Thursday, March 30, 2023

கம்ப இராமாயணம் - அங்கதன் தூது - கருணையின் நிலையம் அன்னான்

 

 கம்ப இராமாயணம் - அங்கதன் தூது - கருணையின் நிலையம் அன்னான்



(அங்கதன் தூதின் முந்தைய பதிவுகளின் வலை தளளங்களின் முகவரிகளை இந்தப் பதிவின் இறுதியில் காணலாம்)


இன்று இராம நவமி. 


இராமனின் உயர் குணங்களை எடுத்துச் சொல்லும் இராமாயணத்தில் அங்கதன் தூது பற்றி சிந்திக்கக் தொடங்க நல்ல நாள். 


தாயின் இயல்பு பிள்ளை மேல் அன்பு செலுத்துவது. 


அப்படி என்றால் பிள்ளை மேல் கோபமே வராதா, திட்டவே மாட்டாளா என்றால் வரும். வந்தவுடன் போய் விடும். மறுபடியும் அந்த இடத்தில் அன்பு வந்து அமர்ந்து கொள்ளும். அடித்தாலும், திட்டினாலும் ஓடிச் சென்று பிள்ளையை கட்டிக் கொள்வாள். அது அவள் இயல்பு. 



அது போல இறைவனின் இயல்பு கருணை. சில சமயம் கோபம் வரலாம். நமக்கு துன்பம் தருவது போல இருக்கும். வலிக்கும். அது கொஞ்ச நேரம்தான். பின் ஓடிவந்து கட்டிக் கொள்வான். 


தாயிற் சிறந்த தயவான தத்துவன் அவன். 


தன் மனைவியை கவர்ந்து சென்றவன் மேல் எவ்வளவு கோபம் வர வேண்டும். 



இராமன் கோபம் கொள்ளவில்லை. மாறாக, 


"இராவணனுக்கு ஒரு தூது அனுப்புவோம். சீதையை விடுதலை செய்யச்சொல்லி அறிவுறுத்துவோம். அவன் கேட்கவில்லை என்றால் அவனை தண்டிப்போம். அதுதான் நீதியும் , அறமும் என்று என் உள்ளம் சொல்கிறது" என்றான். 




தூதுவன் ஒருவன் தன்னை

    இவ்வழி விரைவில் தூண்டி,

“மாதினை விடுதியோ? “ என்று

    உணர்த்தவே, மறுக்கும் ஆகின்,

காதுதல் கடன் என்று உள்ளம்

    கருதியது, அறனும் அஃதே;

நீதியும் அஃதே ‘என்றான்

    கருணையின் நிலையம் அன்னான்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_30.html


(pl click the above link to continue reading)


தூதுவன் ஒருவன் தன்னை = ஒரு தூதுவனை 


இவ்வழி  = இப்போது 


விரைவில் தூண்டி = விரைவில் முடிவு செய்து 


“மாதினை விடுதியோ? “ என்று = சீதையை விடுகிறாயா இல்லையா என்று 


உணர்த்தவே = கேட்போம். அவனின் உள்ளத்தில் என்ன இருக்கிறது என்று அறிவோம் 


மறுக்கும் ஆகின் = சீதையை விட மறுப்பான் ஆகில் 


காதுதல் = அவனை அழித்தல் 


கடன் = என் கடமை  


என்று உள்ளம்  கருதியது = என் உள்ளம் சொல்கிறது 


அறனும் அஃதே = அதுதான் அறமும் கூட 


நீதியும் அஃதே ‘என்றான் = நீதியும் அதுதான் என்றான் 


கருணையின் நிலையம் அன்னான். = கருணையின் இருப்பிடமான இராமன் 


"உள்ளம் கருதியது", "நீதியும், அறமும் அதுவே"

உள்ளமும், அறிவும் ஒன்றுபட்டு நிற்கிறது. 

இது வெறும் அறிவு சார்ந்த விடயம் மட்டும் அல்ல. 


இராமனின் உள்ளத்தில் கருணை முதலில் பிறக்கிறது. பின் அறிவு அதை சரி என்று சொல்கிறது. 


