Showing posts with label நாலாயிர திவ்ய பிரபந்தம். Show all posts
Showing posts with label நாலாயிர திவ்ய பிரபந்தம். Show all posts

Wednesday, April 21, 2021

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கண்ணீர் மழைசோர நினைந்து உருகி

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - கண்ணீர் மழைசோர நினைந்து உருகி 


அன்பு அதிகமாகிக் கொண்டே போகும் போது ஒரு இடத்தில் வார்த்தைகள் பயனற்றுப் போய், கண்ணீர் ஒன்றே அந்த அன்பை வெளிப்படுத்தும் ஊடகமாக மாறி விடுகிறது. 


அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ், ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும் என்பார் வள்ளுவப் பெருந்தகை. 


காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி என்பார் திரு ஞானசம்பந்தர். 


அன்பின் உச்சம் கண்ணீராகத்தான் இருக்கிறது. 


கிணறு வெட்ட நிலத்தை தூர்த்துக் கொண்டே போவோம். ஒரு இடத்தில் நிலத்தடி நீர் மேலே வந்து விடும். பெருமாள் மேல் பக்தர்கள் கொண்ட காதல் இருக்கிறதே அது எவ்வளவு தூரம் ஆழமாகப் போகும் என்று யாருக்கும் தெரியாது. தூராத மனக் காதல் அது. 


தாய்ப் பசுவைக் கண்டதும் கன்றுக் குட்டி துள்ளி குதித்துக் கொண்டு ஓடும். அதுக்கு ஆனந்தம் தாங்காது. சரியாக குதிக்கிரோமா என்று கூடத் தெரியாது. கண் மண் தெரியாமல் குதிக்கும். கீழே விழும். புரண்டு எழும். மீண்டும் துள்ளும். அப்படி ஒரு பாசம். அன்பு. துடிப்பு. 


ஆண்டவனைக் கண்டதும் பக்தர்களுக்கும் அப்படி ஒரு பரவசம் வருமாம். கண்ணில் நீர் தாரை தாரையாக வழியும். அவனை கண்டு கொண்டேன் என்று ஒரே ஆனந்தம். துள்ளிக் கொண்டு ஒடுவார்களாம். தரையில் விழுந்து புரள்வார்களாம். 


அப்படி ஒரு பரவச நிலை எனக்கு வரவில்லையே.  அவர்களோடு சேர்ந்து தானும் அவ்வாறு பரவசம் அடையும் நாள் அது என்று வருமோ என்று ஏங்குகிறார் குலசேகர ஆழ்வார். 


பாடல் 


தூராத மனக்காதல் தொண்டர் தங்கள் குழாம்குழுமித் திருப்புகழ்கள் பலவும் பாடி


ஆராத மனக்களிப்போ டழுத கண்ணீர் மழைசோர நினைந்துருகி யேத்தி நாளும்


சீரார்ந்த முழவோசை பரவை காட்டும் திருவரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்


போராழி யம்மானைக் கண்டு துள்ளிப் பூதலத்தி லென்றுகொலோ புரளும் நாளே


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_34.html


(click the above link to continue reading)


தூராத மனக்காதல்  = ஆழம் காண முடியாத காதல் 


தொண்டர் தங்கள் = தொண்டர்கள் 


குழாம் = குழு 


குழுமித் = ஒன்றாகச் சேர்ந்து 


திருப்புகழ்கள் பலவும் பாடி = இறைவனுடைய திருப்புகழ்கள் பலவும் பாடி 


ஆராத  = தீராத 


மனக்களிப்போ டழுத  கண்ணீர் = தீராத மனக் களிப்போடு அழுது கண்ணீர் 


மழைசோர = மழை போல வடிய 


நினைந்துருகி யேத்தி = நினைந்து உருகி போற்றி 


நாளும்= ஒவ்வொரு நாளும் 


சீரார்ந்த முழவோசை = சிறந்த வாத்தியங்களின் முழவு ஓசை 


பரவை காட்டும் = கடல் போல் ஒலிக்க 


திருவரங்க தரவணையில் = திருவரங்கத்தில், பாம்பணையில் 


பள்ளி கொள்ளும் = பள்ளி கொண்டிருக்கும் 


போராழி யம்மானைக் = பெரிய சக்கரத்தை உடைய அம்மானை 


கண்டு = கண்டு 


துள்ளிப் = பரவசத்தில் துள்ளி 


பூதலத்தி லென்றுகொலோ  = இந்த பூமியில் என்றோ 


புரளும் நாளே = புரளும் நாளே 


உலகியல் இன்பங்கள் கொஞ்ச நேரத்தில் ஆறி விடும். திருப்தி வந்து விடும். இன்னும் சொல்லப் போனால் ஆசை மாறி வெறுப்பே வந்து விடும். 


லட்டு நன்றாக சுவையாக இருக்கும். ஒன்றிரண்டு உண்ணலாம். அதற்கு மேல் முடியாது. அந்த ஆசை ஆறி விடும். 


ஆனால், இறைவனை கண்டு மகிழும் ஆசை ஆறவே ஆறாது. மேலும் மேலும் பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றும் என்கிறார். 


"ஆறாத  மனக் களிப்பு " 


அதே போல், "தூராத மனக் காதல்" ஆழம் காண முடியாத காதல். 


பிரபந்தத்தை வார்த்தைகளால் உணர முடியாது. வார்த்தைகளைத் தாண்டிய அனுபவம் அது.  


வாய்த்தால் நல்லது. 


Tuesday, April 20, 2021

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கண்கள் நீர் மல்க நிற்கும் நாள் என்றோ ?

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - கண்கள் நீர் மல்க நிற்கும் நாள் என்றோ ?


நாம் ஒருவரிடம் ஒரு உதவியை எதிர் பார்த்துப் போகிறோம். அவர் எவ்வளவு செய்வார், எப்படி செய்வார் என்று தெரியாது. நம் எதிர்பார்ப்பு என்னவோ கொஞ்சம் தான். அதுவும் சந்தேகத்தோடுதான்.


அவரைப் பார்த்தவுடன், அவர் நாம் எதிர்பார்த்ததை விட பல மடங்கு உதவியை செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம், அவரின் அன்பு நினைத்து நம் மனம் எப்படி இளகும். அடடா, அந்த மனிதனுகுத்தான் என் மேல் எவ்வளவு அன்பு, கரிசனம். அவர் செய்த மாதிரி யார் செய்வார் என்று நினைந்து நினைத்து உருகுவோம் அல்லவா?


அது போல உருகுகிறார் குலசேகர ஆழ்வார். 


"நம் மனமோ எப்போதும் ஏதாவது தீய எண்ணங்களிலேயே மூழ்கிக் கிடக்கிறது. அதை விட்டுவிட்டு, மனதில் உள்ள வஞ்சனை எண்ணங்களை துடைத்து எறிந்து விட்டு , ஐந்து புலன்களை அடக்கி, சாகும் வரை அவனையே நினைத்துக் கொண்டிருக்கும், முடிவு இல்லாத பழைய நெறிகளை பின் பற்றி அதில் நிலைத்து நிற்கும் அடியவர்களுக்கான கதியான திருவரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கும் மாயோனை கண்ணில் நீர் மல்க நின்று காணும் நாள் எதுவோ"


என்று உருகுகிறார்.


பாடல் 


மறந்திகழு மனமொழித்து வஞ்ச மாற்றி ஐம்புலன்க ளடக்கியிடர்ப் பாரத் துன்பம்


துறந்துஇருமுப் பொழுதேத்தி யெல்லை யில்லாத் தொன்னெறிக்கண் நிலைநின்ற தொண்ட ரான


அறம்திகழும் மனத்தவர்தம் கதியைப் பொன்னி அணியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்


நிறம்திகழும் மாயோனைக் கண்டென் கண்கள் நீர்மல்க என்றுகொலோ நிற்கும் நாளே


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_70.html


(click the above link to continue reading)


மறந்திகழு  = மறம் + திகழும் = எப்போதும் சண்டை சச்சரவு என்றே அலைந்து கொண்டிருக்கும் 


மனமொழித்து = மனதை ஒழித்து. அதாவது, அந்த எண்ணங்களை ஒழித்து 


வஞ்ச மாற்றி  = வஞ்சக எண்ணங்களை மாற்றி 


ஐம்புலன்க ளடக்கி = ஐந்து புலன்களை அடக்கி 


இடர்ப் பாரத் துன்பம் = பெரிய பாரமான துன்பம். அதாவது பழைய வினைகள். 


துறந்து  = அறுத்து 


இருமுப் பொழுதேத்தி = இருமும் பொழுதில் போற்றி. அதாவது, இறக்கும் தருவாயில் போற்றி 


 எல்லை யில்லாத் = முடிவு இல்லாத. இங்கே, ஆரம்பம் இல்லாத 


தொன்னெறிக்கண் = தொன்மையான நெறியின் கண் 


நிலைநின்ற = நிலைத்து நின்ற, அதாவது, அதை இடைவிடாமல் கடை பிடித்து 


தொண்ட ரான = தொண்டர்களான 


அறம்திகழும் = அறம் எப்போதும் மனதில் இருக்கும் 


மனத்தவர்தம் = மனதை உடையவர்களுடைய 


கதியைப் = கதியை, வழியை, செல்லும் பாதையை 


பொன்னி = பொன்னி நதி 


அணியரங்கத் தரவணையில் = அணி செய்யும் பாம்பணையில் 


பள்ளி கொள்ளும் = பள்ளி கொள்ளும் 


நிறம்திகழும் = கரிய நிறத்தோடு திகழும் 


மாயோனைக் = மாயோனை 


கண்டென் = கண்டு என் 


கண்கள் = கண்கள் 


நீர்மல்க = நீர் நிறைந்து நிற்க 


என்றுகொலோ நிற்கும் நாளே = எப்போது அப்படி நிற்கப் போகிறேன் 



"இருமுப் பொழுதேத்தி" அது என்ன இருமும் பொழுது போற்றி. அப்படி என்றால் மற்ற நேரங்களில் போற்றக் கூடாதா? சாகும் போதுதான் போற்ற வேண்டுமா?


எப்போதும் போற்றிக் கொண்டே இருந்தால் தான், சாகும் தருவாயில் அது வரும். 


"சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே." என்பார் அருணகிரிநாதர் கந்தர் அலங்காரத்தில் 


சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்

வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளி

காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்

சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே.



புலவர் கீரன் இது பற்றி ஒரு நகைச்சுவை கதை ஒன்று சொல்லக் கேட்டு இருக்கிறேன். 


சாகும் போது எதை நினைத்துக் கொண்டே சாகிறோமா, அதை நாம் மறு பிறவியில் அடைவோம் என்பது நம்பிக்கை. அப்படி என்றால், பெரும் பணக்காரனாக வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இறந்தால், மறு பிறவியில் பெரும் பணக்காரனாகி விடலாமே என்றால், சாகும் போது அந்த நினைப்பு வர வேண்டுமே? அந்த நேரத்தில் தொண்டை அடைக்கும், மல சலம் துடைக்காமல் உறுத்திக் கொண்டு இருக்கும். இருமி இருமி நெஞ்சு வலிக்கும். பணம் எங்கே நினைவு வரும்?


கீரன் சொல்வார்,


ஒரு கிழவி சாகக் கிடந்தாளாம்.  அருகில் இருந்தவர்கள் எல்லோரும், "கிழவி நல்லதா நாலு வார்த்தை சொல்லு " என்று சொல்லிக் கொண்டு இருந்தார்களாம். 


அந்தக் கிழவியும், மிக முயற்சி செய்து "மு" என்று சொன்னாளாம். 


உடன் இருந்தவர்கள் எல்லோரும் மகிழ்ந்து, "ம்ம்...மேல சொல்லு மேல சொல்லு" என்றார்களாம். 


கிழவியும் "முரு" என்று இரண்டு எழுத்தை சொன்னாளாம். எல்லோருக்கும் ரொம்ப மகிழ்ச்சி. ஆஹா முருகன் பெயரைச் சொல்லப் போகிறாள். அவளுக்கு முக்தி தான் என்று நினைத்து, "ம்ம்...மேல சொல்லு மேல சொல்லு " என்றார்களாம்...


கிழவியும், தன் சக்தியெல்லாம் கூட்டி "முருக முருக இரண்டு தோசை கொண்டு வாருங்கள் என்றாளாம்" 


அவளுடைய பசி அவளுக்குத் தான் தெரியும். 


மீண்டும் பாசுரத்துக்கு வருவோம். 


இறைவனை அடைய வழி சொல்கிறார் ஆழ்வார். ஏதோ பாசுரம் படித்தோம், இரசித்தோம், என்று இருக்காமல், அவை என்ன என்று சிந்திப்போம். முடிந்தவரை அவற்றை செயல் படுத்த முனைவோம். 


முதலாவது, மனதில் உள்ள "மற" எண்ணங்களை மாற்ற வேண்டும். துவேஷம்,  போட்டி, பொறாமை போன்றவை. 


இரண்டாவது, வஞ்சக எண்ணங்களை போக்க வேண்டும். உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசும் வஞ்சக மனதை விட்டு ஒழிக்க வேண்டும். 


மூன்றாவது, ஐந்து புலன்களை அடக்க வேண்டும். 


நான்காவது, எப்போதும் இறை நாமத்தை சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். 


