Monday, March 3, 2014

நாலாயிர திவ்ய பிரபந்தம் - அறிவென்னும் தாழ் கொளுவி

நாலாயிர திவ்ய பிரபந்தம் - அறிவென்னும் தாழ் கொளுவி 


இறைவன் காண்பதற்கு அரியவன். அவனை கண்டவர் யாரும் இல்லை. அப்படியே அவனை அறிந்தாலும், அறிந்ததை சொல்லுவது ஒன்றும் அவ்வளவு எளிது அல்ல என்றெல்லாம் சொல்கிறார்கள்.

இப்படி பயமுறுத்தினால் யார் அந்த இறைவனைத் தேடித் போவார்கள் ?

நமக்கு ஆயிரம் பிரச்சனைகள் இருக்கிறது. வேலை, பிள்ளைகளின் படிப்பு, தொழில்,  ஆரோக்கியம்,பணம், உறவுகளின் நெருக்கடி என்று பலப் பல பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டு  தவிக்கிறோம்.

இதில், இப்படி ஒரு சிக்கலான கடவுளை யார் தேடித் போவார்கள் ?

பேயாழ்வார் சொல்கிறார்...

அவனை காண்பது அப்படி ஒன்றும் கடினமான செயல் அல்ல.

நம் புலன்கள் நாளும் நம் கட்டுப்பாட்டை விட்டு தறி கெட்டு ஓடுகின்றன.

அதை முதலில் கட்டுப் படுத்த வேண்டும்.

எப்படி ?

இரண்டு கருவிகளைச் சொல்கிறார்.

ஒன்று அடக்கம். இரண்டாவது அறிவு.

அடக்கம் என்ற கதவைச் சாத்தி, அறிவு என்ற தாழ்பாழை போட்டு விட்டால் புலன்கள் எப்படி  ஓடும்  ?

புலன்களை அப்படி கட்டுப் படுத்திய பின், வேதங்களை ன்று கற்று உணர்ந்தால் அவனை நாள் தோறும் காணலாம்  என்கிறார்.

புலன்களை கட்டுப் படுத்தாமல் வேதங்களை கற்று புண்ணியம் இல்லை.

பாடல்

அறிவென்னும் தாள்கொளுவி ஐம்புலனும் தம்மில்,
செறிவென்னும் திண்கதவம் செம்மி, - மறையென்றும்
நன்கோதி நன்குணர்வார் காண்பரே, நாடோறும்
பைங்கோத வண்ணன் படி.

பொருள்

அறிவென்னும் = அறிவு என்கின்ற

தாள் = தாழ்பாழை

கொளுவி = மாட்டி.  கொளுவுதல் என்பது ஒரு அருமையான தமிழ் சொல். ஆடு மாடுகளுக்கு இல்லை பறிப்பவர்கள் கையில் ஒரு நீண்ட குச்சியும், அதன் முனையில் வளைந்த ஒரு சிறிய கத்தியும் இருக்கும். சிறு கிளைகளில் அவற்றை மாட்டி இழுத்தால், கிளை உடைந்து விழும். அந்த பொருளுக்குப் பெயர் "கொளு".  மாட்டுதல், அடைத்தல் .

ஐம்புலனும் தம்மில், = ஐந்து புலன்களையும் தனக்குள்

செறிவென்னும்= அடக்கம் என்ற

திண் கதவம் செம்மி = வலுவான கதவை அடைத்து

மறையென்றும் = மறை என்றும். வேதங்களை தினமும்

நன்கோதி = நன்கு ஓதி

நன்குணர்வார் = நன்றாக உணர்வார்

காண்பரே = காண்பார்களே

நாடோறும் = நாள் தோறும்

பைங்கோத வண்ணன் படி = அழகிய கடலின் நிறம் கொண்ட அவனை


போகும் ஊருக்கு வழி சொல்லியாகி விட்டது. 

போவதும் , போகாமல் மேலும் மேலும் வழி கேட்டுக் கொண்டிருப்பதும் உங்கள்  கையில் இருக்கிறது. 


2 comments:

  1. நன்கு ஓதி, நன்கு உணர வேண்டும். ஓதுவது வேறு, உணர்வது வேறு! சும்மா கிளிப்பிள்ளை மாதிரி மந்திரங்களைப் படித்தால் மட்டும் போதாது, அவற்றின் உட்பொருளை உணரவும் வேண்டும் என்பது இனிமை.

    நன்றி.

    ReplyDelete
  2. புலன்களைக் கட்டுப்படுத்த, அறிவும் அடக்கமும் தேவை என்பது நல்ல பொருள். இந்த இடத்தில் அடக்கம் என்றால், தன்னடக்கம் என்பது பொருளோ?

    ReplyDelete