்லை மட்டும் வெளியே அனுப்பிவிட்டு, "என்னை யாரும் புரிந்து கொள்வதில்லை" என்று புலம்புவதில் என்ன பலன்?


சீதை கேட்கிறாள் 'வீரனே, நீ யார்' என்று. 


அனுமன் என்ன சொன்னான், எப்படிச் சொன்னான் என்பது ஒரு புறம் இருக்கட்டும். அவன் என்ன சொல்லி இருப்பான், எப்படி சொல்லி இருப்பான் என்று யோசித்துப் பாருங்கள். நாமாக இருந்தால் என்ன பதில் சொல்லி இருப்போம் என்று சிந்திப்போம். 


அப்போதுதான் அனுமனின் பதிலின் மேன்மை புரியும்.


நாளை சந்திப்போமா? 


Wednesday, June 1, 2022

கம்ப இராமாயணம் - அருள் தூதன் - பாகம் 5

   

கம்ப இராமாயணம் - அருள் தூதன் - பாகம் 5


(இதன் முந்தைய பதிவுகளை கீழ் காணும் இணைய தளத்தில் காணலாம் . 

பாகம் 1  : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/1.html

பாகம் 2 : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/2.html

பாகம் 3 : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/3_27.html

பாகம்  4:  https://interestingtamilpoems.blogspot.com/2022/05/4.html


)


அசோகவனத்தில் சீதையை சந்தித்து தன்னை அறிமுகப் படுத்திக் கொள்கிறான் அனுமன். அவன் பேசிய பேச்சைக் கேட்டு அவன் நல்லவன் என்று முடிவு செய்கிறாள் சீதை. 


பின் மனதுக்குள் நினைக்கிறாள் 


"சரி, இப்ப என்ன? ஒரு வேளை இவன் அரக்கனா இருப்பானோ என்ற சந்தேகம் இல்லாமல் இல்லை. அரக்கனாகவே இருந்து விட்டுப் போகட்டும். அல்லது ஒரு தேவனாக இருக்கட்டும். இல்லை, பார்பதற்கு குரங்கு இனத்தை சார்ந்தவன் போல இருக்கிறான். அதில் ஒருவனாகவே இருந்து விட்டுப் போகட்டும். கொடுமை செய்பவனாக இருக்கட்டும் அல்லது இரக்கம் உள்ளவனாக இருக்கட்டும். யாராக இருந்தால் என்ன? இங்கு வந்து இராமனின் பேரைச் சொல்லி, என் மனத்தை உருக்கி விட்டான். எனக்கு ஒரு புது உணர்வைத் தந்தான். இதை விட வேறு என்ன வேண்டும்? "


என்று அவள் சிந்திக்கிறாள். 




பாடல் 


அரக்கனே ஆக : வேறு ஓர்

    அமரனே ஆக : அன்றிக்

குரக்கு இனத்து ஒருவனேதான்

    ஆகுக : கொடுமை ஆக :

இரக்கமே ஆக : வந்து இங்கு

    எம்பிரான் நாமம் சொல்லி

உருக்கினன் உணர்வைத், தந்தான்

    உயிர்; இதின் உதவி உண்டோ?


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/5.html


(pl click the above link to continue reading) 



அரக்கனே ஆக = அரக்கனாகவே இருக்கட்டும் 


வேறு ஓர் = அல்லது வேறு ஒரு 


அமரனே ஆக = தேவனாகவே இருக்கட்டும் 


அன்றிக் = அல்லது 


குரக்கு இனத்து = குரங்கு இனத்தில் 


ஒருவனேதான் ஆகுக = ஒருவனாக இருக்கட்டும் 


கொடுமை ஆக = கொடுமை உள்ளம் உள்ளவனாக இருக்கட்டும் 


இரக்கமே ஆக = இரக்க குணம் உள்ளவனாக இருந்து விட்டுப் போகட்டும் 


வந்து இங்கு = இங்கு வந்து 


எம்பிரான் நாமம் சொல்லி = என் நாயகன் இராமனின் பெயரைச் சொல்லி 


உருக்கினன் உணர்வைத் = உள்ளத்தை உருக்கி விட்டான் 


தந்தான்  உயிர் =  போக இருந்த உயிரை போகாமல் தடுத்து நிறுத்தி அதை எனக்கு மீண்டும் தந்தான் 


இதின் உதவி உண்டோ? = இதை விட பெரிய உதவி வேறு என்ன இருக்க முடியும் ?


யாராக இருந்தால் என்ன? இராமன் பேரைச் சொன்னான். அது போதும் என்கிறாள் சீதை. 


பிரான் = பிரியான் என்பதன் மருவூ 


எம்பிரான் = என்னை விட்டு எப்போதும் பிரியாதவன் 


அவன் யார் என்று இன்னமும் சீதைக்கு புரியவில்லை. இவனாக இருக்குமோ, ,அவனாக இருக்குமோ என்று ஐயுறுகிறாள். .


இருந்தும், யாரா இருந்தா என்ன, இராமன் பேரைச் சொல்லிவிட்டான், அது போதும் என்று இருக்கிறாள். 


உள்ளம் உருகியது, உயிர் மீண்டு வந்தது ...எதனால்?


அனுமனின் பேச்சால். 


பேச்சுக்கு அவ்வளவு வலிமை உண்டு. உள்ளதை உருக்கும். உயிரை நனைக்கும். 


நம்மிடம் ஒரு உயர்ந்த பொருள் இருந்தால் அதை எவ்வளவு பாதுகாப்பாக வைத்து இருப்போம்?


பல அருங்காட்சி நிலையங்களில் பல விலை மதிக்க முடியாத ஓவியங்கள், பொருள்கள் இருக்கும். அதை எல்லா நேரத்திலும் எல்லோரும் பார்க்கும் படி வைக்க மாட்டார்கள். வருடத்தில் ஒரு குறிப்பிட்ட தினங்களில் மட்டும் காட்சிக்கு வைப்பார்கள். 


எல்லா நேரமும் வைத்து இருந்தால் அதன் மதிப்பு போய் விடும். எப்போதோ ஒரு தரம் என்றால் அதை பார்க்க ஆவல் வரும். 


நமது சொற்களும் அப்படித்தான். அவை விலை மதிக்க முடியாதவை. அதை வீணடிக்கக் கூடாது. மிகக் குறைவாக பேச வேண்டும். அளந்து பேச வேண்டும். சிறந்த வார்த்தைகளை தெரிந்து எடுத்து பேச வேண்டும். 


ஒவ்வொரு சொல்லும் மந்திரம் போல. 


அவ்வளவு வலிமை மிக்கவை. அதன் மதிப்பு தெரியமால் வீணடித்திடக் கூடாது. 


பொட்டலம் நிறைய சுண்டல் இருந்தால் யாருக்கு வேண்டுமானாலும் கொடுத்து விடலாம். 


அதுவே வைரக் கற்களாக இருந்தால்?  


நம் சொற்கள் சுண்டலா, வைரமா என்று நாம் தான் முடிவு செய்ய வேண்டும். 


இன்னும் சீதை பேசவில்லை. 


அதுவும் ஒரு செய்திதான். மற்றவர் பேசும் போது இடையிடாமல் அமைதியாக முழுவதும் கேட்பதும் ஒரு கலை தான். .


பாத்திரங்களின் ஊடாக இவற்றை எல்லாம் நாம் கவனித்தால், உயர்ந்த பண்புகள் விளங்கும். நாளடைவில் அவை நம்மிடையே நம்மையும் அறியாமல் வந்து சேர்ந்து விடும். 





Sunday, May 29, 2022

கம்ப இராமாயணம் - அருள் தூதன் - பாகம் 4

  

கம்ப இராமாயணம் - அருள் தூதன் - பாகம் 4


(இதன் முந்தைய பதிவுகளை கீழ் காணும் இணைய தளத்தில் காணலாம் . 

பாகம் 1  : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/1.html

பாகம் 2 : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/2.html

பாகம் 3 : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/3_27.html


)


அசோகவனத்தை அடைந்த அனுமன் சீதையிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டு பேசுவதை நாம் கேட்டுக் கொண்டு இருக்கிறோம். 


அனுமன் தன்னைப் பற்றி  மேலே சொன்ன மூன்று பாடல்களில் சீதையிடம் சொல்லி முடிக்கிறான். 


இப்போது சீதை அனுமன் சொன்னதை எல்லாம் கேட்டு மனதில் நினைக்கிறாள். இன்னும் வாய் திறந்து பேசவில்லை. 


என்ன நினைக்கிறாள் ?


"இவனைப் பார்த்தால் அரக்கன் மாதிரி இல்லை. தன் ஐந்து புலன்களையும் வென்று நல் நெறியில் நிற்கும் ஒரு யோகி போல இருக்கிறது. அப்படி இல்லை என்றால் ஒருவேளை ஏதோ ஒரு தேவனாக இருக்க வேண்டும். அவன் உணர்வுகள் நல்லவையாக இருக்கின்றன. அவன் பேச்சில் ஒரு தூய்மை இருக்கிறது. குற்றம் அற்றவனாகத் தெரிகிறான்...." என்று. 



பாடல் 


என்று அவன் இறைஞ்ச நோக்கி,

    இரக்கமும் முனிவும் எய்தி,

‘நின்றவன் நிருதன் அல்லன் :

    நெறி நின்று பொறிகள் ஐந்தும்

வென்றவன் : அல்லன் ஆகில்,

    விண்ணவன் ஆதல் வேண்டும் :

நன்று உணர்வு : உரையும் தூயன் :

    நவை இலன்போலும்! ‘என்னா.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/4.html


(pl click the above link to continue reading) 


என்று அவன் இறைஞ்ச = அவ்வாறு எல்லாம் அவன் (அனுமன்) பணிவோடு சொல்லி நிற்க 


நோக்கி = அவனை நோக்கி 


இரக்கமும் = கருணையும் 


முனிவும் = கோபமும் (ஏன் என்று கீழே விரிவாக காண்போம்) 


எய்தி = அடைந்து 


நின்றவன் = இங்கே நிற்பவன் 


நிருதன் அல்லன்  = அரக்கன் அல்லன் 


நெறி நின்று = நல்ல வழிகளில் நின்று 


பொறிகள் ஐந்தும் = ஐந்து புலன்களையும் 


வென்றவன் = வென்றவன் 


அல்லன் ஆகில், = அப்படி இல்லாவிட்டால் 


விண்ணவன் ஆதல் வேண்டும் : = வானில் உள்ள தேவனாக வேண்டும் 


நன்று உணர்வு  = அவன் உணர்வுகள் நல்லவையாக இருக்கின்றன 


உரையும் தூயன்  = அவன் பேச்சும் தூய்மையாக இருக்கிறது 


நவை இலன்போலும்! ‘என்னா. = குற்றமற்றவன் போலத் தெரிகிறான் என்று எண்ணினாள் 


"இரக்கமும், முனிவும் எய்தினள்"...இரக்கம் சரி. கோபம் ஏன் வர வேண்டும்?


சில சமயம் நமக்கு வேண்டியவர்கள் ஏதேனும் ஒரு துன்பத்தில் மாட்டிக் கொண்டால் நமக்கு அவர்கள் மேல் இரக்கம் வரும், அதே சமயத்தில் கோபமும் வரும்..."என்னத்துக்குப் போய் அந்த வேலையை செஞ்சு இப்படி சிக்கலில் மாட்ட வேண்டும். ...இதெல்லாம் தேவையா...சொன்னா கேக்குறது இல்லை" என்று அவர்கள் மேல் கோபப் பட்டு இருக்கிறோமா இல்லையா? 


வீட்டில் ஏதோ ஒரு பொருள் உயரத்தில் இருக்கிறது.  'அதை கொஞ்சம் எடுத்துத் தாங்க' என்று மனைவி கணவனிடம் சொல்கிறாள். அவன் ஏதோ வேலை மும்முரத்தில் இருக்கிறான். "வர்றேன்" அப்படின்னு பதில் மட்டும் வருது. மனைவிக்கு அவசரம். அவளே ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு மேலே உள்ள பொருளை எடுக்க முயல்கிறாள். பொருள் கொஞ்சம் பளுவானது. நிலை தடுமாறி கீழே விழுந்து மண்டையில் அடிபட்டு லேசாக வீங்கிக் கொள்கிறது. 


கணவன் சத்தம் கேட்டு ஓடி வருகிறான். 


"அடி பட்டு கிடக்கும் அவளை தூக்கி விடுகிறான். அடி பட்ட இடத்தை தேய்த்து விடுகிறான். "வலிக்குதா, இரத்தம் வருதா" என்று  விசாரிக்கிறான். அதுவரை அன்பு. "நான் தான் வர்றேன்னு சொல்றேன்ல...அதுக்குள்ள என்ன அவசரம் உனக்கு" என்று அவளை கோபிக்கவும் செய்கிறான். 