பெரும்பாலும், மக்கள் உணர்ச்சிவசப்பட்டு செய்யும் செயல்கள் , பேசும் பேச்சுகள்தான் அதிகம். அறிவு வேலை செய்தால் மனம் வேலை செய்வது இல்லை. மனம் வேலை செய்தால் அறிவு வேலை செய்வது இல்லை. 


சில சமயம் தவறான இடத்தில் தவறான கருவிகளும் வேலை செய்வது உண்டு. 



இராமனின் மன நிலை அதிசய வைக்கிறது. 


மனைவியை ஒரு அரக்கன் தூக்கிக் கொண்டு போய் விட்டான். அவனை கண்டு பிடிக்க காடு மேடெல்லாம் அலைந்து திரிந்து, கடல் நடுவில் பாலம் கட்டி, பெரிய படையை நடத்திக் கொண்டு வந்து, பின் சொல்கிறான் "சீதையை விட்டு விட்டால் சமாதானம்"  என்று. 


யாரால் முடியும்?  

பகைவனுக்கும் இரங்கும் மனம். 

நம்மால் உறவிலும் நட்பிலும் கூட இவ்வளவு இரக்கம் காட்ட முடியுமா என்பது சந்தேகமே. 

மேலும் படிப்போம். 



[ ஒரு முன்னோட்டம் 

https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_29.html



]


Wednesday, March 29, 2023

கம்ப இராமாயணம் - அங்கதன் தூது - ஒரு முன்னோட்டம்

 கம்ப இராமாயணம் - அங்கதன் தூது - ஒரு முன்னோட்டம் 


இராவணனோடு போர் தொடங்கும் முன்பு, ஒரு சமாதான தூது விடுவது என்று இராமன் முடிவு செய்கிறான். போரை முடிந்தவரை தவிர்ப்பது என்பது நம் யுத்த தர்மமாக இருந்தது.  


வாலியின் மைந்தன் அங்கதனை தூது அனுப்ப முடிவு செய்யப்படுகிறது. 


ஒரு 43 பாடல்கள். மிக அருமையான பாடல்கள். 


அரசியல் சூழ்ச்சிகள், தனிமனித ஆசா பாசாங்கள், சொற்சுவை, பொருள் சுவை என அத்தனை இனிமைகளும் நிறைந்த பாடல்கள். 



வாலியோடு சண்டை என்ற போது தூது விடாத இராமன், இராவணனுக்கு மட்டும் ஏன் தூதுவிட்டான் என்ற கேள்வி வரும். 



இராவணனோடு கொண்ட பகை, சொந்தப் பகை. இராமனின் மனைவியை இராவணன் அபகரித்துச் சென்றுவிட்டான். அது இராமனுக்கும், இராவணனுக்கும் உள்ள தனிப் பகை. 



https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_29.html


(pl click the above link to continue reading)


வாலியோடு இராமனுக்கு தனிப் பகை எதுவும் இல்லை. தம்பி மனைவியை கவர்ந்தான் என்ற குற்றத்திற்கு தண்டனை வழங்கினான். 


மறைந்து இருந்து அம்பு விட்டது சரிதானா என்ற கேள்வி நிற்கிறது. 



வாலி இறந்த பின், எவ்வளவோ நாட்களுக்குப் பின் இலங்கையில் யுத்தம் நடக்க இருக்கிறது. இராமன் அங்கதனை தூது விடுகிறான். அங்கதனும் மகிழ்ச்சியோடு செல்கிறான். தன் தந்தையான வாலியை கொன்றவன் இராமன் என்ற   கோபமோ, வருத்தமோ அவனிடம் இல்லை. 



அங்கதன், அது சரி என்று நினைத்து இருக்கலாம். அல்லது அதை மறந்து மன்னித்து இருக்கலாம். அல்லது, வாலியே இறுதியில்  அது தவறு அல்ல என்று முடிவு செய்து அங்கதனை இராமனிடம் அடைக்கலம் என்று ஒப்புவித்தபின்  அதை மேலும் மேலும் தோண்டுவதில் அர்த்தம் இல்லை என்று நினைத்து இருக்கலாம்.



இராமன் வாலியைக் கொன்றது எல்லாம் இந்த அங்கதன் தூதில் வருகிறது. 


சுவாரசியமான பகுதி. 