ஐந்தாவது, வேத நெறிகளில் நின்று ஒழுக வேண்டும். 


ஆறாவது, மனதில் அறச் சிந்தனைகள் நிறைந்து இருக்க வேண்டும். 


இதில் ஆழ்வார் ஒரு முக்கியமான செய்தியைச் சொல்கிறார். இது வரை கேள்விப் பட்டிராத ஒன்று. வியாக்கியானங்களை புரட்டிப் பார்த்தேன், தெளிவாகவில்லை. 


அன்பர்கள் சொன்னால் கேட்டுக் கொள்கிறேன். 


"அறம்திகழும் மனத்தவர்தம் கதியைப்"


கதி என்றால் வழி.  அதோகதி, பிரகதி என்று சொல்கிறோம் அல்லவா.  இங்கே கதி என்றால் விதி என்றும் கொள்ளலாம். 


இறைவன் என்பவன் சென்று அடையும் ஒரு இடமோ, பொருளோ, ஆளோ அல்ல. அவன் தான் வாழ்கை நெறி  என்கிறார். இங்கே "அவன் தான்" என்று சொல்லே சரி இல்லை. 


ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய விஷயம்.  இப்போதைக்கு விடை கிடைக்கவில்லை.  என்றேனும் கிடைக்கலாம்.



Monday, April 19, 2021

நாலாயிர திவ்ய பிரபந்தம் - என்று கொலோ வாழ்த்தும் நாளே !

நாலாயிர திவ்ய பிரபந்தம் - என்று கொலோ வாழ்த்தும் நாளே !


Rembrandt போன்ற மேலை நாட்டு ஓவியர்கள் ஆகட்டும், இரவி வர்மா போன்ற இந்திய ஓவியர்கள் ஆகட்டும், அவர்களின் ஓவியங்கள் தத்ரூபமாக இருக்கும். படகு கவிழ்வது போன்ற ஒரு  Rembrandt வரைந்த படம் ஒன்று இருக்கிறது. அதைப் பார்த்துக் கொண்டே இருந்தால், ஏதோ நாம் அந்த படகில் இருப்பது போல இருக்கும். 


அதை எல்லாம் விட குலசேகர ஆழ்வார் பாடிய பாசுரம் இருக்கிறது. படித்துப் பாருங்கள். அதன் பிரமாண்டம், மெய் சிலிர்க்கும் வர்ணனை தெரியும். பாடிய பின் குலசேகர ஆழ்வாரே சொல்கிறார், இது எனக்கே மயக்கம் தருகிறது. தூணை கொஞ்சம் பிடித்துக் கொள்கிறேன் என்கிறார். 


கம்பன், நரசிம்மத்தை காட்டிய மாதிரி ஒரு மெய் சிலிர்க்கும் அனுபவம். 


பாடல் 

 வாயோரீ ரைஞ்ஞூறு துதங்க ளார்ந்த வளையுடம்பி னழல்நாகம் உமிழ்ந்த செந்தீ


வீயாத மலர்ச்சென்னி விதான மேபோல் மேன்மேலும் மிகவெங்கும் பரந்த தன்கீழ்


காயாம்பூ மலர்ப்பிறங்க லன்ன மாலைக் கடியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்


மாயோனை மணத்தூணே பற்றி நின்றென் வாயார என்றுகொலோ வாழ்த்தும் நாளே!


நேரடியாக படித்தால் புரியாது. அந்தக் காலத்து தமிழ். 


முதலில் அவர் என்ன சொல்ல வருகிறார் என்று பார்ப்போம். அப்புறம், சொல்லுக்குச் சொல் அர்த்தம் பார்ப்போம். 


"ஒரு இருண்ட கர்ப்ப கிரகம். ஓரத்தில் ஒரு சின்ன விளக்கு எரிந்து கொண்டு இருக்கிறது. வெளியில் இருந்து வந்த நம் கண்கள் சற்று சிரமப் படுகின்றன என்ன இருக்கிறது என்று அறிந்து கொள்ள. கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே இருப்பது தெரிய வருகிறது. 


ஒரு பெரிய பாம்பு. ஆயிரம் தலை. அதன் வாயில் இருந்து நெருப்பு பறக்கிறது. சில வாய்கள் மந்திரம் சொல்லிக் கொண்டு இருக்கின்றன. அந்த நெருப்பு பொறி பட்டுத் தெறித்து கீழே விழுகிறது. அது ஏதோ சிவந்த மலர் கொண்டு அர்சிப்பதைப் போல இருக்கிறது.  


நெளியும் தலைகள். நெருப்பு உமிழும் வாய்கள். மந்திரம் சொல்லும் வாய்கள். அந்த மந்திர உச்சாடன சப்த்தம் நம்மை வேறு ஒரு உலகுக்கு கொண்டு செல்கிறது. 


கீழே, இதைப் பற்றி ஒரு கவலையும் இல்லாமல் கண் மூடி மோன தவம் இருக்கும் ஒரு உருவம். 


பார்க்கவே ஏதோ பெரிய அமானுஷ்யமான , பயம் தரும் தோற்றம். பார்த்துக் கொண்டிருந்த குலசேகர ஆழ்வாருக்கு உலகமே சுத்துவது போல இருக்கிறது.  எங்கே கீழே விழுந்து விடுவோமோ என்று அருகில் உள்ள தூணை பற்றிக் கொள்கிறார். 


அந்த உருவத்தின் மேல் இருந்து கண்ணை எடுக்க முடியவில்லை. அப்படி ஒரு வசீகரம். பயம் கலந்த வசீகரம். 


இப்படி ஒரு நிலையில், அந்த தரிசனத்தை வாயார வாழ்த்தும் நாள் எந்த நாளோ என்று ஏங்குகிறார். 


இப்போது அர்த்தத்தை பார்ப்போம் 


பாடல் 

 வாயோரீ ரைஞ்ஞூறு துதங்க ளார்ந்த வளையுடம்பி னழல்நாகம் உமிழ்ந்த செந்தீ


வீயாத மலர்ச்சென்னி விதான மேபோல் மேன்மேலும் மிகவெங்கும் பரந்த தன்கீழ்


காயாம்பூ மலர்ப்பிறங்க லன்ன மாலைக் கடியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்


மாயோனை மணத்தூணே பற்றி நின்றென் வாயார என்றுகொலோ வாழ்த்தும் நாளே!


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_19.html


(click the above link to continue reading)

 

வாயோரீ ரைஞ்ஞூறு  = வாயோ + ஈரைந்து நூறு = அதாவது 500 x 2 = 1000 வாய். 


துதங்க ளார்ந்த = துதம் என்றால் ஸ்தோத்திரம். மந்திரங்கள் ஆர்பரிக்க 


வளையுடம்பி னழல்நாகம் = வளை + உடம்பின் + அழல் + நாகம் = வெளுத்த உடம்பைக் கொண்ட அனல் கக்கும் நாகம் 


உமிழ்ந்த செந்தீ = வாயில் இருந்து புறப்பட்ட சிவந்த நெருப்பு 


வீயாத மலர்ச்  = அழிவில்லாத, வாடாத மலர் 


சென்னி = தலை மேல் உள்ள 

விதான மேபோல் = கூரை போல.  அதாவது, அந்த ஆயிரம் தலைகளும் கூரை போல இருக்கிறதாம். 


மேன்மேலும் = மேலும் மேலும் 


மிகவெங்கும் = எல்லா இடத்திலும் 


பரந்த தன்கீழ் = விரிந்து, பரந்து இருக்க 



காயாம்பூ = காயம் பூ 


மலர்ப்பிறங்கல்  = மலரால் செய்த மாலை 


அன்ன = போல 


 மாலைக் = பெருமை மிக்க 


கடியரங்கத் தரவணையில் = கடி அரங்கத்து அரவவனையில் = காவலை உடைய திருவரங்கத்தில் நாக சயனத்தில்  


பள்ளி கொள்ளும் = பள்ளி கொண்டிருக்கும்



மாயோனை = மாயோனை 


மணத்தூணே பற்றி = மணத் தூணே பற்றி 


நின்றென் வாயார = நின்று என் வாயார 


என்றுகொலோ = என்று 


வாழ்த்தும் நாளே! = வாழ்த்தும் நாளே 


(குறிப்பு: மணத் தூண் பற்றி வைணவ பெரியவர்கள் பல வியாக்யானங்கள் எழுதி இருக்கிறார்கள். ஆர்வம் உள்ளவர்கள் அவற்றை கண்டு தெளிக). 


கண் மூடி அந்த காட்சியை ஒரு முறை மனதில் ஓட விட்டுப் பாருங்கள். 


ஆழ்வார் எந்த அளவுக்கு பெருமாளை அனுபவித்து இருக்கிறார் என்று தெரியும். 




Saturday, April 17, 2021

நாலாயிர திவ்ய பிரபந்தம் - என்று கொலோ களிக்கும் நாளே

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - என்று கொலோ களிக்கும் நாளே 


திருவரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாளே, உன்னை நான் கண்டு களிக்கும் நாள் எந்த நாளோ என்று ஏங்குகிறார் குலசேகர ஆழ்வார்.


என்ன பிரச்சனை? போய் பார்த்துவிட்டு வர வேண்டியதுதானே? அவரை யார் தடுத்தார்கள். 


நாம் சில சமயம் கண் விழித்து அமர்ந்து இருப்போம். எதிரில் ஒரு நண்பர் கடந்து போய் இருப்பார். நாம் கவனித்து இருக்க மாட்டோம். பின் ஒரு நாள், நண்பர் கூறுவார் "நான் அன்னிக்கு உன்னைப் பார்த்து கை ஆட்டினேன்..நீ கண்டு கொள்ளவே இல்லை" என்று. நம் கவனம் எல்லாம் எங்கோ இருந்திருக்கும். எதிரில் உள்ள ஆள் தெரிந்து இருக்காது. 


அவ்வளவு ஏன், 


வீட்டில் மனைவி கணவனிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருப்பாள்...அவரும் உம் உம் என்று கேட்டுக் கொண்டிருப்பார். அம்மையார் நேரில் வந்து "என்ன நான் சொல்றது உங்க காதுல விழுதா இல்லையா...இப்ப நான் என்ன சொல்லிக்கிட்டு இருந்தேன் சொல்லுங்க பாப்போம்" என்று மடக்கினால், திரு திரு என்று முழிப்பார். 


காரணம், காது இங்கே தான் இருக்கிறது, ஆனால் மனம் வேறு எங்கோ இருக்கிறது. 


கோவிலுக்குப் போகலாம், சுவாமியை தரிசனம் பண்ணலாம், மனம் அங்கு இருந்தால் தானே....கண்ணை மூடினால் வீட்டுப் பிரச்சனை, அலுவலகப் பிரச்சனை, மாமியார் பிரச்சனை என்று ஏதேதோ மனதுக்குள் ஓடுகிறது. 


அதை எல்லாம் விட்டு விட்டு, பெருமாளே உன்னை மட்டும் கண்டு களிக்கும் நாள் எந்நாளோ என்று ஏங்குகிறார். 


அற்புதமான பாசுரம். 


பாடல் 


*

இருளிரியச் சுடர்மணிக ளிமைக்கும் நெற்றி இனத்துத்தி யணிபணமா யிரங்க ளார்ந்த


அரவரசப் பெருஞ்சோதி யனந்த னென்னும் அணிவிளங்கு முயர்வெள்ளை யணையை மேவி


திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி திரைக்கையா லடிவருடப் பள்ளி கொள்ளும்


கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டுஎன் கண்ணிணைக ளென்றுகொலோ களிக்கும் நாளே


*


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_72.html


(click the above link to continue reading)


இருளிரியச் = இருளை அரிய, இருளை கிழித்துக் கொண்டு 


சுடர் = சுடர் விடும் 


மணி களிமைக்கும் = மணிகள விட்டு விட்டு பிரகாசிக்கும் 


நெற்றி = நெற்றி


இனத்துத்தி = புள்ளிகளை உடைய 


யணி = அழகாக 


பணமா யிரங்க ளார்ந்த = ஆயிரம் படங்கள் படம் எடுத்து ஆட (ஆர்த்த = எழுந்து நிற்க) 


அரவரசப் = அரவுகளுக்கு (பாம்புகளுக்கு) அரசனான 


பெருஞ்சோதி = பெரிய ஜோதி வடிவான 


யனந்த னென்னும் = அனந்த ஆழ்வார் என்று அழைக்கப்படும் 


அணிவிளங்கு = அழகு மிகுந்த 


முயர் = உயர்ந்த 


வெள்ளை யணையை = வெண்மையான தலையணையில் 


மேவி = துயின்று 



திருவரங்கப் பெருநகருள் = திருவரங்கம் என்ற பெரிய நகரில் 


தெண்ணீர்ப் = தெளிந்த நீர் 


பொன்னி = பொன்னி நதி 


திரைக் = அலை என்ற 


கையால் = கையால் 


அடிவருடப் = திருவடிகளை வருட 


பள்ளி கொள்ளும் = பள்ளி கொள்ளும் 


கருமணியைக்  = கரிய மணியை 


கோமளத்தைக் = கோமளத்தை 


கண்டு கொண்டு = கண்டு கொண்டு 


என் = என்னுடைய 


கண்ணிணைகள் = கண் + இணைகள் = இரண்டு கண்களும் 


ளென்றுகொலோ = எப்போது 


களிக்கும் நாளே = இன்பமுறும் நாள் ?