இது நடப்பது தானே? 


அன்பும், கோபமும் ஒன்றாக வரும். மனித மனம் விசித்திரமானது. ஏன் என்று காரணம் கேட்கக் கூடாது. ஒரே சமயத்தில் பல்வேறு உணர்சிகள்எழுவது இயற்கை. 


பெருமையும், பொறாமையும் ஒன்றாக வருவது இல்லையா? 


சரி, அது ஒருபுறம் இருக்கட்டும். 


சீதை அனுமனைப் பற்றி என்னவெல்லாம் நினைக்கிறாள்?


- அரக்கன் இல்லை 

- தேவன் 

- புலன்களை வென்றவன் 

- நல் வழியில் நிற்பவன் 

- நல்ல உணர்வுகளை உடையவன் 

- தூய சொற்களை உடையவன் 


இதெல்லாம் அவளுக்கு எப்படித் தெரிந்தது?  அவள் அனுமனை முன்ன பின்ன பார்த்தது கூட கிடையாது. பின் எப்படி முடிவு செய்தல் ?


அவன் பேச்சின் மூலம். அனுமனின் மூன்றே மூன்று பாடல்கள் மூலம் அவனின் உயர்வை அவள் அறிந்து கொள்கிறாள். 


இது சீதையிடம் மட்டும் அல்ல. அனுமனை முதன் முதலில் கண்டு சிறிது பேசிய பின் இராமனும் சொல்வான் "யார் கொல்லோ இச் சொல்வின் செல்வன்" என்று. 



பேச்சு ஒருவனை எந்த அளவுக்கு உயர்த்தும் என்று நாம் புரிந்து கொள்ள உதவும் பாடல்கள். 


நாம் பேசும் பேச்சு நம் மதிப்பை பல மடங்கு உயர்த்தும். 


பேச்சு சும்மா வந்து விடாது. பேச்சு என்பது ஏதோ அடுக்கு மொழியில் பேசுவது அல்ல. 


தூய்மையான பேச்சு. அது  எப்படி வரும் ?  


புலன்களை வென்று, நல் வழியில் நடந்தால், உள்ளம் தூய்மையாகி, உயர்ந்த சொற்கள் வெளி வரும். அது நம்மை தேவர்களாக உயரச் செய்யும் 


நல்ல சொற்கள் வரவில்லை என்றால், உள்ளம் தூய்மையாக இல்லை என்று அர்த்தம்.  உள்ளம் தூய்மையாக இல்லை என்றால் புலன்கள் நல்ல வழியில் செல்லவில்லை என்று அர்த்தம். அவை நல்ல வழியில் செல்லாமல் இருக்கக் காரணம், அவற்றை நாம் வென்று அடக்கவில்லை என்று காரணம். 


எவ்வளவு பெரிய உயர்ந்த விடயத்தை கம்பன் எவ்வளவு தெளிவாக சொல்கிறான். 



இலக்கியம் படிப்பதால் வரும் இன்னொரு நன்மை. நம்மை உயர்த்த இலக்கியங்கள் துணை செய்யும். 


நல்ல கதை. இனிமையான பாடல்கள். அதோடு கூட உயர்ந்த கருத்துக்கள். 


இலக்கியம் சுகமானது. 


"நீ இப்படிச் செய் என்றால் யார்க்கும் பிடிக்காது". இப்படி எல்லாம் செய்ததால் அனுமன் உயர்ந்தான் என்று சொல்லி, அப்படியே விட்டு விட்டால், நாமும் அப்படிச் செய்தால் என்ன என்ற எண்ணம் வரும்.. நம்மை அறியாமலேயே அது நம்மை அந்த இடத்துக்கு நகர்த்திச் செல்லும். 

Friday, May 27, 2022

கம்ப இராமாயணம் - அருள் தூதன் - பாகம் 3

  

கம்ப இராமாயணம் - அருள் தூதன் - பாகம் 3


(இதன் முந்தைய பதிவுகளை கீழ் காணும் இணைய தளத்தில் காணலாம் . 

பாகம் 1  : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/1.html

பாகம் 2 : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/2.html


)


அசோகவனத்தை அடைந்த அனுமன் சீதையிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டு பேசுவதை நாம் கேட்டுக் கொண்டு இருக்கிறோம். 


சீதைக்கு சந்தேகம் தீர்ந்து இருக்காது.  இது உண்மையிலயே இராம தூதனா அல்லது அரக்கர்களின் மாயையா என்ற சந்தேகம் அவளுக்குள் இருக்கத்தான் செய்யும். 


திடீரென்று அசொகவனதுக்குள் ஒரு குரங்கு வந்து குதித்து 'நான் இராம தூதன்' என்றால் சந்தேகம் வருமா வராதா? 


இதை அறிந்த அனுமன் மேலும் சொல்கிறான் 


" சந்தேகம் வேண்டாம். என்னிடம் நான் இராம தூதன் என்று நிரூபணம் செய்ய அடையாளங்கள் உள்ளது. மேலும், உண்மை உணர்த்த வேண்டி இராமன் சொன்ன செய்திகளும் என்னிடம் இருக்கிறது. அவற்றை உங்களுக்கு உள்ளங் கை நெல்லிக் கனி போல் காட்டுகிறேன். நெய் விளக்கு போல புனிதமானவளே, வேறு எதையும் நினைக்க வேண்டாம்"என்கிறான்.


பாடல் 


‘ஐயுறல்! உளது அடையாளம் : ஆரியன்

மெய்யுற உணர்த்திய உரையும் வேறு உள;

கை உறு நெல்லி அம் கனியில் காண்டியால்!

நெயுறு விளக்கு அனாய்! நினையல் வேறு! ‘என்றான்.


பொருள்


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/3_27.html


(pl click the above link to continue reading) 


‘ஐயுறல்! = சந்தேகம் வேண்டாம் 


உளது அடையாளம் = நான் இராம தூதன் என்று அடையாளம் காட்ட என்னிடம் சில நிரூபணங்கள் உள்ளன 


ஆரியன் = இராமன் 


மெய்யுற உணர்த்திய = உண்மையை அறிந்து கொள்ள 


உரையும் வேறு உள = செய்திகளும் இருக்கிறது 


கை உறு = உள்ளங் கையில் உள்ள 


நெல்லி அம் கனியில்  = நெல்லிக் கனி போல 


காண்டியால்! = நீ கண்டு கொள்ளலாம் 


நெயுறு விளக்கு அனாய்! = நெய் விளக்கு போல புனிதமானவளே 


 நினையல் வேறு! ‘என்றான். = வேறு எதையும் நினைக்க வேண்டாம் என்றான் 



அவளுக்கு சந்தேகம் இருக்கும் என்று அனுமன் கணிக்கிறான். 


அந்த சந்தேகம் போக என்ன சொல்ல வேண்டுமோ அதை அறிந்து சொல்கிறான். 


இராமன் அனுப்பிய அடையாளப் பொருள்கள் இருக்கிறது என்கிறான். 


ஒரு வேளை இராமனுக்குத் தெரியாமல் இவன் அந்தப் பொருள்களை களவாடி வந்திருப்பானோ என்ற சந்தேகம் சீதைக்கு வரலாம் என்று எண்ணி அடுத்ததாக ஒன்றைச் சொல்கிறான். 


"இராமன் சொல்லி அனுப்பிய செய்தியும் இருக்கிறது" என்கிறான். இராமன் சொன்ன செய்திகளை வைத்து இவன் இராம தூதன் என்று முடிவு செய்து கொள்ள முடியும் அல்லவா? அந்தச் செய்திகளை இராமன் மற்றும் சீதை தவிர வேறு யாருக்கும் தெரியாது. அதை சொல்லி அனுப்புகிறான் இராமன். 


இந்த இடத்தில் கொஞ்சம் நிறுத்துவோம். 


அந்தக் காலத்தில் புகைப் படம் இல்லை. தொலைபேசி இல்லை. 


எனவே, இராமன் தனக்கும் சீதைக்கும் மட்டும் தெரிந்த சில விடயங்களை சொல்லி அனுப்புகிறான்.  அந்தரங்கமான விடயங்கள். வேறு வழி இல்லை. இதை படித்த சில பேர், "ஆஹா பார்த்தீர்களா இராமன் எவ்வளவு காம வயப் பட்டவன், நாகரீகம் இல்லாமல் அந்தரங்க விடயங்களை, இன்னொரு ஆண் மகனிடம் சொல்லி அனுப்புகிறானே...இதுவா பண்பாடு" என்று இராமனையும், கம்பனையும் விமர்சினம் செய்ய முற்படுகிறார்கள். 


கம்பனுக்கு, இராமன் பிள்ளை மாதிரி. அவ்வளவு பாசம் அவன் மேல். கம்பன் ஒருகாலும் இராமனின் பெருமையை குறைக்கும் செயலை செய்யமாட்டான் என்று நம்பலாம். 


மீண்டும் பாடலுக்கு வருவோம். 


சீதை இன்னும் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். 


எல்லாம் அனுமனே ஊகம் செய்து அவள் மனதில் நம்பிக்கையும், ஒரு தெம்பும், அமைதியும்  வரும் வகையில் பேசுகிறான். 


இப்படிப் பேசிப் பழகினால் எவ்வளவு நன்றாக இருக்கும். 


பயனுள்ள பேச்சு. நம்பிக்கை தரும் பேச்சு. ஆதரவும், அமைதியும் தரும் பேச்சு. உற்சாகம் ஊட்டும் பேச்சு. 


இவற்றை எல்லாம் ஊன்றிப் படித்ததால் நம்மை அறியாமலேயே நம் பேச்சுத் திறன் வளரும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. 











Wednesday, May 25, 2022

கம்ப இராமாயணம் - இராமன் என்ற மானுடன் - திரை உயர்த்தல் - 2

 

கம்ப  இராமாயணம் - இராமன் என்ற மானுடன் - திரை உயர்த்தல் - 2 


(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளத்தில் காணலாம் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_22.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/05/1_23.html

)

 இனித் தொடர்வோம். 


இராம அவதாரம் நிகழ்வதற்கு முன் என்ன நடந்தது? எப்படி இராம அவதாரம் நிகழ்ந்தது, ஏன் அது நிகழ்ந்தது என்று தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா?


ஒரு நாள், தசரதன் அவருடைய குல குருவான வசிட்டரை அணுகி, "குருவே, உங்களுடைய துணையால் அறுபதினாயிரம் ஆண்டுகள் பகைவர்களை அடக்கி இந்த உலகை காப்பாற்றி வந்து விட்டேன். ஒரு குறையும் இல்லை. ஆனால், எனக்குப் பின்னால் இந்த அரசை, இந்த குடிகளை யார் காப்பாற்றப் போகிறார்களோ என்ற மனதில் கவலையாக இருக்கிறது" என்றான். 


அதுதான் இராம அவதாரத்துக்கு போட்ட பிள்ளையார் சுழி. 


எனக்குப் பின் என் மகன் ஆள வேண்டும். எனக்கு மகன் இல்லை. இனி இந்த அரசை யார் ஆளப் போகிறார்களோ என்ற கவலையாக இருக்கிறது என்கிறான். 


பாடல்  


‘அறுபதினாயிரம் ஆண்டு மாண்டு உற

உறு பகை ஒடுக்கி இவ் உலகை ஓம்பினேன்;

பிறிது ஒரு குறை இலை; என் பின் வையகம்

மறுகுறும் என்பது ஓர் மறுக்கம் உண்டு அரோ.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/2_25.html


(pl click the above link to continue reading)


‘அறுபதினாயிரம் ஆண்டு  = அறுபதினாயிரம் ஆண்டுகள் 


மாண்டு உற = மாட்சி பெற 


உறு பகை ஒடுக்கி = பெரிய பகைவர்களை அடக்கி 


 இவ் உலகை = இந்த உலகத்தை 


ஓம்பினேன் = காப்பாற்றினேன், அரசாண்டேன் 


பிறிது ஒரு குறை இலை = வேறு ஒரு குறையும் இல்லை 


என் பின் = என் காலத்திற்கு பிறகு 


வையகம்  = இந்த உலகம் 


மறுகுறும் = கலக்கம் அடையும் 


என்பது = என்று 


ஓர் மறுக்கம் உண்டு = ஒரு கலக்கம், கவலை எனக்கு இருக்கிறது 


அரோ. = அசைச் சொல் 


தனக்கு பிள்ளை இல்லையே என்று அவன் வருந்தவில்லை. அப்படி என்றால் அறுபதினாயிரம் ஆண்டுகள் கவலைப் பட்டுக் கொண்டே தான் இருந்திருக்க வேண்டும். இத்தனை வருடம் கழித்து ஏன் கவலைப் பட வேண்டும்? இத்தனை வருடம் பிள்ளை இல்லாமல் இருந்தாகி விட்டது. இனியும் அப்படியே இருந்து விடலாம்தானே. 