வாருங்கள் சுவைப்போம். 

Tuesday, March 28, 2023

திருக்குறள் - பயனில சொல்லாமை - பதடி எனல்

  

  திருக்குறள் - பயனில சொல்லாமை - பதடி எனல் 


(இந்த அதிகாரத்தின் முந்தைய குறள்களின் பதிவுகளை  இந்த பதிவின் முடிவில் காணலாம்) 


வள்ளுவர் சொல்லுவதைப் பார்த்தால் நாம் பேசவே முடியாது போல இருக்கே. எப்போது பார்த்தாலும் 

ஒரு கல்லூரி பேராசிரியர் மாதிரி பயனுள்ள சொற்களையே பேசிக் கொண்டிருக்க முடியுமா? சில சமயம் நண்பர்களோடு, உறவினர்களோடு அரட்டை அடித்து, பேசி, சிரித்து மகிழ்ந்து இருக்கக் கூடாதா?


வள்ளுவர் அப்படிச் சொல்லவிலை. 



நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத எதையும் வள்ளுவர் சொல்ல மாட்டார். 



இல்லறத்தில் இருப்பவன் ஒரு சில சமயம் பயனற்ற சொற்களை பேச வேண்டி வரலாம். 



ஆனால், எல்லா நேரமும் அப்படியே பேசிக் கொண்டிருக்கக் கூடாது. 


அப்படி பேசுபவனை மக்களுள் பதர் என்று சொல்ல வேண்டும் என்கிறார். 



பாடல் 


பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்

மக்கட் பதடி எனல்.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_28.html


(please click the above link to continue reading)



பயனில்சொல் = பயனற்ற சொற்களை 


பாராட்டு வானை = நீண்ட காலமாக சொல்லுபவனை 


மகன்எனல் = மக்களில் ஒருவராக சொல்லக் கூடாது 


மக்கட் = மக்களுள் 


பதடி எனல் = பதர் என்று கூற வேண்டும் 


பதர் என்பது அரிசி உள்ளே இல்லாத நெல்லைக் குறிக்கும். 


மனிதருள் பதர் என்றால் அறிவு இல்லாததால் அவனை பதர் என்று சொல்ல வேண்டும் என்கிறார். 


அதாவது, அறிவில்லாதவன்தான் பயனற்ற வார்த்தைகளை பேசிக் கொண்டிருப்பான் என்கிறார். 


அறிவுள்ளவன், அளந்து, பயனுள்ள வார்த்தைகளையே பேசுவான் என்பது குறிப்பு. 


யாரவது வளவள என்று  அர்த்தம் இல்லாமல், பயனற்ற முறையில், அடிக்கடி பேசிக் கொண்டிருந்தால், அவனுடைய அறிவின் ஆழத்தை நாம் புரிந்து கொள்ளலாம் என்கிறார். 



(


ஒரு முன்னுரை 


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_22.html


எல்லாரும் எள்ளப் படும்


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_25.html


சொல்லும் செயலும் 



https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_2.html


பாரித்து உரைக்கும் உரை 


https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_2.html


நயன்சாரா நன்மையின் நீக்கும்


https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_15.html


சீர்மை சிறப்பொடு நீங்கும்

https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_23.html




Sunday, March 26, 2023

கந்தரனுபூதி - அருள் சேரவும் எண்ணுமதோ

                         

 கந்தரனுபூதி -    அருள் சேரவும் எண்ணுமதோ 




(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


உண்மையைத் தேடும் அந்த நீண்ட பயணத்தில் காமம் என்பது ஒரு தடைக் கல். 


அது ஒரு வேற்றுப்  பாதை. அதில் பயணம் செய்ய ஆரம்பித்தால், அது நம்மை வேறு எங்கோ கொண்டு போய் விடும். 


எதற்காக பயணத்தை ஆரம்பித்தோம் என்று தெரியாது. வழி தப்பி வேறு எங்கோ போய் விடுவோம். 


பின், ஏன் அந்த இடத்துக்கு வந்தோம், எப்படி வந்தோம் என்று வருந்திப் பயன் இல்லை. 



அருணகிரிநாதர் சொல்கிறார், "காமம் வந்து விட்டால், இறை அருளைப் பெறும் எண்ணம் வராது" என்று. 