பொன்னி நதியில் அலை அடிக்கிறது. அது பெருமாளின் பாதங்களை வருடி விடுவது போல் இருக்கிறதாம். 


குலசேகர ஆழ்வாரைப் போல அனுபவிக்க முடியுமா?


பெருமாள் முன் நிற்கிறார்....


பெருமாளின் வடிவம், பின்னால் உள்ள ஆதிசேஷன் உயிர் கொண்டு எழுந்து அந்த படங்களில் இருந்து கண்கள் ஒளி விடுவது போல இருக்கிறது. அவரின் பார்வை இன்னும் விரிகிறது. தலையில் இருந்து கால் நோக்கி வருகிறார். அங்கு பொன்னி நதி சல சலத்து ஓடிக் கொண்டிருக்கிறது. அது பெருமாளின் பாதங்களை வருடுவது போல் இருக்கிறது. 


அதில் இலயித்து இருக்கும் போது மனம் எங்கோ ஓடுகிறது. அந்த அனுபவ இன்பத்தை முழுமையாக அடைய முடியவில்லை. வந்த காட்சி ஓடி விட்டது. 


அதை எப்போது அடையப் போகிறேனோ என்று ஏங்குகிறார். 


குலசேகர ஆழ்வார் பாடு அப்படி. 


நாம் எல்லாம் எந்த மூலை என்று நாமே அறிந்து கொள்ள வேண்டியதுதான். 


எந்த அனுபவமும் நமக்கு முழுமையாக கிடைப்பது இல்லை. ஒன்றைப் பற்றும் போதே மனம் அதை விட்டு விட்டு மற்றொன்றுக்குத் தாவுகிறது. 


மனம் ஒன்றி அந்தக் காட்சியில் நிலைக்க வேண்டும் என்று வேண்டுகிறார். 


பொருள் முழுவதுமாக தெரிந்த பின், பாசுரத்தை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். 


சீர் பிரித்த பின் 



இருள் அரிய  சுடர்மணிகள் இமைக்கும் நெற்றி இனத்துத்தி  அணி பணம் ஆயிரங்கள் ஆர்த்த 


அரவு அரசன் பெருஞ் சோதி அனந்தன் என்னும்  அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி 


திருவரங்கப் பெரு நகருள் தெண்ணீர்ப் பொன்னி  திரைக் கையால் அடி வருடப்  பள்ளி கொள்ளும்


கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டு என் கண் இணைகள் என்று கொலோ களிக்கும் நாளே 

Friday, February 19, 2021

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கள்ளமே காதல் செய்து

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கள்ளமே காதல் செய்து  


வெள்ளநீர் பரந்து பாயும் விரிபொழி லரங்கந் தன்னுள்

கள்ளனார் கிடந்த வாறும் கமலநன் முகமும் கண்டு

உள்ளமே வலியைப் போலும் ஒருவனென் றுணர மாட்டாய்

கள்ளமே காதல் செய்துன் கள்ளத்தே கழிக்கின் றாயே.


அன்பு செய்வதைத் தவிர இங்கு வேறு என்ன வேலை இருக்கிறது? எதன் மீதாவது, யார் மீதாவது அன்பு செய்து கொண்டே இருப்பது ஒன்று தான் வேலை. அன்பு செய்வதை விட்டு விட்டு, பின் வேறு என்ன செய்வது? அன்பு இல்லாவிட்டால், எதற்கு எதையும் செய்ய வேண்டும்.


நமக்கு மட்டும் அல்ல, அந்த இறைவனுக்கும் அது தான் வேலை. தன்னைத் தானே அன்பு செய்து கொள்ள முடியுமா? இப்படி பல்லாயிரம் உயிர்களைப் படைத்து அவை ஒவ்வொன்றின் உள்ளிருந்தும் அன்பை கொடுத்தும், பெற்றும் இடை விடாமால் அன்பை அனுபவித்துக் கொண்டிருக்கிறான். 


அன்பு என்பது கொடுப்பது மட்டும் அல்ல, பெறுவது மட்டும் அல்ல, கொடுக்கவும், பெற்றுக் கொள்ளவும் காத்துக் கிடப்பதும், ஏங்கி நிற்பதும், கிடைக்காமல் தவிப்பதும் எல்லாம் அன்பு தான். 


தெரியாமல் அன்பு செய்வது, மற்றவருக்குத் தெரியாமல் அவர் மனதை திருடிக் கொள்வது, மனதை பறி கொடுத்து நிற்பது..எல்லாம் அன்பின் வெளிப்பாடுதான். 


வைகுண்டத்தில் இருக்க வேண்டியதுதானே. இங்கு எதற்கு வர வேண்டும்? அன்பு வேண்டித்தான். 

அன்பு என்பது என்ன என்றே புரியாத மனங்களும் இருக்கின்றன. ஒரு கண் பார்வையில், ஒரு வார்த்தையில், ஒரு தொடலில், அன்பு கொட்டிக் கிடக்கும். அறிந்து கொள்ளும் மனம் இருந்தால், இங்கே அன்பின்றி வேறு ஒன்றும் இல்லை என்று தெரியும். 


வெள்ளநீர் பரந்து பாயும் விரிபொழி லரங்கந் தன்னுள்

கள்ளனார் கிடந்த வாறும் கமலநன் முகமும் கண்டு

உள்ளமே வலியைப் போலும் ஒருவனென் றுணர மாட்டாய்

கள்ளமே காதல் செய்துன் கள்ளத்தே கழிக்கின் றாயே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/02/blog-post_19.html


click the above link to continue reading.


வெள்ளநீர் = வெள்ளம் போல் நீர் 

பரந்து  = விரிந்து 

பாயும்  = பாய்கின்ற 

விரிபொழி லரங்கந் தன்னுள் = மலர்கள் விரிந்த, விரிந்து கொண்டு இருக்கின்ற, இனியும் விரியும் படி உள்ள சோலைகளில் 


கள்ளனார் = கள்வன்.  அடியவர்களின் மனங்களை அவர்கள் அனுமதி இல்லாமலேயே திருடிக் கொள்ளும் கள்ளன் 

கிடந்த வாறும்  = சயனத்தில் இருந்தவாறும் 

கமலநன் முகமும் கண்டு = தாமரை போன்ற முகத்தை கண்டும் 


உள்ளமே = உன்னுடைய உள்ளமே 

வலியைப் = கடினமானது

போலும் = போலும் 

ஒருவனென் றுணர மாட்டாய் = அவன் ஒருவனே என்று உணர மாட்டாய் 

கள்ளமே = கள்ளத்தனமாக 

காதல் செய்துன் = காதல் செய்து 

கள்ளத்தே கழிக்கின் றாயே. = உன் வாழ்வை கள்ளத்தனமாக கழிக்கின்றாயே 


என்கிறார் தொண்டரடிப் பொடி ஆழ்வார் 


கள்ளமே காதல் செய்து = எந்த காதலும் உண்மை கிடையாது. இன்றிருக்கும், நாளை போய் விடும். 


தவறானவற்றின் மேல் காதல் செய்து 

கள்ளத்தே கழிக்கின்றாயே = வீணாக கழிக்கின்றாயே 


திரு ஞான சம்மந்தர் சொல்லுவார் "என் உள்ளம் கவர் கள்வன்" என்று 


"தந்தது உன் தன்னை, கொண்டது என் தன்னை, சங்கரா, யார் கொலோ சதுரர்"...மணி வாசகர் 


அன்பே சிவம். 




Friday, February 12, 2021

நாலாயிர திவ்ய பிரபந்தம் - வாக்குத் தூய்மை

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - வாக்குத்  தூய்மை 


பெரியாழ்வார் பாசுரம்.


தமிழிலே "பழக்க வழக்கம்" என்று ஒரு சொற்றொடர் உண்டு. 


ஒன்றை திரும்ப திரும்பச் செய்வதை பழக்கமாகக் கொண்டால், அது வழக்கமாகி விடும். அப்புறம் நாம் நினைகாமாலையே அதை செய்து விடுவோம். 


காலையில் எழுந்தவுடன் பல் துலக்குவது மாதிரி. தன்னிச்சையாக நிகழும். 


பெரியாழ்வார் சொல்கிறார் 


"எனக்கு வாக்கு சுத்தம் கிடையாது. சொல்லில் வரும் குற்றங்கள் பல என்னிடம் உண்டு. இப்படி குற்றமுள்ள நாவால் உன்னை எவ்வாறு நான் போற்றுவேன். சரி, போற்றாமல் விட்டு விடலாம் என்றால், இந்த நாக்கு உன்னைப் போற்றி பழகி விட்டது. நான் சொன்னாலும் அது கேட்பது இல்லை. என் நாக்கு என் வசம் இல்லை.  நான் உன்னைப் போற்றி சொல்கின்ற சொற்களை ஏதோ காகம் கரைந்தது போல என்று எடுத்துக் கொள்ளேன்" என்கிறார். 



பாடல் 


வாக்குத் தூய்மை யிலாமையி னாலே மாத வாஉன்னை வாய்க்கொள்ள மாட்டேன்

நாக்கு நின்னையல் லால்அறி யாது நான தஞ்சுவன் என்வச மன்று

மூர்க்குப் பேசுகின் றானிவ னென்று முனிவா யேலும்என் நாவினுக்கு ஆற்றேன்

காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர் கார ணாகரு ளக்கொடி யானே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/02/blog-post_12.html


(click the above link to continue reading)


வாக்குத் = வாக்கில், பேச்சில் 


தூய்மை  = தூய்மை 


யிலாமையி னாலே = இல்லாததால் 


மாதவா  = மாதவா 


உன்னை = உன்னை 


வாய்க் கொள்ள மாட்டேன் = என் வாயால் சொல்ல மாட்டேன் 


நாக்கு = என்னுடைய  நாக்கு 


 நின்னையல் லால் = உன்னைத் தவிர 


அறி யாது = வேறு ஒன்றை அறியாது 


நான தஞ்சுவன் = நான் அதை நினைத்து அஞ்சுகிறேன் 


என் வசமன்று = என் நாக்கு என் வசம் அன்று 


மூர்க்குப் = மூர்கனைப் போல 


பேசுகின் றானிவ னென்று = பேசுகிறான் இவன் என்று 


முனிவா யேலும் = நீ என் மேல் கோபப் பட்டாலும் 


என்  = என்னுடைய 


நாவினுக்கு = நாவினை 


ஆற்றேன் = என்னால் கட்டுப் படுத்த முடியவில்லை 


காக்கை வாயிலும்  = காகத்தின் வாயில் இருந்து  வரும் சப்தங்களை கூட 


கட்டுரை கொள்வர் =உயர்ந்ததென்று கொள்வார்கள் 


காரணா = காரணம் என்ன என்றால், ஏன் என்றால் , 


கரு ளக்கொடி யானே. = கருடக் கொடியை கொண்டவனே 


"என் சொல் அவமெனினும் நின் நாமங்கள் தோத்திரமே " என்பார் அபிராமி பட்டர். 



"நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே"  என்பார் சுந்தரர். 



இந்த இரண்டையும் சொல்லாமல் விட்டு விடலாம்தான். ஆனால், சிலர், பாசுரத்தை விட்டு விட்டு, இதை கமெண்ட் ல் போடுவார்கள். அதைத் தவிர்க்கவே, சுட்டிக் காட்டினேன். 


மீண்டும் பாசுரத்துக்கு வருவோம். 


பெரியாழ்வார் என்ன சொல்ல வருகிறார். 


இறைவனின் நாமத்தை சொன்ன வாயால் மற்ற கீழான வார்த்தைகளை பேசக் கூடாது.  இறைவன் நாமத்தை சொல்ல வேண்டுமா, வாக்கில் தூய்மை வேண்டும். 


வாக்குத் தூய்மை என்றால் என்ன?


- பொய் சொல்லுதல் 

- புறம் சொல்லுதல் 

- கடும் சொல் 

- பயனற்ற சொற்கள் 


எங்கே ஒரு நாள் முயன்று பாருங்கள்.  இந்த நான்கு குற்றமும் சொல்லில் வராமால் பேசிப் பாருங்கள் பார்ப்போம். முதல் மூன்றைத் தவிர்த்தால் கூட, நான்காவதை தவிர்கவே முடியாது. பயனுள்ள சொற்களை எப்படி பேசுவது? 


பயனுள்ள சொற்கள் என்றால் மற்றவருக்கு இம்மைக்கும், மறுமைக்கும் பயன் தரும் சொற்கள் என்பார் பரிமேல் அழகர். 


ஒரு பக்கம் இறைவன் நாமம் நாவில். அதே நாவில், ஊரில் உள்ளவர்களை ஏசுவது, பொய் சொல்லுவது, வெட்டி பேச்சு பேசுவது. அது கூடாது என்கிறார் பெரியாழ்வார். 


"அவருக்கென்ன சொல்லுவார்...நடைமுறை னு ஒண்ணு இருக்குல்ல ...."


நாம நம்ம வேலையை பார்ப்போம். 

Saturday, February 6, 2021

நாலாயிர திவ்ய பிரபந்தம் - அன்பு செய்யும் அடியாரை உகத்தி

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - அன்பு செய்யும் அடியாரை உகத்தி 


நாம் கடவுள் மேல் அன்பு செய்வது ஒரு புறம் இருக்கட்டும். 