அவன் கவலை பிள்ளை இல்லையே என்பது அல்ல. 


தனக்குப் பின் இந்த அரசு, மக்கள் என்ன அவார்களோ என்ற கவலை. 


ஒரு நல்ல தலைவன் தனக்கு பின் என்ன நடக்கப் போகிறது என்று கவலைப் படுவான். 


வீடாக இருக்கட்டும், நிறுவனமாக இருக்கட்டும், நாடாக இருக்கட்டும்...தான் போன பின் அது நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் தான் உண்மையான தலைவன். எனக்குப் பிறகு எக்கேடும் கேட்டு போகட்டும் என்று நினைப்பவன் நல்ல தலைவன் இல்லை. 


காப்பிய போக்கோடு கம்பன் சொல்லித் தரும் நல்ல குணங்கள். 


இராமன் பிறந்தான், இராவணன் அழிந்தான் என்பது கதை. அதை கதையாக மட்டும் பார்க்காமல் அதில் உள்ள உயர்ந்த கருத்துகளையும் நாம் பெற்றுக் கொண்டால் இரட்டிப்பு நன்மை நமக்கு. 


படிக்கிற காலத்தில், Succession Planning, என்று ஒரு தத்துவம் சொல்லித் தந்தார்கள். ஒரு நிறுவனம் தடையின்றி நடக்க வேண்டும் என்றால், ஒவ்வொரு பதவிக்கும், அதில் உள்ளவர் ஏதோ ஒரு காரணத்தால் விலக நேர்ந்தால் அந்த இடத்துக்கு யார் வர வேண்டும் என்று தீர்மானம் செய்து அடுத்த நபரை தயார் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். 


அடடா மேற்கிந்திய சிந்தனை எவ்வளவு சிறப்பாக இருக்கிறது என்று வியந்திருக்கிறேன். 


அவர்களுக்கு எவ்வளவோ காலத்துக்கு முன் நம்மவர்கள் அவற்றை சிந்தித்து, அதை கதை வடிவில் தந்தும் இருக்கிறார்கள். .


அதை எல்லாம் படிக்க நமக்கு நேரம் இல்லாமல் போய் விட்டது. 


படிப்போம். 





Monday, May 23, 2022

கம்ப இராமாயணம் - இராமன் என்ற மானுடன் - திரை உயர்த்தல் - 1

கம்ப  இராமாயணம் - இராமன் என்ற மானுடன் - திரை உயர்த்தல் - 1 


(இதன் முன்னுரையை கீழே உள்ள பதிவில் காணலாம் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_22.html


)


திரைப்படத்தில் கதாநாயகன் முதன் முதலாக அறிமுகப் படுத்தப் படும் போது, நேரே அவன் முகத்தை காட்டி விடுவது இல்லை. 


அவன் காலைக் காட்டி, அவன் வரும் காரைக் காட்டி, அவனுக்கு மற்றவர்கள் செய்யும் மரியாதைகளை காட்டி, கொஞ்சம் கொஞ்சமாக ஒரு ஆர்வத்தை உண்டாக்கி, ,பின் கடைசியில் காட்டுவார்கள். அதை ஆங்கிலத்தில் curtain raiser என்று சொல்லுவார்கள். 


வரப்போது சாதாரண கதாநாயகன் அல்ல. அந்த ஆதிமூலமே அவதரிக்கப் போகிறது. அந்தப் பெருமாளே அவதரிக்கப் போகிறார் என்றால் எவ்வளவு விரிவாக அதைச் சொல்ல வேண்டும் ! 


நமக்கு கதையில் இராமன் திருமாலின் அவதாரம் என்று எப்படி தெரியும்? யார் சொன்னார்கள்? இராமனே சொன்னானா "நான் திருமாலின் அவதாரம்" என்று?  


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/1_23.html


(pl click the above link to continue reading)



ஒவ்வொரு காண்டத்தின் தொடக்கத்திலும் கம்பன் சொல்கிறான் அந்த பரப்ரம்மமே நேரில் வந்தது என்று. அது கவிக் கூற்று. வேறு யார் சொன்னார்கள்? தசரதன்? கௌசலை? வசிட்டர்? 


இராம அவதாரம் எப்படி நிகழ்ந்தது? ஏன் நிகழ்ந்தது என்ற குறிப்புகள் எங்கே இருக்கிறது? அதில் என்ன சொல்லி இருக்கிறது? 


இராமன் பிறப்பதற்கு முன் என்ன நடந்தது? 


இது பற்றி இராம காதை என்ன கூறுகிறது?


அங்கிருந்து கதையை ஆரம்பிப்போம். 





Sunday, May 22, 2022

கம்ப இராமாயணம் - அருள் தூதன் - பாகம் 3

  

கம்ப இராமாயணம் - அருள் தூதன் - பாகம் 3


(இதன் முந்தைய பதிவுகளை  கீழ் காணும் வலை தளங்களில்  காணலாம். 

பாகம் 1 - https://interestingtamilpoems.blogspot.com/2022/05/1.html)


பாகம் 2 - https://interestingtamilpoems.blogspot.com/2022/05/2.html

அசோகவனத்தில் சீதை சிறை இருக்கிறாள். இராவணன் அடிக்கடி வந்து துன்பம் செய்கிறான். மனம் வெறுத்து தற்கொலைக்கு முயல்கிறாள். அந்த நேரத்தில் அனுமன் அங்கே வந்து சேருகிறான். )


மேலே தொடர்வோம் 


அனுமன், சீதையிடம் "உங்களைத் தேட உலகமெல்லாம் இராமன் ஆட்களை அனுப்பி இருக்கிறான். நான் செய்த தவம், தங்களை காணும் பேறு பெற்றேன்" என்று கூறினான் என்பதை முந்தைய பதிவில் கண்டோம். 


இனி, 


அடுத்து சீதையின் மனதில் என்ன சந்தேகம் வரும் என்று அனுமன் யோசிக்கிறான். "இராமன் ஏன் வரவில்லை" என்று அவள் மனதில் ஒரு ஐயம் வரலாம் என்று நினைத்து, அவள் கேட்காமலேயே பதில் சொல்கிறான். 


"அரக்கர்கள் ஒரு செய்தியையும் வெளியே வரவிடாமல் பார்த்துக் கொள்கிறார்கள். எனவே, நீங்கள் இங்கே சிறை இருப்பது இராமனுக்குத் தெரிய வரவில்லை. அது தான் காரணமே அன்றி வேறு ஒன்றும் இல்லை " என்கிறான். 



பாடல் 


ஈண்டு நீ இருந்ததை இடரின் வைகுறும்

ஆண்தகை அறிந்திலன் : அதற்குக் காரணம்

வேண்டுமே? அரக்கர்தம் வருக்கம் வேரொடு

மாண்டில ஈது அலால் மாறு வேறு உண்டோ?



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/3.html



(pl click the above link to continue reading)


ஈண்டு = இங்கு 


நீ  = நீங்கள் 


இருந்ததை = இருப்பதை 


இடரின் வைகுறும் = துன்பதில் வருந்தும் 


ஆண்தகை = ஆண்களில் சிறந்தவனான இராமன் 


அறிந்திலன் = அறியவில்லை 


அதற்குக் காரணம் = அதற்கு காரணம் 


வேண்டுமே? = தெரிய வேண்டுமா? 


அரக்கர் = அரக்கர்கள் 


தம் = தங்களுடைய 


வருக்கம் = இனம் 


வேரொடு = அடியோடு 


மாண்டில = இறந்து படவில்லை 


ஈது அலால் = அதைத் தவிர 


மாறு வேறு உண்டோ? = வேறு மாற்றுக் கருத்து இல்லை 


உலகில் நடக்கும் சம்பவங்களுக்கு நாமே ஒரு காரணம் கற்பித்துக் கொண்டு கவலைப் படுகிறோம். 


உதாரணமாக, கணவன் வேலையில் இருந்து கொஞ்ச நாட்களாகவே தாமதமாக வீட்டுக்கு வருகிறான். 


இது ஒரு நிகழ்வு. 


மனைவி என்ன நினைக்கிறாள் ? "இவன் வேறு எங்கோ போகிறான். என் மீது அன்பு இல்லை. எனக்கு துரோகம் செய்கிறான்" என்று. இப்படி நினைத்துக் கொண்டு, அதை அவனிடம் நேரே கேட்க்கும் தைரியம் இல்லாமல் மனதுக்குள் வைத்துப் புளுங்குகிறாள். அவன் நடவடிக்கைகளை உன்னித்து பார்க்கத் தலைப்படுகிறாள். 


நேரில் அவனிடமே கேட்டு விட்டால் ஒரு நொடியில் இந்த சந்தேகம் தீர்ந்து விடும். 


அது போல, 


இராமன் வரவில்லை. அது ஒரு நிகழ்வு. சீதை என்ன நினைக்கலாம் ?


"இராமனுக்கு என் மேல் அன்பு இல்லை. அதனால்தான வரவில்லை. என்னைப் பற்றி கவலை இல்லை. அதனால் தான் இத்தனை நாள் ஆகிறது. நான் இலக்குவன் மேல் சொன்ன சுடு சொற்களை அவன் இராமனிடம் சொல்லி இருப்பான். அதனால் கோபம் கொண்டு இராமன் என்னைத் தேடி வரவில்லை. வேறு யாரோ ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டிருப்பார்"


என்றெல்லாம் மனம் போக வாய்ப்பு இருக்கிறது அல்லவா?


அனுமன் அப்படி ஒரு வாய்ப்பு இருந்தால், அதை அப்படியே துடைத்து எறிகிறான். 


"நீ இருக்கும் இடம் பற்றிய செய்தியை அரக்கர்கள் அடியோடு மறைத்து விட்டடர்கள். அதுதான் காரணமே அன்றி வேறு எந்த ஒரு காரணமும் இல்லை" என்று உறுதியாகக் கூறுகிறான். 


எதிரில் இருப்பவர் மனம் அறிந்து பேச வேண்டும். 


எவ்வளவு நுட்பமான விடயங்களை கம்பன் சுட்டிக் காட்டுகிறான். 








Friday, May 20, 2022

கம்ப இராமாயணம் - அருள் தூதன் - பாகம் 2

 

கம்ப இராமாயணம் - அருள் தூதன் - பாகம் 2


(இதன் முதல் பாகத்தை கீழ் காணும் வலை தளத்தில் காணலாம். 

https://interestingtamilpoems.blogspot.com/2022/05/1.html)


அசோகவனத்தில் சீதை சிறை இருக்கிறாள். இராவணன் அடிக்கடி வந்து துன்பம் செய்கிறான். மனம் வெறுத்து தற்கொலைக்கு முயல்கிறாள். அந்த நேரத்தில் அனுமன் அங்கே வந்து சேருகிறான். 


மேலே தொடர்வோம் 


"உலக நாயகனான இராமனின் தூதுவன் நான் என்று சீதையை தொழுது நின்றான் என்று முந்தைய பதிவில் பார்த்தோம். 


சீதைக்கு மனதில் ஆயிரம் கேள்வி எழும் அல்லவா? இது உண்மையா, அல்லது அரக்கர்கள் செய்யும் மாயமா என்று குழப்பம் வருவது இயல்பு.  அவள் குழப்பத்தை தீர்த்து நம்பிக்கை வரும் படி பேச வேண்டும். 


இங்கே ஒரு நிமிடம் நிறுத்தி யோசியுங்கள். 


நீங்கள் அனுமன் இடத்தில் இருந்தால் என்ன சொல்லுவீர்கள் என்று. 


என் பெயர் அனுமன். இராமன் என்னை அனுப்பினான். இனி நீங்கள் இருக்கும் இடம் தெரிந்து விட்டதால், இதைப் போய் இராமனிடம் சொல்வேன். இராமனிடம் வேறு ஏதாவது சொல்ல வேண்டுமா ?" என்று நாம் கேட்போம். 


அனுமன் சொல்கிறான் 


"இராமன் ஆணையால் நான் இங்கு வந்து சேர்ந்தேன். இந்த உலகம் முழுவதையும் தேடி, அலசி ஆராய்ந்து உங்களை கண்டு பிடிக்கும் நோக்கத்தோடு சென்றவர்கள் பலர். நான் ஒருவன் மட்டும் அல்ல.  என் தவப் பயனால், உங்கள் திருவடியை தரிசிக்கும் பேறு பெற்றேன்"


என்றான். 