பாடல் 




கூர்வேல் விழிமங்கையர் கொங்கையிலே 

சேர்வேனருள் சேரவு மெண்ணுமதோ 

சூர் வேரொடு குன்று தொளைத்த நெடும் 

போர் வேல புரந்தர பூபதியே 


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_26.html

(pl click the above link to continue reading)



கூர்வேல் = கூர்மையான வேலைப் போன்ற 

விழி = கண்களை உடைய 

மங்கையர் = பெண்களின் 

கொங்கையிலே = மார்பகங்களின் மேல் 


சேர்வேன் = சேர்பவனான நான் 


அருள் = உனது அருளை 


சேரவு = சேர்வதற்கு, அடைவதற்கு 


மெண்ணுமதோ = எண்ண முடியுமா ? (முடியாது) 


சூர் = சூர பத்மனை  


வேரொடு = அடியோடு 


குன்று = கிரௌஞ்ச மலையை 


தொளைத்த = துளைக்கும் படி விட்ட 


நெடும் = நீண்ட 


போர் வேல = போர் செய்யும் வேலைக் கொண்ட 


புரந்தர பூபதியே  = தேவர் உலகின் காவலனே 


அப்படி என்றால் காமமே கூடாதா? கூடாது என்றால் பின் ஏன் இறைவன் அதைப் படைக்க வேண்டும்?

ஆண் பெண் என்ற வேறுபாடு இல்லாமலே படைத்து இருக்கலாமே ?


உயிர் வாழ உணவு தேவைதான். அதற்காக அதை அளவுக்கு அதிகமாக உண்டு கொண்டே இருந்தால் என்ன ஆகும்?


இங்கே "மங்கையர்" என்று பன்மையில் குறிப்பிடுகிறார். மங்கை என்று ஒருமையில் அல்ல. 


அதாவது, பல பெண்களிடம் சென்று காமம் அனுபவிக்கும் ஆசையில் இருந்தால் எங்கே இறை அருள் பற்றி சிந்தனை வரும்  என்ற நோக்கில் கூறி இருக்கிறார் என்று உரை ஆசிரியர்கள் கூறுவாரகள்.





 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html


விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html


 பரிசென் றொழிவேன் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html



எதிரப் படுவாய்


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா


https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html


அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ



https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_8.html


முருகன் கழல் பெற்று உய்வாய்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_14.html


என்று அருள்வாய் ? 



பேராசை எனும் பிணியில் பிணிபட்டு






யாமோதிய கல்வியும் பாகம் 1 

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html


 யாமோதிய கல்வியும் பாகம் 2


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html


உதியா மரியா


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post.html


மிடியென் றொரு பாவி

https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_12.html


உபதேசம் உணர்தியவா 


]




Thursday, March 23, 2023

திருக்குறள் - பயனில சொல்லாமை - சீர்மை சிறப்பொடு நீங்கும்

 

  திருக்குறள் - பயனில சொல்லாமை - சீர்மை சிறப்பொடு நீங்கும்


(இந்த அதிகாரத்தின் முந்தைய குறள்களின் பதிவுகளை  இந்த பதிவின் முடிவில் காணலாம்) 


சில பேர் நிறைய நல்லது செய்வார்கள். மற்றவர்களுக்காக ஓடி ஓடி உழைப்பார்கள். தன்னலம் பாராமல் உதவி செய்வார்கள். இருந்தும் அவர்களுக்கு ஒரு நல்ல பேர் இருக்காது. 


ரொம்ப தூரம் போவானேன், பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தங்களை அறிந்து கொள்ளவில்லையே என்று வருந்துவதை நாம் காண்கிறோம். எல்லாம் அவன்/அவள் நன்மைக்காகத்தானே செய்தேன். ஏன் என்னை வெறுக்கிறார்கள் என்று வருந்துவார்கள். 