கடவுள் யார் மேல் அன்பு செய்கிறார் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?


நல்ல பணக்காரன், படிப்பு அறிவு உள்ளவன், உயர்ந்த குலத்தில் பிறந்தவன், ஆசார அனுஷ்டானங்களை கடை பிடிப்பவன் என்று தேர்ந்து எடுத்து அவர்கள் மேல் அன்பு செய்வானோ என்றால் இல்லை என்கிறார் தொண்டர் அடிப் பொடி ஆழ்வார். 


இறைவன் யார் மேல் பிரியமாக இருப்பான் என்றால், அவன் மேல் யார் அன்போடு இருக்கிறார்களோ அவர்கள் மேல் அவனும் அன்போடு இருப்பான். அவ்வளாவு தான். இறைவனுக்கு தெரிந்தது எல்லாம் அன்பு ஒன்று தான். குலம், கோத்திரம், ஜாதி, மதம், பணம், அறிவு இதெல்லாம் இறைவனுக்கு ஒரு பொருட்டே இல்லை. 


அன்பு ஒன்று அவன் அறிந்து மொழி. 


பாடல் 


அடிமையில் குடிமை யில்லா அயல்சதுப் பேதி மாரில்

குடிமையில் கடைமை பட்ட குக்கரில் பிறப்ப ரேலும்

முடியினில் துளபம் வைத்தாய் மொய்கழற் கன்பு செய்யும்

அடியரை யுகத்தி போலும் அரங்கமா நகரு ளானே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/02/blog-post.html


(plese click the above link to continue reading)


அடிமையில் = தொண்டு செய்வதில் 

குடிமை யில்லா = உயர் குடியில் பிறக்காத 

அயல் = வேறானா 

சதுப் பேதி மாரில்  = நான்கு வேதங்களையும் கற்று அறிந்த வேதியர்களை விடவும் 

குடிமையில் = குடிப்பிறப்பில் 

கடைமை பட்ட = கீழான 

குக்கரில் பிறப்ப ரேலும் = குடும்பத்தில் பிறந்தாலும் 

முடியினில் துளபம் = தலையில் துளசி மாலையை 

வைத்தாய் = வைத்தவனே 

மொய்கழற் கன்பு செய்யும் = உன்னுடைய திருவடிகளுக்கு அன்பு செய்யும் 

அடியரை யுகத்தி போலும் = அடியவர்கள் மேல் ஆர்வம் (உகத்தி) போலும் 

அரங்கமா நகரு ளானே. = திருவரங்கத்தில் எழுந்து அருளி இருப்பவனே 


பெருமாளுக்கு பேதம் இல்லை. 

எவ்வளவு பாராயணம் பண்ணினாலும், எத்தனை முறை திருப்பிச் சொன்னாலும், மனதில் அன்பு இல்லாவிட்டால் ஒன்றும் பயன் இல்லை. 




Monday, November 30, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - என் தலை மேல் அசைமின்கள்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - என் தலை மேல் அசைமின்கள் 


Poetry is the language of hearts என்று சொல்லுவார்கள். கவிதையை இதயத்தில் இருந்து படிக்க வேண்டும். மூளையில் இருந்து அல்ல. கவிதையின் உயிர் அது சொல்லம் உணர்சிகளில் இருக்கிறது. 


அந்த உணர்வை தொட்டு விட்டால், "அட" என்று வியக்க வைக்கும். இல்லை என்றால் "இதுல என்ன இருக்கு" என்று கேள்வி கேட்கத் தோன்றும். 


பெரும்பாலான பிரபந்தப் பாடல்களை படிக்கும் போது, அர்த்தம் கை நழுவிப் போய் விடுகிறது. உணர்ச்சி ஒட்டிக் கொண்டு விடுகிறது. 


அப்படிப்பட்ட பாசுரம் ஒன்று கீழே. 


அது அந்தக் காலம். அவளுக்கு அவன் மேல் அவ்வளவு காதல். செல் போன்களும், whatsapp களும் இல்லாத காலம். கார் பஸ் கிடையாது. தபால் தந்தி கிடையாது. அவன் இருப்பதோ வெகு தொலைவில். அவளால் நினைத்தால் கூட அங்கே செல்ல முடியாது. என்ன செய்வாள் பாவம். 


மறுகிக் கொண்டு இருக்கிறாள். காதல் ஒரு பக்கம். ஏக்கம் ஒரு பக்கம். காண முடியவில்லையே என்ற தவிப்பு மறு பக்கம். 


யார் கிட்டவாவது சொல்லி விடலாம் என்றால் யாரிடம் சொல்வது என்று யோசித்துக் கொண்டு இருக்கிறாள். 


அங்கே சில மேகங்கள் மிதந்து சென்று கொண்டிருந்தன. ஒரு வேளை இந்த மேகங்கள் அவன் இருக்கும் இடம் போகுமோ ? இதுக கிட்டா சொல்லி விட்டால் ஒரு வேளை அவனுக்கு என் காதல் எண்ணம் போய்ச் சேருமோ என்று நினைக்கிறாள். 


அவள்: ஏய் மேகங்களே, எனக்கு ஒரு உதவி செய்வீங்களா? 

மேகம்: என்ன உதவி சொல்லு..

அவள்: நீங்க அவன் இருக்கும் ஊருக்குப் போனால், என் நிலை பற்றி அவனிடம் சொல்லுவீர்களா?


மேகம்: அதெல்லாம் முடியாது. எங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கு. இதெல்லாம் முடியாது. நேரம் இல்லை. 


அவள் யோசிக்கிறாள். இந்த மேகங்களை விட்டால் வேறு வழியும் இல்லை. என்ன செய்யலாம் என்று. 


அவள்: சரி, ஒண்ணு செய்யுங்க. போற போக்கில் உங்க காலை என் தலை மேல் வச்சிட்டு போங்க. அவன் இருக்கிற ஊர்ல போய் நீங்க மழை பெய்யும் போது, என் கூந்தலின் வாசம் அவனுக்குத் தெரியும். அதில் இருந்து அவனுக்கு என் நினைவு வரும். அது போதும் எனக்கு. 


என்ன இது ஏதோ தமிழ் பட சீன் மாதிரி இருக்கு. இதுக்கும் நாலாயிர திவ்ய பிரபந்தத்துக்கும் என்ன சம்பந்தம்? இப்படி எல்லாம் கூடவா பாசுரம் இருக்கு? இருக்காது. 


பாடல் 

இசைமின்கள் தூதென் றிசைத்தா லிசையிலம், என்தலைமேல்

அசைமின்க ளென்றா லசையிங்கொ லாம்,அம்பொன் மாமணிகள்

திசைமின் மிளிரும் திருவேங் கட்த்துவன் தாள்சிமயம்

மிசைமின் மிளிரிய போவான் வழிக் கொண்ட மேகங்களே.


சீர் பிரிக்காமல் புரியாது 


இசைமின்கள் தூது என்று இசைத்தால் இசையிலம், என் தலை மேல்

அசைமின்கள் என்றால்  அசையும் கொல்லோ ? அம் பொன் மா மணிகள்

திசை மின்மிளிரும் திருவேங் கட்த்து அவன் தாள் சிமயம்

மிசை மின்மிளிரிய போவான் வழிக் கொண்ட மேகங்களே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2020/11/blog-post_30.html

(click the above link to continue reading)

இசைமின்கள் = சொல்லுங்கள் 

தூது = தூது 

என்று இசைத்தால் = என்று கூறினால் 

இசையிலம் = ஒத்துக் கொள்ள மாட்டேன் என்கிறீர்கள் 


என் தலை மேல் = என் தலை மேல் 


அசைமின்கள் என்றால் = உங்கள் காலை வைத்து விட்டு போங்கள் என்றால் 

அசையும் கொல்லோ ?  = கேட்பீர்களா? 

அம் பொன் மா மணிகள் = பொன்னும் மணியும் 

திசை = திசைகள் தோறும் 

மின்மிளிரும் = மின்னல் போல் வெளிச்சம் தரும் 

திருவேங் கட்த்து = திரு வேங்கடத்தில் 

அவன் தாள் சிமயம் = சிகரத்தின் மேல் உள்ள அவன் திருவடிகளில் 

மிசை மின்மிளிரிய = மின்னல் அடித்துக் கொண்டு

போவான்  = போகும் 

வழிக் கொண்ட மேகங்களே. = அந்த வழியாக (போகும்) மேகங்களே 


என்னையும் தொட்டு, அவனையும் தொடும் போது, அவன் என்னை தொட்டதாகவே நான் உணர்வேன். அவன் நேரில் வந்து என்னைத் தொட விட்டால் என்ன. இந்த மேகங்களின் ஊடாக அவன் என்னைத் தொடுவதாக உணர்வேன் என்கிறாள். 


வருகின்ற அருள் நேராக அவனிடம் இருந்து வர வேண்டும் என்று அல்ல. எப்படியோ, யார் மூலமோ, எந்த வடிவிலோ வந்து சேரும். 


வந்து சேர்ந்து கொண்டு இருக்கிறது. 


காற்றாக, நீராக, உணவாக, உறவாக எத்தனையோ வகைகளில்...


உணர்வுடையார் பெருவறுனர் ஒன்றும் இல்லார்க்கு ஒன்றும் இல்லை. 

Monday, October 26, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - களங்கனிக்கு கை நீட்டும் வேங்கடம்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - களங்கனிக்கு கை நீட்டும் வேங்கடம் 


பக்தி என்றால் என்னவோ இருக்கிற எல்லாவற்றையும் விட்டு விட்டு, கடவுளே கதி என்று போய் விடுவது அல்ல. எல்லாவற்றையும் துறந்து சாமியாராக போவது அல்ல பக்தி. 

இந்த உலகை, அதன் அழகை, அதன் உயிர்ப்பை இரசிப்பது தான் பக்தி. 

என் பிள்ளையை பாராட்டினால் எனக்கு சந்தோஷம்தானே. உலகை இரசித்துப் பாராட்டினால் அதைப் படைத்த இறைவனுக்கு சந்தோஷம் இருக்காதா? 

அதை விடுத்து, இறைவன் செய்த எல்லாம் தேவை இல்லாதது என்று ஒதுக்கி வைத்தால் அவனுக்கு எப்படி இருக்கும்?


நமது பக்தி இலக்கியத்தில் பார்த்தால் தெரியும். உலகை, இயற்கையை, அதன் அழகை, உயிர்ப்பை மிக நுண்ணியமாக இரசித்து எழுதிய பாடல்களை காணலாம். 

உலகை வெறுத்த ஒருவரால் இவ்வளவு தூரம் இரசித்து இருக்க முடியாது. 


பேயாழ்வார் சொல்கிறார்....

திரு வேங்கட மலையில் நிறைய குரங்குகள் இருக்கின்றன. அவை , அங்குள்ள மரத்தில் உள்ள பழங்களை பறித்து உண்ணுகின்றன.  அப்படி சாப்பிடும் போது, நடுவில் தாகம் எடுத்தால் அங்குள்ள குளம் அல்லது நீர் நிலைகளை தேடிச் செல்லும். நீர் குடிக்க குனிந்தால், குனியும் அந்த குரங்கின் உருவம் அந்த நீரில் தெரியும். அடடா இன்னொரு குரங்கு உள்ளே இருக்கிறது என்று பயந்து ஓடும். பின், மெல்ல வந்து,  தான் கையில் வைத்து இருப்பது போலவே அந்த நிழல் குரங்கின் கையிலும் ஒரு பழம்   இருப்பதைக் கண்டு, "எனக்கு அதைத் தா"  என்று கை நீட்டி கேட்குமாம்"

அப்படிப் பட்ட குரங்குகள் நிறைந்த மலை திருவேங்கடம் என்று கூறுகிறார். 


பாடல்  


பார்த்த கடுவன் சுனைநீர் நிழற்கண்டு, பேர்த்தோர்

கடுவனெனப் பேர்ந்து, - கார்த்த

களங்கனிக்குக் கைநீட்டும் வேங்கடமே, மேனாள்

விளங்கனிக்குக் கன்றெறிந்தான் வெற்பு.




பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_86.html


click the above link to continue reading


பார்த்த கடுவன் = பார்த்த குரங்கு 

சுனைநீர் = சுனையில் உள்ள நீரில் 

நிழற்கண்டு = தன் நிழலைக் கண்டு 

பேர்த்தோர் = வேறு ஒரு 

கடுவனெனப் = குரங்கு என்று 

பேர்ந்து = விலகிச் சென்று 

கார்த்த 

களங்கனிக்குக் = கரிய களங் கனிக்கு 

கைநீட்டும் வேங்கடமே = கையை நீட்டும் வேங்கட மலையே 

மேனாள் = முன்பொரு நாள் 

விளங்கனிக்குக் = விளங்கனிக்கு 

கன்றெறிந்தான் = கன்றாக வந்த அசுரனை அதன் மேல் எறிந்த கண்ணனின் 

வெற்பு = மலை 


உலகை மறுத்து என்ன பக்தி? 

குரங்கு தன் நிழலைப் பார்த்து பயந்து பின் கனி கேட்டதை வேலை மெனக்கெட்டு  எழுதி இருக்கிறார். இதைத் தெரிந்து நமக்கு என்ன ஆகப் போகிறது? 