பாடல் 


அடைந்தனென் அடியனேன்; இராமன் ஆணையால்

குடைந்து உலகு அனைத்தையும் நாடும் கொட்பினால்

மிடைந்தவர் உலப்பிலர்; தவத்தை மேவலால்

மடந்தை! நின் சேவடி வந்து நோக்கினேன்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/2.html


(pl click the above link to continue reading)


அடைந்தனென்  = இங்கு வந்து சேர்ந்தேன் 


அடியனேன் = அடியவனாகிய நான் 


இராமன் ஆணையால் = இராம பிரானின் ஆணையால் 


குடைந்து = தோண்டி துருவி 


உலகு அனைத்தையும் = இந்த உலகம் முழுவதும் 


நாடும் = உங்களை நாடி கண்டு பிடிக்க வேண்டும் என்ற வேட்கையால் 


கொட்பினால் = முடிவினால் 


மிடைந்தவர் = சென்றவர்கள், புறப்பட்டவர்கள் 


உலப்பிலர் = கணக்கில் அடங்காதவர்கள் 


தவத்தை மேவலால் = தவப் பயனால் 


மடந்தை!  = பெருமாட்டியே 


நின் சேவடி வந்து நோக்கினேன். = உங்கள் திருவடிகளை வந்து காணும் பேறு பெற்றேன் 


எவ்வளவு ஆறுதலும் நம்பிக்கையும் தரும் வார்த்தைகள். 


முதலில், தன்னை அடியவன் என்று கூறி பணிவு  காட்டுகிறான். அடக்கம் ஒருவனின் பெருமையை காட்டும். 


இரண்டாவது, இராமன் ஆணையால் என்று கூறிய போது இரண்டு விடயங்களை உணரச் செய்கிறான். முதலாவது, இராமன் தான் அனுப்பினான் என்ற செய்தி. இரண்டாவது, "ஆணையால்" என்றதால் அவன் அதிகாரம், வலிமை உள்ளவனாக இருக்கிறான் என்று தெரிகிறது. அது மட்டும் அல்ல, இராமன் தன் மேல் அன்பு கொண்டு, தேடி கண்டு வர ஆட்களை அனுப்பி இருக்கிறான் என்றும் அவள் உணர்ந்து கொள்கிறாள். 


மூன்றாவது, மிக முக்கியமான செய்தி. ஏதோ ஒரு ஆளை அனுப்பினான், அவன் நேரே இங்கு வந்துவிட்டான் என்றால் நம்ப முடியாது. ஏதோ சூழ்ச்சி இருக்கிறது என்று சீதை ஐயம் கொள்ளலாம். எனவே, இந்த உலகம் பூராவும் உங்களை தேடி கண்டு பிடிக்க கணக்கில் அடங்காத ஆட்களை இராமன் அனுப்பி இருக்கிறான் என்று சொல்வதின் மூலம் அந்த சந்தேகத்தை தீர்க்கிறான். 


அது மட்டும் அல்ல, எனக்காக என் கணவன் எவ்வளவு பாடு படுகிறான் என்ற எண்ணம் ஒரு பெண்ணுக்கு மிக முக்கியமான ஒன்று. என் மேல் எவ்வளவு அன்பு இருந்தால் உலகம் பூராவும் என்னை தேட ஆள் அனுப்பி இருப்பான் என்ற பெருமிதம் ஒரு பெண்ணுக்குத் தான் புரியும். 


நான்காவது, அது என்ன உலகம் பூராவும் ஆட்கள் அனுப்பினார் என்கிறாய். நீ மட்டும் எப்படி இங்கே வந்தாய் என்ற கேள்வி வரும் அல்லவா? அதற்கு விடை அளிக்கிறான். "நான் செய்த தவப் பயன்" என்று. இது ஒரு பெண்ணுக்கு எவ்வளவு சுகமான் ஒன்று? தன்னை காண்பது தவப் பயன் என்று சொல்கிறானே என்று சீதை ஒரு கணம் பெருமிதமும் அமைதியும் அடைந்திருப்பாள். காரணம், இதுவரை இராவணன் வந்து மிரட்டி விட்டு போனதைத்தான்  அவள் கேட்டு இருக்கிறாள். தன் மேல் இவ்வளவு மரியாதையாக, தன்னிடம் இவ்வளவு பணிவாக ஒருவன் பேசுவதை நீண்ட நாட்களுக்குப் பின் அன்று தான் கேட்டிருப்பாள்.


எந்தப் பெண்ணும், தான் போற்றப் படுவதை, மதிக்கப் படுவதை விரும்பாமல் இருக்க மாட்டாள். "இந்த சேலையில் நீ ரொம்ப அழாக இருக்க" என்று மனைவியிடம் சொல்லிப் பாருங்கள். மகிழ்ச்சியான ஒரு புன்னகை அவள் முகத்தில் மலர்வதைக் காண்பீர்கள். அவளுக்கு எத்தனை வயது என்று கணக்கு இல்லை. எந்த வயதிலும் தான் போற்றப் படுவதும், மதிக்கப் படுவதும் ஒரு பெண்ணுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரக் கூடியது. 


அவளுக்கு தன் மனதில் உள்ள சந்தேகங்கள் போக வேண்டும். 


தன்னபிக்கை பிறக்க வேண்டும். 


ஒரு மகிழ்ச்சியும் மன நிறைவும் வர வேண்டும். 


இவை அத்தனனயும் இந்தப் பாடல் அவளுக்கு தருமா இல்லையா? 






Wednesday, May 18, 2022

கம்ப இராமாயணம் - அருள் தூதன் - பாகம் 1

கம்ப இராமாயணம் - அருள் தூதன் - பாகம் 1 



பேசுவது என்பது ஒரு கலை. 


எப்படிப் பேச வேண்டும், என்ன பேச வேண்டும் என்று தெரிந்து பேச வேண்டும். அது மட்டும் அல்ல, கேட்பவர்கள் எதை எதிர்பார்கிரார்களோ அதை அறிந்து பேச வேண்டும். 


கேட்ட கேள்வி ஒன்றாக இருக்கும், சொல்லும் பதில் வேறொன்றாக இருக்கும். 


என் அனுபவத்தில் சில கூறுகின்றேன்....


நேர் முகத் தேர்வில் (interview) வேலைக்கு மனு செய்திருக்கும் நபரைப் பார்த்து "உன்னைப் பற்றி கொஞ்சம் சொல்லேன்" என்போம். 


பெரும்பாலன் சமயங்களில் வரும் பதில் "என் பெயர் இது, நான் இன்னது படித்து இருக்கிறேன், எனக்கு திருமணம் ஆகி விட்டது/ஆக வில்லை, என் மனைவி இன்ன வேலை செய்கிறாள், என் சொந்த ஊர் இது"


என்று கூறுவார்கள். 


அவர் சொல்லியது அனைத்தும் உண்மை. அதில் பிழை இல்லை. ஆனால், கேள்வி கேட்டவர் எதற்கு கேட்டார் என்று புரிந்து கொள்ள வேண்டும். 


இருக்கிற வேலைக்கு இவர் தகுதியானவரா என்று அ அறியத்தான் கேள்வி கேட்டகப் பட்டது. அதற்கு தகுந்த மாதிரி பதில் சொல்ல வேண்டும். 


அதே போல், "இன்று எப்ப வீட்டுக்கு வருவீங்க" என்று மனைவி கேட்டால் "இன்னைக்கு கொஞ்சம் வேலை அதிகம் இருக்கிறது...முடிக்க நேரம் ஆகும்..." என்று சொல்லக் கூடாது. 


அவள் எதற்கு கேட்கிறாள்? ஏதோ வெளியே போக வேண்டும். அதற்குத் தானே கேட்கிறாள். அதற்கு தக்க பதில் சொல்ல வேண்டும். 


எப்ப வருவாய் என்று கேட்டால், கேட்பவர் ஒரு நேரத்தை பதிலாக எதிர் பார்க்கிறார் என்று புரிந்து கொள்ள வேண்டும். 


என்று வருவாய் என்று கேட்டால் கேட்பவர் ஒரு தேதியை பதிலாக் எதிர்பார்க்கிறார் என்று புரிந்து கொள்ள வேண்டும். 


"இன்னிக்கு இரசம் எப்படி இருக்கு" என்று மனைவி கேட்டால்,அதில் ஏதோ புதிதாக செய்து இருக்கிறாள் என்று அர்த்தம், அல்லது ஒரு பாராட்டை எதிர்பார்க்கிறாள் என்று அர்த்தம், அல்லது வேறு ஏதோ பேச தயங்குகிறாள் என்று அர்த்தம்.  


"நல்லா இருக்கு" என்று மொட்டையாக பதில் சொல்லக் கூடாது.  கேட்பவர் மனம் அறிந்து பதில் சொல்லப் பழக வேண்டும். 


கம்பன் அப்படி ஒரு காட்சியைக் காட்டுகிறான். 


அசோகவனத்தில் சீதை சிறை இருக்கிறாள். இராவணன் அடிக்கடி வந்து துன்பம் செய்கிறான். மனம் வெறுத்து தற்கொலைக்கு முயல்கிறாள். அந்த நேரத்தில் அனுமன் அங்கே வந்து சேருகிறான். 


அவர்களுக்குள் நடக்கும் பேச்சு, பேசுக் கலையின் உச்சம் தொட்டு காட்டிகிறான் கம்பன். 


அணு அணுவாக இரசிக்க வேண்டிய இடம். 


உங்கள மனதில் கற்பனை பண்ணிக் கொள்ளுங்கள்....

அசோக வனம். சுற்றிலும் அரக்கியர். குண்டா, கருப்பா, பயங்கர ஆயுதங்களுடன், நடுவில் அழகே உருவான சீதை, இடை இடை தடபுடலாக இராவணன் வந்து மிரட்டி விட்டுப் போகும் காட்சி...அழுது, வெறுத்து, தற்கொலை ஒன்றே தீர்வு என்று பிராட்டி முடிவு செய்து, அங்குள்ள ஒரு கொடியை கழுத்தில் சுருக்கிட்டு கொள்ள நினைக்கும் நேரம்...


இதை மனதில் கற்பனை செய்து கொள்ளுங்கள். 


"அனுமன் சீதை தற்கொலைக்கு முயல்வதை பார்க்கிறான். அதிர்ச்சி அடைகிறான். ஓடிப் போய் சீதையின் கையை பிடித்து தடுத்து நிறுத்தலாம் என்றால் அவனுக்கு கூச்சமாக இருக்கிறது. எப்படி ஒரு பெண்ணைத் தொடுவது என்று. "உலக நாயகன் அருளிய தூதன்" நான் என்று அவள் முன் சென்று கை கூப்பி நிற்கிறான். 


பாடல் 


கண்டனன்அனுமனும்; கருத்தும் எண்ணினான்;

கொண்டனன்துணுக்கம்; மெய் தீண்டக் கூசுவான்,

'அண்டர் நாயகன்அருள் தூதன் யான்' எனா,

தொண்டை வாய்மயிலினைத் தொழுது,


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/1.html


(pl click the above link to continue reading)




கண்டனன் = கண்டான் 


அனுமனும் = அனுமன் 


கருத்தும் எண்ணினான் = மனதில் நினைத்தான் 


கொண்டனன் துணுக்கம் = திடுக்கிட்டான் (அவள் தற்கொலை செய்து கொல்லப் போவதைப் பார்த்து) 


மெய் தீண்டக் கூசுவான், = அவள் கையை பற்றி தடுத்து நிறுத்தக் கூச்சப் பட்டான் (முன்ன பின்ன தெரியாத ஒரு பெண்ணை எப்படி தொடுவது என்று) 


'அண்டர் நாயகன் =உலகுக்கு எல்லாம் நாயகன் 


அருள் தூதன் யான்' = அருளிய தூதன் நான் 


எனா, = என்று 


தொண்டை வாய்  = கோவைப் பழம் போன்ற வாயை உடைய 


மயிலினைத் தொழுது, = மயில் போன்ற சாயலை உடைய சீதையை தொழுது 



"சீதை, கொஞ்சம் பொறு...நான் சொல்வதைக் கேள்" என்று ஆரம்பித்து இருக்கலாம். 


அனுமன் அப்படிச் செய்யவில்லை. எதைச் சொன்னால் அவள் மனம் சாந்தி அடையும், தான் சொல்வதை கேட்ட்பாள் என்று அறிந்து சொல்கிறான் "உலக நாயகனின் தூதன்" என்று. .


இராமனிடம் இருந்து ஏதாவது செய்தி வருமா என்று தானே அவள் தவம் கிடக்கிறாள். அதை அறிந்து அங்கிருந்து ஆரம்பிக்கிறான் அனுமன். 


தொடர்வோம்....



Sunday, May 8, 2022

கம்ப இராமாயணம் - இராமன் என்ற மானுடன் - முன்னுரை

கம்ப  இராமாயணம் - இராமன் என்ற மானுடன் - முன்னுரை 


நாம் பல ஆங்கிலப் படங்கள் பார்க்கிறோம். James Bond, Spider Man, Iron Man என்று பெரிய பலமான கதாநாயகர்களை வைத்து எடுக்கப்பட்ட படங்கள். அவற்றில் வரும் கதாநாயகர்கள் நம்ப முடியாத செயல்களைச் செய்வார்கள். பறப்பார்கள், வலை பின்னுவார்கள், கப்பல், ஆகாய விமானம் என்று அனைத்து வித வண்டிகளையும் சர்வ சாதரணாமாக ஓட்டுவார்கள். 


