Sunday, July 3, 2022

நன்னூல் - யாருக்குச் சொல்லித் தரக் கூடாது

 நன்னூல் - யாருக்குச் சொல்லித் தரக் கூடாது 


எல்லாவற்றையும் எல்லோருக்கும் சொல்லிக் கொடுத்துவிட முடியாது. படிக்கின்ற பக்குவம் உள்ளவனுக்குத் தான் பாடம் சொல்ல வேண்டும். 


யார் யார்க்கு எல்லாம் பாடம் சொல்லித் தரக் கூடாது, யார் நல்ல மாணவர் ஆக மாட்டார் என்று நன்னூல் ஒரு பட்டியல் தருகிறது. 


பாடல் 


களிமடி மானி காமி கள்வன்

பிணியன் ஏழை பிணக்கன் சினத்தன்

துயில்வோன் மந்தன் தொன்னூற்கு அஞ்சித்

தடுமா றுளத்தன் தறுகணன் பாவி

படிறன் இன்னோர்க்குப் பகரார் நூலே


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post.html



(pl click the above link to continue reading)


களி  = கள்ளுண்டு களித்து இருப்பவன். குடிகாரனுக்கு சொல்லித் தரக் கூடாது. 


மடி = சோம்பேறி 


மானி  = தன் மேல் கர்வம் உள்ளவன். 


காமி  = காமுகன் 


கள்வன் = திருடன் 



பிணியன் = நோயாளி 


ஏழை = ஏழை. புத்தகம் வாங்க, ஆசிரியருக்கு , பள்ளிக்கு செலுத்த பணம் இல்லாதவன் 


பிணக்கன் =மாறுபட்ட சிந்தனை உள்ளவன் 


 சினத்தன் = கோபக்காரன் 


துயில்வோன் = தூங்குமூஞ்சி 


மந்தன் = மந்த புத்தி உள்ளவன். என்ன சொன்னாலும் மண்டையில் ஏறாது 


தொன்னூற்கு அஞ்சித் = பழைய நூல்களை படிப்பதற்கு அஞ்சுபவன் 


தடுமா றுளத்தன் = நிலை இல்லாத உள்ளம் கொண்டவன் 


தறுகணன் = கொடூரமான செயலகளைச் செய்பவன் (எமனுக்கு தறுகணன் என்று ஒரு பெயர் உண்டு) 


பாவி = பாவம் செய்பவன் 


படிறன் = பொய் சொல்பவன் 


இன்னோர்க்குப் பகரார் நூலே = இப்படிப் பட்டவர்களுக்கு நல்ல நூல்களில் உள்ளவற்றை சொல்லித் தர மாட்டார்கள் 


நன்னூல் காலத்தில் தொன்னூல் படிக்க அஞ்சிய ஆட்கள் இருந்து இருக்கிறார்கள் என்றால், அதற்கு முன் எவ்வளவு நூல்கள் இருந்திருக்க வேண்டும். 


நூல் எழுதும் பழக்கம் இருந்திருந்தால், மக்களின் வாழ்வு, மொழி வளம், இலக்கணம் எல்லாம் எவ்வளவு பழமை வாய்ந்ததாக இருக்க வேண்டும்? 


எவ்வளவு சிறப்பு வாய்ந்தது நம் பரம்பரை, மொழி, மற்றும்  கலாசாரம். 



2 comments:

  1. ஏழை = ஏழை. புத்தகம் வாங்க, ஆசிரியருக்கு , பள்ளிக்கு செலுத்த பணம் இல்லாதவன்- why among others

    ReplyDelete
  2. இதை பார்த்தால் இந்த காலத்தில் யாருக்குமே சொல்லித்தர கூடாது

    ReplyDelete