பக்தி என்பது வாழ்வை இரசிப்பது. இயற்கையோடு ஒன்றி வாழ்வது. குரங்கும், மலையும் , அது உண்ணும் கனியும், அதன் சேட்டைகளும் எல்லாம் இயற்கைதான். 

இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் என்பதும் பிரபந்தம். 

வாழ்க்கையை கொண்டாட வேண்டும். 



Monday, October 19, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - இடர் யார் படுவார் ?

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - இடர் யார் படுவார் ?


துன்பத்தை சுமக்க யார் தான் விரும்பவார்கள். ஒருவரும் விரும்ப மாட்டார்கள். அப்படியென்றால், துன்பம் வந்தால் என்ன செய்வது? அதை தூக்கி சுமக்கத்தானே வேண்டி இருக்கிறது. வேண்டாம் என்றால் அது நம்மை விட்டு விட்டு ஓடி விடுமா? 

ஒரு வேளை, அந்தத் துன்பத்தில் இருந்து விடுபட வழி இருந்தால்? 

உடனே அதைச் செய்து, துன்பத்தில் இருந்து விடுபட முயல்வோம் அல்லவா?

அப்படி ஒரு வழி இருக்கிறது என்கிறார் பொய்கை ஆழ்வார். 

முன்பு ஒரு முறை, ஒரு யானையை ஒரு முதலை பிடித்துக் கொண்டது. அந்தத் துன்பத்தில் இருந்து விடுபட, அந்த யானை திருமாலை கூப்பிட்டது. அவரும் வந்து அதன் இடர் களைந்தார். யானைக்கே உதவி செய்தார் என்றால் நமக்கு செய்யமாட்டாரா?


பாடல் 


இடரார் படுவார்? எழுநெஞ்சே, வேழம்

தொடர்வான் கொடுமுதலை சூழ்ந்த, - படமுடை

பைந்நாகப் பள்ளியான் பாதமே கைதொழுதும்,

கொய்ந்நாகப் பூம்போது கொண்டு.


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_53.html

click the above link to continue reading


இடரார் படுவார்? = இடர் (துன்பம்) யார் படுவார் ?

எழு நெஞ்சே = விழித்து எழு என் நெஞ்சே 

வேழம் = யானை 

தொடர்வான் = தொடர்ந்து வந்து 

கொடுமுதலை = கொடுமையான முத்தலையை 

சூழ்ந்த = நெருங்கி வந்து  கொன்ற 

 படமுடை = பெரிய படம் உடைய 

பைந்நாகப் பள்ளியான் = நாகத்தை படுக்கையாக கொண்டவன் 

பாதமே கைதொழுதும், = பாதத்தை கை தொழுது 

கொய்ந் = கொய்த 

நாகப் பூம் = நாகலிங்க பூவின் 

போது  = மொட்டை 

கொண்டு = கொண்டு 


இடர் யார் படுவார்? வேற வேலை இல்லை?




Tuesday, September 8, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கவளம் உந்துகின் றார்களே

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கவளம் உந்துகின் றார்களே


நம் உடலை நாம் எப்படி பயன் படுத்தலாம்?

நல்ல விஷயத்துக்கும் பயன் படுத்தலாம், அல்லாத விஷயங்களுக்கும் பயன் படுத்தலாம்.

சிக்கல் என்ன என்றால், எது நல்லது, எது அல்லாதது என்று நமக்குத் தெரிவது இல்லை.

அல்லாததை நல்லது என்று நினைத்துக் கொண்டு நாளும் அதைச் செய்கிறோம்.

அல்லது, எது நல்லது என்று தெரியாமல் குழம்புகிறோம்.

அந்த மாதிரி மயக்கம், குழப்பம் வரும் போது உயர்ந்த நூல்களை எடுத்துப் படிக்க வேண்டும். தெளிவு பிறக்கும்.

வள்ளுவரைக் கேட்டால் சொல்லுவார், செவிக்கு உணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றிற்கும் ஈயப் படும் என்று.

அவரே சொல்லுவார், தலை எதற்கு இருக்கிறது என்றால் இறைவனை வணங்க என்று.

கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை

பிரபந்தத்தில் (362) பெரியாழ்வார் சொல்கிறார்


"இந்த கையும் வாயும் எதற்கு இருக்கிறது என்றால் அவன் நாமங்களை சொல்லவும், எத்தனை தரம் சொன்னோம் என்று எண்ணிக் கொள்ளவும் தான் இருக்கின்றன. அதை விடுத்து சிலர், இந்த கை உணவை எடுத்து வாயில் போடவும், இந்த வாய் அந்த உணவை தின்பதற்கும் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு சதா சர்வ காலமும் எதையாவது எடுத்து வாயில் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள்"  என்கிறார்.


பாடல்

வண்ணநல்மணி யும்மரகதமும் அழுத்தி கிழலெழும்
திண்ணைசூழ்திருக் கோட்டியூர்த்திரு மாலவன்திரு நாமங்கள்
எண்ணக்கண்ட விரல்களால் இறைப் பொழுதும் எண்ணகி லாதுபோய்
உண்ணக்கண்டதம் ஊத்தைவாய்க்குக் கவளம் உந்துகின் றார்களே.


பொருள்

(please click the following link to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/09/blog-post_8.html


வண்ணநல்மணி யும் = வண்ண மயமான நல்ல மணியும்

மரகதமும்  = மரகதமும்

அழுத்தி = பதித்து

கிழலெழும் =  ஒளி விடும்

திண்ணைசூழ்  = திண்ணைகள் சூழ்ந்த

திருக் கோட்டியூர்த்  = திருக்கோட்டியூர்

திரு மாலவன்  = திருமாலவன்

திரு நாமங்கள் = திரு நாமங்கள்

எண்ணக் கண்ட விரல்களால்  = எண்ணிக் கொள்ளும் விரல்களால்

இறைப் பொழுதும் = இமைப் பொழுதும்

எண்ணகி லாதுபோய் = எண்ணுவதை விட்டு விட்டு

உண்ணக் கண்ட = உண்பதற்கும்

தம் = தம்முடைய

ஊத்தைவாய்க்குக் = ஊத்தை வாய்க்கு

கவளம் = கவளம் கவளமாக

உந்துகின் றார்களே. = அள்ளிப் போடுகிறார்களே

பொதுவாகச் சொல்லப் போனால், இந்த உடலை நல்ல விஷயங்களுக்கும் பயன் படுத்தலாம். தீய விஷயங்களுக்கும் பயன் படுத்தலாம்.

எப்படி பயன் படுத்துகிறோம் என்று எப்போதும் சிந்தித்துச் செயல் பட வேண்டும்.



Wednesday, July 22, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - எங்கும் போய்க் கரை காணா - 108 திவ்ய தேசம்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - எங்கும் போய்க் கரை காணா - 108 திவ்ய தேசம் 


சில பேர் அதைச் செய், இப்படிச் செய் என்று ஊருக்கு உபதேசம் செய்வார்கள். தங்கள் வாழ்க்கையில் கடை பிடிக்க மாட்டார்கள்.

குலசேகர ஆழ்வார், ஒரு நாட்டின் அரசராக இருந்தவர். ஆன்மீக பக்குவம் வர, அரச போகங்களை துறந்து விட்டு ஆன்மீகத்தில் இறங்கி விட்டார்.

ஒரு அரசனாக இருந்தவன், ஆன்மீகத்தில் வருவது என்பது கடினமான காரியம்.

அரசன் என்ற அந்தத் திமிர், ஆணவம், கோவம், ஆசை, வேகம் எல்லாம் இருக்கும். பக்திக்கு அது ஒன்றுமே ஆகாது.

எப்படியோ நிகழ்ந்த இரசவாதம்.

நமக்கு இன்பம் வந்த போது, எல்லாம் என் சாமர்த்தியம் என்று நினைக்கிறோம். என் உழைப்பு, என் அறிவு, என் திறமை இந்த வேலை கிடைத்தது, இந்த பதவி கிடைத்தது, இந்த இலாபம் கிடைத்தது என்று மகிழ்கிறோம்.

துன்பம் வரும் போது ? கடவுளே என்னை ஏன் இப்படி சோதிக்கிறாய், இந்தத் துன்பத்தில் இருந்து என்னை காப்பாற்று, என்று இறைவனை நோக்கி ஓடுகிறோம்.

ஆழ்வார் பார்க்கிறார். உலகில் பல பேர், இறைவனை விட்டு வெகு தூரம் சென்று விட்டதாக , சென்று கொண்டு இருப்பதாகப் படுகிறது அவருக்கு.

உலகில் உள்ளவர்களை பார்த்துச் சொல்கிறார், "நீங்கள் எவ்வளவு தூரம் சென்றாலும், மீண்டும் இங்கு தான் வர வேண்டும்" என்று.

மேலும்,  ஆழ்ந்த பக்தி உள்ளவர்கள் கூட, துன்பம் வந்தால், இறைவன் என்று ஒருவன் இருக்கிறானா,  இந்த ஆன்மா, பக்தி, இறைவன் என்பது எல்லாம் பொய் தானோ  என்று சந்தேகம் கொள்ள ஆரம்பித்து விடுகிறார்கள். அவர்களுக்கும்   அவர் சொல்கிறார் "தினம் வரும் போது நீங்கள் ஆண்டவனை விட்டு  விலகிப் போனாலும், மீண்டும் இங்கே தான் வர வேண்டும்" என்று.

அதை ஒரு உதாரணத்தில் விளக்குகிறார்.

அது ஒரு பெரிய கப்பல். அந்தக் கப்பலின் கொடி மரத்தில் சில பறவைகள் அமர்ந்து இருக்கின்றன. கப்பல் நங்கூரம் எடுத்து கடலில் செல்லத் தொடங்கி விட்டது. கொஞ்ச தூரம் சென்ற பின், மாலுமிகள் கப்பலின் பாய் மரத்தை மாற்ற வேண்டி  கொடி கம்பத்தைப் பார்க்கிறார்கள். அங்கே பறவைகள் அமர்ந்து இருக்கின்றன. அவற்றை அவர்கள் விரட்டுகிறார்கள்.

அந்தப் பறவைகளும் சிறகடித்து பறந்து போய் விடுகின்றன. போனால், எங்கு பார்த்தாலும் தண்ணீர். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல் தான். எங்கு போகும் அந்தப் பறவைகள். மீண்டும் அந்தப் கப்பலுக்கே திரும்பி வந்து விடுகின்றன.

அது போல, இறைவா, நீ என்னை எவ்வளவு தான் துன்பம் தந்து என்னை அடித்து விரட்டினாலும், எனக்கு போவதற்கு ஒரு இடமும் இல்லை. நான் உன்னிடம்தான் வருவேன்  என்கிறார்.

பாடல்


வெங்கண்தின் களிற்டர்த்தாய்
          விற்றுவக் கோட்டம்மானே
     எங்கு போ யுய்கேனுன்
          இணையடியே யடையலல்லால்
     எங்கும் போய்க் கரை காணா
          தெறிகடல் வாய் மீண்டேயும்
     வங்கத்தின் கூம்பேறும்
          மாப்பறவை போன்றேனே
           (692) பெருமாள் திருமொழி 5 - 5


பொருள்

(click the link below to  continue reading....)

https://interestingtamilpoems.blogspot.com/2020/07/108.html

வெங் = வெம்மையான
கண் = கண்களைக் கொண்ட
தின் = திடமான
களிற்டர்த்தாய் = களிற்றை + அடர்ந்தாய் = களிறு என்றால் யானை. அடர்தல் சண்டை போடுதல். குவாலயபீடம் என்ற யானையை கண்ணன் சண்டையிட்டு கொன்றான்

விற்றுவக் கோட்டம்மானே = வித்துவக்கோடு என்ற இடத்தில் உள்ள என் அம்மானே

எங்கு போ யுய்கேனுன் = எங்கு போய் பிழைப்பேன்

இணையடியே = உன்னுடைய இரண்டு திருவடிகளே

யடையலல்லால் = அடைக்கலம் அல்லாமல்

எங்கும் போய்க்  = எங்கு போனாலும்

கரை காணா = கரையை காணாத

தெறிகடல் வாய்  = அலைகள் தெறிக்கும் கடலின் நடுவே

மீண்டேயும் = மீண்டும் வரும்

வங்கத்தின் = கப்பலின்

கூம்பேறும் = கூம்பில் ஏறும். கொடி மரத்தில் ஏறும்

மாப்பறவை போன்றேனே = பெரிய பறவை போன்று இருந்தேனே

அவர்  சொல்வது அவரை மட்டும் அல்ல. நம்மையும் சேர்த்துதான்.

பிறவி என்ற கடலில் விழுந்து விட்டோம். எங்கும் தண்ணீர். எங்கு  போவது?

அவன் திருவடிகளே தெப்பம் என்று பற்றிக் கொள்ள வேண்டும் என்கிறார்.

துன்பம் வரும். அதற்காக தெப்பத்தை விட்டு விடக் கூடாது.

இந்தப் பாடல் 108  திவ்ய தேசங்களில் ஒன்றான திரு வித்துவகோடு என்ற தலத்தில் மங்களா சாசனம் செய்யப் பட்டது.

இது போல 10 பாசுரங்கள் பாடி இருக்கிறார். மூல நூலை தேடிப் படியுங்கள்.

கண்ணில் நீர் பணிக்கும் பாசுரங்கள்.