வள்ளுவர் சொல்கிறார், 


"எவ்வளவுதான் நல்லது செய்தாலும், ஒருவர் பயனற்ற சொற்களை பேசுவாராயின் அவருக்கு உள்ள சிறப்பும், பெருமையும் போய் விடும்"


பாடல் 


சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன்இல

நீர்மை உடையார் சொலின்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_23.html


(please click the above link to continue reading)



சீர்மை = நன்மை  


சிறப்பொடு = சிறப்பு 


நீங்கும் = நீங்கும் 


பயன்இல = பயன் இல்லாத சொற்களை 


நீர்மை = நல்ல குணம்  


உடையார் = உள்ளவர்கள் 


சொலின் = சொல்வாராயின் 


நல்லதும் போகும், சிறப்பும் போகும். 


அது எப்படி?  யோசிப்போம். 


பொதுவாக வீடுகளில் நடப்பதுதான். 


அம்மாவுக்கு பிள்ளை மேல் அளவு கடந்த பாசம் இருக்கும். மருமகள் ஏதோ ஒன்று செய்யப் போக, அம்மா ஏதோ ஒன்று சொல்ல, அதை அவள் தன் கணவனிடம் சொல்ல, அம்மாவுக்கும் மகனுக்கும் உள்ள இடைவெளி அதிகமாகும். 


காரணம் என்ன?


மருமகளைப் பற்றிய பயனற்ற சொற்கள். 


அலுவகலத்தில் சிலர் மிக கடுமையாக உழைப்பார்கள். நல்ல திறமையும் இருக்கும். இருந்தும் நல்ல பதவி உயர்வு கிடைக்காது.  காரணம், மனதில் பட்டதை அப்படியே பேசி விடுவது.  அவர் பேச்சை  மற்றவர்கள் ஒன்றுக்கு இரண்டாக திரித்துக் கூறி அவர்கள் முன்னேற்றத்தை தடுத்து விடுவார்கள். 


இப்படி, பயனற்ற சொற்களைப் பேசி மனத் துன்பம், பணத் துன்பம், உறவுச் சிக்கல், தனிமை, வெறுமை என்று பல துன்பகளை நிறைய பேர் சம்பாதித்துக் கொள்கிறார்கள். 


அவர்களுக்கு தெரிவது இல்லை...தங்கள் பயனற்ற சொற்கள்தான் தங்களது எதிரி என்று. 


மனதில் பட்டதை பட் என்று பேசி விடுவேன்.....


உள்ள கள்ளம் கபடம் இல்லாமல் பேசி விடுவேன் ...


நம்ம கிட்ட எப்போதும் வெட்டு ஒன்று, துண்டு இரண்டுதான் ...


இப்படி எல்லாம் பேசுவதால் துன்பமே மிஞ்சும். 


"நீர்மை உடையார் சொலின்" என்பதில் "சொன்னால்"  என்பது ஒரு கேள்வியாக நிற்கிறது. "கடினமாக உழைத்தால் வெற்றி பெறலாம்" என்றால் கடினமாக உழைப்பது எளிது அல்ல என்று விளங்கும். 


நீர்மை உடையவர்கள் அப்படிச் 'சொன்னால்' என்பதில், சொல்ல மாட்டார்கள் என்பது தெளிவு. 


பயனுள்ள சொற்களை பேசி பழக வேண்டும். ஒரு நாளில் வந்து விடாது. கொஞ்சம் கொஞ்சமாக பழக வேண்டும். 


அப்படிப் பழகினால், வாழ்க்கை வசந்தமாக இருக்கும். 





(


ஒரு முன்னுரை 


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_22.html


எல்லாரும் எள்ளப் படும்


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_25.html


சொல்லும் செயலும் 



https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_2.html


பாரித்து உரைக்கும் உரை 


https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_2.html


நயன்சாரா நன்மையின் நீக்கும்


https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_15.html





Tuesday, March 21, 2023

கந்தரனுபூதி - அடியைக் குறியா

                        

 கந்தரனுபூதி -   அடியைக் குறியா 




(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 

கந்தரநுபூதி ஆரம்பிக்கும் போது மெய்யியல் பற்றி சில பதிவுகளில் வாசித்தோம். இந்த பதிவின் இறுதியில் அந்தப் பதிவுகளின் வலை தள முகவரி இருக்கிறது. 


சைவ சித்தாந்தத்தின் அடிப்படை பதி, பசு, பாசம் என்ற மூன்று. 