நமக்குத் தெரியும் அது எல்லாம்சும்மா வெறும் கற்பனை என்று. அவர்கள் செய்வது போல நம்மால் செய்ய முடியாது. நம்மால் ஒரு கையை உயர்த்தி பறக்க முடியுமா? 


எனவே, அது ஒரு பொழுது போக்கு என்று நாம் தள்ளி விடுகிறோம். அந்தக் கதாநாயகர்கள் செய்யும் நல்ல காரியத்தை கூட நாம் அதுவும் ஒரு கற்பனை என்று தள்ளி விடுகிறோம். 


இராமன் ஒரு கதாநயாகன். அவன் நம்ப முடியாத, மனிதர்கள் செய்ய முடியாத காரியங்களை மட்டுமே காப்பியம் முழுவதும் செய்து கொண்டிருந்தால், நாம் இராமன் வழியில் நடக்க முடியாது என்று முடிவு செய்து விடுவோம். 


இராமன் அப்படி அல்ல. அவன் மனிதனாக வாழ்ந்து காட்டுகிறான். 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_22.html


(pl click the above link to continue reading)


மனிதன் என்று கூறினால், மனிதர்களுக்கு உள்ள அத்தனை குறை நிறைகளோடும் இருக்கிறான். 


அவனும் நம்மை மாதிரித்தான் என்று நமக்கு அவன் மேல் ஒரு பிடிப்பு வருகிறது. ஒரு தோழமை வருகிறது. அவன் செய்தது போல நாமும் செய்தால் என்ற எண்ணம் வருகிறது. 


நம்மைப் போல அவன் அழுகிறான், மனைவியின் அழகில் மயங்குகிறான், காதல் வயப்படுகிறான், நல்லது கெட்டது அறியாமல் குழம்புகிறான், நட்பில் குழைகிறான், பிரிவில் தவிக்கிறான்,  தம்பி மேல் பிள்ளை போல் பாசத்தைப் பொழிகிறான், அப்பா மேல் அவ்வளவு பாசம் காண்பிக்கிறான், அம்மாவுக்கு ஒரு தனி இடம் தருகிறான்,  அறிவும் அனுபவமும் கலந்து அறிவுரைகள் வழங்குகிறான்...இப்படி இராமனை நம்மில் ஒருவனாக, அதே சமயம் பால் உயர்ந்த குணங்களை அவனுள் ஏற்றி கம்பன் காட்டுகிறான். 


நம்மாலும் இராமன் போல வாழ முடியும், அவன் போன பாதையில் போக முடியும் என்ற நம்பிக்கையை விதைக்கிறான். 


இராமனை மகனாக, மாணவனாக, காதலனாக, கணவனாக, அண்ணனாக, அறிவு புகட்டும் ஆசானாக, மனைவியை பிரிந்து புலம்பும் சாதாரண மனிதனாக, தம்பியை இழந்து தற்கொலைக்கு முயலும் ஒரு பாசமிகு அண்ணனாக, அண்டியவரை காப்பாற்றும் ஒரு சத்ரியனாக நாம் காண இருக்கிறோம். 


இனி வரும் நாட்களில் இராமனின் பலவித ஆளுமைகளை நாம் கம்பன் ஊடாக இரசிக்கலாம். 


மானுடம் வென்றதம்மா என்பான் கம்பன். 


இராமன் என்ற மானுடனை நாம் சிந்திக்க இருக்கிறோம். 



Friday, April 1, 2022

கம்ப இராமாயணம் - நயனங்களை உடையாள்

கம்ப இராமாயணம் - நயனங்களை உடையாள் 


வாழ்கையை இரசிக்க எங்கே நேரம் இருக்கிறது. 


எப்போது பார்த்தாலும் ஏதோ ஒரு கவலை. ஏதோ ஒரு அவசரம். ஒன்று முடிந்தால், இன்னொன்று வந்து நிற்கிறது.


ஒரு கவலையும் இல்லாவிட்டாலும், ஏதோ ஒன்றை கற்பனை பண்ணிக் கொண்டு கவலைப் படுகிறோம்.


முடி நரைக்கிறதே. உடல் எடை போடுகிறதே. இந்த பிள்ளைகள் எப்படி சமாளிக்கப் போகிறார்களோ இந்த உலகத்தை என்று புதிது புதிதாக கற்பனை பண்ணிக் கொண்டு கவலைப் படுகிறோம்.


இந்தப் பிரச்னை எல்லாம் தீர்ந்த பின்  அக்கடா என்று ஓய்வு எடுத்து, இதை எல்லாம் இரசிக்கலாம் என்று நினைக்கிறோம். 


அந்த நாள் ஒரு போதும் வரப் போவது இல்லை. 


பிரச்சனைகள் இருந்து கொண்டுதான் இருக்கும். அவை ஒரு நாளும் நிற்கப் போவது இல்லை. அதற்காக வாழ்கையை தள்ளிப் போடுவதா? 


வாழ்வை இரசிக்க வேண்டாமா?  மழை, புல், காற்று, உறவின் நெருக்கம், சுவையான உணவு, இனிய இசை, நல்ல புத்தகம், நகைச்சுவை, அறிவான பேச்சுக்கள், அன்பான அளவளாவல்கள் என்று வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் இரசிக்கப் படிக்க வேண்டும். 


இராமனுக்கும், சீதைக்கும் வராத பிரச்னையா? 


நாட்டை விட்டு காடு வந்து விட்டார்கள். ஒரு சுகமும் கிடையாது. 


இந்த பதினாலு வருடத்தை எப்படியாவது பல்லைக் கடித்துக் கொண்டு ஓட்டி விட்டால் பின் அரண்மனையில் சௌகரியமாக இருக்கலாம் என்று தானே நாம் நினைப்போம். அதற்குள் பதினாலு வருடம் போய் விடும். இளமை போய் விடும். 


இராமயணத்தில் மற்றவற்றை எல்லாம் விட்டு விடுங்கள். 


உலகமே தலைகீழான பின்னும், இராமனும், சீதையும் வாழ்கையை இரசிப்பதை விடவில்லை. அவர்கள் சோகத்திலும், துயரத்திலும் வாழ்கையை அனுபவிக்கும் அந்த அனுபவிப்பு இருந்தது. அதை பற்றிக் கொண்டால் கூட போதும் என்று தோன்றுகிறது.


கங்கைகரையை அடைகிறார்கள். முதல் முறை அரண்மனை விட்டு, வருகிறார்கள். 


இன்னும் பதினாலு வருடம் இருக்கிறது. எவ்வளவு கவலை இருக்க வேண்டும். 


சீதைக்கு ஒரு கவலையும் இல்லை. 


"மன்மதனின் ஐந்து அம்புகளையும், இராமனின் அம்புகளையும் நினைத்து, இது என் கண்களை விட கூர்மையானவை அல்ல என்று நஞ்சு போன்ற கண்களை உடைய சீதை அவற்றை தூக்கிப் போட்டு விடுகிறாள். அவள் குழலில் தாமரை மலர்களை சூடி இருக்கிறாள். அதில் வண்டுகள் மொய்க்கின்றன. அவை சிரிப்பதைப் போல இருக்கிறதாம். ஏன் சிரிகின்றன என்றால், இந்த மலர்கள் இராமனின் திருவடி அழகுக்கு ஈடாகுமா என்று எண்ணி சிரிக்கின்றனவாம்".


பாடல் 

 


அஞ்சு அம்பையும் ஐயன்தனது

     அலகு அம்பையும் அளவா,

நஞ்சங்களை வெல ஆகிய

     நயனங்களை உடையாள்,

துஞ்சும் களி வரி வண்டுகள்

     குழலின்படி சுழலும்

கஞ்சங்களை மஞ்சன் கழல்

     நகுகின்றது கண்டாள்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_1.html



(pl click the above link to continue reading)


அஞ்சு அம்பையும் = மன்மதனின் ஐந்து அம்புகளையும் 


ஐயன்தனது = ஐயன் இராமனின் 


அலகு அம்பையும்  = கூர்மையான அம்பையும் 


அளவா  = (மனதுக்குள்) அளவெடுத்து 


நஞ்சங்களை = கொடிய விஷங்களை 


வெல ஆகிய = வெல்லக் கூடிய 


நயனங்களை உடையாள், = கண்களை உடைய சீதை 


துஞ்சும்= உறங்கும் 


களி வரி வண்டுகள் = தேனை உண்டதால் களிப்புற்ற வண்டுகள் 


குழலின்படி சுழலும் = அவளின் குழலை சுற்றி வந்து மொய்க்கும் 


கஞ்சங்களை = தாமரை மலர்களை 


மஞ்சன் கழல் = மைந்தனாகிய இராமனின் திருவடிகளுக்கு 


நகுகின்றது கண்டாள். = ஒப்பாகுமா என்று நினைத்து சிரிப்பதாக நினைத்தாள் 


சந்தோஷமாக இருக்க பணம், பதவி, செல்வாக்கு, ஆள், அம்பு, சேனை, ஒன்றும் வேண்டாம். 


மனம் இருந்தால் போதும். எவ்வளவு பெரிய சிக்கலுக்கு நடுவிலும், வாழ்வின் ஏனைய சுகங்களை இரசிக்கலாம். 


அலுவலகத்தில் பிரச்சனை என்றால் மனைவியை கொஞ்சாமல் இருப்பதா?பிள்ளைகளோடு விளையாடாமல் இருப்பதா? எல்லாவற்றையும் மூடி வைத்து விட்டு உலகமே இடிந்து போனது போல உட்கார்ந்து விடுவதா?


கங்கைப் படலம் ஒன்றும் கதைக்கு அவ்வளவு தேவையான ஒன்று அன்றல்ல. இருந்தும் வேலை மெனக்கெட்டு கம்பன் ஒரு படலம் பாடுகிறான்.


எவ்வளவு நுணுக்கமாக வாழ்வை இரசிக்கலாம் என்று காட்டுகிறான். 




Thursday, March 10, 2022

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - அறமும் வாழ்வும்

 கம்ப இராமாயணம்  - வீடணன் அடைக்கலம் - அறமும் வாழ்வும் 


"நீ என் கண் முன் நிற்காதே. ஓடிப் போய் விடு" என்று அறிவுரைகள் சொன்ன வீடணனை இராவணன் வெறுத்து, கோபம் கொண்டு விரட்டி விடுகிறான். 


இராவணனுக்கு சீதை மேல் காமம் ஒரு புறம். 


அவளை அடைய முடியவில்லையே என்ற கோபமும் வருத்தமும் மறு புறம். 


இதற்கிடையில், உடன் பிறந்த தம்பி தனக்கு உதவி செய்யாமல் அறம் பற்றி பேசிக் கொண்டு இருக்கிறானே என்ற வெறுப்பு. 


வார்த்தைகள் வெடிக்கிறது. 


ஆனால், வீடணன் கோபம் கொள்ளவில்லை. வெறுக்கவில்லை. 


மிக மிக நிதானமாக பேசுகிறான். 


இராவணன் உணர்ச்சியின் விளிம்பில் நிற்கிறான் என்றால், வீடணன் அறிவின் உச்சியில் நிற்கிறான். 


இதை ஏன் இராவணன், வீடணன் என்று பார்க்க வேண்டும். 


நம் வீடுகளில் எப்போதும் நிகழ்வதுதானே. 


ஒருவர் கோபம் கொண்டு பேசினால், மற்றவரும் அதற்குச் சரியாக உணர்ச்சியில் வார்த்தைகளை விடக் கூடாது. உணர்ச்சி வசப்பட்டவர் பேசட்டும். எது சரியோ அதை மென்மையாக மற்றவர் எடுத்துச் சொல்லலாம். 


இதற்கு முன்னும் அதற்கு ஒரு உதாரணம் உண்டு. 


கானகம் போ என்ற சொல்லக் கேட்ட இலக்குவன் உணர்ச்சியில், கோபத்தில் ஏதேதோ பேசுகிறான். இராமன் நிதானமாக இருக்கிறான். "மறை கூறிய வாயால்" இப்படி பேசலாமா என்று அவனை திருத்துகிறான். 


அந்த நிதானம் வேண்டும். 


பாடல் 



'வாழியாய் ! கேட்டியால்: வாழ்வு கைம்மிக


ஊழி காண்குறு நினது உயிரை ஓர்கிலாய்,


கீழ்மையோர் சொற்கொடு கெடுதல் நேர்தியோ ?


வாழ்மைதான், அறம் பிழைத்தவர்க்கு, வாய்க்குமோ ?