படித்துப் பாருங்கள். விழி ஓரம் நீர் திரளவில்லை என்றால் மூடி வைத்து விடுங்கள். அதைப் படிக்க உங்களுக்கு நேரம் இன்னும் வரவில்லை என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

சரி, அந்த இடம் எங்கே இருக்கிறது? எப்படிப் போவது?

கேரளாவில், பாலக்காடு என்ற இடத்துக்கு அருகில் உள்ளது.

பாலக்காட்டில் இருந்து பட்டாம்பி போய்விட்டால், அங்கிருந்து பக்கம்.

பட்டாம்பி வரை இரயில் இருக்கிறது. அங்கிருந்து சுமார் 2  கிமி தான்.

பஞ்ச பாண்டவர்கள் சிலை அமைத்து பூஜித்த தலம் என்று சொல்கிறார்கள்.

சிவனுக்கும், திருமாலுக்கும் ஒரே இடத்தில் கோவில். இது போல 10 திவ்ய தேசங்கள் இருக்கிறதாம்.

கேரளா பாணியும் , தமிழ் பாணியும் கலந்து நிற்கும் தலம்.


பெருமாள் - உய்ய வந்த பெருமாள்.
தாயார் - வித்துவ கோட்டு வல்லி



இந்த வைரஸ் பிரச்சனை எல்லாம் முடியட்டும்.

ஒரு நடை இந்த கோவிலுக்கு போய் விட்டு வரலாம். 

Monday, July 13, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - வைகுந்தம் புகுவது விதியே

நாலாயிர திவ்ய பிரபந்தம் - வைகுந்தம் புகுவது விதியே 


நாம் வைகுந்தம் போவோமா அல்லது மாட்டோமா என்ற கேள்வி பக்தர்கள் மனதில் இருப்பது இயற்கை.

நாம் பாவம் செய்கிறோமா? புண்ணியம் செய்கிறோமா ? நல்வினையா அல்லது தீவினையா நாம் செய்வது?

சாத்திரங்களில் சொன்னதை நாம் சரியாக கடை பிடிக்கிறோமா இல்லையா என்ற சந்தேகங்கள் வரமால் இருக்காது.

சாத்திரங்கள் பலவாறாக பிரிந்து கிடக்கின்றன. ஒவ்வொன்றும் ஒன்றைச் சொல்கின்றன. சில ஒன்றுக்கு ஒன்று முரண்படுகின்றன. நாம் எதைச் செய்வது, எதை விடுவது என்ற குழப்பத்தில் ஆழ்ந்து விடுகிறோம்.

மேலும், இல்லறத்தில் ஈடுபடும்போது, அனைத்து அறங்களையும் கடை பிடிக்க முடியுமா ? சில பல நிர்பந்தங்களினால் தெரிந்தோ தெரியாமலோ தவறுகள் நிகழ்ந்து விடலாம்.

அதுக்கெல்லாம் பரிகாரம் உண்டா?

அதுக்கெல்லாம் கவலைப் படாதீர்கள். நீங்கள் வைகுந்தம் போவது என்பது விதி. நீங்கள் கட்டாயம் போவீர்கள். போகாமல் இருக்க வழியே இல்லை. போய் தான் ஆக வேண்டும் ஏன் என்றால் நீங்கள் திருமாலின் உறவினர் என்கிறார் நம்மாழவார்.

வைகுந்த வாசலுக்குப் போனவுடன், அங்குள்ள தேவர்களும் முனிவர்களும் உங்களை வரவேற்று, நீங்கள் எமது சொந்தக் காரர் என்று உறவு கொண்டாடி, அழைத்துக் கொள்வார்களாம்.

இந்த மண்ணுலகில் பிறந்த உங்களின் விதி வைகுந்தம் அடைவதே. அதில் ஒரு சந்தேகமும் வேண்டாம் என்கிறார்.

பாடல்



வைகுந்தம் புகுதலும்* வாசலில் வானவர்*
வைகுந்தன் தமர்எமர்* எமதிடம் புகுதென்று*
வைகுந்தத்து அமரரும்* முனிவரும் வியந்தனர்*
வைகுந்தம் புகுவது* மண்ணவர் விதியே. 10.9.9 (நம்மாழவார்)



பொருள்

வைகுந்தம் புகுதலும் = வைகுந்தத்தில் புகும் பொழுது

வாசலில் = அதன் வாசலில்

வானவர் = வானவர்கள்

வைகுந்தன் =  வைகுண்ட வாசன் திருமால்

தமரெமர் = தமர் + எமர் = தமர் என்றால் சொந்தம். திருமால் நம்ம சொந்தக் காரன். அதாவது , உமக்கும் எமக்கும் அவன் பொதுவான சொந்தக்காரன். அவன் மூலம் நீரும் நாமும் சொந்தமாகி விட்டோம்.

எமதிடம் புகுகென்று = எங்கள் இடத்திருக்கு வாருங்கள் என்று

வைகுந்தத் தமரரும் = வைகுந்தத்து + அமரரும். வைகுந்தத்தில் உள்ள அமரர்களும்.

முனிவரும் = அங்குள்ள முனிவர்களும்

வியந்தனர் = ஆச்சரியத்தோடு அழைத்தனர்

வைகுந்தம் புகுவது = வைகுந்தம் செல்வது

மண்ணவர் விதியே = மண்ணில் வாழ்பவர்களின் விதியே

எல்லோரும் வைகுந்தம் போகலாம். அது நமக்கு விதிக்கப்பட்ட விதி என்கிறார்.



பரமபதத்தின் திருவாயிலை அடைந்தபோது, அங்கு நின்ற தேவர்களும் முனிவர்களும், "வைகுந்தனின் அடியார்கள் எங்கள் தலைவர்கள்! உங்களை வரவேற்பதில் எமக்கு பெருமகிழ்ச்சி!" என்று வியந்து போற்றி வரவேற்றார்கள். அத்துடன், "பூவுலக மாந்தர் பரமபதம் அடைவதும் விதிக்கப்பட்ட நற்செயலே!" என்றும் ஆனந்தப்பட்டனர்!

நாம் விரும்பும் ஒருவர் நம் வீட்டுக்கு வந்தால் நாம் எப்படி அவரை ஆச்சரியத்தோடு, ஆர்வமாக "வாங்க வாங்க" என்று வரவேற்போம், அது போல  திருமாலின் பக்தர்களை முனிவர்களும் தேவர்களும் வரவேற்பார்களாம்.

அது மட்டும் அல்ல,  திருமால் தான் பூலோகத்திலே வாசம் செய்கிறாரே, அதை விட்டு விட்டு  நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள் என்று "ஆச்சரியத்தோடு  வரவேற்பார்களாம்"

அது மட்டும் அல்ல,  இந்த மண்ணில் மனிதர்களாக ப் பிறந்து, அவன் அடியார்களாக  ஆன பின், வைகுந்தம் போவது என்பது சர்வ நிச்சயம் என்கிறார் ஆழ்வார்.

திருமாலின் பக்தர்கள் என்று கூட சொல்லவில்லை. திருமாலின் உறவினர் என்று  அவ்வளவு அன்யோன்யமாக உறவு கொண்டாடுகிறார். நம்ம சொந்தக் காரர் வீட்டுக்கு நாம் செல்ல என்ன தயக்கம். எப்ப வேண்டுமானாலும் போகலாம்  என்பது போலச்  சொல்கிறார்.

இது போன்ற பாடல்களை  வாசிக்கும் போது , வார்த்தைகளில் சிக்கிக் கொள்ளக் கூடாது. அந்த உணர்ச்சியை, அந்த பாவத்ததை, அந்த அனுபவத்தை  உணர வேண்டும்.

கண்மூடி இரசித்துப் பாருங்கள். அந்தப் பாசுரம் அப்படியே மனதுக்குள் இறங்கும். முகத்தில் ஒரு மலர்ச்சி உண்டாகும்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/07/blog-post_13.html

Thursday, June 25, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - வணங்கும் துறைகள்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - வணங்கும் துறைகள்


ஆற்றில் இறங்கி குளித்து இருக்கிறீர்களா ? சிலு சிலு என்று நீர் ஓடிக் கொண்டிருக்கும். கரையில் இருந்து, முதலில் காலை நனைத்து, பின் மெல்ல மெல்ல ஆற்றில் இறங்கி குளிப்பது ஒரு இனிய அனுபவம்.

எவ்வளவுதான் தெளிந்த, ஜில் என்ற நீராக இருந்தாலும், முழு ஆற்றையும் இரண்டு கைகளால் மறித்து கையில் ஏந்தி குளிக்க முடியுமா?

ஏதோ ஒரு படித்துறையில் இறங்கித் குளிக்க முடியும் அல்லவா?

படி இருக்கும் , பிடித்துக் கொள்ள கை பிடி இருக்கும், ஆற்று நீர் வேகமாக இழுக்காது, ஆழம் அதிகம் இருக்காது. தைரியமாக நீராடலாம்.

ஆற்றில் அங்கங்கே படித்துறைகள் செய்து வைத்து இருப்பார்கள்.

இறைவனைத் தேடி அடையும் வழி என்பது ஆறு போல. அது நீண்டும் அகன்றும் ஆழமாகவும் இருக்கும். நம்மால் அது முழுவதையும் அறிந்து கொள்ள முடியாது.

ஏதோ ஒரு படித்துறையில் இறங்கி கொஞ்சம் நீராடலாம். அவ்வளவுதான் முடியும்.

ஒவ்வொரு சமயமும் ஒரு படித்ததுறை.

சைவம், வைணவம், பௌத்தம், இஸ்லாமியம், கிறித்துவம் என்று பல படித்துறைகள்.

இதில்  என் படித்துறைதான் சிறந்தது, மற்றது தாழ்ந்தது என்ற நினைப்பே நகைப்புக்கு  இடமானது.

ஆறு ஒன்று, அது சேரும் கடல் ஒன்று. படித்துறைகள் வேறு அவ்வளவுதான்.

எல்லா படித்துறையிலும் ஒரே நீர் தான்.

நம்பவாழ்வார் சொல்கிறார்,

"இறைவனை வணங்கும் துறைகள் பல ஆகி, மக்களுடைய புத்தி வேறுபாட்டால் பல சமயங்கள் ஆகி, அவர்கள் வணங்கும் கடவுள்களும் பல ஆகி, அவற்றிற்குள் வேறுபாடுகள் பல ஆகி இருந்தாலும், எல்லாவற்றையும் நீயே உண்டாக்கி வைத்தாய், உனக்கு இணை யாரும் இல்லை, உன் பால் என் ஆசையை உண்டாக்கி வைப்பேன் " என்கிறார்.

பாடல்


வணங்கும் துறைகள்* பலபல ஆக்கி,* மதிவிகற்பால்-
பிணங்கும் சமயம் பலபல ஆக்கி,* அவையவைதோறு-
அணங்கும் பலபல ஆக்கி நின் மூர்த்தி பரப்பிவைத்தாய்*
இணங்கு நின்னோரை இல்லாய்,* நின்கண் வேட்கை எழுவிப்பனே. 96


பொருள்

வணங்கும் துறைகள் = வணங்குகின்ற துறைகள்

 பலபல ஆக்கி = பலவிதமாக உருவாக்கி

மதிவிகற்பால் = புத்தி வேறுபாட்டால்

பிணங்கும் = ஒன்றோடு ஒன்று மாறுபடும்

சமயம் பலபல ஆக்கி = பலவிதமான சமயங்களை உண்டாக்கி

அவையவைதோறு = அவற்றினுள்

அணங்கும் = தெய்வங்களும்

பலபல ஆக்கி  = பலவாக உண்டாக்கி

நின் மூர்த்தி  = உன் அம்சத்தை

பரப்பிவைத்தாய் = பரப்பி வைத்தாய்

இணங்கு நின்னோரை இல்லாய் = உனக்கு இணையாக யாரும் இல்லாமல் இருந்தாய்

நின்கண்  = உன்மேல்

வேட்கை = ஆவல், காதல், பக்தி

எழுவிப்பனே = நான் உண்டாகுவேனே


யார், எதை எப்படி வழி பட்டாலும் அது நாராயணனையே சாரும் என்பது அவர் முடிவு.

"யாதொரு தெய்வம் கண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே மாதொரு பாகனார்தாம் வருவார்’ என்பது சைவர்களின் கருத்து.

எல்லா சமயங்களும் சொல்லுவது ஒன்றே...வழி வேறானாலும், போய்ச் சேரும் இடம் ஒன்றுதான்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/06/blog-post_25.html

Saturday, June 20, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கூனே சிதைய

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கூனே சிதைய 


பெரிய பெரிய நிறுவனங்களில் ஏதாவது ஒரு வருடம் இலாபம் எதிர்பார்த்தபடி வரவில்லை அல்லது நட்டம் வந்து விட்டது என்றால், எப்படியும் நட்டம் வந்தது வந்து விட்டது, அது கொஞ்சமாக இருந்தால் என்ன, நிறைய இருந்தால் என்ன என்று இதுவரை கழித்துக் கட்டாத செலவினங்கள் அனைத்தையும் அந்த ஒரு வருடத்தில் காட்டி இனி வருடங்கள் நன்றாக இருக்கும் படி பார்த்துக் கொள்வார்கள். அதற்கு big bath என்று பெயர். வராத கடன்கள், வருமா வராதா என்ற கடன்கள், பழைய இயந்திரங்கள், என்று அனைத்தையும் செலவில் கழித்து இனி வரும் வருடங்கள் இலாபரமானதாக செய்து கொள்வார்கள்.