பதி = இறைவன் 

பசு = உயிர்கள் 

பாசம் = இந்த உயிர்களை காட்டும் கயிறு. கயிறு என்றாலும் பாசம் என்றாலும் ஒன்றுதான். பாசக்கயிறு என்று நாம் சேர்த்துச் சொல்கிறோம். நடு சென்டர் என்பதுமாதி. 


இந்த மூன்றும் ஆதியில் இருந்தே இருக்கிறது.


இதில் பதி முழு ஞானம் உள்ளது. 


பசு முழுமையற்ற ஞானம் உடையது. 


பாசம் ஒரு ஆசையாய் பொருள். 


ஆதியில் இருந்த பசு, ஞானம் உள்ள இறைவனைப் பற்றாமல் ஞானமே இல்லாத அறியாமையில், அகங்காரத்தைப் பற்றி விடுகிறது. 


பின் அந்த அஞ்ஞான இருளில் இருந்து வெளிவர முயல்கிறது. அதுவே மூல கன்மம் என்று அழைக்கப் படுகிறது. 


நியாப்பப்படி பார்த்தால் ஆத்மா இறைவனைத்தான் பற்ற வேண்டும். 


பற்றுகிறதா? இல்லையே. 


அதை விடுத்து உலகியல் அனுபவங்களில் மூழ்கி விடுகிறது. 


சரி, ஆத்மாதான் அறிவு இல்லாமல் இப்படி போகிறது என்றால், இறைவன் அதை சரி செய்யக் கூடாதா? 


முடியும், ஆனால் மாட்டான். 


ஏன்?


இறைவனுக்கு ஒரு பற்றும் இல்லை. அவன் விருப்பு வெறுப்பு இல்லாதவன். ஆத்துமாக்களை காப்பாற்ற நினைத்தால் அவற்றின் மேல் இறைவனுக்கு விருப்பு வந்து விட்டது என்று ஆகி விடும். 


அருணகிரிநாதர் புலம்புகிறார் 


"என்னால் இந்த அறியாமை இருளை விட்டு வர முடியவில்லை. நீயும் உதவி செய்ய மாட்டேன் என்கிறாய். இது முறையோ முறையோ " என்று கேட்கிறார். 


தான் விடாதது ஒரு முறையோ .


இறைவன் வது ஏற்றுக் கொள்ளாதது இரண்டாவது முறையோ . 



பாடல் 


அடியைக் குறியா தறியாமையினான் 

முடியக் கெடவோ முறையோ முறையோ 

வடிவிக்ரம வேன் மகிபா குறமின் 

கொடியைப் புணரும்குண பூதரனே 


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_21.html


(pl click the above link to continue reading)


அடியைக் = திருவடிகளை 



குறியா = குறித்து அறியாது 



தறியாமையினான்  = எனது அறியாமையினால் 



முடியக் = இறுதிவரை 


கெடவோ = நான் அழியவோ 



முறையோ முறையோ = அது முறைதானா, முறைதானா 



வடி = வடிவான 



விக்ரம வேன் = கூரான வேலை உடையவனே 



மகிபா = மகி + பா = மகி என்றால் உலகம். பா என்றால் பரிபாலனம் செய்வது 



குறமின் = மின்னல் போன்ற வடிவுடைய குற வள்ளியின் 

 



கொடியைப் = கொடி போன்றவளே 



புணரும் = சேரும் 



குண பூதரனே = குணங்களின் இருப்பிடம் ஆனவனே, குணங்களை காப்பவனே, குணங்களின் தலைவனே 



கொஞ்சம் இலக்கணம் படிப்போமா?


முறையோ முறையோ என்று இரண்டு முறை வருகிறது. 


பள்ளியில் படிக்கும் பொழுது இரட்டை கிளவி, அடுக்குத் தொடர் என்று படித்து இருக்கிறோம். 


பிரித்தால் பொருள் தந்தால் அடுக்குத் தொடர் இல்லை என்றால் இரட்டைக் கிளவி (சொல்). 


நீர் சல சல என்று ஓடியது, அவன் வள வள என்று பேசினான். இதில் உள்ள சல, வள என்பவை பிரித்தால் பொருள் தராது. 