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_10.html


(Please click the above link to continue reading)



'வாழியாய் ! = நீ (இராவணனாகிய நீ) வாழ்க 


கேட்டியால்: = நான் (வீடணன்) சொல்வதைக் கேள் 


வாழ்வு கைம்மிக = வாழ்வில் உயர்வு பெற 


ஊழி  = ஊழிக் காலத்தை 


காண்குறு = காணும் வரை உள்ள 


நினது உயிரை ஓர்கிலாய், = உன் நீண்ட வாழ்நாளைப் பற்றி நீ நினைக்கவில்லை 


கீழ்மையோர் = கீழானோர் 


சொற்கொடு = சொன்ன சொற்களைக் கேட்டு 


கெடுதல் நேர்தியோ ? = உனக்கு நீயே கெடுதலை தேடிக் கொள்வாயா ?


வாழ்மைதான் = வாழ்க்கைதான் 


அறம் பிழைத்தவர்க்கு, வாய்க்குமோ ? = அறம் பிழைத்தவர்களுக்கு கிடைக்குமோ 


அறம் தவறி நடந்தால் வாழ்க்கை தொலைந்து போய் விடும். 


எவ்வளவு படித்து என்ன, எவ்வளவு தவம் செய்து என்ன, ,எத்தனை வரம் வாங்கி என்ன, அறம் இல்லை என்றால் அத்தனையும் பாழ். 


அவ்வளவு பெரிய இராவனனுக்கே அந்தக் கதி என்றால் மற்றவர் பாடு சொல்லவும் வேண்டுமோ?


நிறைய செல்வம் சேர்த்து விட்டால் போதும், அது நம்மை காக்கும் என்று பலர் நினைக்கிறார்கள். 


இராவணனுக்கு முன் எவ்வளவோ பெரிய பெரிய அரக்கர்கள் எல்லாம் இருந்தார்கள். அவனை விட பல மடங்கு வரம் பெற்று, பெரிய பலசாலிகளாக இருந்தார்கள். அறம் தவறி நடந்ததால், இருந்த இடம் தெரியாமல் போனார்கள். 


அரக்கர்கள்தான், தாங்கள் கட்டி வைத்த கோட்டை, ஆள், அம்பு, சேனை, வரம், எல்லாம் தங்களை காக்கும் என்று நினைப்பார்கள் என்கிறார் அபிராமி பட்டர்.



"அரணம் பொருள் என்று அருள் இல்லாத அசுரர்கள் தங்கள் முரண் அன்று அழிய"


என்பார். அரணம் என்றால் அரண், கோட்டை, காவல். அதெல்லாம் ஒரு பொருட்டு அல்ல. அது நம்மை காக்காது. 


அரணம் பொருள் என்று அருள் ஒன்று இலாத அசுரர் தங்கள்

முரண் அன்று அழிய முனிந்த பெம்மானும், முகுந்தனுமே,

‘சரணம், சரணம்’ என நின்ற நாயகி தன் அடியார்,

மரணம் பிறவி இரண்டும் எய்தார், இந்த வையகத்தே.


அற வழியில் நட என்று நம் இலக்கியங்கள் முடிந்த இடத்தில் எல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கின்றன. 


அறத்தை போதிப்பதும், அதை பாதுகாப்பதும், அதன் வழி மக்களை கொண்டு செல்வதும் தான் இலக்கியங்களின் நோக்கமாக இருந்திருக்கிறது. 


மேலும் சொல்வான் 




Saturday, March 5, 2022

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - அழிவினை எய்துவான் அறிவு நீங்கினான்

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - அழிவினை எய்துவான் அறிவு நீங்கினான் 


சீதையை விட்டுவிடு என்று வீடணன் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். இராவணன் கேட்பதாக இல்லை. சீதை மேல் கொண்ட காமம் ஒரு புறம். தம்பி இப்படிச் சொல்கிறானே என்று அவன் மேல் கோபம் மறுபுறம். காமமும், கோபமும் சேர்ந்தால் கேட்க வேண்டுமா அழிவுக்கு. அறிவு நீங்கி விடும்.


தனக்கு அறிவுரை சொன்ன வீடணன் மேல் கோபம் கொண்டு இராவணன் சொல்கிறான் 


"உன்னை கொன்றால் எனக்கு பழி வரும் என்பதால் உன்னைக் கொல்லாமல் விடுகிறேன். எனக்கு அறிவுரை சொல்வதை நிறுத்திக்கொள். என் கண் முன் நில்லாதே. ஓடி விடு" 


என்று அவனை விரட்டுகிறான் இராவணன். .


பாடல் 



‘பழியினை உணர்ந்து யான் படுக்கிலேன் உனை;

ஒழி சில புகலுதல் : ஒல்லை நீங்குதி;

விழி எதிர் நிற்றியேல் விளிதி “ என்றனன்

அழிவினை எய்துவான் அறிவு நீங்கினான்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_5.html


((please click the above link to continue reading))


‘பழியினை = என் மேல் பழி வரும் என்று 


உணர்ந்து = உணர்ந்து 


யான் படுக்கிலேன் உனை; = உன்னை நான் கொல்லாமல் விடுகிறேன் 


ஒழி = விட்டு விடு 


சில புகலுதல் = இந்த மாதிரி சில்லறைத் தனமாக எனக்கு அறிவுரை கூறுவதை 


ஒல்லை நீங்குதி; = உடனடியாக ஓடிப் போய் விடு 


விழி எதிர் நிற்றியேல் = என் கண் முன் நின்றால் 


விளிதி “ என்றனன் = இறந்து போவாய் என்றான் 


காமம் மிகுந்தால் அறிவு மங்கும். யார் சொன்னாலும் மண்டையில் ஏறாது. 


கோபம் மிகுந்தாலும், அறிவு மங்கும். கோபம் கண்ணை மறைக்கும். 


தனக்குள்ள அறிவு மங்குவது மட்டும் அல்ல, பிறர் நல்லவை சொன்னாலும் அறிவு அதைப் பற்றாது. 


அது ஒரு புறம் இருக்கட்டும்.


நம்மிடம் யாராவது கோபித்து பேசினால் நமக்கு எப்படி இருக்கும்? நமக்கு பதிலுக்கு கோபம் வருமா வராதா? அது யாராகவும் இருந்துவிட்டு போகட்டும்....பெற்றோர், ஆசிரியர், கணவன், மனைவி, நட்பு, சுற்றம் என்று யார் நம் மேல் கோபம் கொண்டு பேசினாலும், பதிலுக்கு கோபப் படுவது இயற்கைதானே. 


நாம் வார்த்தைகளை அள்ளி வீசாவிட்டாலும், உள்ளுக்குள் கோபம் இருக்கும் தானே. 


இராவணன் இவ்வளவு சொன்ன பின், வீடணன் என்ன செய்தான்? எப்படிச் செய்தான்?


மேலும், சிந்திப்போம். 



Monday, February 28, 2022

கம்ப இராமாயணம் - வீபிஷண சரணாகதி

 கம்ப இராமாயணம் - வீபிஷண சரணாகதி 


சரணாகதி என்பது மிகப் பெரிய விஷயம். கதி என்றால் பாதை, வழி. சரணமே கதி. அது தான் வழி என்று அதில் போவது. 


சரணாகதி என்பது எளிதான காரியம் இல்லை. என்னால் ஆவது ஒன்று இல்லை, எல்லாம் நீ தான் என்று இருப்பது மிக மிக கடினம். 


நான் யார், நான் எவ்வளவு பெரிய ஆள், என் படிப்பு என்ன, சாமர்த்தியம் என்ன, விவேகம் என்ன, வீர தீரம் என்ன...என்னை போல் யாரால் முடியும் என்றுதான் எல்லோரும் நினைக்கிறார்கள். 


நான் ஒரு சாதாரண ஆள் என்று யாருமே நினைப்பது இல்லை. எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் தான் உயர்ந்தவன், பெரியவன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 


கம்ப இராமாயனத்தை தொடங்கும் போதே கம்பர் "தலைவர் அன்னவர்க்கே சரணாங்களே" என்று சரணத்தோடு தான் ஆரம்பிக்கிறார்.


செஞ்சோற்று கடன் கழிக்காமல் இராமன் பின் போனது துரோகம் இல்லையா என்று இன்றும் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். 


"நான் சரணாகதி அடைகிறேன்" என்ற நினைப்பு வந்து விட்டால் அது சரணாகதி அல்ல. நான் செய்கிறேன் என்ற எண்ணமே அகம்பாவம். 


https://interestingtamilpoems.blogspot.com/2022/02/blog-post_20.html


(pl click the above link to continue reading)


காதலியிடம், மனைவியிடம் சரண் அடைவது என்பது எவ்வளவு இனிமையான விஷயம்.


பாரதி சொல்கிறான் ....



நின்னயே ரதி என்று நினைகிறேனடி கண்ணம்மா!

தன்னையே சகி என்று சரணம் எய்தினேன் !... கண்ணம்மா!....(நின்னையே!)


"உன் பற்றன்றி ஒரு பற்று இல்லேன் இறைவா கச்சி ஏகம்பனே" என்பார் பட்டினத்தார். 


வேதம் நான்கும் சரண் அடைவது அபிராமியின் பாதங்களில் என்று கூறுகிறார் 



ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய்

வானந்தமான வடிவுடையாள் மறை நான்கினுக்கும்

தானந்தமான சரணாரவிந்த தவள நிறக்

கானந்தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக்கண்ணியதே



"மறை நான்கினுக்கும் தான் அந்தமான சரண் அரவிந்த"


தாயின் தோளில் தூங்கும் குழந்தை போல, சரணாகதி அவ்வளவு சுகமானது. 


பக்தியில் இரண்டு விதமான பக்தி பற்றி கூறுவார்கள். .


பூனை பக்தி, குரங்கு பக்தி என்று. 


பூனை தன் குட்டியை தானே வாயில் கவ்விக் கொண்டு ஒரு ஒரு இடமாகச் செல்லும். குட்டி ஒன்றும் செய்ய வேண்டாம்.


குரங்கு அப்படி இல்லை. குட்டிதான் இறுக பற்றிக் கொள்ள வேண்டும். தாய் குரங்கு அங்கும் இங்கும் தாவும். விழுவதும் விழாமல் இருப்பதும் குட்டியின் சாமர்த்தியம். 


எது எளிது? பூனை குட்டியின் வாழ்க்கை எளிது. 


"எல்லாம் அற என்னை இழந்த நலம் சொல்லாய் முருகா சுர பூபதியே"


என்கிறார் அருணகிரி.


நான் எல்லாவற்றையும் இழந்து விட்டேன். என்னையும் இழந்து விட்டேன். அதனால் அந்த சுகம் எப்படி இருக்கிறது என்று என்னால் சொல்ல முடியாது. நான் தான் இல்லையே. நான் எப்படி சொல்ல முடியும். எனவே, அதை நீயே சொல் முருகா என்கிறார் "சொல்லாய் முருகா". 


எல்லாம் இழப்பது ஒரு சுகமா? 


கோவிந்தா என்று கை உயர்த்தினாள் பாஞ்சாலி. அவன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை. 


ஆதி மூலமே என்று அலறியது யானை. அவன் வருவான், அவன் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கை. 


சரணாகதி என்பதை வைணவம் கொண்டாடுகிறது. 


வீபிஷ்ண சரணாகதி பற்றி சிந்திக்க இருக்கிறோம். 





Wednesday, November 17, 2021

கம்ப இராமாயணம் - பெண்களால் வரும் அழிவு

 கம்ப இராமாயணம் - பெண்களால் வரும் அழிவு 


சுக்ரீவனுக்கு முடி சூட்டிய பின், அவனுக்கு சில அறிவுரைகளை வழங்குகிறான் இராமன். 


"பெண்களால் ஆண்களுக்கு மரணம் வரும் என்பதை சந்தேகம் இல்லாமல் அறிந்து கொள். அதற்கு வாலி மட்டும் அல்ல, நாங்களும் சாட்சி. பெண்களால் ஆண்களுக்கு துன்பமும், பழியும் வந்து சேரும்"


என்கிறான். 


பாடல் 


''மங்கையர் பொருட்டால் எய்தும்

      மாந்தர்க்கு மரணம்'' என்றல்,

சங்கை இன்று உணர்தி; வாலி

      செய்கையால் சாலும்; இன்னும்,

அங்கு அவர் திறத்தினானே,

      அல்லலும் பழியும் ஆதல்

எங்களின் காண்டி அன்றே;

      இதற்கு வேறு உவமை உண்டோ?