அவ்வளவு ஏன், வீட்டில் சேட்டை செய்யும் பையன் ஒருவன் இருந்தால், யார் என்ன தப்பு செய்தாலும் சந்தேகம் அவன் மேல் தான் வரும்.

அது போல, இராமன் மிக நல்லவன். நேர்மையானவன். ஏக பத்னி விரதன். அப்பா அம்மா சொல் கேட்க்கும் பிள்ளை. ஆனாலும், அவன் வாழ்விலும் ஒரு சின்ன நெருடல். அவன் சின்ன பிள்ளையாக இருக்கும் போது அம்பில் களி மண் உருண்டையை சொருகி கூனியின் கூன் முதுகில் அடித்து விளையாடி இருக்கிறான்.

சின்ன பிள்ளைதான். இருந்தும் ஒரு உடல் ஊனமுற்ற, வயதான , பெண் மேல் அம்பு எய்து விளையாடியது தவறு தானே.

அந்தத் தவறை செய்தவன் இராமன் என்றாலும், நம்மாழ்வார் அந்த குற்றத்தை இராமனின் மேல் ஏற்றாமல் கண்ணன் மேல் ஏற்றிக் கூறுகிறார்.  கூனி மேல்  உண்டை வில்லை அடித்த போது கண்ணன் பிறக்கவே இல்லை. அது அடுத்த  அவதாரம். இருந்தும், கண்ணன் மேல் நிறைய விளையாட்டான குற்றங்கள்  இருக்கின்றன, அத்தோடு இதையும் சேர்த்துக் கொள்ளலாம் என்று   இராம அவதாரத்தில் நடந்த ஒன்றை கிருஷ்ணா அவதாரத்திற்கு மாற்றி விடுகிறார்.

பாடல்



மானேய் நோக்கி மடவாளை* மார்வில் கொண்டாய். மாதவா.*
கூனே சிதைய உண்டைவில்* நிறத்தில் தெறித்தாய். கோவிந்தா.*
வானார் சோதி மணிவண்ணா.* மதுசூதா. நீ அருளாய்* உன்-
தேனே மலரும் திருப்பாதம்* சேருமாறு வினையேனே. 1.5.5

பொருள் 


மானேய்  = மான் போன்ற

நோக்கி = கண்ணினை உடைய

மடவாளை = பெண்ணை (திருமகளை)

மார்வில் = மார்பில்

கொண்டாய் = கொண்டாய்

மாதவா = மாதவா

கூனே சிதைய  = கூன் சிதையும் படி

உண்டைவில் = உண்டை வில்

நிறத்தில் தெறித்தாய் = அடித்தாய்

கோவிந்தா. = கோவிந்தா, கண்ணா

வானார் சோதி மணிவண்ணா. = வானவர்களுக்கு சோதி வடிவான மணிவண்ணனே

மதுசூதா = மது என்ற அரக்கனை கொன்றதால் மது சூதனன் என்ற பெயர் பெற்றவனே

நீ அருளாய் = நீ அருள் செய்வாய்

உன் = உன்னுடைய

தேனே மலரும் திருப்பாதம் = மலர் போன்ற திரு பாதங்கள்

சேருமாறு = வந்து அடையுமாறு

வினையேனே = வினை கொண்டவனான என்னை


கடவுளாகவே இருக்கட்டும், அவதாரமாகவே இருக்கட்டும், வயதான பெண், அதுவும் உடல் ஊனமுற்றவள் அவள் மேல் அம்பு விடுவது சரியான செயல்தானா.

இராசா வீட்டுப்  பிள்ளை என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? அடக்கம் வேண்டாமா? குடிகளை காப்பது அவன் பொறுப்பு இல்லையா?

நாளை, இராமனே செய்தான் என்று மற்றவர்கள் செய்யத் தொடங்கினால் என்ன பதில் சொல்வது?

இராமன் தவறு செய்வானா?


ஆழ்வார் தெரிந்து எடுத்து ஒரு சொல் போடுகிறார். அவன் தெரிந்து போட்டாரா அல்லது  அப்படி வந்து விழுந்ததா தெரியாது.

இராமன் கூனி மேல் பாணம் போட்டது நையாண்டி செய்ய அல்லவாம், அவள் கூன் சிதைந்து  அவள் நிமிர்ந்து எல்லோரையும் போல நடக்க வேண்டும் என்று  நினைத்து போட்டானாம்.

"கூனே சிதைய உண்டைவில்* நிறத்தில் தெறித்தாய்"

என்கிறார்.

கூன் சிதைந்தால், முதுகு நேராகி விடும். அப்படி நினைத்து பாணம் போட்டான்  என்கிறார்.

இதெல்லாம் இலக்கிய நயம். படிக்க படிக்க மனம் விரியும்.

படிக்க படிக்க....


https://interestingtamilpoems.blogspot.com/2020/06/blog-post_20.html

Tuesday, June 16, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - எனக்கினிக் கதியென் சொல்லாய்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - எனக்கினிக் கதியென் சொல்லாய்


இறைவன் மேல் பக்தி கொண்டவர்களை, "வாழக்கையில் உங்கள் நோக்கம் என்ன" என்று கேட்டால் என்ன சொல்லுவார்கள்?

"இறைவனை அடைவது"

"பரம பதம் அடைவது"

"சுவர்க்கம் போவது"

என்று இப்படி ஏதாவது ஒன்றைச் சொல்வார்கள்.

சரி. எப்படி போவது? அதற்கு என்ன வழி?

பூஜை செய்தால் போய் விடலாமா? தான தர்மம் செய்தால் போய் விடலாமா? நிறைய பாசுரங்கள் பாராயணம் பண்ணினால் போய்விடலாமா? ஆச்சாரமாக இருந்தால் போதுமா? மூணு வேளை குளிப்பது, நாளும் கிழமை என்றால் விரதம் இருப்பது, வெளியில் எங்கும் உண்ணாமல் இருப்பது, கடல் கடந்து போகாமல் இருப்பது என்று இருத்தால் போதுமா?

இதெல்லாம் வழி இல்லை என்கிறார் தொண்டரடிப் பொடி ஆழ்வார். பின் என்ன தான் வழி?

பாசுரத்தைப் பார்ப்போம்


பாடல்

மனத்திலோர் தூய்மை யில்லை வாயிலோர் இன்சொ லில்லை
சினத்தினால் செற்றம் நோக்கித்  தீவிளி விளிவன் வாளா
புனத்துழாய் மாலை யானே பொன்னிசூழ் திருவ ரங்கா
எனக்கினிக் கதியென் சொல்லாய் என்னையா ளுடைய கோவே”


பொருள்

மனத்திலோர் தூய்மை யில்லை  = மனதில் ஒரு தூய்மை இல்லை

வாயிலோர் இன்சொ லில்லை = வாயில் ஒரு இன் சொல் இல்லை

சினத்தினால் = கோபத்தால்

செற்றம்  நோக்கித்  = பகைவர்களை பார்த்து

தீவிளி விளிவன் = தீ போல விழிப்பேன். அதாவது கோபத்தையும் வெறுப்பையும் காட்டுவேன்

வாளா = வேலை வெட்டி இல்லாமல்

புனத்துழாய் மாலை யானே = துளசி மாலை அணிந்தவனே

பொன்னிசூழ் = பொன்னி நதி சூழ்ந்த

திருவ ரங்கா = திருவரங்கத்தில் இருப்பவனே

எனக்கினிக்  = எனக்கு இனி

கதியென்  = கதி (வழி) என்ன

சொல்லாய் = சொல்லுவாய்

என்னையா ளுடைய = என்னை ஆட்சி செய்யும்

கோவே = தலைவனே

பாசுரத்தின் அர்த்தம் புரிகிறது. இதில் இறைவனை அடைய வழி எங்கே சொல்லி இருக்கிறது?

இருக்கிது. மறைமுகமாக இருக்கிறது.

மனதில் தூய்மையும், வாயில் இன் சொல்லும், கண்ணில் கருணையும் இல்லாத எனக்கு  என்ன வழி என்று கேட்கிறார் ஆழ்வார்.

அப்படி என்றால், தூய்மையான மனமும், இனிமையான சொல்லும், கருணை கொண்ட  விழிகளும் இருந்தால் வழி திறந்து விட்டது என்று தானே அர்த்தம்.

இறைவனை அடைய  தடையாய் இருப்பது என்ன?

தூய்மை இல்லாத மனம், இனிமை இல்லாத சொல், கருணை இல்லாத கண்கள்.

இந்த அறிவு, செல்வம், பூஜை, புனஸ்காரம், ஆச்சாரம், அனுஷ்டானம் இதெல்லாம் இல்லாத எனக்கினி என் கதி என்று கேட்கவில்லை.

மனதை தூய்மை படுத்துவது கடினமான காரியம்.

மனம் தூய்மை ஆகாமல் கண்ணில் கருணை வராது.

இனிய சொல்? கொஞ்சம் கடினம்தான். இருந்தாலும், மற்றவற்றை விட எளிது.

முயன்று பார்ப்போமா?  எந்த கடினமான சொல்லையும் சொல்லுவதில்லை என்று  சங்கல்பம் செய்து கொள்வோம்.

யாரையும் வைவது இல்லை,  மட்டம் தட்டி பேசுவது இல்லை, கோபித்து  மனம் புண் படி பேசுவது இல்லை என்று முடிவு செய்து கொள்வோம்.

அடுத்தது, அன்பான சொல் பேசுவது, ஆறுதலான சொல் பேசுவது, மனதுக்கு சுகம்   தரும் சொற்களை பேசுவது என்று முடிவு செய்து கொள்வோம்.

எவ்வளவோ படிக்கிறோம். ஒன்றிரண்டை நடை முறை வாழ்க்கையில் செயல் படுத்திப் பார்த்தால் என்ன ?

செய்யலாம் தானே?

https://interestingtamilpoems.blogspot.com/2020/06/blog-post_16.html


Sunday, May 17, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - அச்சுவை பெறினும் வேண்டேன்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - அச்சுவை பெறினும் வேண்டேன் 


நாக்கில் நல்ல உணவு பட்டால் அதன் சுவை தெரியும். நாம் அதை அனுபவிக்கலாம்.

நாவினால் ஒரு பெயரைச் சொன்னால் அது சுவை தருமா?

தரும் என்கிறார் தொண்டரடிப் பொடி ஆழ்வார்.

ஸ்ரீராம நீ நாம ஏமி ருச்சிரா...ஓ ராமா நீ நாமம் என்தோ ருச்சிரா...என்பார் பத்ராச்சல இராமதாஸர்.

அந்தப் பாடலை திரு. பாலமுரளி கிருஷ்ணா பாடிய ஒலிப்பதிவை இங்கே கேட்டுப் பாருங்கள் .

https://www.youtube.com/watch?v=DCyshbQUgAE


இராம உன் நாமம் எப்படி இவ்வளவு சுவையாக இருக்கிறது, என்ன ஒரு சுவை என்று ரசிக்கிறார்.


தொண்டரடிப் பொடி ஆழ்வார் சொல்கிறார்,

"பச்சைமா மலைபோல்மேனி"

"பவளவாய் கமலச் செங்கண்"

"அச்சுதா"

"அமர ரேறே"

"ஆயர்தம் கொழுந்தே"

அப்படினு சொல்லிகிட்டே இருந்தால், அந்த சுவையே போதும். அதை விட்டு விட்டு,  பரமபதம் கிடைத்தாலும் வேண்டாம் என்கிறார்.

பாடல்

பச்சைமா மலைபோல்மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமர ரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோக மாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே.

பொருள்

பச்சை = பச்சை நிறம் கொண்ட

மா = பெரிய

மலைபோல் = மலையை போன்ற

மேனி = உடல்

பவளவாய் = பவளம் போல் சிவந்த உதடுகள்

கமலச் செங்கண் = தாமரை போல் சிவந்த கண்கள்

அச்சுதா = அச்சுதன் என்றால் தன்னை பற்றியவர்களை கை விடாதவன் என்று அர்த்தம்

அமர ரேறே = தேவர்களில் எருது போன்று வலிமையானவனே

ஆயர்தம் கொழுந்தே = ஆயர்களின் கொழுந்தே

என்னும் = என்று சொல்லும்

இச்சுவை = இந்த சுவையை

தவிர = விட்டு விட்டு

யான்போய் = நான் போய்

இந்திர லோக மாளும் = இந்திர லோகத்தை ஆளும்

அச்சுவை = அந்த சுவையை

பெறினும் =  பெற்றால் கூட

வேண்டேன் = விரும்ப மாட்டேன்

அரங்கமா நகரு ளானே. = திருவரங்கம் என்ற பெரிய திருத்தலத்தில் உள்ளவனே

அது என்ன "ஆயர்தம் கொழுந்தே". ஆயர்தம் வேறே என்றல்லவா சொல்லி இருக்க வேண்டும்?  ஆயர் குலத்துக்கு வேர் போன்றவன் அல்லவா அவன்?  பின் கொழுந்தே என்றார்?