முறையோ முறையோ என்பதில் பிரித்தால் பொருள் தரும். 


சொல்ல வந்தது அது அல்ல. 




இப்படி ஒரு சொல்லை பல முறை அடுக்க ஒரு இலக்கணம் இருக்கிறது. 



இலக்கணம் தெரியாமலேயே நாம் அவற்றை பயன் படுத்திக் கொண்டு இருக்கிறோம். 



உதாரணமாக, வீட்டில் பாம்பு வந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். 



பாம்பு பாம்பு என்று சத்தம் போடுவோமா அல்லது பாம்பு என்று சொல் சொல்லுவோமா? 



இரண்டு முறை சொன்னாலும், அதே பொருள் தானே ? ஏன் இரண்டு முறை சொல்ல வேண்டும். 



அது ஆபத்தைக் குறிக்கிறது. 



யாராவது தவறு செய்து விட்டால் "ஐயோ ஐயோ...இப்படியா செய்வது" என்று சொல்கிறோம். 



வாழ்க வாழ்க வாழ்க என்று வாழ்த்துகிறோம். 



இப்படித் சொல்லை அடுக்க மூன்று விதிகள் இருக்கிறது. 



அசை நிலை, பொருள் நிலை, இசை நிறை என்று. 



அசை என்றால் அர்த்தம் இல்லாமல் வருவது. 


ஆ ஆ, ஏ ஏ - அசை நிலை 


பொருள் நிலையில் விரைவு, அச்சம், உவகை, அவலம் என்று நான்கு பகுதிகள் உண்டு. 


வா வா...வண்டி போகப் போகுது - விரைவு 


அருமை அருமை - உவகை 


ஐயோ ஐயோ, அல்லது அச்சோ அச்சோ - அவலம் 


தீ, தீ ; பாம்பு பாம்பு - அச்சம் 


இந்தப் பாடலில் உள்ள முறையோ முறையோ அவலம். அவலம் என்றால் துன்பம். 


எல்லாம் என் தலை எழுத்து தலை எழுத்து என்று சொல்வது போல. 


அசைநிலை பொருள்நிலை இசைநிறைக்கு ஒருசொல்

இரண்டு மூன்று நான்கு எல்லைமுறை அடுக்கும்


(நன்னூல் : 395)


குண பூதரனே என்று முடிகிறது. 


தரன் என்றால் காப்பவன்.  


கங்கையை தலையில் வைத்து காப்பவன் கங்காதரன் 



தரணீதரன் என்று ஒரு எழுத்தாளர் இருந்தார். 


 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html


விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html


 பரிசென் றொழிவேன் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html



எதிரப் படுவாய்


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா


https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html


அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ



https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_8.html


முருகன் கழல் பெற்று உய்வாய்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_14.html


என்று அருள்வாய் ? 



பேராசை எனும் பிணியில் பிணிபட்டு






யாமோதிய கல்வியும் பாகம் 1 

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html


 யாமோதிய கல்வியும் பாகம் 2


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html


உதியா மரியா


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post.html


மிடியென் றொரு பாவி

https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_12.html


உபதேசம் உணர்தியவா 


]




Wednesday, March 15, 2023

திருக்குறள் - பயனில சொல்லாமை - நயன்சாரா நன்மையின் நீக்கும்

  திருக்குறள் - பயனில சொல்லாமை - நயன்சாரா நன்மையின் நீக்கும்


(இந்த அதிகாரத்தின் முந்தைய குறள்களின் பதிவுகளை  இந்த பதிவின் முடிவில் காணலாம்) 


நீதி !



நீதி என்றால் என்ன?  



ஒரு சமுதாய கோட்பாடு. கட்டுப்பாடு. 



ஒரு சமுதாயத்தில் உள்ள எல்லோரும் கூடி வகுத்த ஒரு வாழ்க்கை நெறிமுறை. அதில் இருந்து 

விலகக் கூடாது. மீறினால் தண்டனை உண்டு. 



ஒரு மனிதனை சமுதாயத்தோடு ஒட்டி வாழ வழி செய்வது நீதி. 



