Sunday, May 13, 2012

கம்ப இராமாயணம் - அரசனின் இலக்கணம்


கம்ப இராமாயணம் - அரசனின் இலக்கணம்

தசரதன் எப்படி இருந்தான் என்று சொல்லுவதன் மூலம், ஒரு நல்ல அரசன் எப்படி இருக்க வேண்டும் என்று கம்பன் காட்டுகிறான்.




தாய் ஒக்கும் அன்பின்தவம் ஒக்கும் நலம் பயப்பின்;
சேய் ஒக்கும். முன் நின்று ஒரு செல் கதி உய்க்கும் நீரால்;
நோய் ஒக்கும் என்னின் மருந்து ஒக்கும்நுணங்கு கேள்வி
ஆயப் புகுங்கால். அறிவு ஒக்கும்;- எவர்க்கும் அன்னான்.

தாய் ஒக்கும் அன்பின்; = தன் குடிகள் மேல் அன்பு செலுத்துவதில் தாய் போன்றவன். தாய் அன்பை விட சிறந்த அன்பு ஒன்று இருக்க முடியுமா ? 'தாயினும் சாலப் பரிந்து" என்பார் மணிவாசகர்.

தவம் ஒக்கும் நலம் பயப்பின் = அவர்களுக்கு நல்லது செய்வதில், தவம் போன்றவன். எவ்வளவு தவம் செய்கிறோமோ அவ்வளவு பலன் கிடைக்கும். அதுபோல், மக்கள் எவ்வளவு உழைக்கிறார்களோ, அதற்க்கு தக்க அவர்களுக்கு பலன் தருவான். ஆனால், அன்பு செலுத்தும் போது அப்படி அல்ல. தாய், தன் பிள்ளைகள் படித்தாலும், படிக்காவிட்டாலும், சம்பாதித்தாலும், இல்லாவிட்டாலும் ஒன்றாகத்தான் அன்பு செய்வாள். 

சேய் ஒக்கும். முன் நின்று ஒரு செல் கதி உய்க்கும் நீரால்; = நம்முடைய கடைசி காலத்தில் நம் பிள்ளைகள் தான் நம்மை தாங்கிப் பிடிப்பார்கள். உடல் வலி குன்றி, நோய் வாய் பட்டு துன்பப்படும் போது, எப்படி பிள்ளைகள் பெற்றவர்களை தாங்குவார்களோ, அது போல, தசரதன் மூத்த குடிமக்களை காப்பாற்றினான்.

நோய் ஒக்கும் என்னின் மருந்து ஒக்கும்; = ஒரு நாட்டில் நல்லவர்களோடு, கொஞ்சம் தீயவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். தீயவர்கள் நோய் போன்றவர்கள். நோயை குணப்படுத்த வேண்டுமே அல்லாமால் நோயாளியை கொல்லக் கூடாது. தசரதன் நோய்க்கு மருந்து போன்றவன். மருந்து கசக்கும். பத்தியம் இருக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக கொடுக்கக் கூடாது. அது போல, அளவோடு தண்டனைகளை கொடுத்து, தீயவரக்ளை திருத்தி நாட்டை காப்பாற்றுவான்.

 நுணங்கு கேள்வி ஆயப் புகுங்கால் = ரொம்ப நுணுக்கமாய் ஆராய்ந்தால்

அறிவு ஒக்கும்;- எவர்க்கும் அன்னான். = மனிதனுக்கு நீங்காத இன்பத்தை எப்போதும் தருவது அறிவு. அறிவுடையார் எல்லாம் உடையார் என்பார் வள்ளுவர். அப்படி நிறைந்த இன்பத்தை தருவதில் அறிவு போன்றவன் தசரதன்.



5 comments:

  1. மிக நல்ல பாடலுக்குச் சிறந்த விளக்கம் தந்ததற்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. எல்லாப் புகழும் கம்பனுக்கே !

      Delete
  2. ரகு வம்ச மகா காவியத்தில் காளிதாசரும் ராமரின் வம்சத்தை பற்றி சொல்லும் பொழுது 'சத்யா மித பாஷிணா' என்று கூறுகிறார். பேசும் பொழுது உண்மை அல்லாத வார்த்தை ஒன்று கூட வாயிலிலிருந்து வந்து விடக்கூடாது என்று ரகு வம்சத்தினர் மிகவும் குறைவாக பேசுவார்களாம்.

    ReplyDelete
    Replies
    1. That is a good input. Speak less to make less mistakes...

      பயனில் சொல் பாராட்டுவானை மகன் எனல்
      மக்கட் பதடி எனல் , என்பார் வள்ளுவர்

      Delete
  3. தமிழ் மொழி காட்டு மிராண்டி பாஷை என்று யாரும் சொல்ல முடியாது இது அமுத மொழி. யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்.

    ReplyDelete