உரை எழுதிய பெரியவர்கள் கூறுவார்கள் "கொழுந்து வாடினால் வேர் வாடாது. ஆனால், வேர் வாடினால் கொழுந்து வாடிவிடும்...எனவே, ஆயர் குலத்தில் உள்ளவர்கள்  எல்லோரும் வேர். அவன் கொழுந்து. அந்தக் குலத்தில் யார் வாடினாலும், அவன் வாடிவிடுவான்" என்று.

வியாக்கியானம் எழுதுவதில் வைணவ உரை ஆசிரியர்களை மிஞ்ச ஆள் இல்லை.

கோவிலுக்கு சென்று வழிபாடு செய்கிறோம். இறைவன் அங்கே இருக்கிறான் என்று யாராவது நம்புகிறார்களா? இறைவன் எங்கோ இருக்கிறான்...கைலாயத்தில், பாற்கடலில் எங்கோ இருக்கிறான். இங்கே எங்கே இருக்கிறான் என்பது தான் அவர்கள் நம்பிக்கை. இறந்த பின், அங்கே போகலாம் என்பது எதிர்பார்ப்பு.

ஆனால், ஆழ்வார் சொல்கிறார், அதெல்லாம் இல்லை. அந்த பரந்தாமன் இங்கேதான் இருக்கிறான். அவனைத் தேடி இந்திரன் முதலான தேவர்கள் இங்கே வந்து விட்டார்கள். நான் அங்கு போய் என்ன செய்யப் போகிறேன்? எனவே, அந்த வெறுமையான உலகை ஆளும் பதவி தந்தாலும் வேண்டேன்,  இங்கேயே இருக்கிறேன் என்கிறார்.

இறந்த பிறகு இல்லை, இப்போதே, இங்கேயே காணலாம். இது தான் வைகுண்டம், இதுதான் கைலாயம். அங்கே போக வேண்டிய அவசியமே இல்லை.

இப்பவே அனுபவிக்கலாம்.

யோசித்துப் பாருங்கள். அடுத்த முறை கோவிலுக்குப் போகும் போது , நீங்கள் வணங்கும் இறைவன் அங்கே இருக்கிறான் என்றால் எப்படி இருக்கும் என்று....

தொண்டரடிப் பொடி ஆழ்வார் கண்டார்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_17.html

Monday, April 13, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - நான் பெற்ற துன்பம் நீயும் பெற்றாயா?

நாலாயிர திவ்ய பிரபந்தம் - நான் பெற்ற துன்பம் நீயும் பெற்றாயா?



நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்ற இலக்கியங்களை படிக்கும் போது, பல உணர்ச்சிகள் உண்டாகிறது.

ஒரு பக்கம் பக்தி. இன்னொரு பக்கம் காதல். இன்னொரு பக்கம் தமிழின் சுவை, கவிதையின் நயம், சொல்லாட்சி, ஆறு போன்ற கருத்தோட்டம்...எதை எடுப்பது, எதை விடுவது என்று நம்மை தத்தளிக்க வைக்கும்.

நம்மாழ்வாரின் இன்னுமொரு அற்புதமான பாசுரம்.

அவள் கடற்கரையை ஓரம் உள்ள ஒரு குப்பத்தில் வசிப்பவன். அவளுக்கு அவன் மேல் அப்படி ஒரு காதல்.

ஒரு நாள், மாலை நேரம், கடற்கரையில் அமர்ந்து அவனைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறாள். நேரம் மெல்ல மெல்ல போய் கொண்டிருக்கிறது. மாலை போய் முன்னிரவு வந்து விட்டது. நிலவொளியில் கடல் நீர் பால் போல ஜொலிக்கிறது.

அலை அடித்த வண்ணம் இருக்கிறது.

அந்தக் கடலைப் பார்த்து அவள் கேட்கிறாள் ...

"நீயும் தூக்கம் இல்லாமல் இரவும் பகலும் என்னைப் போல நெஞ்சம் உருகி ஏங்குகிறாயா ? ஒரு நேரமாவது இந்த அலை அடிக்காமல், நிம்மதியா தூங்க மாட்டாயா ? எதுக்கு அனாவசியமா காதலிக்கிற ? அப்புறம் கிடந்து இப்படி நிம்மதி இல்லாம அலையுற" என்று கேட்கிறாள்.

பாடல்


காமுற்ற கையறவோ டெல்லே இராப்பகல்,

நீமுற்றக் கண்டுயிலாய் நெஞ்சுருகி யேங்குதியால்

தீமுற்றத் தென்னிலங்கை யூட்டினான் தாள்நயந்த,

யாமுற்ற துற்றாயோ வாழி கனைகடலே


பொருள்


காமுற்ற = காமம் உற்ற = ஆசைப் பட்டு

கையறவோ = கையில் கிடைக்காமல்

டெல்லே இராப்பகல் = இரவு பகல் எந்நேரமும்

நீமுற்றக் = நீ முழுவதும்

கண்டுயிலாய் = கண் துயில மாட்டாய்

நெஞ்சுருகி = நெஞ்சு உருகி

யேங்குதியால் = ஏக்கம் கொள்கிறாயா

தீமுற்றத்  = தீ முற்றும் அழிக்க

தென்னிலங்கை யூட்டினான்  = தென் திசையில் உள்ள இலங்கையை எரித்தான்

தாள்நயந்த = திருவடிகளை விரும்பிய

யாமுற்ற = யாம் உற்றது = எனக்கு கிடைத்தது

துற்றாயோ  = உனக்கும் கிடைத்ததா

வாழி கனைகடலே = நீ வாழ்க கடலே

முற்ற என்ற சொல் எவ்வளவு அழகாக வந்து  விழுகிறது பாருங்கள்.

காமம் உற்ற
நீயும் உற்ற
தீ முற்ற
யாம் உற்ற

என்ன ஒரு சொல்லாட்சி. என்ன ஒரு உணர்ச்சி பிரவாகம். என்ன ஒரு எளிமையான பாடல்.

இதைப் படிக்கவும் நேரம் இல்லையே...என்ன செய்யலாம் ?

https://interestingtamilpoems.blogspot.com/2020/04/blog-post_13.html

Sunday, April 12, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - இரவெல்லாம் விழித்து இருப்பாயா?

நாலாயிர திவ்ய பிரபந்தம் - இரவெல்லாம் விழித்து இருப்பாயா?


அன்றில் பறவை என்று ஒரு பறவை இருந்தது. இப்போது இல்லை. தமிழ் இலக்கியத்தில் இந்தப் பறவை பற்றிய குறிப்புகள் உள்ளது.  அன்னப் பறவை போல இந்தப் பறவையும் இன்று இல்லை.

அன்றில் பறவையின் சிறப்பு என்ன என்றால், அது எப்போதும் துணையுடனேயே இருக்கும்.

அன்றி + இல் = துணை இல்லையேல், தானும் இல்லை.

அந்தப் பறவை இரவில் தூங்கும் போது, துணை பறவையின் அலகை, தன் அலகால் கவ்விக் கொண்டே தூங்குமாம்.

துணையைப் பிரிந்தால், "குர்ரீ குர்ரீ" என்று பெரிய குரல் எடுத்து துணையை அழைக்கும். துணை வராவிட்டால், உயிரை விட்டுவிடும்.

அது துணையை அழைக்கும் குரல் ஏக்கத்தின் குரலாக ஒலிக்கும். கேட்போர் மனதை உருக்கும்.

அவள் வீடோ ஒரு சிறு குடிசை. கடற்கரை ஓரம் உள்ள ஒரு சின்ன குடிசை. நேரமோ இரவு நேரம்.  குளிர்ந்த கடல் காற்று நிற்காமல் அடித்துக் கொண்டு இருக்கிறது. தூரத்தில், அலை அடிக்கும் சத்தம்.

வீட்டின் மறு பக்கத்தில் எல்லோரும் படுத்து உறங்குகிறார்கள். அவளுக்கு தூக்கம் வரவில்லை. முழங்காலை கட்டிக் கொண்டு, அதில் தலை சாய்த்து அவனை நினைத்து உருகுகிறாள்.

அந்த நிசப்த இரவில், அவள் வீட்டின் கொல்லையில் உள்ள தோட்டத்தில், ஒரு அன்றில் பறவை ஏக்கக் குரலில் தன் துணையை தேடி அழைக்கிறது.

"ஏய் அன்றில் பறவையே, இந்த நீண்ட யாமப் பொழுதில், நீயும் உன் துணையை பிரிந்து ஏங்குகிறாயா என்னைப் போல" என்று அந்த அன்றில் பறவையிடம் கேட்கிறாள்.


பாடல்

கோட்பட்டசிந்தையாய்க் கூர்வாய அன்றிலே,
சேட்பட்ட யாமங்கள் சேரா திரங்குதியால்,
ஆட்பட்ட எம்மேபோல் நீயும் அரவணையான்,
தாட்பட்ட தண்டுழாய்த் தாமம்கா முற்றாயே.


பொருள்

கோட்பட்ட = சிறைப்பட்ட

சிந்தையாய்க்  = மனதால்

கூர்வாய = கூர்மையான அலகைக் கொண்ட

அன்றிலே = அன்றில் பறவையே

சேட்பட்ட = நீண்ட

யாமங்கள் = யாமப் பொழுதுகள்

சேரா திரங்குதியால், = சேராது + இரங்குதியால். உன் துணையோடு சேராமல்  இரக்கம் கொள்கிறாயா ?

ஆட்பட்ட = அடிமைப் பட்ட

எம்மேபோல் = என்னைப் போல

நீயும் = நீயும்

அரவணையான் = அரவு + அணையான் = பாம்பை படுக்கையாக கொண்டவன்

தாட்பட்ட = திருவடிகளில் பட்ட

தண்டுழாய்த் = குளிர்ந்த துளசி

தாமம்  = மாலை மேல்

கா முற்றாயே. = ஆசைபட்டாயா ?

https://interestingtamilpoems.blogspot.com/2020/04/blog-post_12.html

Saturday, April 11, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - உனக்கும் தூக்கம் வரலியா ?

நாலாயிர திவ்ய பிரபந்தம் - உனக்கும் தூக்கம் வரலியா ?



அது கடற்கரை ஓரம் உள்ள ஒரு சின்ன கிராமம். அதில் ஒரு வீடு. வீட்டில் இருந்து பார்த்தால் கடல் தெரியும். வீட்டை சுற்றி கொஞ்சம் கடல் மணலில் வளரும் சில குறுஞ்செடிகள்.

இரவு நேரம். நிலா வெளிச்சத்தில் கடல் பளபளக்கிறது. தூரத்தில் அலை அடிக்கும் சத்தம். கடற்காற்று, மணலை மெல்ல புரட்டிப் போட்டுக் கொண்டு போகிறது.

ஊரே தூங்கி விட்டது.

அவள் மட்டும் தூங்கவில்லை. தூக்கம் வரவில்லை.  அவன் நினைவு. ஜன்னல் வெளியே பார்க்கிறாள். அங்கிருந்த குறு மரத்தில் ஒரு நாரை உட்கார்ந்து இருக்கிறது. அதுவும் தூங்காமல் கண்ணை உருட்டி உருட்டி பார்த்துக் கொண்டு இருக்கிறது. அடிக்கிற காற்று அந்த நாரையை தள்ளுகிறது. அது விழாமல் அந்த மரத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறது.

"எனக்குத்தான் தூக்கம் வரவில்லை. அவனை நினைத்து, தூக்கம் வராமல் தவிக்கிறேன். உனக்கும் தூக்கம் வரலியா? நீயும் அவன் மேல் காதல் கொண்டாயோ ?"

என்று அந்தப் பெண், நாரையிடம் கேட்கிறாள்.

பாடல்

வாயுந்திரையுகளும் கானல்மடநாராய்,
ஆயும் அமருலகும்துஞ்சிலும் நீதுஞ்சாயால்,
நோயும் பயலைமையும் மீதூரவெம்மேபோல்,
நீயும்திருமாலால் நெஞ்சம்கோட் பட்டாயே.


பொருள்


வாயுந்  = மேலும் மேலும்

திரை = அலை, கடல் அலை

உகளும் = உருளும், அடிக்கும்

கானல் = கடற்கரை

மட நாராய், = நாரையே

ஆயும் = தாயும்

அமருலகும்  = அமரர் + உலகும் = தேவ லோகமும்

துஞ்சிலும்  = தூங்கினாலும்

நீ துஞ்சாயால், = நீ தூங்க மாட்டாயா ?

நோயும்  = (காதல்) நோயும்

பயலைமையும் = அதனால் வரும் பசலை நிறமும்

மீதூர = உன் மேல் வர

வெம்மே போல், = என்னைப் போலவே

நீயும் = நீயும்

திருமாலால் = திருமாலால்

நெஞ்சம் = மனம்

கோட் பட்டாயே. = பறித்துக் கொள்ளப் பட்டாயோ?

அவன், என் மனதைத்தான் கொண்டு சென்றான் என்று நினைத்தேன். உன் மனதையும்  கொண்டு சென்று விட்டானா ?

நம்மாழ்வார் பாசுரம்.

நாலாயிர திவ்ய பிரபந்தம்.

பிரபந்தத்தை புரட்டிப் பாருங்கள். இப்படி எத்தனையோ பாடல்கள்.

எதெதற்கோ நேரம் ஒதுக்குகிறோம். இதுக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்கிப் படித்தால்  என்ன ?

https://interestingtamilpoems.blogspot.com/2020/04/blog-post_11.html