ஒருவன் நீதியை மதிக்காமல் மனம் போனபடி வாழத் தலைப்பட்டால், அவனை சிறையில் அடைத்து, 

அவனை சமுதாயத்தில் இருந்து பிரித்து, தனி மனிதனாக ஆக்கப் படுவான். 



இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். 



பயனில்லாத சொற்களை ஒருவன் பேசினால், அவனுக்கு நல்லது கிடைக்காதது மட்டும் அல்ல அவன் 

சமுத்தியாத்தால் தனிமை படுத்தப் படுவான் என்கிறார் வள்ளுவர். 



பாடல் 


நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்

பண்பில்சொல் பல்லார் அகத்து


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_15.html


(please click the above link to continue reading)



நயன்சாரா = நீதியோடு சேராத 



நன்மையின் = நன்மைகளில் இருந்து 



நீக்கும் = ஒருவனை நீக்கும் 



பயன்சாராப் = பயன்தராத 



பண்பில்சொல் = பண்பற்ற சொற்களை 



பல்லார் அகத்து = பலர் முன்னிலையில் (ஒருவன் பேசினால்)




பயனற்ற சொற்களை பேசினால் நன்மை வராது என்பது மட்டும் அல்ல, அவனை எல்லோரும் ஒதுக்கி வைத்து 


விடுவார்கள். அவன் தனிமை படுத்தப்படுவான். ஏறக்குறைய சிறைச்சாலை மாதிரித்தான். 


யோசித்துப் பாருங்கள். 


உங்கள் நட்பிலும், உறவிலும் கூட ஒரு சிலர் இருக்கலாம். 


'இரம்பம்', "சரியான அறுவை", "வாயாடி",  என்றெல்லாம் அழைக்கப் படுபவர்கள் இருப்பார்கள். 


அவர்களை கண்டு நீங்கள் விலகிப் போகிறீர்கள் அல்லவா? 


பயனற்ற சொற்களை பேசினால், நம்மை விட்டும் மற்றவர்கள் விலகிப் போய் விடுவார்கள். 


இல்லறத்தில் இருப்பவன் சமுதாயத்தோடு ஒன்றி வாழவிட்டால் வாழ்க்கை நரகமாகிவிடும். 


ஊருடன் பகைக்கில் வேருடன் கெடும் 


"எனக்கு ஒரு நன்மையையும் வேண்டாம். நான் மனதில் பட்டதை பட்டென்று சொல்லி விடுவேன்" என்று பெருமை  பேசக் கூடாது. 


நன்மை வேண்டாம் என்று தள்ளிவிடலாம். 


உறவும், நட்பும் இல்லாமல் எப்படி வாழ்வது?


பிள்ளைகள், கணவன்/மனைவி, உடன் பிறந்தோர், சுற்றம், நட்பு எல்லாம் நாளடைவில் தள்ளிப் போய்விடும். 


"நான் சொல்வதை யாரும் கேட்பது இல்லை. பேச்சுத் துணைக்கு கூட யாரும் இல்லை" என்று பின்னால் வருந்து பயன் இல்லை. 


பயனுள்ள சொற்களை பேசிப் பழகிவந்தால் எல்லோரும் நம்மிடம் பேச விரும்புவார்கள். 


இப்படி எல்லாம் இந்தக் குறளில் இல்லையே என்று நீங்கள் நினைக்கலாம். 


"நயன்சாரா நன்மையின்" எனபதில் நயன் என்ற சொல்லுக்கு "நீதி" என்று பொருள் சொல்கிறார் பரிமேலழகர். 


"நயன் சாரா நன்மையின் நீக்கும் - அவை அவர்மாட்டு நீதியோடு படாவாய், அவனை நற்குணங்களின் நீக்கும்"


என்பது அவர் உரை. 


நீதி என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம் என்று சிந்தித்தபோது இப்படியும் ஒரு பொருள் இருக்கலாம் என்று தோன்றியது. 


தவறாகவும் இருக்கலாம். 


சரி என்றால் ஏற்றுக் கொள்ளவும். இல்லை என்றால் தள்ளி விடவும். 


(


ஒரு முன்னுரை 


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_22.html


எல்லாரும் எள்ளப் படும்


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_25.html


சொல்லும் செயலும் 



https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_2.html


பாரித்து உரைக்கும் உரை 


https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_2.html