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_93.html


(please click the above link to continue reading)




''மங்கையர் பொருட்டால் = பெண்களால் 


எய்தும் = அடைவர் 


மாந்தர்க்கு மரணம்'' என்றல் = ஆண்களுக்கு மரணம் என்பதை 


சங்கை இன்று உணர்தி = சந்தேகம் இல்லாமல் உணர்ந்து கொள் 


வாலி செய்கையால் சாலும் = வாலியின் செய்கையால் அதை உணரலாம் 


இன்னும், = மேலும் 


அங்கு அவர் திறத்தினானே = அந்தப் பெண்களாலே 


அல்லலும் பழியும் ஆதல் = துன்பமும், பழியும் வரும் என்பதை 


எங்களின் காண்டி அன்றே = எங்களைப் பார்த்து புரிந்து கொள் 


இதற்கு வேறு உவமை உண்டோ? = இதற்கு மேலும் வேறு உதாரணங்கள் தேவையா ? 


சுக்ரீவன் மனைவியை கவர்ந்து கொண்டதால், வாலி இறந்தான். 


கைகேயி பேச்சை கேட்டதால் தசரதன் மாண்டு போனான்.  இராம இலக்குவனர்கள் கானகம் போனார்கள். 


சீதையின் பேச்சைக் கேட்டதால் (பொன் மான் பின்னே போனதால், இலக்குவனை அனுப்பியதால்)  இராமனும் இலக்குவனும் சீதையைத் தேடி படாத பாடு பட்டார்கள். 


சீதையின் பேச்சைக் கேட்டதால் வந்த வினை என்று இராமன் பல இடத்தில்  புலம்புகிறான். 


ஆனானப் பட்ட இராமனுக்கே அந்தக் கதி. 


பாடம் படிக்க வேண்டும். 






Thursday, November 11, 2021

கம்ப இராமாயணம் - தாய் என இனிது தாங்குதி

 கம்ப இராமாயணம் - தாய் என இனிது தாங்குதி 


சுக்ரீவனுக்கு முடி சூட்டியபின், அவனுக்கு இராமன் சில தர்மங்களை போதிக்கிறான். 


ஒரு தலைவன் தன் குடிகளை எப்படி நடத்த வேண்டும் என்று இராமன் கூறுகிறான். .


"உன் குடிகள் உன்னை தங்கள் தலைவன் என்று நினைக்கக் கூடாது. தங்களின் தாய் என்று நினைக்கும் படி நீ அரசு நடத்த வேண்டும். அப்படி இருக்கும் போது அவர்களுக்கு யார் மூலமாகவாவது தீங்கு வந்தால், அப்படி தீமை செய்வோரை அற நெறி மீறாமல் தண்டிப்பாயாக" என்றான். 


பாடல் 


நாயகன் அல்லன்; நம்மை

        நனி பயந்து எடுத்து நல்கும்

தாய் என இனிது பேணத்

        தாங்குதி தாங்குவாரை

ஆயது தன்மையேனும்

        அறவரம்பு இகவா வண்ணம்

தீயன வந்தபோது

        சுடுதியால் தீமையோரை


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_11.html


(Please click the above link to continue reading)



நாயகன் அல்லன் = தலைவன் அல்ல 


நம்மை = நம்மை (குடி மக்களை) 


நனி = மிகவும் 


பயந்து எடுத்து நல்கும் = போற்றி எடுத்து கொடுக்கும் 


தாய் என = தாய் என்று சொல்லும்படி 


இனிது பேணத்  தாங்குதி = இனிதாகச் சொல்லும்படி அவர்களை பாதுகாப்பாய் 


 தாங்குவாரை = அப்படி தாங்கும் 


ஆயது தன்மையேனும் = தன்மை இருந்தாலும் 


அறவரம்பு இகவா வண்ணம் = அறத்தின் எல்லைகளுக்கு உட்பட்டு 


தீயன வந்தபோது = தீமைகள் வந்த போது 


சுடுதியால் தீமையோரை = தீயவர்களை தண்டிப்பாய் 


தலைவன் என்று வந்துவிட்டால் ஒரு பெருமை, அகங்காரம், மமதை வந்து விடும். அப்படி இல்லாமல், ஒரு தாய் குழந்தைகளை காப்பது போல காக்க வேண்டும் என்கிறான். 


மேலும், தீமை செய்பவர்களை தண்டிக்க வேண்டும், அதுவும் அறத்திற்கு உட்பட்டு.


உன்னத இலட்சியங்கள். முழுவதுமாக முடியாவிட்டாலும், அதை நோக்கி நாம் தினம் நகர வேண்டும். 


அரசனுக்கு மட்டும் அல்ல. நமக்கும்தான்.





Monday, November 8, 2021

கம்ப இராமாயணம் - சிறியர் என்று இகழேல்

 கம்ப இராமாயணம் - சிறியர் என்று இகழேல் 


வாழ்க்கை யாரை எங்கே எப்படி கொண்டு சேர்க்கும் என்று யாருக்கும் தெரியாது. சில சமயம் குப்பை காகிதம் கோபுர உச்சிக்கும் போய் விடும். 


நம்மை விட குறைந்தவர்களை, அவர்கள் சாதரணமானவர்கள் என்று நினைத்து நாம் அவர்களுக்கு ஏதோ தீமை செய்தால், அதை அவர்கள் மனதில் வைத்து இருந்து சரியான நேரத்தில் நமக்கு மிகப் பெரிய தீமையை செய்து விடுவார்கள். நம்மால் தாங்க முடியாது. 


சுக்ரீவனுக்கு முடி சூட்டியபின் அவனுக்கு இராமன் சில அறிவுரைகள் வழங்கினான். 

அப்போது இராமன் சொல்கிறான் 


"சிறியர் என்று எண்ணி மற்றவர்களுக்கு துன்பம் செய்து விடாதே. அப்படி செய்ததால், கூனி என்ற ஒரு கிழவி எனக்கு செய்த தீமையால் நான் துயரம் என்ற கடலில் வீழ்ந்தேன்"


என்றான். 


பாடல் 


'சிறியர் என்று இகழ்ந்து நோவு

      செய்வன செய்யல்; மற்று, இந்

நெறி இகழ்ந்து, யான் ஓர் தீமை

      இழைத்தலால், உணர்ச்சி நீண்டு,

குறியது ஆம் மேனி ஆய

      கூனியால், குவவுத் தோளாய்!

வெறியன எய்தி, நொய்தின் வெந்

      துயர்க் கடலின் வீழ்ந்தேன்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_8.html


(please click the above link to continue reading)



'சிறியர் என்று = நம்மை விட அறிவில், பணத்தில், அதிகாரத்தில், சிறியவர்கள் என்று எண்ணி 


இகழ்ந்து = அவர்களை இகழ்வாகப் பேசி 


நோவு செய்வன செய்யல் = துன்பம் தருவனவற்றை செய்யாதே 


மற்று, = மேலும் 


இந்நெறி இகழ்ந்து = இந்த வழியை மறந்து 


யான் = நான் (இராமன்) 


ஓர் தீமை இழைத்தலால் = தீமை செய்ததால் 


உணர்ச்சி நீண்டு = அந்த பகைமை உணர்ச்சியை நீண்ட நாள் மனதில் வைத்து இருந்து 


குறியது ஆம் மேனி ஆய = குறுகிய வடிவை உடைய 


கூனியால் = கூனியால் 


குவவுத் தோளாய்! = திரண்ட தோள்களை உடையவனே (சுக்ரீவனே) 


வெறியன எய்தி = துன்பத்தினை அடைந்து 


நொய்தின்  = வருந்தி 


வெந் துயர்க் கடலின் வீழ்ந்தேன். = துன்பம் என்ற கடலில் வீழ்ந்தேன் 


யோசித்துப் பார்த்து இருப்பானா இராமன். 


சக்ரவர்த்தி திருமகன் அவன். 


அவளோ அரண்மனையில் வேலை பார்க்கும் ஒரு கூன் விழுந்த கிழவி. 


அவளால் என்ன செய்ய முடியும்?


ஆனால், அவள் சாம்ராஜ்யங்களை புரட்டிப் போட்டாள். 


தசரத சக்ரவர்த்தி இறந்தான். இராமன் கானகம் போனான். சீதையும், இலக்குவனும் காடு போனார்கள். இராமன் அரசை இழந்தான். இருக்க இடம் இன்றி, உடுத்த துணி இன்றி காட்டில் பதினாலு வருடம் அலைந்தான். 


பரதன் அரசை ஏற்கவில்லை. இராமன் பாதுகையை வைத்து, அயோத்திக்கு வெளியே இருந்து ஆட்சி செய்தான். 


வாலி இறந்தான். 


இராவணன் இறந்தான். கும்பகர்ணன், இந்திரசித்து போன்றோர் இறந்தனர். 


எல்லாம் யாரால்? அந்தக் கூனியால். 


பெரிய பிழை ஒன்றும் இல்லை. மண் உருண்டை வைத்து அவள் கூன் முதுகில் இராமன் அம்பு விட்டான், சிறு வயதில். 


அது பொறுக்காமல் அந்தக் கூனி இவ்வளவு செய்தாள்.


பெரிய பெரிய படைகள் சாதிக்க முடியாதவற்றை அந்த பெண் தனி ஒரு ஆளாக நின்று செய்தாள். 


வீட்டு வேலை செய்பவர்களை, வண்டி ஓட்டுபவர்களை, காவல்காரர்களை, கீழே வேலை செய்பவர்களை, யாராக இருந்தாலும், அவர்களுக்கு தீமை செய்யக் கூடாது. 


அதிலும் பெரிய பொறுப்பில் இருப்பவர்களுக்கு கீழே பலர் இருப்பார்கள். என்றோ ஒரு மறதியில், அசதியில் தவறு இழைத்து விட்டால் பின் ஆயுள் முழுவதும் வருந்த வேண்டி இருக்கும்.  இராமன் வருந்தியதைப் போல. 


சில சமயம் அவர்கள் நமக்கு தீமை செய்தார்கள் என்று கூடத் தெரியாது. இல்லாததும் பொல்லாததும் சொல்லக் கூடாத இடத்தில் போய் சொல்லி விடுவார்கள். நாம் செய்யாததை, சொல்லாததை செய்ததாகவும், சொன்னதாகவும் திரித்துச் சொல்லி நம்மை சிக்கலில் மாட்டி வைத்து விடுவார்கள். 


சிறியாரை இகழேல் என்று தன் அனுபவத்தை பாடமாக்கிச் சொல்கிறான் இராமன். 


படிப்போம். 



Friday, November 5, 2021

கம்ப இராமாயணம் - உயர்வன உவந்து செய்வாய்

கம்ப இராமாயணம் - உயர்வன உவந்து செய்வாய் 


சுக்ரீவனுக்கு முடி சூட்டியபின் அவனுக்கு இராமன் சில அறிவுரைகள் கூறுகிறான். 


இது அரசனுக்கு கூறியது தானே, நமக்கு எதற்கு என்று நினைக்க வேண்டியது இல்லை. இது எந்தப் பொறுப்பில் உள்ளவர்க்கும் பொருந்தும். 


எவ்வளவு பெரிய அறங்களை எவ்வளவு அழகாக சொல்கிறார்கள். 


யோசித்துப் பார்ப்போம். ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு சொல்வதென்றால் என்ன சொல்லுவோம்? 


எவ்வளவோ சொல்லலாம். எதைச் சொல்வது, எதை விடுவது என்ற குழப்பம் வரும். 


கடுமையான உழைப்பு, நீதி, நேர்மை, என்று சொல்லிக் கொண்டே போகலாம். 


கம்பன் எப்படிச் சொல்கிறான் என்று பாருங்கள். 



பாடல் 


 செய்வன செய்தல், யாண்டும்

      தீயன சிந்தியாமை,

வைவன வந்தபோதும் வசை

      இல இனிய கூறல்,

மெய்யன வழங்கல், யாவும்

      மேவின வெஃகல் இன்மை,

உய்வன ஆக்கித் தம்மோடு

      உயர்வன:  உவந்து செய்வாய்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_5.html


(Pl click the above link to continue reading)



செய்வன செய்தல் = செய்ய வேண்டியதை செய்து விட வேண்டும். ஒரு பொறுப்பு என்று வந்து விட்டால் அதை முடிக்க வேண்டும். வினை முடித்தல். யார் யாருக்கு என்னென்ன செய்ய வேண்டுமோ, அவற்றை செய்து விட வேண்டும். 


யாண்டும் = எப்போதும் 

தீயன சிந்தியாமை = தீயவற்றை சிந்திக்கக் கூட கூடாது. 


வைவன வந்தபோதும் = ஒரு பொறுப்பில் இருந்தால், நாலு பேர் நாலு விதமாகப் பேசுவார்கள். ஒருவன் நல்லது என்பான். அதையே ஒருவன் கெடுதல் என்று வைவான். பொது வாழ்வில் இதெல்லாம் இயற்கை.  


வசை  இல இனிய கூறல், = அப்படியே ஒருவன் வைத்தாலும், பதிலுக்கு திட்டாமல், இனியவற்றை கூற வேண்டும். அரசாங்கம் என்றால் மாற்றுக் கருத்துக்கள் இருக்கத்தான் செய்யும். எவ்வளவு கடுமையான விமரிசனம் என்றாலும் பொறுத்துக் கொண்டு இனிய பேச வேண்டும். 


மெய்யன வழங்கல்  = எது சரியோ அதைச் செய்ய வேண்டும். பிடித்தவன், பிடிக்காதவன் என்று பாராபட்சம் பார்க்காமல், உண்மை எதுவோ, எது சரியோ, அதைச் செய்ய வேண்டும். 



யாவும் மேவின வெஃகல் இன்மை = வெஃகல் என்றால் பிறர் பொருள் மேல் ஆசை கொள்ளுதல். அரசனிடம் ஏராளமான அதிகாரம் இருக்கும். யாரிடம் இருந்தும் எதையும் தன் அதிகாரத்தால் பறிக்க முடியும். அப்படி செய்யக் கூடாது என்கிறார். பணக்காரர்கள், தொழில் அதிபர்கள், சொத்து வைத்து இருப்பவர்களை மிரட்டி அவர்கள் பொருள்களை பறிக்கக் கூடாது. பறிக்க நினைக்கவே கூடாது என்கிறார். 

 

உய்வன ஆக்கித்  = உய்தல் காப்பாற்றுதல். 


தம்மோடு உயர்வன = இந்த நல்ல குணங்கள் இருக்கின்றனவே, அவை என்ன செய்யும் என்றால் யார் அவற்றை கடைப் பிடிகிறார்களோ அவர்களை காக்கும். அது மட்டும் அல்ல அவர்களை தங்கள் உயரத்துக்கு உயர்த்தும். அவை கை பிடித்து மேலே தூக்கி விடும். தாமும் உயர்ந்து, தங்களை கடைப் பிடிப்பவர்களையும் உயர்த்தும். 


 உவந்து செய்வாய். = இவற்றை மன மகிழ்ச்சியோடு செய்வாய். அது தான் சிக்கல். நாமாக இருந்தால் என்ன செய்வோம்...."இதெல்லாம் கேக்க நல்லா இருக்கு...நடை முறை சாத்தியம் இல்லை " என்று தள்ளி வைத்து விடுவோம். அல்லது, செய்ய வேண்டுமே என்று கடனே என்று செய்வோம். 


நல்ல காரியங்களை மன மகிழ்ச்சியோடு, விருப்பத்தோடு செய். 


விரதம் இருப்பது நல்லது என்றால், அதை மகிழ்ச்சியோடு செய்ய வேண்டும். 


உடற் பயிற்சி நல்லது என்றால் அதை செய்வதில் ஒரு உற்சாகம் வேண்டும். மூக்கால் அழுது கொண்டே செய்யக் கூடாது. 


தானம் செய்வது என்றால் விருப்பத்தோடு செய்ய வேண்டும். 


செய்வதில் மகிழ்ச்சி இல்லை என்றால் செய்ய மாட்டோம். கொஞ்ச நாள் செய்வோம் அப்புறம் விட்டு விடுவோம். விருப்பம் இருந்தால் மேலும் மேலும் செய்வோம். 


அறம் செய்ய விரும்பு என்றாள் ஔவை. விரும்பிச் செய்ய வேண்டும். 



நல்லவற்றை செய்வதில் விருப்பம் இருக்க வேண்டும். 


"உவந்து செய்வாய்" என்கிறான் இராமன். 



Wednesday, November 3, 2021

கம்ப இராமாயணம் - மூவகை மக்கள்

கம்ப இராமாயணம் - மூவகை மக்கள் 


நம்மிடடையே முன்பு ஒரு வழக்கம் இருந்து. அதாவது, எந்த நல்ல காரியம் நடந்தாலும், நடக்க இருந்தாலும், அதற்கு சம்பந்தப் பட்டவர்களுக்கு பெரியவர்கள் அறிவுரை, அறவுரை வழங்குவார்கள். திருமணம், முடி சூட்டுதல் போன்ற நிகழ்வுகளில் பெரியவர்கள் நல்லவற்றை எடுத்துச் சொல்லும் வழக்கம் இருந்தது. 


சொல்வது ஒரு புறம் இருக்கட்டும். கேட்கணுமே? இப்போதெல்லாம் யார் கேட்கிறார்கள்? சொல்லும் பெரியவர்களும் இல்லை, கேட்கும் ஆட்களும் இல்லை. 


சுக்ரீவனுக்கு முடி சூட்டியாகி விட்டது. 


அவனுக்கு இராமன் சில நல் உரைகளை வழங்குகின்றான். 


வசிட்டரிடமும், கௌசிகனிடமும் படித்த இராமன் சொல்கின்றான் என்றால் அது எவ்வளவு உயர்வாக இருக்கும். சுக்ரீவனுக்கு சொல்வது போல கம்பர் நமக்கும் சொல்கிறார். 


அரசாங்கத்தில் பணம் வந்து குவியும். இன்றெல்லாம் இத்தனை இலடசம் கோடி என்று சொல்கிறார்கள். அவ்வளவு பணம் வரும் போது அதன் அருமை தெரியாது. இந்தா உனக்கு கொஞ்சம் இலவசம், இந்தா உனக்கு கொஞ்சம் இலவசம், என்று மனம் போன வழியில் செலவழிக்கத் தோன்றும். அதுதான் ஆற்று வெள்ளம் போல வந்து கொண்டே இருக்கிறதே என்ற அலட்சியம் வரும். அப்படி இருக்காதே. பொதுப் பணத்தை மிக மிக கவனமாக கையாள வேண்டும். 


இரண்டாவது, இந்த உலகில் மூன்று விதமான மக்கள் இருக்கிறார்கள். நட்பு, பகை இதுதானே நமக்குத் தெரியும். மூன்றாவது ஒன்று இருக்கிறது. நட்பும் இல்லாமல், பகையும் இல்லாமல். அதற்கு நொதுமல் என்று பெயர். தெருவில் ஒருவர் போகிறார். அவருடன் எனக்கு நட்பும் இல்லை, பகையும் இல்லை. எல்லாம் துறந்த முனிவர்களுக்கே இந்த மூன்று பேரும் உண்டு என்றால் அரசனுக்கு சொல்லவா வேண்டும்? எனவே, மக்களை சரியாக இனம் பிரித்து நடந்து கொள்.இல்லை என்றால் பெரும் துன்பம் வரும்.


பாடல் 



 தேவரும் வெஃகற்கு ஒத்த செயிர்

      அறு செல்வம்அஃது உன்

காவலுக்கு உரியதுஎன்றால், அன்னது

      கருதிக் காண்டி;

ஏவரும் இனிய நண்பர்,

      அயலவர், விரவார், என்று இம்

மூவகை இயலோர் ஆவர்,

      முனைவர்க்கும் உலக முன்னே.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_3.html


(Pl click the above link to continue reading)



தேவரும் = தேவர்களும் 


வெஃகற்கு ஒத்த = விருப்பப்படும் 


செயிர் அறு செல்வம்  = குறம் அற்ற செல்வம் 


அஃது உன் = அது உன் 


காவலுக்கு உரியது என்றால் = காவலில் உள்ளது என்றால் 


அன்னது = அதை 


கருதிக் காண்டி; = கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள் 


ஏவரும்  = எல்லோருக்கும் 


இனிய நண்பர் =  நட்பு 


அயலவர் = நட்பு அல்லாதவர் 


விரவார் = நொதுமல் உடையார் 


என்று = என்று 


இம் மூவகை இயலோர் ஆவர் = இந்த மூன்று வகையான மக்கள் 


முனைவர்க்கும் = முனிவர்களுக்கும் 


உலக முன்னே = இந்த உலகத்தில் உண்டு 



மக்கள் வரிப் பணத்தை கண்ணும் கருத்துமாக காவல் செய்.  இந்த ஒரு வரியை எல்லா அரசியல் தலைவர்களும், அரசு அதிகாரிகளும் கடை பிடித்தால் நாடு எப்படி இருக்கும்? ஒரு வரி. 


மக்களை தெரிந்து எடுத்து உறவு கொள். 


நல்ல அறிவுரைத்தானே?


நமக்கும் பொருந்தும் தானே?



Sunday, October 17, 2021

கம்ப இராமாயணம் - கங்குலும் பகல் பட வந்தான்

கம்ப இராமாயணம் - கங்குலும் பகல் பட வந்தான் 


இராவணன் பாத்திரத்தை கம்பன் செதுக்கியது போல இன்னொரு பாத்திரத்தை செதுக்கினானா என்று தெரியவில்லை. 


ஒரு புறம் மாபெரும் வீரம், இந்திராதி தேவர்களின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் வீரம், இன்னொரு புறம் அளவுகடந்த சிவ பக்தி, இன்னொரு புறம் இறைவனை இறங்கி வரச் செய்யும் இசை ஞானம், மறு புறம் கல்வி கேள்விகளில் சிறந்த அறிவு....இது எல்லாம் ஒரு புறம். 


இன்னொரு புறம், சீதையின் மேல் அளவு கடந்த காமம், தம்பிகள் மேல் வாஞ்சை, மகன் மேல் உயிர் உருகும் அன்பு....


அறிவு, வீரம், காமம், காதல், பாசம், அன்பு என்று அனைத்தும் கலந்த கலவையாக இருக்கிறான். 


அவனின் வீரம், கம்பீரம் ஒரு புறம் இருந்தாலும், இன்னொரு புறம் காமத்தால் அவன் எந்த அளவுக்கு ஒரு பெண்ணின் முன்னால் மண்டியிட்டு இறைஞ்சுகிறான் என்று பார்க்கும் போது பாவமாக இருக்கிறது. 


இராவணன், சீதையை பார்த்துப் பேசும் இடங்கள்...நான் என்ன சொல்ல அந்த கவிதைகளை நீங்களே பாருங்கள். 


அசோகவனம் நோக்கி இராவணன் வருகிறான்....


"உலகில் உள்ள பெரிய மலைகள் எல்லாம் ஒன்றாக ஒரு இடத்தில் சேர்ந்தால் எப்படி இருக்கும். அது போல இருந்தது பத்துத் தலையோடு இராவணன் வருவது. உடல் எங்கும் ஆபரணங்கள். அதில் இள வெயில் பட்டு ஜொலிக்கிறது. அது கடல் நீரில் சூரிய ஒளி பட்டு மின்னுவது போல இருக்கிறது. அவன் வரும் போது இரவு கூட பகல் போல ஒளி விடும்"


பாடல் 


 சிகர வண்குடுமி நெடு வரை எவையும்

     ஒரு வழித்திரண்டன சிவண,

மகரிகை வயிரகுண்டலம் அலம்பும்

     திண்திறல் தோள் புடை வயங்க,

சகர நீர் வேலைதழுவிய கதிரின்,

     தலைதொறும்தலைதொறும் தயங்கும்

வகைய பல் மகுடம்இள வெயில் எறிப்ப,

     கங்குலும்பகல்பட, வந்தான்.


பொருள் 



https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_17.html


(please click the above link to continue reading)





 சிகர = சிகரங்கள், மலைகள் 


 வண்குடுமி = உயர்ந்த உச்சி, மலை உச்சி 


நெடு வரை = நீண்ட மலைகள் 


எவையும் = அனைத்தும் 


ஒரு வழித்திரண்டன சிவண, = ஓரிடத்தில் சேர்ந்தது போல 


மகரிகை = மீன் வடிவாய் அமைந்த ஆபரணங்கள் 


வயிரகுண்டலம் = வயிரத்தால் அமைந்த காதில் அணியும் குண்டலம் 


அலம்பும் = அசையும் 


திண்திறல் தோள் புடை = புடைத்த, உறுதியான தோள்களில் 


வயங்க = விளங்க 


சகர நீர் வேலை  = சகர புத்திரர்கள் தோண்டியதால் உண்டானது சாகரம். கடல். அந்த கடல் நீரில் 


தழுவிய கதிரின் = பிரதிபலிக்கும் சூரிய ஒளி 


தலைதொறும்தலைதொறும்  = ஒவ்வொரு தலையிலும் 


தயங்கும் = விளங்கும் 


வகைய = விளங்கும் 


பல் மகுடம் = பல மகுடங்கள் (பத்து) 


இள வெயில் எறிப்ப, = இளமையான வெயில் (மாலை நேரமாக இருக்கும்) 


கங்குலும்பகல்பட, வந்தான். = இரவு கூட பகல் போல் வெளிச்சமாக தோன்றும் படி வந்தான். 


என்ன ஒரு buildup.


கடலுக்கு சாகரம் என்று ஒரு பெயர் உண்டு. 


சகர புத்திரர்கள் தோண்டியதால் அதற்கு சாகரம் என்று பெயர்.


அந்தக் கதையை இங்கே காணலாம். 


https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2014/oct/31/%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-1004451.html